பண்டைய உலகமும் பழந்தமிழரும் கொண்டாடி மகிழ்ந்த | தினகரன் வாரமஞ்சரி

பண்டைய உலகமும் பழந்தமிழரும் கொண்டாடி மகிழ்ந்த

அருள் சத்தியநாதன் 
\

எதிர்வரும் 14 ஆம் திகதி உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படவுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் எந்தப் பிரச்சினையுமின்றி காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும் தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்றும் நாடுகளில் காதலர் தினம் அனுஷ்டிக்கப்படுவதில்லை. இலங்கை சார்ந்த ஆசிய வலய நாடுகளில் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு காணாப்படும் அதே சமயம் வட இந்திய மாநிலங்களிலும் இந்துத்துவ சக்திகள் காதலர் தினத்தை மூர்க்கமாக எதிர்ப்பதை சமீப காலமாக பார்த்து வருகிறோம். காதலர் தினம் என்பது மேல்நாட்டு கலாசாரம் எனவும், இந்திய கலாசாரத்தை சீரழிப்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட வர்தத்க மயமாக்கப்பட்ட ஒரு அசிங்கமான கலாசாரம் இங்கே இளைஞர் மத்தியில் திணிக்கப்படுகிறது என்பதும் இந்திய காதலர் தின எதிர்பாளர்களின் கருத்து.

இலங்கையில் காதலர் தினம் அனுமதிக்கப்பட்ட ஒன்று. கடைகளில் காதலர் தினத்துக்குரிய பரிசுப் பொருட்கள். விசேட சொக்கலட்டுகள், உடைகள் என்பன விற்பனைக்கு வருகின்றன. பெரிய ஹோட்டல்கள் காதலர் தின இரவு போசன நிகழ்ச்சிகளை விசேடமாக ஏற்பாடு செய்யும் அதே சமயம் இலத்திரனியல் ஊடகங்கள் தமது நேயர்களுக்காக காதலர் உல்லாச பயணங்களை நடத்துவதும் வழக்கம். சிங்கள சமூகத்தின் சில பிரிவினர், குறிப்பாக மதம் சார்ந்த பார்வை கொண்டோர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பொதுவாகவே வெளிப்படைத் தன்மை கொண்ட சிங்கள சமூகம் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அனேகமாக, கண்டுகொள்ளாத ஒரு போக்கையே கடைபிடிக்கிறார்கள் எனலாம்.

சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ, அவர்கள் அனைவருமே இந்தியாவை பின்னணியாகக் கொண்ட சமூகங்கள். உலகிலேயே முதன் முறையாக ஆண்- பெண் உறவைப் பற்றி வெளிப்படையாக அதை ஒரு துறையாகவும், கலையாகவும், ஏன் ஒரு யோகமாகவும் கூட போதித்த காமசூத்திரத்தை எழுதிய வத்சாயனர் இந்தியாவைச் சேர்ந்தவர். இன்றைக்கும் இந்த நூல் உயிர்ப்புடனேயே உள்ளது. கஜூராஹோ கோவில்களின் காமலீலைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. சிவனை லிங்கமாக சைவர்கள் வழிபடுகிறார்கள். சிவ- சக்தி இணைப்பின் தத்துவம் நாம் அறிந்ததே. சக்தியும் ஸ்தூலமும் இணையும் போது படைப்பு நிகழ்கிறது என்பதோடு அது ஒரு யோகமாகவும் பார்க்கப்படுகிறது.

கிருஷ்ண லீலைகள் நாம் அறிந்தவை. கோபியர்களோடு நந்த கோபாலனின் ராசலீலைகளே, செழுமையான கலைகள், கவிதைகள், நடனங்கள் இந்தியாவெங்கும் தோன்றுவதற்கு காரணமாகின. வட இந்திய மீராவானாலும் சரி, தென்னிந்திய ஆண்டாளும் சரி, கிருஷ்ண பிரேமை கொண்டு காதலில் கசிந்துருகியவர்கள். காதலின் ஊடாகவும் பரமாத்மாவை அடையலாம் என்பதை இது எடுத்துரைத்தது என்பது முக்கியமான அம்சம். பிற்காலத்தில் இதை ஒரு தத்துவக் கோட்பாடாக எடுத்துக்கொண்ட ரஜ்னீஷ், காதல் யோகாவை ஆன்மிக வழிமுறையாக அறிமுகம் செய்தார். அமெரிக்காவில் அவர் அமைத்த ஒரிகன் பண்ணை ஆசிரமத்தில் சுதந்திர பாலியலுக்கு அனுமதி இருந்தது நிர்வாண பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது. மன நோயாளர்களாகவும், உடல் உபாதைகொண்டவர்களாகவும் இருக்கும் ரஜனீஷ் பக்தர்களுக்கு நிர்வாண சிகிச்சை வழங்கப்பட்டது. காதல் தொன்மை மிக்கதும் உலகை இயக்கி உயிர்ப்புடன் வைத்திருக்கும் காம சக்தியின் இன்னொரு வடிவமாக இருப்பதால் அதை ஒரு யோகமாகவும், அனுபவிப்பதன் மூலம் அவற்றை நிராகரித்து அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி ஜீவாத்மாவினால் பயணித்து பரமாத்மாவை நோக்கி நகரக் கூடியதாக இருக்கும் என்றும் ரஜனீஷ் கருதி அதையே பிரயோகிக்கவும் செய்தார். இந்தியாவில் ஏற்கனவே பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்ட ஒரு ஆன்மிகக் கோட்பாட்டையே மீளவும் கட்டமைத்ததாக ரஜனீஷ் கூறினார்.

