தந்தியில்லா வீணை | தினகரன் வாரமஞ்சரி

தந்தியில்லா வீணை

என்.கே.வேணி...
பலாங்கொடை

நேர்முகப் பரீட்சைக்குச் சென்று வீட்டுக்கு வந்த கார்த்திகா, அத்தாட்சிப் பத்திரங்கள் அடங்கிய 'பைலை' மேசைமீது எறிந்துவிட்டுக் குமுறிக்குமுறி அழத் தொடங்கினாள். மகள் தேம்பி அழும் நிலையைக் கண்ட சாரதாவுக்கு எல்லாமே புரிந்தது. ஆமாம், இன்றும் வழக்கம்போல்தான் நடந்திருக்கும். எல்லாம் பார்த்துவிட்டுச் சான்றிதழ்களும், கோப்புகளும் தகுதியாகவே உள்ளன. ஆனால், பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் தந்தையின் பெயர் இல்லாமல் இடைவெளியாக இருக்கிறபடியால், வேலையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று கூறி திருப்பியனுப்பியிருப்பார்கள். பாவம் இவள்! யாரோ செய்த தப்புக்கு இவளே தண்டனை அனுபவிக்கிறாள். வீணைக்குத் தெரியாதுதானே தன்னை செய்தவன் யாரென்று. தாய் சாரதா, மகள் கார்த்திகா அழுவதைக் கண்டும் அவள் அருகில் சென்று ஆறுதல் கூட சொல்ல முடியாமல் மௌனமாக அவளும் அழுதாள்.

நான் இளமையில் அறியாமலும் என் பருவ உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் செய்துவிட்ட ஒரு தவறினால், ஒரு குற்றமும் செய்யாத என் மகள் இன்று எத்தனை துன்பங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அவமானம் துன்பம் மட்டுமா? அவளின் எதிர்காலமும் அல்லவா கேள்விக் குறியாக உள்ளது. அந்த ஒரு நிமிடம் என் வாழ்வையும் சிதைத்து எத்தனை பெரிய பள்ளத்தை ஏற்படுத்திவிட்டது. மனித வாழ்வில் ஒரு நிமிடம் என்பது மிகமிகக் குறைந்த நேரம்தான். ஆனால், அதே குறைந்த நேரத்தில் நடந்த சம்பவம், வாழ்வில் எத்தனை பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

சாரதா குற்ற உணர்வோடு மகளின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமலும், அவளின் அழுகையை நிறுத்தி ஆறுதல் சொல்ல முடியாமலும் தவித்தாள். தான் இன்று தன் பெற்ற மகளின் முன்னே குற்றவாளியாக நிற்பதற்குக் காரணமான பழைய சம்பவங்கள் சின்னத்திரை சீரியல் போல் மனக்கண் முன்னே விரிந்தன.

பல வருடங்களுக்கு முன் நடந்த அந்தக் கசப்பான சம்பவத்தை பசு இரை மீட்டுவதைப் போல் மீட்டிப் பார்க்கிறாள் சாரதா. அவளின் அப்பா சின்ன வயதிலே இந்தியாவுக்குப் போய் காலமாகிப்போக, அம்மா, அண்ணாமார்கள் இருவர், அக்கா இருவர், தங்கை என்று சகோதரர்களின் பாசத்துடன் இளமைக் காலம் மூத்த அண்ணாவின், பராமரிப்பில் கவலையின்றி கழிந்தது. அதுவும் தங்கை கவிதாவும் சாரதாவும் சகோதரிகளைப் போல் அல்லாமல், இரு தோழிகளைப் போல் பழகி வந்தனர். சாரதா கருப்பு நிறம் என்றாலும் கவர்ச்சியானவள். பொறுமையும் அடக்கமும் ஒருங்கே அமைந்தவள். கவிதா வெள்ளை நிறம்; துடுக்கானவள். வீட்டில் கடைக்குட்டி என்ற படியால் மிகவும் செல்லமாக வளர்ந்தாள்.

