அமைதியான தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

அமைதியான தேர்தல்

கலப்பு தேர்தல் முறையின் கீழ் 340 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடந்த தேர்தல் மிகவும் அமைதியாக இடம்பெற்றதாக மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு அமைதியாக நடைபெற்ற இந்த குட்டித் தேர்தலில் சுமார் 70% தொடக்கம் 75% வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாகவும் அறி ணவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு 4 மணிக்கு நிறைவடைந்தது.

இந்தத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும், எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நண்பகல் 12 மணிவரை மந்தமாக இருந்த வாக்களிப்பு வீதம், பிற்பகலில் உஷார் நிலையையடைந்தது.

நாட்டின் சகல பகுதிகளிலும் 12 மணிக்கு முன்னதாக சுமார் 40 வீத வாக்களிப்பே இடம்பெற்றன. என்றாலும், பிற்பகலில், (4 மணிவரை) 70 - 75 வீத வாக்களிப்பு பதிவாகியிருந்தது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் 75 வீதமும், களுத்துறையில் 80 வீதமும் மாத்தளையில் 80 வீதமும், காலி, பொலன்னறுவை மாவட்டங்களில் 75 வீதமும், கேகாலை, மாத்தறை மாவட்டத்தில் 81 வீதமும், மாத்தளை, அம்பாறை மாவட்டங்களில் 80 வீதமும் வாக்களிப்பு பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதேபோல, திருகோணமலை, அநுராதபுரம் மாவட்டங்களில் 85 வீதம் மக்கள் வாக்களித்துள்ளனர்.

முல்லைத்தீவு, குருநாகலை மாவட்டங்களில் 78 வீதம், புத்தளம் மாவட்டத்தில் 73 வீதமும் பதுளை மாவட்டத்தில் 65 வீதமும் மொனராகலை மாவட்டத்தில் 75 வீதமும் வாக்களிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 80% வாக்களிப்பும், இரத்தினபுரி மாவட்டத்தில் 75-−80 வீத வாக்களிப்பும், கண்டி மாவட்டத்தில் 65% வாக்களிப்பும், நுவரெலியா மாவட்டத்தில் 70% வாக்களிப்பும், மன்னார் மாவட்டத்தில் 77வீதமும், வவுனியா மாவட்டத்தில் 72 வீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமும் வாக்களிப்பு இடம்பெற்றதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் மக்கள் மிகவும் கூடுதல் ஆர்வம் காட்டியுள்ளனர். முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

340 உள்ளூராட்சி சபைகளுக்கென 8,325 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இந்தத் தேர்தல் இடம்பெற்றது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நீதிமன்ற உத்தரவொன்றுக்கமைய நடைபெறவில்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் அடங்கலாக மொத்தம் 341 சபைகளுக்கு ஒரே நாளில் நடைபெறும் தேர்தல் என்ற பெருமையைப் பெறவிருந்த இந்தத் தேர்தல், எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தலை நீதிமன்றம் இடைநிறுத்தியதையடுத்து, 340 சபைகளுக்காக நடைபெற்றது. இவற்றில் 8325 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக, 43 கட்சிகள், 222 சுயேச்சைக்குழுக்களில் 57252 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 15760852 பேர் தகுதிபெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிக்கவென நாடு முழுவதும் 13374 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்கான இந்தத் தேர்தல் கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ளது. 2012இல் தேர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டபோதிலும், அதில் மேலும் மேலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டதால், தேர்தல் தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

Comments