மதஇனசாதிபண லஞ்ச ஊழல் | தினகரன் வாரமஞ்சரி

மதஇனசாதிபண லஞ்ச ஊழல்

அருள் சத்தியநாதன் 

ஒரு இனக் குழுவுக்கு அல்லது பல்வேறு இனங்கள் வாழும் ஒரு பரந்த பிரதேசத்துக்கு தலைமை தாங்கி அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பும், கௌரவமும், வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் அளித்து, மேம்படுத்துதலைத் தொடர்ச்சியாக அளித்து வருதலை அரசு செய்தல் என்றும் அதை மொத்தமாக அரசு இயற்றும் இயல் என்றும் அழைக்கிறோம்.

இந்த அரசியல் செய்ய அனைவருக்குமே ஆசையிருந்தாலும் சிலருக்குத்தான் அரசை செம்மையாக நடத்திச் செல்லும் லாவகம் கைவரும். அவ்வாறானவர்கள் தாம் அரசோச்சிய பிரதேசத்தை மென்மேலும் விஸ்தரித்துக் கொண்டனர். மக்களுக்கு மென்மேலும் வசதிகளை அளித்தனர். மக்களுக்கு அக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்த பக்கத்து நாட்டு அரசர்களிடமிருந்தும், உள்நாட்டு கொள்ளையர்களிடமிருந்தும் பாதுகாப்பு அளித்தலே அன்றைய மன்னர்களின் பிரதான கடமையாக இருந்தது. அக்கால அரசர்களுக்கு தாம் நியமிக்கும் பிராந்திய ஆளுநர்களிடமிருந்து, பிரபுக்கள் மற்றும் மதத்தலைவர்களின் கொடுங்கோன்மைகளில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கவும் வேண்டியிருந்தது.

அரசியல் என்றால் அதிகாரபூர்வமாக அதிகாரம் செலுத்தல் என்றும் பொருள் கொள்ளலாம். அதிகாரம் செலுத்துதல் அல்லது தலைமை தாங்குதல் என்ற உணர்வு மனித உளக் கட்டமைப்பின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று. நான்கு கால்களில் நடக்கும் மற்றும் பறக்கும் உயிரினங்களிடமும் இக் குணம் காணப்படுகிறது. தன் குடும்பத்தை, துணையை, தன் கூட்டத்தை தாக்கவரும் எதிரிகளிடமிருந்து தலைமை தாங்கும் மிருங்கள் எதிர்த்து போராடி காப்பாற்ற முனைகின்றன. மிருகங்கள் வழி வந்த மனிதனிடமும் இதே குணம் அப்படியே காணப்படுகிறது. அரசியலின் ஆரம்பமே இங்கே தான் பிறக்கிறது. அதாவது, பாதுகாப்பு அளித்தல். வெற்றிகரமாக பாதுகாப்பு அளிப்பவர்களே வெற்றிகரமான மன்னர்கள். ஆட்சியாளர்களாகின்றனர்.

அதிகாரம் செய்தல் என்பது மனிதரில் இருக்கும் தீராத ஆசை. உணவு இல்லையாயினும் கையில் அதிகாரம் இருந்தால் அது அவனுக்கு திருப்தி அளிக்கும். அந்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், மீட்டுக் கொள்ளவும், நழுவிச் செல்லாமலும் இருப்பதற்காக மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்வான். ஒருவன் அதிகாரம் செலுத்துபவனாக இருக்கும்போது அவரை வீழ்த்திவிட்டு அந்த இடத்துக்கு தான் வரவேண்டும் என இன்னொருவன் நினைப்பதும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராவதும் மனித இயல்பு மட்டுமல்ல; விலங்குகளிடமும் தலைமையைப் பறிப்பதற்கான மோதல்கள் இடம்பெறவே செய்கின்றன.

தலைமைக்கான போராட்டமே அடிதடிகளாகவும். இரத்தம் சிந்துதலாகவும், போர்களாகவும் வடிவெடுக்கின்றன. தலைமைக்கான இப் போராட்டத்தில், சாணக்கியரும், மாக்கிய வெலியும் சொன்னபடியே, எந்தவொரு நியாயத்தையும் அன்றும் சரி இன்றும் சரி காணமுடிவதில்லை. மனைவி தன் கணவனையும், தனயன் தந்தையையும் தீர்த்துக்கட்டி அதிகாரத்தைக் கைப்பற்றும் நிகழ்வுகள் உலக அரசியல் வரலாற்றில் அங்கிங்கோணாதபடி விரவிக்கிடப்தோடு அவை அனைத்தும் அடிப்படையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.