இப்படியாக கவலையின்றி வீட்டில் இருந்த வேளையில், அண்ணாமார்கள், அக்காமார்கள் திருமணம் முடித்து போய்விட்டார்கள். அடுத்து அம்மா சொன்னதற்கிணங்க சாரதாவுக்கு மாப்பிள்ளை பார்த்தார் அண்ணன். பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை விக்னேஸ்வரன், சாரதாவை விடத் தனக்கு தங்கை கவிதாவையே பிடித்திருப்பதாகக் கூறிவிட்டார். சம்மதம் என்றால் சொல்லி அனுப்புங்கள் என்று கூறி வந்தவர்களுடன் விடை பெற்றார். சாரதாவின் குடும்பத்தாகும். பெரியவர்களும் கலந்து பேசி, சாரதா பொறுமையானவள். எதையும் சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவம் உண்டு. எனவே அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்போம். விக்னேஸ்வரன் விரும்பியபடி கவிதாவை அவருக்கே திருமணம் முடிப்போம் என்று முடிவெடுத்தனர்.

சாரதாவோ வெளியில் ஒன்றும் கதைக்க முடியாமல், மௌனமாக அழுது தீர்த்தாள். விக்னேஸ்வரனை விரும்பியபோதும் அவனின் செய்கையை எண்ணி வெறுப்பு கொண்டாள். பெண் என்றால் எவ்வித உணர்வுகளுமில்லாதவள் பொம்மையைப் போல் என்று எண்ணிய காலமது. எனவே, பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை விரும்பியபடி கவிதாவுக்கும் விக்னேஸ்வரனுக்கும் திருமணம் நடந்தேறி, கவிதா கணவனுடன் புகுந்த வீட்டுக்குக் குடி புகுந்தாள். தங்கை கவிதாவின் திருமணத்தின் பின் சாரதா தனிமையில் தள்ளப்பட்டாள். தான் மூத்தவள் இருக்கும்போது, திடீரென பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை, தங்கை கவிதாவை விரும்பி உடனே திருமணமும் முடிந்து அவள் திடுதிப்பென்று என்னை விட்டுப் பிரிந்து கணவன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தான் ஒதுக்கப்பட்டது போல் ஓர் ஆதங்கம் மனத்தில் ஏற்பட்டது. அவள் தாயிடம் கூடப் பேசுவதை தவிர்த்தாள். சதா யோசனையுடன் எதையோ பறிகொடுத்தவள் போல் காணப்பட்டாள். இப்படி இருக்கும்போதுதான் சாரதாவுக்கு தங்கை கவிதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அன்புள்ள அக்கா!

நானும் எனது கணவரும் நலம். நீங்களும், அம்மாவும் சுகமா? எனக்கு யாரும் எதிர்பாராமல் திடீரென்று கல்யாணம் முடிந்து கணவருடன் இங்கு வந்துவிட்டபோதும் உங்களை விட்டுப் பிரிந்து வந்தது எனக்கு மிகவும் வேதனையாகயுள்ளது. அக்கா என் கணவர் மிகவும் நல்லவர், அன்பானவர். எனக்கு இப்படியொரு கணவன் கிடைத்து என் பாக்கியமே. என் மாமியும் ஒருவாரம் எங்களுடன் இருந்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார். இவரும் வேலைக்குப் போன பின் தனிமை எனக்கு போர் அடிக்கிறது. நீங்களும் அம்மாவும் அங்குத் தனியாகத்தானே இருக்கிறீர்கள். எனவே அம்மாவுடன் வந்து இங்கு கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போகலாம்தானே. உங்களுக்கும் இவரிடம் சொல்லி ஏதாவது மாப்பிள்ளை பார்க்கலாம். உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

