உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபடாமலிருக்க | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபடாமலிருக்க

எஸ்.ஆர்.இரவீந்திரன்

(இரத்தினபுரி தினகரன் நிருபர்)

 

தேர்தல் திருவிழா முடிவடைந்து விட்டது. யார் மக்கள் பிரதிநிதி? எந்தக் கட்சி பலமிக்கது? மக்களிடையே செல்வாக்குச் செலுத்தக்கூடிய கட்சி எது? போன்ற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்து விட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் இதுவரை கட்சிகளுக்கிடையே காணப்பட்ட மோதல்கள் தற்போது கட்சிகளுக்குள்ளேயே காணப்படுகின்றன. அதற்கான காரணம் மன்றங்களுக்கான மேயர்கள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யும் போட்டி ஆரம்ப மாகியுள்ளது. இதில் நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. ஆகிய கட்சிகளுக்கிடையே பலத்த போட்டியுடன் கூடிய சவாலாக காணப்படும் எனக் கருதப்படுகிறது.

இதில் கட்சிகள் சரியானவர்களை மேயர்களாக அல்லது தலைவர்களாகத் தெரிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில கட்சிகள் தமது கட்சிகள் சார்பாக தலைமை வேட்பாளர்களை அறிவித்திருந்தன. இவர்களில் அனேகமானவர்கள், வெற்றிபெறவில்லை. எனவே கட்சிகள் திறமையானவர்களையும் நேர்மையானவர்களையும் உரிய (மேயர், தலைவர்) பதவிக்கு நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு உரிய பதவிக்கு அதாவது மன்றங்களின் தலைவர் அல்லது மேயர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் உண்மையான மக்கள் சேவகன் மற்றும் பிரதிநிதி யார் என்பது காலப் போக்கில் தெரிய வரும். எது எப்படியோ தெரிவு செய்யப்பட்டவர்களில் அனேகமானவர்கள் ஊழல் மோசடிகளிலீடுபட மாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பளத்தொகை அல்லது கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்படுகின்றது. இக்கோரிக்கை நியாயமானதாகவே நாம் கருதுகின்றோம்.ஏனெனில், இவர்களின் சம்பளமானது ஏனையவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவானது. அத்துடன் இவர்களின் சம்பளத்தை அல்லது கொடுப்பனவை அதிகரித்தால் இவர்கள் ஊழல் மோசடிகளிலீடுபட மாட்டார்கள். எனச் சிலரால் சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் இவர்களுக்கான ஒழுக்கக்கோவை ஒன்றும் உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தொகை மற்றும் கொடுப்பனவிற்கு மேலதிகமாக அவர்கள் சொத்து சேர்த்ததாகப் பல்வேறு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது தற்போதைய நல்லாட்சியிலும் தொடர அனுமதிக்ககூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

மேலும், தற்போது வட்டார ரீதியாக தேர்தல் நடைபெற்றுள்ளதால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வட்டாரத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும். இல்லையெனில் பாரிய பின் விளைவுகளை எதிர் நோக்கக்கூடிய சூழ்நிலை தோன்றலாம். ஒரு வட்டாரத்தில் தனியோர் இனம் மட்டுமல்லாமல் அனைத்து இனமக்களும் வாழ்கின்றனர்.

உறுப்பினர் ஒருவர் இன ரீதியாக அல்லது கட்சி ரீதியாக செல்படுவாராயின் அவ்வட்டாரத்தில் இன ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகிவிடும்.

கடந்த காலங்களில் நாட்டில் சிறுபான்மையின மக்கள் இன வன்செயலுக்குத் தாராளமாக முகங்கொடுத்தனர். நாட்டினை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் அரசாங்கங்களிலும் சிறுபான்மையின மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர்.

குறிப்பாக, மலையக தோட்டமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். தற்போது கூட தோட்ட மக்கள் நிம்மதியாக வாழ்வதாகத் தெரியவில்லை. எந்தக்கட்சி ஆட்சி அமைத்தாலும் அதில் மலையக மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகள் வகித்தாலும், தோட்ட மக்களுக்கு குறிப்பாக இரத்தினபுரி மாவட்ட தோட்ட வாழ் தமிழ் மக்களுக்கு அடியும் உதையும் கிடைப்பது உறுதி என்ற நிலையே காணப்படுகின்றது. அண்மையில் கூட இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நிவித்திக்கலை தேர்தல் தொகுதியிலுள்ள தோட்டமொன்றில் தொழிலாளியொருவர் ஆசையாக தான் வளர்த்த கோழியொன்றை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தமக்குத் தருமாறு கேட்டுள்ளார். அதற்குக் கோழி உரிமையாளர், அதனை வழங்க மறுப்பு தெரிவித்ததால், அத்தொழிலாளி கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனால், அத்தொழிலாளி தொடர்ந்து 15 நாட்கள் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் உரிய தீர்வு கிட்டவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் அநேகமாக தோட்டங்களைச் சுற்றி பெரும்பான்மையின மக்கள் வாழ்கின்றனர். சில தோட்டங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றித் தோட்டக் குடியிருப்புக்கு மத்தியில் தமது குடியிருப்புகளையும் அமைத்து அவர்கள் வாழ்கின்றனர். இதனால் உள்ளூராட்சி தேர்தலுக்கு வட்டாரங்கள் அமைக்கும்போது இம்மாவட்டத்தில் மலையக மக்களுக்கு மட்டுமான வட்டாரங்கள் அமையவில்லை. மாறாக பெரும்பான்மையின மக்களை உள்ளடக்கியதான வட்டாரங்களே அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வாறான வட்டாரங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலான கட்சிகளின் சார்பாக பெரும்பான்மையின வேட்பாளர்களே கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு வெற்றிபெற்றவர்களுக்குத் தோட்ட மக்களும் தமது பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இனிவரும் காலங்களில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் திடீர் திடீரெனத் தோட்டங்களுக்கு வருகை தரும் சூழ்நிலை காணப்படுகின்றது. அவ்வாறு வருகை தரும் பட்சத்தில் தோட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடுமென தோட்ட மக்கள் தற்போது அச்சம் தெரிவிக்கின்றனர். சாதாரண கோழியொன்றுக்காகத் துரத்தித் துரத்தித் தாக்கப்படும் சூழ்நிலையில், இனி வரும் காலங்களில் எதற்கெல்லாம் தாம் தாக்கப்படுவோமென தெரியாதுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தமது வட்டாரம் சார்பாக அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதுடன் தமது மனச் சாட்சியின்படி செயற்பட வேண்டும். அப்போது தான் இரத்தினபுரி மாவட்ட தோட்ட மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். இம்மாவட்ட தோட்ட மக்கள் தனிப்பட்ட ரீதியாக ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களிக்கவில்லை, அனைத்துக் கட்சிகளுக்கும் பரவலாக வாக்களித்துள்ளனர். எனவே வெற்றிபெற்ற உறுப்பினர் ஒருவர், தமக்கு வாக்களிக்கவில்லையென கருதும் தோட்ட தொழிலாளிகள் மீது விரோத போக்கை காட்டக்கூடாது.

எனவே, வெற்றிபெற்றவர்கள் தமது வட்டாரத்திற்கு முறையான சேவை செய்கின்றாரா? ஆல்லது ஊழலிலீடுபடுகின்றாரா? எனக் கண்காணிக்க குழுவொன்று அமைத்துச் செயற்படுத்தினால் சிறப்பான சேவையை எதிர்பார்க்க முடியும்.

Comments