அதிகாரம் செலுத்துதலும், தலைமை தாங்குதலும் ஆபத்தானதும், சவாலானதுமான காரியங்களானாலும் அந்த இடத்தில் சென்று அமர மனிதன் விரும்புவது. அதிகாரத்தின் மீது அவனுக்கிருக்கும் ஆறா விருப்புதான். ஆரம்பத்தில் பெண் தலைமை சமுதாயமாகவே இவ்வுலகம் இருந்தது. அதை ஆண் தட்டிப் பறித்துக் கொண்டான். பெண்களை தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். பெண்களை விட போர் புரிவதில் ஆண் வலிமை கொண்டிருந்தது இதற்கான காரணமாக இருந்திருக்கலாம். பண்டைய எகிப்து, சுமேரிய, கிரேக்க நாகரிகங்களில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது.

மக்களையும், பிரதேசங்களையும் ஆள்பவர்கள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வதைத் தடுத்து ஒரு நெறிமுறைக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம் தோன்றியபோதும், இயற்கையின் விளக்க முடியாத நிகழ்வுகளில் இருந்து தப்பிக்கள்ளும் ஒரு உபாயமாகவும், அரசனுக்கும் மேற்பட்ட ஒரு பெருஞ்சக்தியை அடையாளப்படுத்தும் வகையிலும் மதம் தோன்றியிருக்க வேண்டும். மதம் சாதாரண மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவதை விட அரசனின் அல்லது மக்கள் கூட்டத்தின் தலைவனின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான மதங்கள், குறிப்பாகச் சொல்வதானால், உலகில் செல்வாக்கு செலுத்தும் மதங்கள் அனைத்துமே அரசனின் மட்டத்தில் அமர்ந்துகொண்டு மக்களுக்கு கட்டளையிடும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். மேலும் எந்தெந்த மதங்களால் அரசவையில் அமர முடியாமற் போனதோ அவை அனைத்தும் காலவோட்டத்தில் அழிந்து போயின அல்லது நீர்த்துப் போயின. அரசனின் அங்கீகாரம் பெற்ற மதங்களே இன்றளவும் நீடித்து நிற்கின்றன என்பதில் இருந்தே அரசியலுக்கும் மதத்துக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை புரிந்து கொள்ளலாம்.

அரசியலும் மதமும், ஒன்றில் இருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதிருப்பதற்கான காரணமே, இரண்டும் கட்டளையிடும், அதிகாரம் செய்யும், தண்டனை வழங்கும் அல்லது நியமிக்கும் வல்லமை கொண்டதாகக் காணப்படுவதேயாகும். அவசியம் ஏற்படும்ப​ேது மதத்தை அரசன் காப்பாற்ற முன் வருவதைப் போலவே அரசனைக் காப்பாற்றும் வல்லமையும் மதத்துக்கு உண்டு. ஏனெனில் அரசனைப் போலவே இன்னொரு வகையில் மதமும் மக்களை ஆள்கிறது. அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. மக்களை வசியப்படுத்தியும் வைப்பதால் மதம் சொல்கிறபடி மக்களை ஆட்டுவிக்கலாம். அரசன் மதத்தை மீறிச் செயற்படும் போது அவனுக்கு எதிராக மக்களைத் திரட்டி மதம் செயற்பட்டு வெற்றியீட்டிய சம்பவங்களை வரலாற்றில் காணலாம். இதனால்தான் பெரும்பாலான அரசர்கள் மதத்தோடு இணைந்து செயற்படும் ஒரு போக்கைக் கடை பிடித்தார்கள். இன்றைய உலக நாடுகளிலும் அரசியல் தலைவர்கள் இதையே மிகவும் சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எனினும் இப் போக்குக்கு எதிரான அரசியலை முன்வைத்தவரே கார்ல்மார்க்ஸ். தொழிலாளர்களை முன்நிறுத்திய பொருளாதாரக் கோட்பாடாக, மதத்துக்கு முதன்மையளிக்காத அரசியல் கோட்பாடாக அதை முன் நிறுத்தி வெற்றி கண்டவரே தோழர் லெனின். பின்னர் உலகெங்கும் சோஷலிச, கம்யூனிச, மார்க்சிச, சீன கம்யூனிசம் என பல கோட்பாடுகள் தோன்றிப் பல நாடுகளில் ஆட்சி அமைக்கவும் செய்தன. ஆட்சி செய்ய மதம் அவசியம் இல்லை என்பதை சீனாவும், ரஷ்யாவும் செயற்பாட்டு ரீதியாக நிரூபித்துள்ளன. மதம் மதமற்ற அரசியல் ஊடாக மக்களிடையே நிலவும் பேதங்களை இல்லாமற் செய்து அவர்களை ஒரே மட்டத்தில் வைக்கவும் முன்னேற்றவும் முடிந்தது என்று சொல்லப்படுகிறது.

