ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “உன்னத்தான் பாத்துக் கொண்டிருந்தனான் ஞாயிற்றுக்கிழமை வீடு வளவுகள் சுத்தம் பண்ணப் போறனாங்கள்... என்னென்ன தேவை என்டு எழுதிக் கொண்டு வந்தனீயோ? தேவையான சாமான்கள ஸ்கூல் ஒபிஸ்ல இருந்து எடுக்கலாம் என்டு நடராசா மாஸ்டர் சொன்னவர”.

“தேவையானதெல்லாம் இந்த லிஸ்டில எழுதி இருக்கிறனான் ஒருக்கா பாருங்கோ”

“எல்லாம் சரியாக் கிடக்குது சின்னராசு... ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு போனமென்டா சாமான்கள கொண்டு வந்து போடலாம். உன்ட தம்பியின்ட மகன் ராஜனையும் வரச் சொல்லன் அவனின்ட கூட்டாளிகளும் வருவினம் வேலையும் சுலபமா முடிஞ்சுபோடும்.”

“ராஜனோ அவன் எழும்பவே 10.00 மணியாகும்”.

“ஏன் இரவில நேரம் சென்று தான் தூங்குறவனோ”.

“ஓம் அண்ணன் 12 மணிக்குத்தான் படுக்கிறவன”.

“இப்ப உள்ள பெடியள்; உப்பிடித்தான் இரவு 12.00 மணி வரையில கொம்பியூட்டர் அடிச்சு கொண்டிருக்கிறவை. எங்கட அடுத்த வீட்டு பையன் நிதர்சனம் அப்படித்தான். 12 மணிக்கு பிறகு படுக்குறவை என்டா 8−9 மணி வரைக்கும் தூங்கத்தானே வேணும்”.

“அது ஏனண்ணே?”.

“இல்ல சின்னராசு. ஒவ்வொருவருக்கும் எத்தின மணித்தியாலம் தூக்கம் தேவையென்டு ஒரு கணக்குக் கிடக்குது. புதுசா பிறந்த குழந்தை என்டா 16இல் இருந்து 18 மணி நேரம், மொன்டசொரி பிள்ளை என்டா 11 லிருந்து 12 மணி நேரம், பாடசாலை பிள்ளை என்டா 10 மணிநேரம். இளைஞர் என்டா 9 மணி நேரம். வளர்ந்தவர் என்டா 7ல் இருந்து 8 மணி நேரம் தூங்க வேணும். ஆனா உது பொதுவான கணக்குத்தான். ஒவ்வொருவரின்ட வாழ்க்கை முறை ஆரோக்கியம் என்ட வகையில உது மாறுபடும்”.

“அப்படியே?”

“உது மட்டுமில்ல சின்னராசு தூங்குற நேரத்தில நாங்கள் மயங்கினவை போல கிடந்தாலும் எங்கட மூளையும் உடல் அவயங்களும் வேலை செய்துகொண்டுதான் இருக்கும் தெரியுமோ?”.

“தூக்கத்திலயோ?”

“உண்மைய சொன்னம் என்டா நாங்க விழிச்சிருக்கிற நேரம் செயற்படுறதைவிட தூங்குற நேரத்திலதான் மூளையும் உடல் அவயங்களும் மிகவும்; சுறுசுறுப்பா இயங்கும்”

“உண்மையே.. உது எனக்கு இன்டைக்குத்தான் அண்ணே தெரியும்”;.

“இரவில நாங்கள் தூங்குற நேரம் எங்கட மூளையும் தூங்கும் என்டுதான் எங்கட மூதாதையர் நினைச்சுக் கொண்டு இருந்தவை. ஆனால் 1929ல மூளையின்ட செயற்பாட்டை பதிவு செய்ய electroencephalogram (EEG) என்ற பதிவு செய்ற முறையை கண்டு பிடிச்சவை. உதை கண்டு பிடிச்ச பிறகுதான் எங்கட தூக்கத்திலயும் மூளை சுறுசுறுப்பா இயங்குது என்டு கண்டு பிடிச்சிருக்கினம்.”

“ நாங்கள் தூங்கிக்கொண்டு இருந்தாலும் எங்கட மூளை முளிச்சிக் கிடக்குதென்ன...”