வாழ்க்கையில் சிருங்காரம் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்பதுதான் தமிழரின் பண்பாடாக இருந்தது. சமண முனிவராக அல்லது அறிஞராக இருந்திருக்கக்கூடிய திருவள்ளுவர் தன் திருக்குறளில் காமத்துப்பாவை வைத்தார் என்பதில் இருந்து அது எவ்வளவு முக்கியமாக தமிழ்ச் சமூகத்தில் பேணப்பட்டு வந்துள்ளது என்பதை உணரலாம். சங்க இலக்கியத்தை அகத்திணை புறத்திணை எனப் பிரிக்கிறார்கள். அகத்திணை கடவுள், ஆன்மிகம் சார்ந்தது. அது வெறும் கால் பங்குதான். முக்கால் பங்காக இருப்பது புறத்திணைதான். அதில் காதலுக்கும் சிருங்காரச் சுவைக்கும் தான் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. போர், வீரத்துக்கு இதற்கு அடுத்ததாகத் தான் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஊடல், கூடல், களவொழுக்கம் என சிருங்கார இலக்கியமே சங்க இலக்கியங்களாக உள்ளன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் உலகெங்கிலும் யுத்த பொருளாதாரமே நடைமுறையில் இருந்ததால் உலகெங்கும் எப்போதும் யுத்தங்கள் நடைபெற்று வந்தன. ஒரு நாட்டைப் பிடித்து அந் நாட்டின் செல்வங்களையும், கால் நடைகளையும் கொள்ளையடிப்பதும், நகரங்களைத் தீக்கரையாக்கி திடகாத்திரமான ஆண்களையும் அழகிய பெண்களையும் சிறைபிடித்து தமது நாட்டுக்கு அழைத்து செல்வதும் போர்ப் பொருளாதாரமாக இருந்தது. கிரேக்க, உரோம, அராபிய சாம்பராஜ்யங்கள் செல்வச் செழிப்பில் திகழ்ந்தன என்றால் அச் செல்வம் தோல்வியுற்ற நாடுகளில் இருந்து வந்த செல்வம் என்பதே பொருள். ஆண்கள் அடிமைகளாக கட்டுமாண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பெண்கள் அந்தப்புரங்களிலும் கழனிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை அறியாத சமூகங்கள் அவை. அது நடைமுறை சாத்தியமானதாகவும் இருக்கவில்லை.

ஏனெனில் இனப் பெருக்கம் நிறைய தேவைப்பட்ட காலம் அது. யுத்தம் செய்வதற்கும், போருக்கான ஆயுத உற்பத்திக்கும், விவசாய ஆயுத உற்பத்திக்கும் ஆண்கள் அவசியப்பட்டார்கள். விவசாயம், வர்த்தகம் என்பனவற்றை நடத்த ஆண்கள் தேவைப்பட்டார்கள். இனப்பெருக்கம் செய்வதற்கும், ஆண்களுக்கு துணையாக இருப்பதற்கும், குடும்பம், வீடு, சமையல், கழனியில் வேலை செய்வதற்கும் பெண்களின் தேவை அவசியமாக இருந்தது. பூப்பெய்தியதுமே திருமணம் நடைபெறும். அல்லது செல்வந்தர்களின் அந்தப்புரங்களுக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள். நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்வார்கள். நோய்களினால் பிறக்கும் குழந்தைகள் இறந்து போகக்கூடும் என்பதால் அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று வளர்க்க வேண்டிய நிலை. இருபது வயதில் குழந்தை பெறுவது நின்று குழந்தை வளர்ப்பு நடக்கும், குழந்தைகள் பெரியவர்களானதும் அப் பெண் கழனியில் பாடுபடவும் வீட்டுக்கு உழைக்கவும் சென்று விடுவார். அடிப்படையில் ஆணின் போகப்பொருளாகவும், இனப் பெருக்கம் செய்பவளாகவுமே பெண்கள் பார்க்கப்பட்டார்கள்.