எனினும் உலகெங்குமுள்ள அரசியல் அறிஞர்கள், ஒரு நாட்டை ஆள்வதற்கு மதம் இதமளிக்கும் துணையாக இருக்கிறது என்றே கருதுகிறார்கள். கம்யூனிச நாடுகளில் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடுமையான முயற்சிகளை கடினமாக வழிமுறைகளில் மேற்கொள்கிறார்கள் என்றால், அதையே எளிதாகவும், இயல்பாகவும் மதத்தின் துணையுடன் செய்து முடிக்கலாம். ஏனெனில் மதம் மனிதர் மனதை ஆள்கிறது. உளவியல் ரீதியாக அவர்களை தன் வசம் வைத்திருக்கிறது. இது இப்படித்தான் இருக்கும், இருக்கப் போகிறது என்று சொல்லி விட்டால் அதை மக்கள் மறுப்பு சொல்லாமல் அப்படியே கேட்டுவிட்டுப் போவார்கள் என்பதை ஆட்சியாளர்கள் அறிவார்கள்.

மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான இத் தொடர்பு வரலாற்று ரீதியானது என்று சொல்வதைவிட மனிதர்களின் பொதுப் புத்தியுடன் இசைந்து செல்லும் தன்மை கொண்டதாக இருப்பதாலேயே இது வெற்றிகரமான சேர்க்கையாக இன்றளவும் திகழ்கிறது. இத்தகைய ஒரு வெற்றிச் சேர்க்கை கம்யூனிசத்தில் அல்லது பொதுவுடமை கோட்பாட்டில் இல்லை என்பதே அதன் தோல்விக்குக் காரணமாயிற்று.

இந்தியாவெங்கும் 19 மாநிலங்களில் இன்று பா.ஜ.க ஆட்சி செய்கிறது. காங்கிரசின் பொற்காலமாக விளங்கிய இந்திரா காந்தி காலத்தில் கூட காங்கிரஸ் 19 மாநிலங்களில் ஆட்சி செலுத்தவில்லை. பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்கு அதன் மதம் கலந்த அரசியலே காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்தியா பல மொழிகளைக் கொண்ட, பல் கலாசார நாடாக இருக்கும் அதேசமயம் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு நாடாகக் காட்டுவது அந் நாட்டின் பிரதான மதமான இந்து மதமே. அந்த மதம் சாதியமைப்பை வலியுறுத்துவதாக இருப்பது, ஆட்சி செய்வோருக்கு மேலும் வேலையை சுலபமாக்கி இருக்கிறது. பிரித்தாளுவதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அது உதவுகிறது. இந்தியாவில் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு மட்டுமல்ல, அவர்களைப் பிரிப்பதற்கும், ஒருவரோடொருவர் குரோதம் கொள்வதற்கும் கூட மதமே காரணமாகிறது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இந்து மதத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் அந்த ஆபத்தில் இருந்து இந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டியிருப்பதாகவும் பா.ஜ.கவின் இந்துத்துவ அரசியல் ஒரு மத அரசியலை கட்டமைத்துள்ளது. இந்து வேதங்கள் சமஸ்கிருதத்தில் அமைந்திருப்பதால் பா.ஜ.க சிந்தனையாளர்கள் சமஸ்கிருதத்துக்கு தெய்வீக அந்தஸ்தை அளிக்கிறார்கள். இக் கண்ணோட்டத்திலேயே தமிழ் ‘நீசபாஷை’யாகிறது. இந்துக்களுக்கு புனிதமான பசுவை ஏனைய மதத்தினர் வெட்டிப் புசிப்பதால், பசுக்களைக் காக்க வேண்டும் என்ற கோஷம் வட மாநிலங்களில் வெற்றிகரமாக முன்வைக்கப்பட முடிகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானும் வங்கதேசமும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதாலும், காஷ்மீர் இஸ்லாமிய தீவிரவாதிகள் தனிநாடு கோரி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்லாமியர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்றொரு கற்பிதத்தை பா.ஜ.கவின் கட்டமைத்து, ஏற்கனவே இந்து முஸ்லிம் வெறுப்புணர்வு நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் வட மாநிலத்தவர் மத்தியில் வெற்றிகரமாகக் கட்டவிழ்ந்துவிட முடிகிறது. இலங்கையில் எவ்வாறு 1948முதல் தமிழ், சிங்கள இனவாத அரசியல்வாதிகளினால் இனவாத அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று அதன் மூலம் பதவிகளை கைப்பற்றி சொகுகசாக வாழமுடிகிறதோ அதே போலத்தான் பா.ஜ.கவும் தன் இருப்புக்காக இந்துத்துவம் மட்டுமே என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அதன் மூலம் பலன்களை அறுவடை செய்ய நினைக்கிறது.

