விழியில் விழுந்து இதயம் நுழைந்து...! | தினகரன் வாரமஞ்சரி

விழியில் விழுந்து இதயம் நுழைந்து...!

எதிர்வரும் புதன்கிழமை (பெப்ரவரி 14, 2018) காதலர் தினம்!

இன்னொருத்தர் மேல் வைக்கிற காதலைக் கொண்டாடுறதுக்காக வருஷத்துல ஒரு நாள்!

நம்மில் எத்தனைபேர் நம் சுயத்தைக் காதலிக்கின்றோம்? நம்மைக் காதலிக்கின்றோம்?

எதிர் பால் மேலுள்ள காதல் மட்டுமே புற எதிர்ப்பால், புறந்தள்ளப்படும். விவரம் தெரிந்த வயதிலிருந்து காதலிக்கத் துவங்கிவிட வேண்டும். அது, உடல் காதலாக இருக்கலாம்; அறிவுக் காதலாக இருக்கலாம்; திறமைக் காதலாக இருக்கலாம்; அகந்தைக் காதலாக இருக்கலாம். இப்படி, தன்னிடம் உள்ள ஏதோ ஒன்று பல திறமையை ஆராதிக்கும், தன் ஓராவை (AURA) தானே அழகுற மிளிர, ஒளிரச் செய்யும் நிலைதான் காதல் என்கிறார் பார்த்திபன்!

ஆனால், காதல் என்பது முற்றிலும் பொய்யானது என்கிறார் எழுத்தாளர் சுஜாதா.

நீங்கள் காதலித்து இருக்கிறீர்களெனில் கீழ்க்கண்ட அடையாளங்கள் உங்களுக்கு ஏற்படும். காலுக்குக் கீழ் பஞ்சு, காதில் கொஞ்சம் சலங்கைச் சப்தம், மிதப்பது போல் உணர்வு,ஒட்டுமொத்தமாக உலகமே ஏன், பிரபஞ்சமே உங்கள் காதலி/காதலனாக மாறிவிட்டது போன்றபிரமை. உலகத்தில் மற்ற எந்தப் பிரகிருதிக்கும் இந்த உணர்ச்சி ஏற்பட்டது இல்லை. எனக்கு மட்டும் ஸ்பெஷல் இது என்கிற பிரமை. காதல் என்பது இம்சை, இன்பம், அடிமை, விடுதலை, கொடுமை,கோலாகலம்... காதல் இல்லையேல் கவிஞர்களில் இருந்து ஐஸ்க்ரீம் விற்பவர்கள் வரை பிழைப்பு இழந்துவிடுவார்கள். சினிமாக்களில் கூட்டம் இராது. சுண்டல் வியாபாரமும் கிண்டல்ஜோக்குகளும் படுத்துவிடும். காதல் உலகை இயக்குகிறது.

இதுவரை விஞ்ஞானிகள் காதல் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கவில்லை. காரணம் - காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு அளக்க முடியும். ஆனால், காதல்! ம்ஹும். அதன் அடையாளங்கள்குழப்பமானவை. அஜீரணமாக இருக்கலாம்... பைத்தியமாகவும் இருக்கலாம்... காதலுக்கு என்று தனிப்பட்ட அடையாளங்களைத் தேடுவது மிக கஷ்டமானது. கோபத்துக்கும் பயத்துக்கும் நேரடியான பரிமாண ரீதியான தேவை இருக்கிறது. கோபம் சண்டை போட, பயம் ஓடிப்போக! மனித இனம் நீடிக்க இவை இரண்டும் தேவை.

ஆனால், காதல்?

காதல் என்பது இல்லாமலேயே சேர்ந்துபிள்ளை பெற்றுக்கொள்ள முடிகிறது நம்மால். பெருமூச்சுக்கள், கைக்குட்டையில் சென்ட், கவிதைகள் எதுவும் இன்றியே பெற்றுத்தள்ள முடிகிறது. எனவே, காதல் இன நீடிப்புக்குத்தேவையற்றது என்கிறார்கள். காதல் என்பது வெறும் மனத்தில் நிகழ்வது. நாகரிகம்பெற்றதும் மனிதன் பொழுது போகாமல் காவியங்களாகப் படைத்த நேர விரயம்...

காதலைப் பற்றி கவிஞர்களும் மாத நாவல்காரர்களுமே எழுதட்டும் என்று விட்டு வைத்திருந்தார்கள். ஆனால்,சென்ற பத்தாண்டுகளில் மனம் மாறிவிட்டார்கள். ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்யத்துவங்கிவிட்டார்கள். இந்த மாறுதலுக்குக் காரணம் பலவிதமாகச் சொல்கிறார்கள். எய்ட்ஸ்கூடக்காரணமாக இருக்கலாம். காதல் இல்லாத செக்ஸினால் பரவும் இந்த வியாதியின் தீவிரமும் அபாயமும் 'இரண்டு பேரை இணைத்து வருஷக்கணக்காக நேசிக்கும் இந்தக் காதல் என்னும் சக்தி’யின் முக்கியத்துவத்தை உணரச் செய்துள்ளன.

