கட்சிகளுக்கிடையிலான கட்டிப்பிடி சண்டைகள் தணிவு; அதிரடி அறிவிப்புகளும் ஓய்வு... | தினகரன் வாரமஞ்சரி

கட்சிகளுக்கிடையிலான கட்டிப்பிடி சண்டைகள் தணிவு; அதிரடி அறிவிப்புகளும் ஓய்வு...

இப்னு ஷம்ஸ் 

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.நிரந்தரப் பகைவனும் இல்லை என்பார்கள். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அது நிரூபனமாகியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற இந்த முதலாவது தேர்தல் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மிக மிக முக்கியமான தேர்தலாக அமைந்தது. உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் ,2020 இல் பாராளுமன்றத் தேர்தல் என தொடர்சியாக தேர்தல்கள் அணி வகுத்துள்ள நிலையில் இந்த ஆரம்பம் எல்லா கட்சிகளுக்கும் பிரதானமாக இருந்தன.

நல்லாட்சி அரசாங்கம் இழுபறிகளுக்கு மத்தியில் மூன்றாவது வருடத்தில் பயணித்து வரும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் அரசியலில் பெரும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சகல தரப்பிற்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தேசிய அரசாங்கமாக ஒன்றிணைந்துள்ள சுதந்திக் கட்சிக்கும் கடந்த இரு வருடங்களாக சிறு சிறு பிணக்குகள்,மோதல்கள் இருந்தாலும் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிப்பதோடு இரு தரப்பு மோதல் உக்கிரமடைந்தது.கூடவே பிணைமுறி மற்றும் பாரிய மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் வௌியாகியிருந்தன.

ஜனாதிபதியின் சில அறிவிப்புகள் அரசியல் அரங்கில் பெரும் புரளியை ஏற்படுத்தியதோடு ஐ.தே.க தரப்பிலும் இதற்கு பதிலடிகள் கொடுக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தல் ஆட்சியை மாற்றும் தேர்தலா என்று கருதும் அளவிற்கு சூடுபிடித்து பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தது.

மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக்கும் தேர்தல் என மஹிந்த தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டது.தேர்தலின் பின் தனி சு.க ஆட்சி அமையும் என சு.க தரப்பிலும் தனி ஐ.தே.க ஆட்சி உருவாகும் என ஐ.தே.க தரப்பிலும் அறிக்கை விடும் அளவிற்கு உள்ளூராட்சி தேர்தல் மாறியிருந்தது.

தேர்தல் காலத்தில் இடம் பெற்ற சில முன்னெடுப்புகள் கூட உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தியே இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. பிணை முறி அறிக்கை. பாரிய மோசடிகள் தொடர்பான அறிக்கை என்பவற்றின் மீது தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற விவாதம் நடத்த சில தரப்பினர் காட்டிய தயக்கம், அவற்றை தேர்தலுக்காக பயன்படுத்தி லாபமடைய சில தரப்பு எடுத்த முயற்சி என குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதிலே பலரும் இறங்கியிருந்தார்கள்.

இது போதாதென்று பிரிட்டனில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாந்துவின் விவகாரமும் தேர்தல் அரங்கில் சில கட்சிகளுக்கு நல்ல தீனியாக அமைந்திருந்தது.

எது எப்படியோ உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அரசியலில் பெரும் மாற்றம் நிகழப்போகிறது என்பது வெறும் மாயை என்பது எதிர்வரும் தினங்களில் வெளிச்ச மாகும் என அரசியல் அரங்கில் பேச்சடிபடுகிறது.தேர்தல் மேடைகளில் பீரங்கிப் பேச்சு பேசிய அரசியல்வாதிகள் கூறிய எதுவும் நடக்காது என விசயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

96 ஐ.ம.சு.மு எம்.பிகளும் இணைந்தாலும் சு.க அரசு அமைப்பதாக அறிவித்த ஜனாதிபதி இறுதி பிரசார கூட்டத்தில் மோசடி காரர்களுடன் கூட்டிணைந்து ஆட்சி அமைக்க மாட்டேன் என தான் குழப்பிய குட்டையை தானே தெளிவாக்கியிருக்கிறார்.

ஐ.தே.க தனியாட்சி என்று வீறாப்புப் பேசியவர்கள் 2020 வரை கூட்டரசு நீடிக்கும் என பூனைக்குட்டியாக அடங்கியுள்ளனர்.

என்னதான் அறிக்கை விட்டாலும் விமர்சித்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வரக் கூடாது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்று புள்ளியிலே இரு பிரதான கட்சிகளும் இணைந்து நிற்பதாக அரசியல் அரங்கில் பேச்சடிபடுகிறது.

