ஆபத்தான மிதிபலகை பயணம்! | தினகரன் வாரமஞ்சரி

ஆபத்தான மிதிபலகை பயணம்!

போல் வில்சன்   

"மூன்றாம் மேடையிலிருக்கும் புகையிரதம் இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும்! அது நிப்பாட்டும் இடங்கள்...." அறிவிப்பு முடியும் முன்னரே அந்தரித்துக் கொண்டு பலர் ஓடி வருவார்கள். பதிவு செய்த பெட்டியா? உறங்கல் இருக்கையா? தேடியலைந்து பெட்டியைக் கண்டுபிடிக்கும் முன்னரே ரயில் நகரத் தொடங்கும்! இந்த நிலையை நினைத்துப் பாருங்கள்.

ஒருவர் உள்ளே இருப்பார்.மற்றவர் ரயிலுடன் ஓடிக் கொண்டிருப்பார். எத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்த நிலை நாளுக்கு நாள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

அலைபேசியில் கதைத்துக் கொண்டு தண்டவாளத்தில் நடந்தவர்கள் ரயிலில் மோதுண்டு பலி!

இளஞ்சோடி ரயிலின் முன் பாய்ந்து தற்கொ​ைல!

மிதிபலகையில் பயணித்தவர் தவறி விழுந்தவர் பலி!

ஓடும் ரயிலில் ஏறியவர் தவறிவிழுந்து பலி!

அண்மையில் வழக்கிற்காகக் கொழும்பு வந்திருந்த வவுனியா பெண்ணொருவர் வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார்.

மிக அண்மைச் சம்பவமாக அங்குலானை சம்பவம் பதிவாயிருக்கிறது.

கடந்த 5 ஆம் திகதி மாலை 4.55 மணியளவில் ரயில் மிதிபலகையில் தொங்கிப் பயணித்த வேளை அங்குலானை ரயில் பாதைக்கு மிக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் அந்தத் தொங்கும் கூட்டம் மோதிச் சிதறுகிறது. மூவர் நசிந்து மரணமடைந்து மேலும் அறுவருக்கு பேராபத்துக் காயங்கள்! இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலுக்கு சென்று வீடு நோக்கிச் சென்றவர்கள்.

இவற்றுக்கு யார் பொறுப்பு? கடுகதி ரயிலா? பயணிகளா? அல்லது ரயில்வே திணைக்களமா? மிதிபலகையில் பயணித்தால், சாரதிக்கும் நடத்துனருக்கும் தண்டம் விதிக்கும் நடைமுறை பஸ்ஸுக்கு இருக்கிறது. ரயிலுக்கு...?

இவ்விபத்துக்களை எப்படி தடுப்பது? ஆராய்வதற்கு இப்போதுதான் ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

காலை, மாலை ரயில் வண்டிகளில் அளவுக்கதிகமான பயணிகள் பயணிப்பதால், வண்டிகளில் அதிகளவான பெட்டிகள் இணைத்திருந்தால் இப்படியான விபத்து ஏற்பட்டிருக்குமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். வேலைகளை முடித்துக் கொண்டு விரைவாக வீடு செல்ல வேண்டும் என்ற ரீதியில் ரயிலில் எப்படியாவது தொற்றிக் கொண்டாவது வீடு செல்ல வேண்டும் என்ற அவசரம் யாவருக்கும் உண்டு.

கடந்த காலங்களில் ரயில் கடவைகளில் வாகனங்கள் முந்தியடித்துக் கொண்டு செல்ல முற்படுகையில் ஏற்பட்ட விபத்துகள் அதிகளவில் பதிவாகியுள்ளன. ரயில் தண்டவாளங்கள், வீதிகள் சந்திக்கும் இடங்களில் சமிக்ைஞ விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சமிக்ைஞ விளக்குகளுடன் சில இடங்களில் ரயில் கடவை இணைக்கப்பட்டிருக்கும். நகரங்களுக்கு வெளியில் ரயில் கேட் மட்டுமே காணப்படும். இந்த சமிக்ைஞகளை ஒழுங்குகளை கடந்த காலங்களில் அதிகளவான வாகன சாரதிகள் கடைப்பிடிக்காததால், ரயில் கடவை ஒழுங்கை மீறுவோருக்கு இருபத்தையாயிரம் ரூபாய் அறவிடப்பட்டது. சில இடங்களில் வாகனம் செலுத்துவோரின் கவனவீனம், அவசரம் காரணத்தினாலும் விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன.

சில பாதசாரிகள் ரயில் வருவதை பார்த்த வண்ணமே ரயில் கடவையினை தாண்டுவதும், ரயில்வே நிலையங்கள் பயணிகளுக்காக பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் பாலங்களைப் பயன்படுத்தாமல் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்தே செல்கின்றனர்.

ரயில் கடவையில் நடந்து செல்லுதல், ரயில் கடவையைக் கடக்கும் போது கைபேசியைப் பயன்படுத்துவது உட்பட ரயில்வே தண்டவாளத்திற்கு மிக அருகில் வசிப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். கடந்த காலங்களில் ரயில் பாதைகளில் செல்பி படம் எடுத்தவர்கள் விபத்துக்களை சந்தித்ததையும் குறிப்பிடத்தக்கது.