“8 மணிததியாலம் தூங்கினம் என்டாலோ 10 மணித்தியாலம் தூங்கினம் என்டாலோ பிரச்சினையில்லை. ஆனா போதிய நேரம் தூங்கல்லையென்டா ஆரோக்கியத்தை பாதிச்சுப் போடும்”.

“அப்படியென்டா நேரத்திற்கு தூங்கி 8 மணி நேரத்திற்குப் பிறகு முழிக்க வேணும் என்ன”

“8 மணி நேர தூக்கம் நல்லதுதான் சின்னராசா. ஆனா உந்த 8 மணி நேர தூக்கத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்கிறது தான் முக்கியம்”

“ஓம் அண்ணே... சில நேரம் திருடர்கள் வந்து போடுவினம் என்ன”

“சரியா தூங்க வேணும் என்டா அதுக்கு ஏத்த சூழல் வேணும் சின்னராசு. இல்லை என்டா சரியான தூக்கம் வராது. தூங்குற அறை அல்லது இடம் கூடிய வரையில இருட்டா இருக்க வேணும். அறையிலோ அல்லது வெளியால இருந்தோ லைட் வெளிச்சம் வந்துதெண்டா லேசில தூக்கம் வராது”.

“ஓம் அண்ணே. எனக்கு இருட்டில இருந்தாதான் தூக்கம் வரும.”

“வெளிச்சம் இருக்கத்தான் வேணும் என்டா குறைஞ்ச வெளிச்சம் தருகிற சிகப்பு பல்ப பயன்படுத்தலாம். அதோட உங்கட படுக்கை அறையில மணிக்கூடு; இல்லை என்டா சுவர் கடிகாரத்தின்ட சத்தம் வராம பாத்துக்கொள்ள வேணும். இல்லையெண்டா தூக்கத்தை தாட்டிப்போடும்”.

“உது மட்டுமில்ல அண்ணே.. அடுத்த அறையில சத்தமா ரேடியோ போட்டாலும் தூங்க முடியாது”.

“ஆனா சிலவைக்கு ரேடியோவில பாட்டு கேட்டாத்தான் தூக்கம் வரும் என்டபடியா தூங்குறதுக்கும் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறாக சூழல் இருக்க வேண்டுமென்ன. உது மட்டுமல்ல. நல்ல தூக்கத்தால நல்ல பயன்களும் கிடைக்குது”.

“அது என்னண்ணே... நல்ல பயன்கள்”

“6 மணித்தியாலயத்திற்கு குறைஞ்ச தூக்கம் இருதய நோய், நீரிழிவு, பக்கவாதம் என்ட நோய்கள் ஏற்படுறதுக்கு ஒரு காரணமென்டு சொல்லுகினம்”.

“ஒரு நாள் குறைஞ்ச நேரம் தூங்கினம் என்டாலும் உப்பிடியே?”

“ஒரு நாள் என்டில்ல. தொடர்ந்து குறைஞ்சளவு தூக்கம் உந்த பிரச்சினையை ஏற்படுத்தும். சரியா 8 மணி நேரம் தூங்கினமென்டா ஆக்கத்திறன் நன்றாக இருக்கும்”;.

“ஆக்குற திறனோ? சமையல் நல்லா வருமென்டு சொல்லுறியளோ?”

“சமையல் இல்ல சின்னராசு கதைகள், கவிதைகள் பாட்டு எழுதுறதை சொன்னனான. கவிதை மட்டுமில்ல விளையாட்டு வீரர்களுக்கு 8 மணி நேர தூக்கத்தால அவையின்ட முழுத் திறமையையூம் காட்ட முடியும். என்டு சொல்லினம். அத்தோட நல்ல தூக்கம் மன அழுத்தத்தையும் குறைச்சிப் போடும். அத்தோட விபத்துக்களையும் குறைக்கும்”

“உது உண்மைதானண்ணே”

“சரியா தூங்காம வாகனத்தை ஓட்டுறவை இடையில தூங்கிப் போவினம். அவையின்ட கண் அவையளுக்கு தெரியாமலேயே அயர்ந்து போகும் உதாலதான் விபத்து வருகுது என்டும் சொல்லுறவை”

“உது உண்மைதான் சின்னராசு. வாகனங்கள் அதிலயும் பஸ், லொறி போன்ற கனரக வாகனங்கள் ஓட்டுறவை ரொம்ப கவனமா இருக்க வேணுமென்ன”. 

Comments