எகிப்திய நாகரிகத்தில் பெண்கள் போகப் பொருளாக மட்டுமின்றி கோவில் பூசாரிகளாகவும் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் ராணிகளாக அதிகாரம் செலுத்திய அதே பெண்கள், சேடிகளாகவும், அந்தபுரத்து பெண்களாகவும், அரண்மனைக்கு வெளியே ஆடல் மகளிர்களாகவும், தேவரடியார்களாகவும், விலை மகளிர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் தாய்மாரினதும், மனைவியரினதும் வீரம் போற்றப்படுவதைக் காண முடிகிறது. திருமணத்துக்கு முன் ஆண்களுடன் கூடுதல், கூடிய பின் ஏக்கம், பசளை நோய் என பழந்தமிழர் இலக்கியங்களில் காதலும் காமமும் விரிவாகப் பேசப்படுகிறது. காதலுக்கும் காமத்துக்கும் பழந்தமிழர் அளித்திருக்கும் இந்த முக்கிய இடம், இனப்பெருக்கத்தின் அவசியம் காரணமாக இருந்திருக்கலாம்.

சமண முனிவரான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் தொழில், குடும்பம், காதல், காமம், பரத்தையருடன் கூடல், காவிரிபூப்பட்டின வசந்த விழா எனப் பண்டைய தமிழர் வாழ்வியல் விரிவாகப் பேசப்படுகிறது. இளங்கோவடிகள் இங்கே தன் சமண அறத்தை புகட்டாமல், அன்றைய வணிக குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனது வாழ்க்கைச் சம்பவங்களை அப்படியே சொல்லிச் சென்றதால்தான் அன்றைய தமிழர் வாழ்வியலையும் காதல் வாழ்க்கையையும் அறிய முடிந்தது.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் உலகில் எத்தனையோ மாற்றங்களும், சிந்தனை மாற்றங்களும் ஏற்பட்டு பல பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் வழக்கொழிந்து விட்டன. புனிதமான கோவில்களில் சக்திமிக்க தெய்வங்களாக வீற்றிருந்த தெய்வங்கள் இன்று அருங்கண்காட்சிச் சாலைகளில் பார்வைக்கு வைக்கப்படும் உருவங்களாக மாறிவிட்டன. அன்றைய எகிப்திய அல்லது கிரேக்க பெண் மீண்டும் இன்றைய உலகுக்கு வருவாளானால், வானுயர்ந்த மாளிகைகள், வாகனங்கள், ஏராளமான சுவை உணவுகள், அழகிய பெண்கள் எனப் பல புதுமைகளைக் கண்டு திகைத்துப்போய்விடுவாள். எல்லாமே கனவுலகமாகத் தெரியும் அவளுக்கு. ஆனால் பூங்கா ஒன்றில் இளம் காதலர்கள் கட்டியணைத்து முணங்கியபடியே முத்தமிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போதுதான், எல்லாமே மாறிப்போனாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் அன்றைக்கும் இன்றைக்கும் மாறாமல் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்வாள். காதலிப்பதும், காதல் மொழி பேசுவதும், ஊடுவதும் கூடுவதும் தான் ஆயிரமாயிம் ஆண்டுகளின் பின்னரும் மாறாமல் இருக்கிறது.

மாறாமல் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால், அதுவும் எத்தனையோ எதிர்ப்புகள், கட்டுப்பாடுள், கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் என்றால் அது காதல் மட்டுமே இதற்கான ஒரே காரணம், இயற்கை தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கும், உயிர்ப்புடன் தொடர்வதற்கும் இது இன்றியமையாதது என்பதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகம் இயங்க வேண்டுமானால் உலகின் அனைத்து உயிர்களும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டாக வேண்டும். எனவே, காதலர் தினம் என்பது கருவளத்தை உற்சாகப்படுத்தும் தினம் என்று கொள்வதே சரியானது.

எல்லா பண்டைய நாகரிகங்களிலும் கருவளத்துக்கு உற்சாகமூட்டி அதை நடைமுறைப்படுத்தும் வகையில் காதல் தெய்வங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தியாவில் ரதி – மன்மதன் காதலின் குறியீடுகளாக உள்ளனர். காவிரிப்பூப் பட்டினத்தின் இந்திர விழா கருவளத்தை ஊக்குவிக்கும் ஒரு விழாவாகவே அரசனால் நடத்தப்பட்டது. உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் இப் பண்பு காணப்படுகிறது. திருமணம் என்பதுகூட கருவளத்தை உறுதி செய்யும் ஒரு ஏற்பாடே!.

இந்தப் பின்னணியில் காதலர் தினத்தைப் பார்க்கும்போது மட்டுமே அதன் பொருளை விளங்கிக் கொள்ளலாம். தமிழர் மத்தியில் பெருவிழாவாக நடத்தப்படும் பூப்படையும் விழாவையும் இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

காதலர் தினம் சிலர் கூறுவதுபோல கேவலமானது அல்ல. அது இயற்கையின் ஆணை. அதைக் கொண்டாட வேண்டாம் என்றால், சரி, புரிந்து கொள்ளவாவது முயற்சிப்போம்.

Comments