அநியாய உயிரிழப்புகளுக்கு முடிவு காண்பது எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

அநியாய உயிரிழப்புகளுக்கு முடிவு காண்பது எப்போது?

போக்குவரத்துகளின் போது இடம்பெறுகின்ற விபத்துகள் தொடர்பான அவதானம் எமது நாட்டில் மோசமான முறையில் குறைவடைந்து கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் வேளையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது ஒருபுறமிருக்க, புகையிரத விபத்துகளின் போது மரணமடைகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே செல்கின்றது. புகையிரத விபத்தின் போது அநியாய உயிர்ப்பலிகள் நேர்ந்த ஒரு சம்பவமாக, கடந்த திங்கட்கிழமையன்று கொழும்புக்கு அருகேயுள்ள அங்குலானையில் இடம்பெற்ற அனர்த்தத்தைக் குறிப்பிட முடியும்.

வீதியில் செல்கின்ற வாகனங்கள் ரயில் கடவைகளில் வைத்து கவனக்குறைவாக புகையிரதத்தால் மோதுண்டு விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழக்கின்ற சம்பவங்களை அடிக்கடி நாம் கேள்வியுற்று வருகின்றோம். முச்சக்கர வண்டிகள், கார்கள், பஸ்கள், வான்கள் போன்ற வாகனங்கள் புகையிரதத்தினால் மோதுண்டு அநியாய உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கு அவ்வாகனங்களின் அலட்சியமே பிரதான காரணம்.

ஆனால் கரையோர ரயில் பாதையில் மொரட்டுவைக்கு சமீபமாகவுள்ள அங்குலானையில் வைத்து கடந்த திங்களன்று பயணிகள் மூவர் கொல்லப்பட்டமைக்கு அம்மூவரின் கவனக்குறைவே காரணமாக அமைந்து விட்டது.

கொழும்புக்கும் தென்மாகாணத்துக்குமிடையிலான கரையோர புகையிரதங்களில் பயணிகளின் எண்ணிக்கை எப்போதுமே அதிகரித்துக் காணப்படுவது வழக்கம். களுத்துறை, காலி, மாத்தளை போன்ற தூர இடங்களில் இருந்தெல்லாம் தினந்தோறும் கொழும்புக்கு புகையிரதத்தில் வந்து செல்வோரின் தொகை அதிகம். எனவேதான் கரையோர ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதுமே அதிகமாக இருப்பது வழக்கம்.

புகையிரத்தின் மிதிபலகையில் தொங்கியபடி பயணம் செய்கின்ற இளைஞர்களை எப்போதுமே காண முடியும். புகையிரதப் பெட்டிக்குள் பயணிகளின் நெரிசல் அதிகமாக இருப்பதால், வேறு வழியின்றி இளைஞர்கள் மிதிபலகையில் தொங்கியபடி பயணம் செய்வதுண்டு. ஆனால் ரயில் பெட்டிக்குள் சனநெரிசல் இல்லாத வேளையிலும், இளைஞர்கள் பலர் மிதிபலகையில் தொங்கியபடி பயணம் செய்வதை சாதாரணமாகக் காணமுடியும்.

இக்காட்சியை கரையோர புகையிரதங்களில் மாத்திரமன்றி, ஏனைய பகுதிகளுக்கான ரயில்களிலும் நாம் காண முடியும். வாலிபத் துடுக்குத்தனத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையும் இதற்குக் கூற முடியாதிருக்கின்றது.

புகையிரதத்தில் தினமும் இவ்வாறான ஆபத்தான பயணத்தை மேற்கொள்வோர் அதிகம் பேர் இருக்கின்றனர்.

இவ்வாறான ஆபத்தான பயணத்தின் போது, கால்தவறிக் கீழே வீழ்ந்து மரணத்தைத் தழுவிக் கொண்டோரும் பலர் உள்ளனர்.

அங்குலானையில் கடந்த திங்களன்று இடம்பெற்றிருப்பதும், இவ்வாறான துயரம் மிகுந்த சம்பவமாகும்.

புகையிரதத்தின் மிதிபலகையில் தொங்கிக் கொண்டபடி அந்த ரயிலில் இளைஞர் கூட்டமொன்று சென்று கொண்டிருந்த போது, ரயில் தண்டவாளத்துக்கு மிக சமீபமாக லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் காணவில்லை.

மிதிபலகையில் நின்றபடி பயணம் செய்த இளைஞர்கள், தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த லொறியுடன் மோதிபதும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே மூவர் பலியானதுடன், பலர் காயமடைய வேண்டிய பரிதாப நிலைமையும் ஏற்பட்டது. கொழும்புக்கு தொழிலுக்கென வந்து சென்ற வேளையில் அவர்களுக்கு இவ்வாறான முடிவொன்று ஏற்பட்டமை உண்மையிலேயே கவலைக்குரியது. இவ்வாறானதொரு விபத்து ஏற்படுமென்பதை அவ்விளைஞர்கள் சற்றேனும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கவனக்குறைவும், அலட்சியமும் இவ்வாறான பரிதாபமான முடிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டன.

மிதிபலகையில் நின்றபடி புகைவண்டியில் பயணம் செய்வோரின் சுபாவம் ஒருபுறமிருக்க, ரயில்வே திணைக்களம் இவ்விடயத்தில் இனிமேல் உரிய கவனம் மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து பஸ்களில் மிதிபலகையில் நின்றபடி பயணம் செய்வது குற்றமாகும். அவ்வாறு மிதிபலகையில் நின்றபடி பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், குறித்த பஸ்வண்டியின் சாரதிக்கு அபராதம் அறிவிடும் நடைமுறை எமது நாட்டில் அமுலில் உள்ளது.

ஆனாலும் புகையிரதத்தின் மிதிவண்டியில் தொங்கியபடி மக்கள் பயணம் செய்வதை ரயில்வே திணைக்கள அதிகாரிகளோ, பொலிஸாரோ கண்டுகொள்வதில்லை. எனவேதான் இவ்வாறான அநியாய மரணங்கள் அடிக்கடி சம்பவிக்கின்றன.

இலங்கையில் வாகன விபத்துகள் மோசமாக அதிகரித்து விட்டன. தினமும் சராசரியாக ஏழு பேர் வாகன விபத்துகளால் உயிரிழப்புதாகவும், மேலும் பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகின்றது. வீதிகள் நேர்த்தியாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம் போக்குவரத்துக் குற்றம் இழைப்போருக்கு வழங்கப்படுகின்ற தண்டனை எமது நாட்டில் போதாது என்றொரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

போக்குவரத்துப் பொலிஸாரில் ஒரு பிரிவினர் தங்களது கடமைகளில் அசமந்தமாக இருப்பதும் வாகன விபத்துக்களுக்குக் காரணமாகும். வீதிவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பெருமுயற்சி மேற்கொள்கின்ற போதிலும், அந்த இலக்கை இன்னுமே அடைய முடியாதிருக்கின்றது. சாரதிகளில் அநேகமானோர் சட்டத்தை அனுசரித்துச் செயற்பட விடும்புவதில்லை.

இவ்வாறான துயரம் நிறைந்த மரணங்கள் இனிமேலும் தொடருவதற்கு இடமளிப்பது முறையல்ல. போக்குவரத்து விபத்துகளைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். 

Comments