நேற்று, இன்று, நாளை! | தினகரன் வாரமஞ்சரி

நேற்று, இன்று, நாளை!

"பத்தாந்திகதி நடக்கிற தேர்தல்ல ஆருக்கு வோட்டு போடுவீங்க?"

"ஜனாதிபதிக்கு"

"நீங்க?"

"பிரதமருக்கு"

"நீங்க?"

"மஹிந்தவிற்கு"

ஐயா, இவங்க யாருமே வோட்டு கேட்கலயே! நடக்கிறது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தானே!

இப்பிடித்தான் ஊர்லயும் நகரத்திலையும் கதை நடக்குது.

தொகுதிவாரித் தேர்தல் எண்டு சொல்றாங்க, விகிதாசாரத் தேர்தல் எண்டு சொல்றாங்க. ஆனால், வோட்டு கேட்கிறவங்களுக்ேக தெரியாது, தாம் எந்த வட்டாரத்திலை போட்டியிடுகிறோம் எண்டு! அப்படி இருக்கும்போது வோட்டு போடுறாங்களுக்குப் புரியுமா என்ன?

ஏன் அப்பிடிச் சொல்றீங்க? வோட்டு கேட்கிறவங்களுக்கு செமினர் வைச்சாங்கள்தானே, அதுக்குப்' போயிருந்தால்தான் எந்த வட்டாரத்திலை, எங்கெங்க உள்ளவங்கள் எல்லாம் தனக்கு வோட்டு போடத் தகுதி உள்ளவங்க எண்டு தெரிஞ்சிருக்குமே!

தெரிஞ்சிருக்கும்தான். அதற்குத் தெளிவானவங்க வோட்டு கேட்கணுமே!

அண்டைக்கு ஒரு ஓட்டோ காரர் சொல்றார், கடையிலை சாப்பாட்டுச் சாமான் என்ன விலைக்கு விற்குது எண்டு தெரியாதவங்கள் எல்லாம் வோட்டு கேட்குறாங்கள் சார். சில பேருக்கு மீசையே முளைக்கல.

மீசை முளைச்சவங்கள்தான் வோட்டு கேட்கணும் எண்டு ஆர் உங்களுக்குச் சொன்னது? பதினெட்டு வயது நிரம்பினா வோட்டு கேட்க முடியும்.

அப்பிடியா?

என்ன அப்பிடியா?

1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது 21 வயது நிரம்பிய ஆண், பெண் வாக்களிக்க முடியும். அதற்குப் பிறகு பீற்றர் கெனமன் இந்த 21 வயதை 18 வயதாகக் குறைக்க வேணும் எண்டு பாராளுமன்றத்திலை பிரேரணை கொண்டு வந்து குறைச்சார். அதன்படி 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தல்லதான் முதன்முதலா 18 வயது நிரம்பின ஆக்கள் வாக்களிச்சாங்க.

அப்ப, 25% இளம் வேட்பாளர் இருக்க வேணும் எண்டு சொல்லப்படுதே! யார் இளைஞர் என்று கேட்பீங்க. இளைஞரா இல்லையா என்பது மனத்திலதான் இருக்குது, வயசிலை இல்லை எண்டு சொல்லுவாங்க அது வேறு விசயம். ஆனால், வோட்டு போடுறத்துக்கும் கேட்குறத்துக்கும் ஒரு வயசு இருக்கு. அதாவது இளைஞர்களுக்கு. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சொல்லுது 17 வயசிலிருந்து 35 வயசுக்குள்ள உள்ளவங்கள இளைஞர் எண்டு. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை சொல்லுது 18 இலிருந்து 29 வயசுதான் இளம் வயசு எண்டு. இதிலை கனபேருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். இங்க நாங்கள் கதைக்கிறது வோட்டைப் பற்றித்தான். அதனாலை கவலைப்படத்தேவையில்லை. 18 வயசு நிரம்பினா வோட்டு போடலாம், கேட்கலாம்!

