தேசிய பூங்காக்களில் பிளாஸ்டிக் பொலித்தீன் தடை | தினகரன் வாரமஞ்சரி

தேசிய பூங்காக்களில் பிளாஸ்டிக் பொலித்தீன் தடை

ராம்ஜி

தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு செல்பவர்கள் இனிமேல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பைகள் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்ல முடியாது. இதற்கான தடை கடந்த வாரம் முதல் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உக்கும் பொலித்தீன் பைகளைக் கூடக்கொண்டு போக முடியாதவாறு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே, இந்த சட்டம் அமுலில் இருந்தபோதும் அது தீவிரமாக கடைப்பிடிக்கப்படவில்லை. எனினும் சிவனொளிபாத மலைப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் வீசப்படுவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வந்திருப்பதையடுத்து இப்போது இச்சட்டத்தை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு கடந்த வாரம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்கள் வாழ்க்கையை இலகுவாக்க உருவாக்கப்பட்டதுதான் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், என்பதை மறுப்பதற்கில்லை. எங்களைச் சுற்றி ஒருதரம் பாருங்கள் சுற்றியுள்ள பொருட்களில் நிறையப் பொருட்கள் பிளாஸ்டிக்கிலானவை அல்லது பொலித்தீனுடன் சம்பந்தப்பட்டவை.

காலையில் எழுந்ததும் பல்துலக்கும் பற்பசை டியூப், ரூத் பிரஸ் முதல் தேனீர் குடிக்கும் கப் சாப்பிடும் பிளேட் என பிளாஸ்டிக் பாவனை காலையிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. பீங்கான் கோப்பைகள் உடைந்துவிடலாம் என்ற பயத்தில் பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் கோப்பைகள் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான தமிழர் வீடுகளில் சில்வர் தட்டுக்கள் பாவிக்கப்படுவதுண்டு.

அதையடுத்து கடைக்கு போனால் சுப்பர் மார்கட்போனால் எல்லாமே பொலித்தீன் மயம்தான். வாங்கும் அத்தனை பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுத்தான் தரப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகளை அல்லது பொலித்தீன் பைகளை மீண்டும் ஒருமுறை கடைக்குச் செல்லும்போது எடுத்துச் செல்கிறோமா என்றால் அதுதான் இல்லை.

இவற்றை ஒரு தடவை மட்டும் பாவித்து விட்டு குப்பைகளை அதற்குள் போடுகிறோம். அதனால் அந்தப் பொலித்தீன் பேக்குகள் குப்பையோடு சேர்ந்துவிடுகின்றன. இலங்கையில் ஒரு நாளைக்கு மட்டும் 20 மில்லியன் பொலித்தீன் பேக்குகளும் 15 மில்லியன் லன்ஞ்சீட்டுக்களும் பாவிக்கப்படுவதாக கணக்கெடுத்திருக்கிறார்கள். அடுத்த ஓரிரு நாட்களில் இவை குப்பையுடன் சேர்ந்து விடுகின்றன. இந்தப் பொலித்தீன் பைகளை நீங்கள் எங்கே வீசினாலும் அவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே இருக்கும் உக்கிப்போகாது.

இவ்வாறான பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் பொது இடங்களில் வீசப்படும்போது நிலைமை பெரும் மோசமடைகிறது. கண்டி பெரஹெர காலத்தில் தலதாமாளிகை அருகில் மட்டும் 20 தொன் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. சிவனொளிபாதமலைப் பகுதியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டும் 10 இலட்சத்துக்கும் மேல் இவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

வணக்கத்தலங்களுக்கே இவ்வாறான நிலை ஏற்படுமானால் மற்றைய இடங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றபோது இவ்வாறான நிலையை காண முடிந்தது.

