“தமிழக அகதிகள் இலங்கை மண்ணை மறந்து விட்டதாகக் கருத வேண்டாம்!” | தினகரன் வாரமஞ்சரி

“தமிழக அகதிகள் இலங்கை மண்ணை மறந்து விட்டதாகக் கருத வேண்டாம்!”

உரையாடியவர்: 
மணி ஸ்ரீகாந்தன்  
படங்கள்: 
மணவை அசோகன்   

‘தமிழகமெங்கும் உள்ள 106 முகாம்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி வருகிறோம். சில சமயம் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கும் பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டியதாகி விடுகிறது’

‘இலங்கையில் பிறந்தவர்கள் அனைவரும் இலங்கையில்தான் வாழ வேண்டிய அவசியம் கிடையாது. எனவே, புலம்பெயர் நாடுகளில் நம்மவர்கள் வசிப்பதைப் போலவே தமிழகத்தில் வசிப்பவர்களும் இங்கேயே வாழலாம். யாதும் ஊரே யாவரும் கேளீர் அல்லவா? அவர்கள் விரும்பினால் இலங்கை திரும்ப நாம் இலவசமாகவே கடவுச்சீட்டை அவர்களுக்கு தருகிறோம்.’

‘இலங்கைக்கும் தமிழகத்துக்கும் ஊடகவியலாளர்களைப் பரிமாற்றம் செய்வது என்பது காலம் கனிந்துவரும்போது செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் ஏற்கனவே இலங்கைக்கு ஏராளமான தமிழர்கள் சுற்றுலா சென்று வருகிறார்கள். கொழும்பில் இருந்துவரும் விமானங்கள் ஹவுஸ் ஃபுல்லாகத்தானே தமிழகத்து நகரங்களுக்கு வருகின்றன.!’

தமிழகத்தின் தலைநகரில் நமது இலங்கை வாழ் மக்களுக்கான பணிகளில் முனைப்புடன் செயலாற்றிவரும் இலங்கை துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம். இலங்கை அகதிகளின் எதிர்கால வாழ்வுக்கு தூதரகம் சார்பில் தாம் செய்து வரும் பணிகள் குறித்து அவர் சிலாகித்துச் சொன்ன விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.

 

இலங்கை அரசின் தமிழக பிரதிநிதி என்ற வகையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீங்கள் ஆற்றிவரும் உதவிகள் தொடர்பாக பேசமுடியுமா?

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்து தங்கிருப்போர் தமிழகம் முழுவதும் 106 முகாம்களில் வசித்து வருகிறார்கள். அந்த முகாம்கள் அனைத்துடனும்

நாங்கள் இன்று வரை தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் இலங்கைக்கு மீளச் செல்வது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நாங்கள் அவர்கள் இலங்கை செல்வதற்கான அனைத்து வேலைகளையும் மிகவும் இலகுவாக செய்து தருகிறோம்.

அவற்றில் ஒன்று முகாம்களில் பிறக்கும் இலங்கை குழந்தைகளுக்கு கொன்சுலர் பிறப்புச் சான்றிதழ் கொடுத்தல், அது கொடுக்கப்பட்டால்தான் அவர்கள் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்த்துக்குள் வருவார்கள். அப்படி இல்லையென்றால், இலங்கை சட்டத்தின்படி அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அந்த நிலைமை இவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக பிறப்புச் சான்றிதழ் வழங்கும் அந்தப்

பெரும் பணியை நாங்கள் செய்து வருகிறோம். இதற்காக தமிழகத்தின் அனைத்து முகாம்களோடும் தொடர்பு கொண்டு அவர்களை தூதரகத்துக்கு அழைத்து வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் அவர்களுக்கான சிறப்பு முகாம்களை நாம் நடத்துவதோடு, ஆகக் குறைந்தது ஐம்பது பிள்ளைகளுக்காவது பிறப்புச் சான்றிதழை வழங்குகிறோம்.

இதில் ஒரு வேடிக்கையும் இருக்கிறது அதாவது நமது நாட்டின் சட்டத்தின்படி ஒரு குழந்தை பிறந்தால் அதை ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்துக்குள்ளாவது பதிவு செய்துவிட

