சீர் செய்ய முடியாத அழிவை நோக்கி இளைய சமூகம் | தினகரன் வாரமஞ்சரி

சீர் செய்ய முடியாத அழிவை நோக்கி இளைய சமூகம்

கருணாகரன்

நாட்டின் கடலோரங்கள் மீன்பிடிக்குப் பதிலாக “கஞ்சா” கடத்தலினால் நிறைந்து போயுள்ளன. மீன்பிடித் தொழிலையும் விட கஞ்சாவைக் கடத்துவதிலேயே பலருக்கும் ஆர்வம் வந்துள்ளது போலிருக்கிறது. கடற்கரைகளில் மீன்பிடியைப் பற்றிய செய்திகள், தகவல்கள் வருவதை விடக் கஞ்சாக் கடத்தல் பற்றிய செய்திகளே அதிகமாக வருகிறது.

ஒரு மாதத்தில் ஒரு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கடலுணவு உற்பத்தியின் பெறுமதியைப் பற்றி யாருக்குமே தெரியாது. அதை யாரும் மதிப்பிடுவதும் கிடையாது. ஆனால், ஒரு மாதத்தில் அந்தப் பிரதேசத்தில் எத்தனை கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டது என்ற செய்திகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

அந்தளவுக்குக் கஞ்சா பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டேயிருக்கின்றன. “இரண்டு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது”. ”நான்கு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது” என்று ஒவ்வொரு நாளும் அறிந்து கொண்டிருக்கிறோம். இது கைப்பற்றப்பட்ட அல்லது பிடிக்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி மட்டுமே. பொலிசாரினால் கைப்பற்றப்படாத, கண்களில் சிக்காத கஞ்சாவின் பெறுமதி இதை விடப் பன்மடங்காக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஏனெனில் தொழில் தொடர்ந்து நடக்கவில்லை என்றால், அதில் தொடர்ந்து ஈடுபட மாட்டார்கள். தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தால் மட்டுமே அதில் ஈடுபடுவார்கள். அதுவும் இது கடினமான சிரமத்துக்குரிய – ஆபத்துக்குரிய – சிறைவரை செல்லக்கூடிய குற்றச் செயல். எனவே இவ்வாறான ஆபத்துகளையும் சிரமத்தையும் எடுத்து இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என்றால், அது ஏதோ ஒரு வகையில் வெற்றிகரமாக நடக்கிறது என்றே அர்த்தமாகும். இதேவேளை இதை ஒரு தொழிலாகக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் உண்டு. சட்டவிரோதமாகச் செய்யப்படும் ஒரு செயல் தொழிலாக இருக்க முடியாது. அது “குற்றச் செயல்” என்றே பார்க்கப்படும். நிச்சயமாகத் தொழிலாகக் கொள்ளப்பட முடியாது. தொழில் என்பது வெளிப்படையாக – சமூக அங்கீகாரத்துடன் செய்யப்படுவதாகும்.

சட்டவிரோத மணல் கடத்தல், சட்டவிரோத மரம் கடத்தல், சட்டவிரோத மரம் வெட்டுதல் போன்றவையும் இப்படித்தான். பொலிசாரினால் கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படும் கேஸ்களை விட பொலிசாரிடம் சிக்காமல் நடந்து கொண்டிருக்கிற சட்டவிரோத மணல், மரம் கடத்தல் மூன்று மடங்குக்கும் அதிகமாகும். ஆகவேதான் தொடர்ந்தும் இவை சிக்கக்கூடியதாக இருக்கிறது. கஞ்சாக் கடத்தலும் அப்படித்தான். தொடர்ந்து வெற்றிகரமாக இந்தக் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. இடையிடையே மட்டும்தான் இது சிக்குகிறது. அப்படியென்றால், இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதன் முடிவு என்ன? என்ற கேள்விகள் உங்களிடம் எழும்.

முதலில் இவை தொடர்பாக நாம் சில விசயங்களை விளங்கிக் கொள்ள வேணும்.

1. இந்தக் கஞ்சா இந்தியாவிலிருந்தே எடுத்து வரப்படுகிறது. அதிலும் கேரளத்திலிருந்து எடுத்து வரப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், இதற்கான பின்னணி என்ன? வெறுமனே சட்டவிரோத சக்திகளின் வியாபார நடவடிக்கை மட்டும்தானா இது? அல்லது, இதன் பின்னணியில் வேறு ஏதேனும் அரசியல் காரணங்கள் உண்டா? தொடர்ச்சியாக இவ்வளவு பெருந்தொகையான கஞ்சா கடல் வழியாக வருகிறது என்றால், அதற்குப் பின்னணியாக பெரியதொரு வலையமைப்பு இருக்க வேணும். கஞ்சாவைச் சேகரிப்பது, அதைக் கடல் வழியாக ஏற்றுவது, பின்னர் பாதுகாப்பான வழிகளால் இலங்கைக்குக் கொண்டு வருவது, இடையில் இந்திய – இலங்கைக் கடற்படை, கடலோரக் கண்காணிப்புப் படை, சுங்கப்பகுதி போன்றவற்றின் கண்களில் சிக்காமல் தப்பிக்கொள்வது, அல்லது கண்டும் காணாமலும் இருப்பது, இலங்கையில் இறக்குவது, பிறகு அதைப் பரவலாக்கிச் சந்தைப் படுத்துவது என்று ஒரு பெரிய தொடர் செயற்பாட்டு வலையமைப்பு இருக்க வேணும். இதை ஒன்றிரண்டு பேர் மட்டும் செய்ய முடியாது. இதற்குப் பெரியதொரு வலையமைப்பில் பல்வேறு தரப்பினர் தேவை. பல நிலைகளில் உள்ளவர்கள் தேவை. பெரும் நிதிப்புழக்கம் வேண்டும். அரச அங்கீகாரம் மறைமுகமாக இல்லை என்றால் இது இவ்வளவு காலத்துக்கு நீடிக்க முடியாது. மட்டுமல்ல முன்னரை விட இப்பொழுது இந்தக் கடத்தல் அதிகமாகியிருக்கிறது. பொலிசாரின் அறிக்கைகளும் நமக்கு நாளாந்தம் கிடைக்கின்ற செய்திகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.

