ஊர்பேர் தெரியாதவரை எந்த சமூகமும் நாடும் மதிக்காது | தினகரன் வாரமஞ்சரி

ஊர்பேர் தெரியாதவரை எந்த சமூகமும் நாடும் மதிக்காது

அண்மையில் திருக்குறள் மனனப்போட்டி ஒன்றிற்கு நடுவராகப் போயிருந்தேன். பாலர் வகுப்பிலிருந்து பதின்மூன்றாம் வகுப்புவரை முப்பது பிள்ளைகள் வரை போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களது பெயர் பட்டியல் என்கைக்கு வந்தபோது நான் மிகவும் மனம் நொந்தேன். காரணம், ஒட்டு மொத்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளைகூட தமிழ் பெயரில் இல்லை.

வாயில் நுழையாத பெயர்களாகவே இருந்தன. அவற்றில் பல பெயர்களுக்கு அர்த்தமேயில்லை. டெய்லிசா இதன் அர்த்தத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து யோசித்தால் எப்படியிருக்கிறது. ரிஜிதா, ஜன்சா, கிறேசன் சகின், யதுசா,டினோசா, ரிலக்சன், கிருசிகன், சதுர்சன், லிதுசிகா, கேனுஜா, என்று வட எழுத்துக்களை உள்வாங்கிய அர்த்தமற்ற பெயர்கள் விரிந்து கொண்டே போகின்றன.எந்தப்பாடசாலையிலும் பொது நிகழ்ச்சிகளிலும் இப்படியான பெயர்களே உலவுகின்றன.

மிக அரிதானவர்களே தமது பிள்ளைகளுக்கு தமது கலாச்சாரத்தை, மதத்தை பிரதிபலிக்கும் பெயர்களை சூட்டுகிறார்கள். ஒரு இஸ்லாமியக் குழந்தையையோ, அல்லது பெரியவரையோ பெயரை வைத்து நாம் இனங்காண முடியும். அதேபோல கிறிஸ்தவ சமூகத்துப் பிள்ளைகளையும் இனங்காண முடியும் ஆனால் பார் முழுதும் போற்றும் பெரும் மதமெனக் கொள்ளப்படும் இந்து மதக் குழந்தைகளுக்கு அவர்களது கலாசாரத்தை மொழியை பிரதிபலிக்கும் பெயர்கள் அமைந்திருக்கிறதா என்றால்..பெரும்பாலும் அருகி வருகிறது என்றே சொல்லலாம்.

ஒரு ஆந்திர நாட்டுக்காரர் தன் பெயரில் ராவ் என்பதை சேர்த்துக் கொள்கிறார். கிருஸ்ணாராவ், ராமராவ், நாகேஸ்வரராவ் என இப்படிப்போகும். ஒரு பஞ்சாபியரை அவருடைய பெயரின் பின்னால் வரும் சிங் இனங்காட்டும். முற்றும் இல்லாமல் தொக்கி நிற்கும் பெயர்கள் சிங்களவரை இனங்காட்டும். கனகரட்ண, திலகரட்ன, பண்டார, மலிங்க, சுமணதாஸ என இப் பெயர்களைக் காணலாம். எங்கே தமிழர்களை அப்படி எவ்வளவு காலத்துக்கு இனங்காட்டப்போகிறோம்.

பல இன மத அடையாளங்களையும் எமது பெயர்களுக்குள் கலந்து விட்டிருக்கிறோமே. இதனால் ஏற்படப்போகும் ஆபத்தை எமது சந்ததி சுமக்கப்போவதை அறிய மாட்டோமா?.

தென்னிந்தியாவில் தமிழர்கள் செறிவாக வாழ்கிறார்கள். அங்கே இப்போது இலங்கைத்தமிழர்களும் கணிசமாக வாழ்கிறார்கள். ஆயினும் பெயர்களை வைத்து எம்மை அவர்கள் நீங்க சிறீலங்காவா? என்று கேட்கிறார்கள்.உதாரணமாக விசுவலிங்கம், மயில்வாகனம், தம்பிராசா, வைத்திலிங்கம், கனகம்மா, ஞானமுத்து, பொன்னுத்துரை போன்ற பெயர்கள் அவர்களது வழக்கில் மிக அரிது.

