ரி.எம்.வி.பி வேட்பாளரின் வாகனம் தீக்கிரை | தினகரன் வாரமஞ்சரி

ரி.எம்.வி.பி வேட்பாளரின் வாகனம் தீக்கிரை

 

 பெரியபோரதீவு தினகரன் நிருபர்

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம்தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரி.எம்.வி.பி )சார்பில் களுதாவளை வடக்கு வட்டாரத்தில் விகிதாசாரப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள குணராசா ஜெகதீஸ்வரன் என்பவரின் பட்டா ரக லொறியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்னாலுள்ள வீதியருகில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலே இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் பாரிய வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டுள்ளது, அயலவர்கள் உடனே வெளியில் வந்து பார்த்தபோது புகை மண்டலம்போல் காட்சியளித்தது. பின்னர் வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் எரிந்து கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

அயலவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதிலும் வாகனத்தின் உட்பாகங்கள் அனைத்தும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.

Comments