பிசுபிசுத்த

பிணை முறி விவாதம்

பல இழுபறிகள், திகதி அறிவிப்புகள் என்பவற்றுக்கு மத்தியில் பிணை முறி மற்றும் பாரிய நிதி மோசடி என்பன மீதான விவாதம் கடந்த 6 ஆ ம் திகதி நடைபெற்றது.மலையையே மறுபக்கம் கவிழ்க்கும் அளவு இந்த விவாதம் பரபரப்பாக இருக்கும் என எண்ணும் அளவிற்கு நாட்டில் இந்த விவாதம் பற்றி பேசப்பட்டது. ஆனால் எதுவித உப்புச் சப்பும் இன்றி இந்த விவாதம் அமைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இரு திருடர்களும் தான் விவாதத்தை பயனற்றதாக்கியதாக சு.க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

காலை 10.30 முதல் 4.00 மணி வரை நடந்த விவாதத்தில் பிரதமர் குறைந்த நேரம் உரையாற்றினார். ஐ.தே.க தரப்பில் முக்கிய அமைச்சர்கள் எவரும் பேசவில்லை. மஹிந்த அணியிலும் மூவர் உரையாற்றினாலும் பிணை முறி பற்றி வாய்கிழிய பேசியவர்கள் அன்று சபையில் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்று சபைக்கு வந்திருக்கவில்லை. ஜே.வி.பியிலும் அதன் தலைவர் மாத்திரமே பேசியிருந்தார்.குறைந்தளவு எம்.பிகளின் பங்களிப்புடன் நடந்த இந்த விவாதம் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிலும் தொடர இருக்கிறது. இந்த விவாதத்தில் உரையாற்றப் போவதாக அறிக்கை விட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தரவில்லை.இறுதி நாள் விவாதத்திலே தான் பேச இருப்பதாக அவர் பின்னர் கூறியிருந்தார்.

இந்த விசேட பாராளுமன்ற அமர்வில் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார். இவருக்கு பிரதமர், கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எதிரணி எம்.பிகள் என பலரும் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவர் ஒவ்வொருவரிடமும் சென்று கைலாகு கொடுத்து எதிரணியின் பின்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்திற்கு சென்று அமரும் வரை சபாநாயகர் சில நிமிடங்கள் தனது அறிவிப்பை வௌியிடாமல் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக புதிய எம்.பியாக பதவி ஏற்பவர்கள் பாராளுமன்ற ஒழுங்குகளுக்கமைய நேரே தமது ஆசனத்திற்கு செல்வதே உகந்தது என பாராளுமன்ற முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். தேசிய பட்டியல் எம்.பியாக இருந்த சல்மான் இராஜினாமா செய்ததும் அந்த இடத்திற்கு ஹாபிஸ் நஸீர் உட்பட வேறு சிலரின் பெயர்கள் கூட அடிபட்டது. சில காலத்திற்காவது பாராளுமன்றம் செல்ல தலைவர் அளித்த வரத்தை எண்ணி பிரதமரின் ஆசியை அடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு கைலாகு கொடுத்த நஸீர் எம்.பி அவரை அணைத்து (முஸாபஹா) தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்த முயன்றாலும் நடுவில் இருந்த எம்.பிகளின் நீண்ட மேசையினால் அது இயலாது போனது.

அரசியலுக்காக பந்தாடப்பட்ட

பிரிகேடியர்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு அருகில் புலிக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த புலம் பெயர் அமைப்புகள் இலங்கை தேசிய கொடியை மிதித்து போராட்டம் செய்திருந்தார்கள்.இவற்றை அவதானித்த இலங்கைக்கான பிரித்தானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகரான பிரகேடியர் பிரியங்க பெர்ணாந்து தனது தோளில் குத்தியுள்ள தேசிய கொடியை காண்பித்த பின்னர் கழுத்தை வெட்டுவது போன்று ஆர்ப்பாட்டக் கார்களை பார்த்து காண்பிக்கும் வீடியோ கடந்த சில தினங்களில் பரபரப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கூறப்பட்டிருந்த நிலையில் அவரை பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து நீக்குவதாக வெளிவிவகார அமைச்சு திடீரென அறிவித்தது.

இந்த அறிவிப்பு தேர்தலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.சில தரப்பு அரசை விமர்சிக்க வேறு தரப்போ அரசின் செயற்பாட்டை வரவேற்றிருந்தன. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணித்தியாலங்களில் ஜனாதிபதி அவரை மீ்ண்டும் நியமித்திருந்தார். தேர்தலை மையப்படுத்தியே இது மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் இந்த விடயத்தில் அரசை விமர்சித்திருந்தார்.

ஆனால் 2010 ஜனாதிபதி தேர்தலின் போது தனது தேர்தலுக்கு உதவவில்லை என பிரிகேடியர் பிரியங்கவை அவர் வீட்டுக்கு அனுப்பியிருந்தாராம். தேர்தலுக்காகவே இவ்வாறு நீலிக்கண்ணீர் வடித்ததாக அவரை சமூக ஊடகங்கள் ஒரு பிடி பிடித்திருந்தன.

எது எப்படியோ அடுத்து மாகாண சபைத் தேர்தல் வரை கட்சிகளுக்கிடையிலான கட்டிப்பிடி சண்டைகள் சற்று தணியும் என நம்பலாம்.

Comments