முஸ்லிம் சமூகம் கடந்து வந்த பாதையும் பயணிக்கும் திசையும் | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் சமூகம் கடந்து வந்த பாதையும் பயணிக்கும் திசையும்

எம்.ஏ.எம். நிலாம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனியானதொரு வரலாறு உண்டு. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்களில் ஒருவராக மிளிர்ந்த மறைந்த லோனா தேவராஜா எழுதிய இலங்கை முஸ்லிம்கள் – ஆயிரம் ஆண்டுகால இனப் பரம்பல் சகவாழ்வு: எனும் நூலில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஆயிரம் வருடகால வரலாறு காணப்படுவதை ஆய்வுச் சான்றுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். அதாவது அவரது ஆய்வின்படி 900 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்து வருவது நிரூபனமாகியுள்ளது. அண்மைக் காலமாக சில இனவாதச் சக்திகளின் செயற்பாடுகள் இலங்கை முஸ்லிம்கள் வரலாறு இல்லாததொரு சமூகமாகக் காட்டப்படுவதாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அது குறித்து ஆராய்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம். எமது முஸ்லிம் சமூகம் அரசியல், பொருளாதார, வர்த்தக, சமுக ரீதியில் கடந்து வந்த பாதை எப்படியானது. அந்தச் சமுகம் இன்று பயணிக்கும் திசை எங்கே என்பதையே பார்க்க முற்பட்டுள்ளேன். அரேபிய தீபகற்பத்திலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் வர்த்தக நோக்கத்தில் வந்த முஸ்லிம்கள் வர்த்தகத்தை மட்டுமே மையமாகக் கொண்டே செயற்பட்டனர். அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு பிடிக்கும் எண்ணத்துடனனோ, ஆட்சி செய்யும் நோக்குடனோ செயற்பட முனையவில்லை.

மாறாக கடலோடிகளாக வந்த அரபு முஸ்லிம்கள் நல்லெண்ணத்துடன் வர்த்தக மேம்பாட்டை மட்டுமே இங்கு வளர்த்துக் கொண்டனர். அவர்களது நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்ட இலங்கையை ஆண்ட மன்னர்களும், சிங்கள மக்களும் அவர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொண்ட வரலாறு பதியப்பட்டிருக்கின்றது. சுதந்திரத்திற்கு முற்பட்ட பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கைக்கும் அரேபிய தேசங்களுக்குமிடையே நீண்ட உறவு இருந்துள்ளது. இதனை இன்றும் கூட வரலாற்றுப் பதிவுகளில் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் இலங்கைக்கு வர்த்தக நோக்கில் வந்து போன அரேபியர்கள் ஒருபோதும் நாட்டை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் வந்ததாக வரலாற்றில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவுமே காணப்படவில்லை.

இங்கு மற்றொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. இலங்கையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களாகவும் அரேபியவர்களே காணப்படுகின்றனர். எமது இலங்கைத் திருநாடு 1948 இல் டொமினியன் அந்தஸ்துடன் கூடிய சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் 1972 ஆம் ஆண்டு வரையில் எமது நாட்டவர்களால் எமக்கென அரசியல் யாப்பொன்றை தயாரித்துக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. 1970 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர் 1972இல் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கமைய பிரித்தானிய டொமினியன் அந்தஸ்தை ஒழித்துக்கட்டி இறைமையும், தன்னாதிக்கமும் கொண்ட குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் 1977இல் ஜே. ஆர். ஜயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி 5/6 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் குடியரசு யாப்பில் குறைபாடுகள் காணப்பட்டதால் முற்றிலும் புதியதொரு யாப்பு வரையப்பட்டது.

அந்தப் புதிய யாப்பே இடைக்கிடையே திருத்தங்களுடன் இன்றுவரையில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னிய ஆதிக்கம் நாட்டில் நிலவிய கால கட்டத்தில் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக 1817இல் போராட்டம் ஊவாவெல்லஸ்ஸ கலகத்துடன் ஆரம்பமானது. அதன் பின்னர் 1848 இல் மாத்தளைக் கலகம் இடம்பெற்றது. பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் பொருட்டு 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் உதயமானது. இதுகால வரையில் வர்த்தகத் துறையில் பிரபல்யம் பெற்று வந்த முஸ்லிம்கள் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் தேசிய காங்கிரஸுடன் ஒத்துழைக்க முன்வந்தனர். இதன் நிறைவேற்றுக் குழுவில் காசிம் உமர் கத்தான், இஸ்மாயில், எஸ். என். இஸ்மாயில், டாக்டர் ரி. பி. ஜயா, எம். கே. சல்தீன், சபர் உள்ளிட்டோர் 1922இல் இடம்பெற்றனர். இதுதான் சுதந்திரப் போராட்டத்துக்கான முஸ்லிம்களின் பங்களிப்பின் ஆரம்பமெனலாம்.

இவ்வாறு முஸ்லிம்கள் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு முழு அளவில் ஆதரவளிக்க முன்வந்தனர். 1924இல் மனிங் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை எதிர்த்த சிங்களத் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் இணைந்து கொண்டனர். இதில் முக்கிய பங்கெடுத்தவர்கள் டி. பி. ஜாயா, மாக்கான் மாக்கார், என். எச். எம். அப்துல் காதர் போன்றோராவர் சிங்களத் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் இணைந்து சுதந்திரப் போராட்டத்துக்கு பெரும்பங்களிப்பைச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அன்றைய எமது முஸ்லிம் தலைவர்கள் மிக நிதானமாகவும், புத்தி சாதுரியமாகவும் முஸ்லிம் சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்தனர். அதுவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியில் முஸ்லிம் சமூகம் தனிமைப்பட்டுச் செயற்படுவதை தவிர்த்துக் கொண்டனர். தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்தே சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தி வந்தனர்.