'காதலித்துப் பார்! காதலிக்கப்பட்டுப்பார்!’ இந்த ஆணை உலகம் எங்கும் இப்போது ஒலிக்கிறது.கவிதை, சினிமா, நாவல்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அனைத்திலும் இந்த மந்திர வார்த்தைதான். விளம்பரங்களிலும் எத்தனை காதல் என்று யோசித்துப் பாருங்கள்! 'காதல் என்பது மனித இயற்கை அல்ல. அது சமூகத் தேவைகளால் ஏற்படுவது’ என்கிறார்கள் அறிஞர்கள்.

''காதல் என்பது நம் முன்னோர்கள் நம் காதில் பேசும் ரகசியம்'' என்கிறார் மைக்கல் மில்ஸ்.

40 லட்சம் வருஷங்களுக்கு முன் ஆப்பிரிக்கச் சமவெளிப் பகுதியில் காதல் பிறந்தது என்கிறார்கள்.அப்போதுதான் மூளையில் இருந்து முதல் நியூரோ கெமிக்கல்கள் மனித ரத்தத்தில் பாய்ந்துகாதலின் காரணத்தால் அசட்டுச் சிரிப்பும் கைகளில் வியர்வையும் ஏற்பட்டதாம். ஆணும் பெண்ணும் கண்ணும் கண்ணும் கலந்து பார்த்து நிற்க... ''ஏய்! என்னடாது புதுசா?'' என்றுபெற்றோர்களால் அதட்டப்பட்டனர். மனிதன் இரண்டு கால்களில் நிற்கத் துவங்க, காதலால் அவன் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியத் துவங்க, தோளின் அகலம், கண்கள் இவை எல்லாம் ஒவ்வொருவருக்கு வேறுபடுவதை உணர்ந்தபோதுகாதல் பிறந்தது என்கிறார் சுஜாதா.

காதல் ஆணையும் பெண்ணையும் ஸ்திரமான உறவுக்கு இழுத்தது. இது குழந்தை வளர்ப்புக்குத் ​ேவைப்பட்டது. சமவெளிப் பகுதியில் மனிதன் இரை தேடும்போது ஒருத்தனாகவோ, ஒருத்தியாகவோ கையில் குழந்தையை வைத்துக்கொள்வது அபாயகரமானதாக இருந்தது.

அதனால், குழந்தையைப் பார்த்துக்கொள்ளவாவது இருவரும் கொஞ்ச நாள் ஜோடியாக இருப்பது தேவைப்பட்டது. ஜோடியாக இருக்க அன்பு வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் வேண்டும். காதல் வேண்டும்.

இதை 'நான்கு வருஷ அரிப்பு!’ என்கிறார்கள். மேற்கத்திய நாகரிகத்தில் இந்த நான்கு வருஷத்துக்குப் பின்தான் இல்வாழ்வில் முதல் அலுப்புகள் தோன்றுகின்றன. நாலாவது வருஷத்தில்தான் விவாகரத்துக்கள் அதிகரிக்கின்றன. ஆதலால், கல்யாணமாகி நாலு வருஷத்தை நெருங்குபவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்.

''காதல் என்பது இயற்கை தரும் போதை!'' என்கிறார் அந்தொனி வால்ஷ்.

ஒரு வாரத்துக்குப் பின் காதலியைத் தொட்டால் மட்டும் போதாது, கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கைக்கு அருகே செல்ல வேண்டியுள்ளது. இதெல்லாம் சுலபமாகக் கிடைத்துவிட்டால், வேறு நபரிடம் காதல் செய்தால்தான் மீண்டும் இந்த ரசாயனங்கள் சுரக்கின்றனவாம். இருந்தும் பல காதல்கள் வருஷக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம்? வேறு வகை கெமிக்கல்கள்.

''முதல் காதல் என்பது ஒருத்தர் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைக் காதலிப்பது!''

''முதிர்ந்த காதல் ஒருத்தரைக் காதலிப்பது!'' என்கிறார் சுஜாதா!

இந்தத் தத்துவம் தெரியாமல்தான் காதல் புறக்கணிக்கப்படுகிறது என்றதும் இளைஞர்கள் கொலைக்குத் துணிகிறார்கள். இது மடமை! உன்னை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், நீ உன்பாட்டில் ஓடிக்ெகாண்டேயிரு!

மற்றவர்கள் உன்னைப் பார்த்துப் பொறாமையில் பொசுங்கி, உன்னைக் காதலிக்கும் அளவுக்கு, நீயே உன்னைக் காதலி, காதலித்துக் ெகாண்டே இரு.

Comments