அதுவும், இளைஞர் பாராளுமன்றம் நடத்தப்படுறதாலை, இளைஞர்கள் என்ற வரையறைக்கான வயசை 16ஆக குறைக்கிறதுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்படுறதாக ஒரு தகவல். கடைசி வயசைக் கூட்டுறதைப்பற்றிக் கதைக்கேல்ல. அதாவது முப்பத்தைந்த ஒரு நாற்பத்தைந்தாகக் கூட்டுறதுக்கு எந்த யோசனையும் இல்லையாம். சரி, வோட்டு விசயத்தைப் பற்றிச் சொல்ல வந்திட்டு என்னவோ சொல்றன் எண்டு நினைக்காதீங்க.

உலக நடப்பைப் பற்றி ஒண்டுமே தெரியாதவங்கள் வோட்டு கேட்டால் எப்படி? என்று கேட்கிறவருக்கு, இந்தத் தேர்தல்ல நாட்டு ஜனாதிபதியோ பிரதமரோ, முன்னாள் ஜனாதிபதியோ போட்டியிடவில்லை என்றது தெரியேல்லயே! தெரியும், அவங்க சொல்ல வாறது அவங்கள் தலைமை தாங்குகிற கட்சிக்குப் போடுவம் என்றதான்.

ம்..அவங்க தலைமை தாங்குகிற கட்சி இந்தத் தேர்தலிலை போட்டியிட்டாலும், உங்கள் வட்டாரத்திலை போட்டியிடுறது யாரென்று பாருங்கள் என்கிறார் நண்பர். அப்ப, வட்டாரத்திலை போட்டியிடுற ஆளை வைச்சு கட்சியைத் தீர்மானிக்கச் சொல்றீங்களா? என்று கேட்டேன்.

அதுதானே சரி, என்கிறார்.

வேட்பாளரை வைச்சு கட்சியைத் தீர்மானிக்கலாம். ஆனால், வேட்பாளர் யார் என்று இன்னும் தெரியாதே! அவங்கள் தங்களைக் கண்டால், மக்கள் கட்சியை மாற்றிவிடுவார்கள் என்று பயந்து கட்சிக்குப் போடுற ஆக்கள் போட்டால், நமக்குத்தானே வோட்டு கிடைக்கும் என்று நம்பிக் ெகாண்டு வீட்டிலை படுத்திருந்தால் எப்படி?

முந்தியெண்டால், மூன்று பேரிலை ஓர் ஆளை நல்ல ஆளாப் பார்த்து வோட் பண்ணலாம். இப்ப ஆளைப் பார்க்க முடியாது. கட்சிக்குப் போடுறோமா, இல்லையா? என்றததான் தீர்மானிக்கணும். அதுதான் பெரிய சிக்கலா இருக்கு நிறைய பேருக்கு. அதோட இந்தத் தடவைப் பட்டியல்ல நிற்கிற ஆக்களும் போஸ்ரர் அடிச்சிருக்கிறாங்க. சில இடங்கள்ல போட்டியிடுபவரும், பட்டியலில் உள்ளவரும் இணைந்து படம் போட்டும் போஸ்ரர் அச்சடித்திருக்காங்க. அவர் வென்றால், இவர் தானாய் வந்து விடுவார். அதனாலை, போட்டியிடும் வேட்பாளரை எப்பிடியாவது வெல்லச் செய்துவிட வேண்டும் என்று, பாவம் இந்தப் பட்டியல் காரர்கள் படாத பாடு படுகிறார்கள் என்கிறார் நண்பர்.

இன்னொரு விசயம்!

என்ன?

தேர்தல்ல வோட்டு போட போகிறவங்களுக்குச் சம்பளத்தோட லீவு குடுக்கச் சொல்லி ஆணையாளர் சொல்லிப்போட்டார்.

லீவ எடுத்திட்டுச் சிலபேர் வோட்டு போட போகமாட்டாங்கள் தெரியுமா உங்களுக்கு? ஏன் தெரியாது அப்படியான ஆக்களாலைதானே 'வோட்டிங் பர்சன்ரேஜ்' குறைஞ்சு போகுது. இனி அப்பிடியான ஆக்களுக்கு அபராதம் விதிக்க வேணும் என்று சொல்றார் எங்கடை பிரதி ஆணையாளர் மொகமட்'

என்னவாக இருந்தாலும், இந்தத் தேர்தல் நல்ல முசுப்பாத்தியாத்தான் இருக்கப்போகுது. பாப்பம் வேட்பாளர்கள் வெல்லுறாங்களா, இல்ல கட்சித் தலைவங்க வெல்லுறாங்களா என்று!

Comments