மேலும் அழைக்கும் பெயர்களில் அவர்கள் உகாரத்தை சேர்த்தே அழைப்பர். ராஜா என்பதை ராஜு என்றும் சந்திரா என்பதை சந்துரு என்றும் கூறுவர் அவர் பேசும் தமிழும் கொஞ்சம் இழுத்து நெடிலாக உச்சரிக்கப்படுவதால் இப்படியிருக்கலாம்.

தமிழர் தமது தொன்மையை எப்படியோ படிப்படியாக இழந்து கொண்டிருக்கின்றனர். பக்கத்து வீட்டுக்காரனுடன் பகை என்பதால் தம்மைக்காத்துக்கொள்ள அயல்தேசம் போனவர்கள் இன்று விரும்பியோ விரும்பாமலோ தமது சந்ததி தமிழராக முடியாமல் போவதை மனம் நோக சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இங்கே தமது மொழியுடன் இன்னொரு மொழியை கற்க விரும்பாதவர்கள் இன்று தாமும் பல்தேசிய மொழிகளைக் கற்றதுடன் தமது வாரிசுகளையும் அந்த மொழிகளுக்கே ஆளாக்கி வருகின்றனர். தாயகம், தேசியம், உரிமை எனப் பலவாறு கத்திக்கொண்டிருக்கும் எந்த அரசியற் தலைவருக்கும் இது உறைக்கவில்லை உறைக்கவேயில்லை. நீர் கொழும்பிலே வசிக்கும் ஒருவருடைய முப்பாட்டனது பெயர் எப்படி கந்தசாமியாகவோ மயில் வாகனமாகவோ உள்ளதோ அதேபோலதான் இங்கே வாழும் சந்ததியும் ஒருநாள் தமது தாயகத்தை நிரூபிக்க முடியாமல் போகப்போகிறது.

குறைந்தபட்சம் இந்த யுத்தத்தின் காரணமாக நம்மைவிட்டு பிரிக்கப்பட்ட நிலங்களின் ஆதிக்குடிகள் நாங்கள் தான் என நிரூபிக்க அங்கு வசித்தவர்கள் கந்தையா, சீனித்தம்பி, பொன்னுத்துரை சேனாதி என காட்டமுடிகிறது. அதே நிலை மூன்று தலைமுறைகள் கடந்து வந்தால், எந்த ஆய்வாளனும் இதை ஒப்புக்கொள்ளமாட்டான் .

நன்றாகப்பாருங்கள் இங்கே வாழ்ந்தவர்கள் வடநாட்டவர்கள்தான் தினேஸ் ராஜேஸ், ரோஜன், அஸ்வந்த், அரவிந்த், என்றிருக்கிறதே என்று நிறுவப்போகிறார்கள், நாங்கள் நாகரீகத்திலும் எதையும் விட்டுவைக்கவில்லை. எமது கலாசாரமாக நடத்தப்படும் திருமண விழாக்களில்கூட மணமகன் குர்தா சகிதம் வருவதையும் மணமக்கள் சங்கீத் பங்சனில் குத்தாட்டம் போடுவதும் ஆரம்பமாகி வைரலாகி வருகிறது. தமிழர்கள் தமது உரிமையைக் கேட்பது எந்த அளவுக்கு நியாயமானதோ அந்த அளவுக்கு அவர்கள் தமிழர்களாக வாழவும் வேண்டும்.

இன்று கிளிநொச்சி வவுனியா மன்னார் போன்ற பிரதேசங்களில் சிங்களம் கற்போர் தொகை பெருகியுள்ளது. அதேயளவுக்கு சிங்கள மொழி அகடமிகளும் பெருகி வருகின்றன. இதிலொன்றும் நல்லிணக்கம் என்றெண்ணவேண்டாம். அவர்களது தொழிலுக்கான தேவையாகவே இதைக் கருதலாம் வடக்கு கிழக்கில் அரச தனியார் துறைகளில் சிங்கள ஊழியர்களின் தொகை பெருகியுள்ளதால் பொதுவாக தமிழர்களுக்கு அவர்களிடம் உரையாட மொழி தெரிந்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை ஏன் வருகிறது அதுவும் எமக்கு சம்பந்தமேயில்லாத மொழிகளிலெல்லாம் பெயரை வைக்கத்தான் வேண்டுமா?