இவ்வாறான நிலையில்தான் அரசாங்கம் பொலித்தீன் பாவனையையும் விற்பனையையும் தடை செய்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் தடை தீவிரமாக்கப்படும் என்று கூறப்பட்டது. எளிதில் உக்கிப்போகும் பொலித்தீனை இப்போது மாற்றாகக் கொண்டுவந்திருக்கிறார்கள் ஆனால் இவை பாவனைக்கு ஏற்றவையாக இல்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு திணிவுக்கு குறைந்த அளவுடைய பொலித்தீன் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்தமாதம் லஞ்சீட்டுக்கு என்றும் இல்லாதவாறு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து சாப்பாட்டுப் பார்சலின் விலையை 15, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட சம்பவத்தை யாரிடம் சொல்லி முறையிடுவது என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

திண்மக் கழிவு முகாமைத்துவம், மீள்சுழற்சி ஆகியவற்றில் வெளிநாடுகள் வெகுதூரம் சென்றுள்ள நிலையில் நாம் இன்னும் இருந்த இடத்திலேயே நிற்கிறோம். மீதொட்டமுல்லை உயிரிழப்புக்கள் இடம்பெற்றும் கூட அந்தக் குப்பை மேடுகள் இருந்ததைப்போலத்தான் இப்போதும் இருக்கின்றன. ஜப்பானிய குழுவொன்று இலங்கைக்கு வந்து குப்பை மேட்டினை சீர்படுத்துவது பற்றி அறிவுறுத்தல்களை வழங்கியும் இன்னும் எதுவும் உருப்படியாக நடந்ததாக தெரியவில்லை. இதற்கிடையில் மீண்டும் மழைக்காலம் வந்தால் வேலைகள் நடக்கப்போவதில்லை. பிரச்சினைகள் குறையவும் போவதில்லை.

குப்பைகளை கடலில்போடும் ஆசிய நாடுகளில் 5ஆவது இடத்தில்இருப்பது இலங்கை. நல்ல விடயங்களில் முன்னணி இடத்தைப்பெற முடியாவிட்டாலும் கூட இவ்வாறான விடயங்களில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

மீள் சுழற்சியை நாம் பெரும்பாலும் கணக்கிலேயே எடுப்பதில்லை. அமெரிக்காவில் 7 வயது சிறுவன் ஒருவன் பிளாஸ்டிக் போத்தல்களை 2 வருடங்கள் மீள் சுழற்சி செய்வதன் மூலம் மட்டும் 20ஆயிரம் டொலர்களை சம்பாதித்திருக்கின்றான். இந்த சம்பவங்கள் எங்களுக்கு பாடமாக அமையாதா என்றால் இல்லை.

யாழ். மாநகர சபை சேகரிக்கும் குப்பைகளை தனது வேலையாட்களை வைத்தே தரம் பிரிப்பதாகவும் அவ்வாறு தரம் பிரிக்கும்போது சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை இந்தியாவிலுள்ள ஒரு வர்த்தகருக்கு விற்றுவிடுவதாகவும் தெரியவருகிறது. கொழும்பில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டால் என்ன? அதனால் குப்பைகளும் காலி, பணத்தக்கு பணமும் கிடைக்கிறது.

பொலித்தீனுக்கும் பிளாஸ்டிக்கும் எங்கள் சனம் நன்றாக பழகிவிட்டது. அதை மெல்ல மெல்லத்தான் மறக்கச் செய்ய வேண்டும். ஊடகங்கள் இதற்கு பாரிய பங்களிப்பைச் செய்யவேண்டும். மீள் சுழற்சியின் தேவை பற்றியும் நீரை விரயமாக்காமல் இருப்பது பற்றியும் அவை மக்களுக்கு விழிப்புணர்வினை வமங்க வேண்டும்.

பொலித்தீன் பைகளை தவிர்த்து கடதாசி, துணி ஆகியவற்றினால் செய்யப்பட்ட பைகளை பாவிக்குமாறு ஊடகங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பிளாஸ்டிக் போத்தல்களின் மீள்பாவனை பற்றி மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறான பழக்கங்களை மக்களிடையே பழக்கப்படுத்திவிட்டால் ஒரேயடியாக பொலித்தீன் பாவனைணை மக்களிடையே குறைக்க முடியாவிட்டாலும் கூட காலப்போக்கில் பயன் ஏற்படலாம். 

Comments