2. இதுவரையில் இந்தச் சட்டவிரோத – சமூக விரோதக் கஞ்சா கடத்தல் பற்றி இலங்கை – இந்திய அரசுகள் உத்தியோகபூர்வமாகப் பேசியதாகவோ கூட்டு நடவடிக்கை எடுத்தாகவோ இல்லை. எந்தப் பகுதிகளின் வழியாகக் கஞ்சா கடத்தப்படுகிறது என்பதையிட்டு இவை கலந்து பேசி ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டதாகவோ தெரியவில்லை. இன்று வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி இதை உச்சமாகக் கண்காணிக்க முடியும், கண்டறிய இயலும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை. அப்படியென்றால் இது தொடர்பாக இரண்டு நாடுகளும் அக்கறையற்றிருப்பது ஏன்?

3. சட்டவிரோதமாக எந்தத் தொழில் நடந்தாலும் அது நாட்டுக்குப் பெருங்கேடாகும். இதைத் தடுப்பதற்கு உச்சப்பட்சமான நடவடிக்கைகளும் சட்ட இறுக்கமும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதன் விளைவு மிகப் பாரதூரமாகவே அமையும். இதைக் குறித்து அரசுகள் மட்டுமல்ல, மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பிற பொதுச் செயற்பாட்டு அமைப்புகளும் அக்கறையற்றிருப்பது ஏன்?

4. கஞ்சா என்பது ஒரு போதைப்பொருள். இந்தப் போதைப்பொருள் பாவனை அதிகரித்தால் அது சமூகத்தை நேரடியாகவே பாதிக்கும். சமூகத்தின் இயங்கு விதிக்குச் சவாலாகி விடும். பண்பாட்டு நெருக்கடியை உண்டாக்கும். நாட்டின் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும். சட்டம் ஒழுங்குக்கு சவாலை உண்டாக்கும். அத்துடன் உழைப்புச் சக்தியை வீணடிக்கும். நாட்டின் பொருளாதாரத்தைக் கீழிறக்கும். இளைய தலைமுறையினரைப் பாழடித்து விடும். பின்னர் இலகுவில் சமூகத்தையும் நாட்டையும் மீட்டெடுக்க முடியாத நிலையை உண்டாக்கி விடும்.

5. மத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மருத்துவத்தரப்பு போன்றவை இந்தப் பிரச்சினை தொடர்பாக கொண்டிருக்கும் அக்கறைகள் என்ன? மதிப்பீடுகள் என்ன?

இப்படிப் பல முனைகளில் நாம் இந்தப் பிரச்சினை தொடர்பாகச் சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் வேண்டியுள்ளது. இதைச் சாதாரணமானதொரு விடயமாகக் கருதிவிடமுடியாது.

நாடு யுத்தத்தினாலும் ஜே.வி.பியின் போராட்டத்துக்கு எதிரான அரச ஒடுக்குமுறையினாலும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினரை இழந்திருக்கிறது. அவ்வளவுபேரும் நாட்டின் உழைக்கும் சக்தியினராகும். மிஞ்சிய இளைய தலைமுறையினரில் ஒரு தொகுதியினர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். மிஞ்சியிருக்கும் இளையோரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாட்டில் சரியான பொருளாதாரக் கொள்கை இல்லை. பொருத்தமான தொழில்துறைகள் இல்லை. இந்த நிலையில் மிஞ்சியிருக்கும் இளைய தலைமுறையையும் இப்படிச் சீரழித்தால்?

உண்மையில் இதற்கு அவசரமான – அவசியமான நடவடிக்கை அவசியம். இன்று உலகத்துக்குப் பெரும் சவாலாக இருக்கும் விடயங்களில் ஒன்று போதைப் பொருள் பாவனையாகும். இளைய தலைமுறையினரே அதிகளவில் போதைப்பொருள்களுக்கு அடிமையாகின்றனர் என்ற வகையில் இது உலகத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கும் விடயமாக உள்ளது.

பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ஆரோக்கியக் குறைபாடு என்ற வகையில், பண்பாட்டுச் சிதைவை ஏற்படுத்தக் கூடியது என்ற அடிப்படையில் இந்தக் கடத்தல் பாரதூரமான ஒன்று. எனவே இதற்கு உரிய நடவடிக்கைகளை உரிய வேளையில் உரிய முறையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் நாடு யுத்தப் பாதிப்பையும் விடப் பெரியதொரு பாதிப்பையே சந்திக்கும். அது எளிதில் சீர்ப் படுத்த முடியாத பாதிப்பாக இருக்கும். 

Comments