வேண்டும் ஆனால் இங்கே நாம் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்கும் போது அந்த குழந்தையின் பெற்றோருக்கும் கொடுக்க வேண்டியதாகிவிடுகிறது. ஏனென்றால் அந்தக் குழந்தையின் பெற்றோர்களும் இங்கே வந்து முகாம்களில் பிறந்து வளர்ந்தவர்கள். எனவே இருபத்தைந்து வயதை கடந்தவருக்கும் நாம் புதிதாக பிறப்புச் சான்றிதழ் வழங்கி அவர்களையும் இலங்கை பிரஜையாக மாற்றுகிறோம். அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டில் 52 சிறப்பு முகாம்களை நடத்தியிருக்கிறோம். அவற்றில் 3520 பேருக்கு பிறப்புச் சான்றிதழை வழங்கியிருக்கிறோம், இதன் மூலம் அவர்களுக்கான இலங்கை பிரஜைக்கான பரிந்துரையும் செய்யப்பட்டு விட்டது. இதை ஒரு பெரிய விடயமாகவே நான் கருதுகிறேன். 2016ல் 1049 பேருக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்கியிருந்தோம். இந்த வருடம் ஜனவரியில்

இருந்து கடந்த 4ம்திகதி வரை முகாம்கள் நடத்தியிருந்தோம், அவற்றில் முக்கியமாக நமது இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 29ம் திகதியில் இருந்து இந்த மாதம் 2ம் திகதி வரையும் தொடர்ச்சியாக சிறப்பு முகாம்கள் நடாத்தப்பட்டு 1139 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட அதிகம். இரண்டு மாதத்துக்குள் பிறப்புச் சாண்றிதழ் வழங்கும் பணியை நாம் மிகவும் துரிதப்படுத்தியிருக்கிறோம். இதில் நான் மன நிறைவு அடைந்திருக்கிறேன். அவர்கள் இலங்கை செல்வதாக இருந்தால் அவர்களுக்கு பாஸ்போர்ட் மூன்று வாரத்துக்குள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடவுச் சீட்டு பெறுவதற்கு முகாமிலுள்ளவர்கள் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், அதோடு முகாமில் அவர்கள் தங்கியிருப்பதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கும் முகாம் அட்டை, முகாமிலிருந்து தூதரகத்துக்கு செல்வற்காக தாசில்தாரால் வழங்கப்டும் அனுமதிக் கடிதம் ஆகியவற்றோடு எமது தூதரகத்துக்கு வந்தால் உடனடியாக அவர்களுக்கு தாயம் திரும்புவதற்கான அனைத்து பணிகளையும் இலவசமாகவே செய்து தருவோம்.

 

தமிழகத்தில் மொத்தம் எத்தனை முகாம்கள் இயங்குகின்றன, அதில் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் எவ்வளவு பேர் இலங்கைக்கு திரும்பியிருக்கிறார்கள்?

மொத்தமாக 114 முகாம்கள் இயங்கி வந்தன, அகதிகள் தாயகம் திரும்ப தயாராகிவிட்டதால் முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்து இப்போது 106 முகாம்கள் இருக்கிறது. முகாம்களிருந்தோர், முகாமுக்கு வெளியில் இருந்தோர் என்று பார்த்தால் கிட்டத்தட்ட சுமார் ஒரு லட்சம் அகதிகள் இருந்திருப்பார்கள். அவர்களில் தற்போது பத்தாயிரம் பேர் இலங்கைக்குச் சென்று விட்டார்கள்.

 

பெரும்பாலும் இலங்கை மண்னை மறந்துவிட்ட மாதிரியும் புதிய தலைமுறை இங்கு வரப்பிரியப்படவில்லை என்பது மாதிரியும் கேள்விப்படுகிறோம், உண்மையா?

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எல்லா நாடும் என் நாடு எல்லா மக்களும் என் உறவுக்காரன் என்பதை தமிழில் கனியன் பூங்குன்றனார் மிகவும் அழகாகச் சொல்லிவிட்டார். எனவே நாம் எங்கே வாழ்கிறோம், எங்கே கற்கிறோம், எங்கே வாய்ப்பிருக்கிறது என்பதைதான் பார்ப்போம். இலங்கை மண்ணில் பிறந்ததிற்காக அங்கேயேதான் வாழ வேண்டும் என்பது கட்டாயமில்லை.

ஏனென்றால் இந்த விசாலமான உலகம் உள்ளங்கையில் வந்து விட்டது. அதனால் வாழ வாய்ப்பு உள்ளவர்கள் எங்கும் வாழலாம்.ஆனால் நான் சந்தித்த இலங்கை அகதிகள் அனைவருக்கும் நம் நாட்டைப் பற்றிய பற்றும் புரிதலும் இருக்கவே செய்கிறது.

பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு திரும்பி போக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். யாரும் இங்கே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

இது ஒரு தற்காலிகமான இருப்பு அவ்வளவுதான். நாங்கள் முகாம் நடத்துகிறோம், பிறப்புச் சான்றிதழ் கொடுக்கிறோம் என்பதை கேள்விப்பட்டதும் எல்லோரும் இங்கே ஓடி வந்துவிடுகிறார்கள் அப்போ அவங்க எல்லோரும் இலங்கை மண்ணை மறக்கவில்லை என்றுதானே அர்த்தம்! அதோடு நமது மக்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்தாலும் சமூக வலைத்தளங்களின் ஊடாக அவர்கள் நமது மண்ணை பற்றுதலோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே பிறந்து வளர்ந்ததினால் அவர்களின் பேச்சு வழக்கு மட்டும் மாறியிருக்கலாம்.