அத்துடன், தேசிய காங்கிரஸுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதத்தில் அரசியல் சார்பற்ற முஸ்லிம் அமைப்புக்களான அகில இலங்கை முஸ்லிம் லீக், இலங்கை முஸ்லிம் சங்கம், இலங்கை சோனகர் சங்கம் போன்றவை முஸ்லிம் சமூகத்தை அணிதிரட்டி ஒன்றுபடுத்தி சுதந்திரப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கின. அந்தப் பங்களிப்பு இன்று வரை தொடர்வதை காணக் கூடியதாகவே உள்ளது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் தேசபிதா டி.எஸ். சேனாநாயக்க தனது அரசவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடத்தை வழங்கினார். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் கூட முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டது. ரி.பி. ஜாயா, ராஸிக் பரீத், டாக்டர் எம்.சி.எம். கலீல், மாக்கான் மக்கார் என். டி. எச். அப்துல் கபூர், என். எச். எம். அப்துல் காதர் உள்ளிட்ட பலரும் இதில் உள்ளடங்குகின்றனர். அது மட்டுமல்ல சுதந்திர இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக எச்.எஸ். இஸ்மாயில், பண்டாரநாயக்க அரசில் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ​ெடாக்டர் பதியுதீன் மஹ்மூத் ஆவார்.

ஆரம்பம் முதலே முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார அரசியல் விழிப்புணர்வுக்காக அறிஞர் முஹம்மது காசிம் சித்திலெப்பை, ரி. பி. ஜாயா, சேர் ராஸிக் பரீத், டாக்டர் பதியுதீன் மஹ்மூத் எம். சி. அப்துல் ரஹ்மான், என். டி. எச். அப்துல் கபூர் உள்ளிட்ட பலரும் பாடுபட்டனர். ஆனால் இவர்களில் எவருமே முஸ்லிம் சமூகம் தனியான அரசியல் பாதையில் பயணிக்க வேண்டுமென்று சிந்திக்கவே இல்லை. தேசிய அரசியல் நீரோட்டத்தில் சமூகத்துக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தான் தீவிரமாக ஈடுபட்டனர். அத்துடன், பெரும்பான்மைச் சமூகத்தின் நல்லெண்ணத்தையும் வென்றெடுத்தனர். இதுதான் எமது முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் கடந்து வந்த பாதையாகும்.

இந்தச் சூழ்நிலையிலேயே 1977க்குப் பின்னரான காலப்பகுதியில், ஒருசிலர் முஸ்லிம்கள் அரசியலில் தனிவழி செல்ல வேண்டுமென்ற தொனியில் பேசத் தொடங்கினர். இவ்வாறு சிந்தித்தவர்கள். அதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்து எண்ணிப் பார்க்கத் தவறியுள்ளார்கள் என்பதே எனது வாதமாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த சகல அரசுகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடமளிக்கப்பட்டதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. அமைச்சுப் பதவிகள் சபாநாயகர் பதவிகள், பிரதியமைச்சர் பதவிகள் 1977க்குப் பின்னர் புதிய யாப்புக்கமைய தேசியப் பட்டியலில் கூட முஸ்லிம்களுக்குரிய இடம் வழங்கப்பட்டே வந்தது.

அதுமட்டுமன்றி அன்றைய அரசாங்க மேல் (செனட்) சபையில் கூட ஏ. எம். ஏ. அஸீஸ், ஏ. ஆர். ஹமீம், எம்.டி. கிச்சிலான், எஸ். இஸட், எம்.மசூர் மௌலானா போன்றோர் முஸ்லிம் சமூகம் சார்பில் நியமனம் பெற்றதையும் மறந்துவிடமுடியாது.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின்ற போது இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன?

நமது சமூகம் அரசியலில் எங்கு பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. 1981இல் காத்தான்குடியில் சில புத்திஜீவிகள் கூடி எடுத்த முடிவுக்கமை மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். இது வடக்கு, கிழக்கை மையமாக வைத்தே அன்று ஆரம்பிக்கப்பட்டது. அஷ்ரப் அவர்களின் நோக்கம் பிழையென சொல்ல முடியாது. அவரது இலக்கு நோக்கிய பயணம் அவரது மறைவுக்கு முன்னரே தடுமாறியதைச் சொல்லியாக வேண்டும். இறுதியில் அவரது மறைவுக்குப் பின்னர் அவரை முன்னிருத்திய பல கட்சிகள் உருவாகி விட்டன. இதன் மூலம் என்ன நடந்துள்ளது. அன்று எமது தலைவர்களினால் ஒற்றுமைபடுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் இன்று சிதறுண்டு சின்னாப்பின்னாமாகிப் போயுள்ளது.

இந்த இடத்தில் தான் யார் மீது பழிசுமத்த வரவில்லை. ஏன் எமது தலைவர்களால் இன்றுவிட முடியாது. அன்றைய மூத்த தலைவர்களும் பின்னர் அஷ்ரப் அவர்களும் காட்டிய பாதையில் எமது இலக்கு நோக்கிய பயணத்தை முன்னெடுக்க முடியாத முஸ்லிம்கள் அரசியலில் பல துருவங்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கப் போனால் எமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையே ஏற்படும். சுயநல அரசியல் செயற்பாடுகளை கைவிட்டு அகில தலனில் அக்கறை கொண்டு செயற்பட எமது தலைவர்கள் முன்வர வேண்டும். தற்போதைய பயணிக்கும் திசை தவறானது என்பதை மனதில் கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு சரியான திசையில் பயணத்தை முன்னெடுக்க முன்வர வேண்டும் இதுவே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Comments