ஒரு குழந்தை பிறந்ததுமே பஞ்சாங்கம் பார்த்து நட்சத்திரம் திதி, ராசி எல்லாம் பார்க்கிறார்கள் பஞ்சாங்கம் என்பதாவது பஞ்ச அங்கங்களை கொண்டமைவதால் அப்பெயர் பெறுகிறது நாள், நட்சத்திரம், திதி கரணம் யோகம், ஆகியவையே அவை. அந்தந்த ராசிகளுக்கான பெயர் எழுத்துக்களையும் பஞசாங்கம் சொன்னாலும். அவை வட எழுத்துக்கள் (சமஸ்கிருதம்) என்பதையும் குறிப்பிட்டே உள்ளனர். இந்த எழுத்துக்களை சட்டைசெய்யாமலே தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொண்ட எமது மூதாதையர்கள் மூடர்களா?

அடுத்ததாக, நம்பர் பார்த்துப் பெயர் வைப்பது. எண்கணித விதிப்படி தமது பெயரை அதிர்ஸ்டமுள்ள பெயராக்குவதில் மண்டையைக்குழப்பி பஞ்சாங்கத்தையும் விடமுடியாமல் எண்கணித ஜோதிடத்தையும் விடாமல் இரண்டையும் கலந்து பிள்ளைகளை அழைக்கவே முடியாத பெயரை வைப்பவர்களே அதிகம். சரி இப்படி பெயரை வைப்பவர்கள் அந்தப்பெயரை சொல்லி அழைக்கிறார்களா?

ஒரு இதிகாச உபகதை உண்டு. ஒரு வியாபாரி தகாத வழிகளில் எல்லாம் லாபம் சம்பாதித்து பணம் சேர்த்தான். அவனுக்கு வெகு நாட்கள் கழித்தே ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்தானாயினும் மேலும் பணவெறியுடன் பணத்தை சம்பாதித்தான். ஆனால் பிள்ளைப் என்பான். தினமும் நாராயணா எழுந்துவிட்டாயா? நாராயணா சாப்பிட்டாயா? நாராயணா குளிக்க வாறியா? என்று எப்போதும் மகனை எண்ணிக்கொண்டே வாழ்ந்தான். ஈற்றில் அவன் இறந்து நரகத்துக்கே அழைத்து செல்லப்பட்டானாம். அங்கே போயும் இவன் நாராயணா உனக்காகத்தானே நான் இதெல்லாம் செய்தேன் தப்பா? என்றான். அப்போது சாட்சாத் நாராயணனே வந்து அவன் எனது பக்தன் தினமும் எனது நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தவன் அவனை எப்படி தண்டிக்கலாம் என்று கூறி அவனை தன்னுடன் கொண்டு சென்றாராம்.

இது கதைதான். கிருபானந்த வாரியார் ஒன்று சொல்வார் இறைவனின் நாமமென்பது தலைவலி மாத்திரைபோல அது என்ன செய்கிறது என்பதை நாமறியாமல் சொன்னாலும் மாத்திரை விழுங்கப்பட்டதும் தனது வேலையை செய்வதுபோல இறைவனின் நாமமும் சொல்லப் பலன்தரும். எம்மதமும் இதைத்தான் சொல்கிறது தத்தமது இறைவர்களது பெயரை பிள்ளைகளுக்கு வைப்பதும் அதன் காரணமாகத்தான். ஆனால் எத்தனைபேர் வைத்த பெயரை கூப்பிடப் பயன்படுத்துகிறார்கள்.

சின்ன வயதிலேயே பேபி, சூப்பி, மொட்டை, குண்டா, நோனா துரை. கமல், ரஜனி, உங்கா, மிது, கஜி, ச்சாலா. கொக்கு குருவி என்று எத்தனை விதமான பெயர்கள் சூட்டப்படுகிறது.

வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் தம்பி என்றழைக்க ஊரவர்களும் தம்பியாக்கி அவன் வயது முதிர்ந்த பின்னும் தம்பியண்ணை மாறி தம்பித்தாத்தா என்றழைக்கப்படுவதுண்டு. ஒரு மனிதனை இனங்காட்டுவதும் அவனது பேரைச் சுமப்பவனுமே பேரர்களானார்கள். சங்கிலியனுடைய பரம்பரையை பார்த்தால் தெரியும் மாறி மாறி செகராசசேகரன் பரராசசேகரன் என்றே பட்டியல் இருப்பதை காணலாம்.

ஊரும் பேரும் முக்கியமானது இல்லையேல் ஊர்பேர் தெரியாதவரை எந்த சமூகமும் நாடும் மதிக்காது. எமது அடையானங்களை நாம் பேணவேண்டியது வரலாற்றுக்கடமை.

Comments