 

தமிழகப் பத்திரிகைகளில் இலங்கை அகதிகளுக்கு கொடுமைகள் நடைபெறுவதாக, தொந்தரவுகள் தரப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதன் உண்மைத் தன்மை என்ன?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு தமிழ் நாடும் அப்படித்தான். இங்கே இலங்கை மாதிரியே பத்திரிகைகளுக்கும் பூரண கருத்து சுதந்திரம் இருக்கு. அதனால் சில இடங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சினைகளை அவர்களின்

பார்வையில் எழுதி விடுகிறார்கள். ஆனால் நாங்கள் பார்த்த அளவில் அப்படி பெரிய சம்பவங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படி நடந்தால் அவற்றைக் கண்காணிப்பதற்கு பொலிஸ், அரசு அதிகாரிகள், தாசில்தார்கள் என்று எல்லோருமே இங்கே இருக்கிறோர்கள்.

 

இலங்கைத் தூதரகத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது உறவுகள் எப்படி? நீங்கள் வைகோவையும் சீமானையும் ஒரு வைபவத்துக்கு அழைத்தால் வருவார்கள் என்று கருதுகிறீர்களா?

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே இருப்பது தொப்புள்கொடி உறவு என்பது எல்லோருக்கும் தெரியும், எனவே எனக்கு அவர்களோடு நல்ல உறவு இருக்கிறது. குறிப்பாக வைகோவோடு நான் பேசியிருக்கிறேன். அதோடு தொல்.திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் எமது அலுவலகத்துக்கு வந்து நேரில் பேசியும் இருக்கிறார்கள்.

 

நமது இந்தியத் தூதரகம் செய்யவேண்டிய ஒரு முக்கிய பணிதான் தமிழகத் தமிழ்ச் சமூகத்துக்கும் இலங்கை சிங்கள சமூகத்துக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவது.

ஊடகவியலாளர் பரிமாற்றத்தின் மூலம் இதை ஆரம்பிக்கலாம். அப்படி எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லையே...! இவர்கள் முரண்பட்டுக் கிடந்தால்தான் தமக்கு நல்லது என்று இருநாட்டு அரசியல்வாதிகளும் நினைக்கிறார்களோ?

இது ஒரு பிழையான புரிதல். இப்போது கொழும்பிலிருந்து வரும் விமானங்களைப் பாருங்கள்! தினமும் பயணிகளால் நிறைந்துதான் வருகின்றன. இந்தியர்களும் இலங்கையர்களும் தினசரி கொழும்பு செல்வதும் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் வருவதுமாகவே உள்ளார்கள் நீங்க சும்மா சென்னையில் இருக்கும் மண்ணடி கடை வீதிக்கு ஒரு நடை போய்ப் பாருங்கள் ‘அக்கா என்ட, நங்கி என்ட’ என்று சிங்களத்தில் எழுதி பதாதைகளை தொங்கவிட்டிருக்கிறார்கள். மண்ணடி தமிழ் வியாபாரிகள் எல்லோரும் சிங்களத்தில் சரளமாக பேசுகிறார்கள். அப்போ சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் புரிந்துணர்வு இல்லாமலா இது எல்லாம் நடக்கிறது? சில அரசியல்வாதிகளின் அறிக்கைகளால் அப்படித் தெரிகிறது. ஆனால் இலங்கை இந்திய உறவு மிகவும் தொன்மையானது. அது இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது.

அதோடு சீதா எலிய கோவிலுக்கும் இப்போ தமிழ்நாட்டிலிருந்து பக்கதர்கள் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள். இங்கே இருக்கும் ஊடகங்களிலும் இலங்கை சுற்றுலா விளம்பரங்கள் செய்யப்படுகிறன்றன. ஒரு நாளைக்கு எட்டு விமானங்கள் கொழுப்பு சென்று வருகிறது. கொழும்புக்கு சென்றுவர மிகவும் மலிவு விலையில் ஒரு புதிய விமான சேவையும் சமீபத்தில் இயக்கப்பட்டது. அதனால் புரிந்துணர்வு இல்லாமல் இல்லை. நீங்கள் சொல்வது போல ஊடகவியலாளர் பரிமாற்றம் செய்வது

ஒரு நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. ஆனால் காலம் கனிந்து வரும் போதுதான் சில விசயங்களை செய்யலாம். இது ஒரு நல்ல விசயம் பார்க்கலாம். 

 

 

Comments