மதவாத அரசியலை மட்டும் நம்பி அரசாள பா.ஜ.க நினைக்கிறது. இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.க நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகமாக விளங்கும் சாதி அமைப்பை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. தமிழகத்திலும் இதுதான் நிலை. பெரியாரின் வழி வந்த தி.மு.க படிப்படியாக தன் ஆதார கொள்கைகளைக் கைவிட்டு, மதத்தோடு, வாக்கு வங்கி காரணமாக, சமரசம் செய்து கொள்வதற்கு கருணாநிதி காலத்திலேயே முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. பதவியில் அமர்ந்தற்காக எதைவேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கும் ஸ்டாலின் காலத்துக்கு முன்பிருந்தே தி.மு.க சாதி அரசியலை ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டது. சாதியத்துக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைக்கும் தமிழ் அரசியல்வாதிகளே, சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கவும் செய்கிறார்கள். சாதி அரசியல்தான் தமிழகத்தில் தொகுதி வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. வட மாநிலங்களைப் போல மத அரசியல் தமிழகத்தில் தீவிரம் பெற்றிருக்காவிட்டாலும் சாதி அரசியல் முன்னணி வகிக்கிறது.

சாதி அரசியலின் வளர்ச்சி, அந்தந்த சாதிக்காரர்களினதும் அவர்களின் குடும்பத்தினரின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் வழிவகுத்ததன் வழியாக பண அரசியல் உள்ளே புகுந்தது. அரசியலில் ஒரு தலைவர் வெற்றி பெற்றாலும் அவரது குடும்பத்தினரும் அரசியலுக்கு வருவது, குடும்ப ‘வியாபார’த்தை நீடிக்கச் செய்வதற்காகவே, இதன் மூலம் அக் குடும்பங்களின் சொத்துக்கள் மென்மேலும், வளர்ச்சி பெறுவதோடு அவை பாதுகாக்கவும் படுகின்றன. இவை போகவே, மக்களுக்குகான நன்மைகள்.

பண அரசியல் முதன்மை பெறும்போது ஊழலும் கூடவே செயற்பாட்டுக்கு வந்து விடுகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் ஊழல் அரசியல் ஒரு கலாசாரமாகி விட்டது. மக்களுக்கான ஒரு திட்டம் நிறைவேற்றப்படும்போது மொத்த பட்ஜெட்டில் இத்தனை சதவீதம் தமக்கானது என்பதை சம்பந்தப்பட்ட அரசியல்வாதி தீர்மானித்து விடுகிறார். அவ்வாறு செய்யாதவர், அரசியல் சமூகத்தினரால் பிழைக்கத் தெரியாத முட்டாள் எனப் பார்க்கப்படுகிறார். நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தரையோ சுங்க அதிகாரியையோ பார்க்க முடியாது எனச் சொல்லப்படுவதைப் போலத்தான் தமிழகத்தில் நேர்மையான அரசியல் வாதியைக் காண்பது அபூர்வமாகி விட்டது.

அரசியலுக்குள் மதமும் சாதியும் நுழைந்தால் அடுத்ததாக பண அரசியலும் ஊழல் அரசியலும் நுழைவது தவிர்க்க முடியாதது. அரசியலை தூய்மைப்படுத்துவதாக இருந்தால், அரசியலில் இருந்து மதத்தை விலக்கி வைக்க வேண்டும்.

ஆனால் இலங்கை, இந்திய அரசியல் கட்சிகள் மத அரசியலுக்குத்தான் மக்களை பழக்கப்படுத்தி வைத்துள்ளன. இதற்காக, மக்களிடமுள்ள செம்மறியாட்டு மனப்பான்மையை இக்கட்சிகள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன!

Comments