சிலர் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு ரயில்வே தண்டவாளங்களை நாடி செல்வது வேதனைக்குரிய விடயமாகும். இதனால் பாதிக்கப்படுவது ரயிலில் பயணிப்பவர்களும் தான் என்பதனையும் மறந்திடலாகாது. ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்சினைகளினால் ரயில் பயணிகளின் பயணங்களே தாமததாகுகின்றன என்பதையும் பொதுமக்கள் தெளிந்துணர வேண்டும்.

பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு விரும்பும் காரணங்களில் கட்டணம் குறைவு, பஸ் பணத்தைவிட ரயில் பயணம் மிக விரைவாக சென்றடையலாம். உதாரணத்திற்கு கொழும்பிலிருந்து வேயாங்கொடைக்கு செல்வதானால் பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் செல்லும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் சாதாரண ரயிலில் பயணிக்கும் போது 40 நிமிடங்களில் இத்தூரத்தை சென்றடையலாம். அத்துடன் ரயில் பயணத்தில் வாகன நெரிசல் போன்றவை இருப்பதில்லை என்பதும் ஒருகாரணமாகும்.

அதிகமான நகரங்கள் ரயில் நிலையத்தை அண்டியதாகவே காணப்படுவதாலும் மக்களின் தேவைகளும் அதிகமாக காணப்படுகின்றது. பாடசாலை, காரியாலய வேலைகளில் பயணிக்கும் பயணிகள் மிகவும் நொறுங்கி, நசுங்கி, தள்ளப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலேயே பயணிக்கிறோம். ரயிலிலிருந்து இறங்கும் போதும் இதே நிலையே காணப்படுகின்றது. ஒருசில நொடிகளில் அவசர அவசரமாக இறங்க வேண்டயுள்ளது. எப்படியாவது ரயிலில் ஏறி பணிக்க வேண்டும். இறங்க வேண்டிய இடத்தில் இறங்க வேண்டும். இதில் தவறுகள் நடந்தால் அங்கவீனமாகலாம் அல்லது மரணத்தை சந்திக்கலாம் என்கிறார் ஒரு பயணி.

காலை, மாலை வேளையிலும் காரியாலயங்கள் முடிந்த ரயிலில் முண்றியடித்துக் கொண்டு தொங்கிவாறே அதிகளவான ரயில் பயணிகள் பயணம் செய்கின்றனர். பஸ்ஸைவிட அதிகளவான பயணிகளை உள்வாங்கக் கூடியது ரயில் பெட்டிகளேயாகும். அரசாங்கமும் மக்களின் தேவையை அறிந்து அதிகளவான ரயில் பெட்டிகளை உள்வாங்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு அதிகளவான வருமானத்தை கொண்டுவருவது ரயில்வே திணைக்களமாகும். மக்களின் தேவைகளை அறிந்து அதிகளவான பயணிகள் பெட்டிகளை இணைத்தல் வேண்டும். இதேவேளை காரியாலய நாட்களிலும், காரியாலய நேரங்களான காலை, மாலை வேளைகளில் ஈடுபடுத்தப்படும் ரயில் வண்டிகளுக்கு அதிகளவான பெட்டிகளை இணைக்கும் போது மக்களும் வசதி, பாதுகாப்பு, சௌகரியத்துடன் பயணிக்க முடியும்.

பஸ் வண்டிகள் மிதிபலகையில் பயணிக்கும் போது, பஸ் நடத்துநர் மிதிபலகையில் பயணிப்பவர்களை பார்த்து மேலே வரும்படி சத்தமிடுவார். அத்துடன் பொலிஸாரால் வழிமறிக்கப்படும் என்ற ரீதியில் கூறி, மிதி பலகையில் பணிப்பவர்களை பார்த்து காரசாரமாக கூறுவர்.பாடசாலை மாணவர்கள் அதிகளவில் மிதிபலகையில் பயணிப்பதை காணக்கூடியதாக உள்ளது இவ்விபத்துக்களை மனதில் கொண்டு மிதிபலகைப் பயணங்களை தவிர்த்தல் வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்.

இதேவேளையில் ரயில் மிதிபலகையில் பயணிப்பவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்ைகயும் எடுக்கப்படுவதில்லை. ஒருசிலர் எவ்வளவுதான் இடவசதியிருக்கும் மிதிபலகையில் பயணிப்பதையே விரும்பவர். இவர்களுக்கு எதிராக நடவடிக்ைக எடுப்பது யார். ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் பரிசோதகர்கள் நியமிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். இதுவும் ரயில்வே திணைக்களத்தின் கடமைக்குள் ஒன்றாகும்.

வருடாந்தம் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்ைக அதிகரித்தாலும் ரயில் வண்டிகளின் எண்ணிக்ைக அல்லது ரயில் பெட்டிகளின் எண்ணிக்ைக அதிகரித்தா? போக்குவரத்து அமைச்சரும் ரயில் சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளும் பொதுமக்களின் விடயத்தில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். அதிகளவான அரச சேவையாளர்கள் ரயில் வண்டியை நம்பியே தொழில் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகளவான பாடசாலை மாணவ மாணவிகளும் ரயில் பயணத்திலே செல்லுகின்றபடியினால் காரியாலய நேரங்கள் மட்டுமன்றி பாடசாலை நேரங்களையும் கவனத்தில் கொண்டு ரயில் சேவையை மேம்படுத்தி அதிகளனவான ரயில் போக்குவரத்துக்கு வழிசமைக்க வேண்டும். 

 

Comments