இப்படிக்கு

என்றும் அன்புடன் தங்கை,

கவிதா

ஒரு மாறுதலா இருக்கும் என்று எண்ணி தாயுடன் புறப்பட்டாள். தாயையும், சகோதரியையும் கண்ட கவிதா மிகவும் மகிழ்ந்து போனாள். இடையில் ஏற்பட்ட பிரிவுத் துயரை ஈடுசெய்யும் வகையில் பாசத்துடன் பழகினார்கள். சில வேளை கணவன் வீட்டுக்கு வந்ததைக் கூட கவனிக்காமல், அக்காவுடன் கதைத்துக் கொண்டு இருப்பதை கவனித்த தாய் கூட இருவரையும் கடிந்து கொண்டாள். விக்னேஸ்வரன் கூட ஒருநாள், என்னை மறந்துவிட்டாள் கவிதா அக்காவை கண்டவுடன், என்று கூறி சிரித்தான். சாரதா தங்கையின் வீட்டுக்கு வந்து இருவாரங்கள் போனதே தெரியவில்லை. எனவே தாயார் கவிதாவிடம் “நாங்க வந்தும் இரண்டு கிழமையாய் போச்சு. இனி நாளைக்கு நாங்க புறப்படுறம்” என்று கூறிய தாயிடம் “என்னம்மா அவசரம் அக்காவும் நீங்களும் அங்க போயும் தனியாகத்தானே இருக்கப் போறீங்க. இங்கேயே கொஞ்சநாள் இருக்கட்டும். நான் இவரிடம் சொல்லி இங்கேயே அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்றன். அப்படி ஏதும் மாப்பிள்ளை அமைஞ்சா அண்ணாவிடம் சொல்லி அக்காவுக்கு இங்கேயே கல்யாணமும் செய்திடலாம்” என்று கவிதா கூறினாள். இதுவும் நல்ல யோசனைதான் என்று எண்ணிய தாய், சாரதாவை மட்டும் அங்கு இருக்க விட்டுவிட்டு அவள் மட்டும் ஊருக்குப் புறப்பட்டாள்.

ஆரம்பத்தில் கவிதாவும் விக்னேஸ்வரனும் ஒன்றாக இருக்கும் இடத்தில் கூட சாரதா நிற்கவே மாட்டாள். வெட்கம் ஒரு புறமும் வேதனை மறுபுறமும் சேர விலகி போய்விடுவாள். இதனைக் கண்ட கவிதா “என்ன அக்கா அத்தானைக் கண்டவுடன் ஓடி ஒளிந்து கொள்கிறீர்கள். முறைப்படி பார்த்தால் நீங்கதான் அவரிடம் அகப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நான் மாட்டிக் கொண்டேன்” என்று கேலி பண்ணுவாள்.

அதன் பிறகுதான் இருவரும் சகஜமாக கதைத்துப் பழகத் தொடங்கினர். அதன்பின் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சாரதாவை கிண்டல் பண்ணவும் தொடங்கியவன், அவளின் நல்ல குணங்களைப் புகழ்ந்து பேசினான். ஒருநாள் சாரதாவிடம். “சாரதா நான் அன்று பெண் பார்க்க வந்தபோது அவசரப்பட்டு, முடிவெடுத்து விட்டேன். நீங்க கருப்பாய் இருந்தபோதும் மிகவும் கவர்ச்சியாகவே இருக்கிறீர்கள். உங்களின் எல்லா செய்கைகளும் எனக்கு பிடிச்சிருக்கு” என்று விக்னேஸ்வரன் சொன்னதைக் கேட்ட அவளின் பருவ உணர்வுகள் மெல்ல மெல்ல பளிச்சிடத்தொடங்கின.

இதற்கிடையில் கவிதாவும் கர்ப்பம் தரித்தாள். எனவே, எந்தநேரமும் தலைச்சுற்று, வாந்தி என்று படுத்துவிடுவாள். வீட்டு வேலைகளுடன், விக்னேஸ்வரனின் வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பும் சாரதாவுக்குக் கிட்டியது. அவர்கள் இருவரும் கதைக்கும் சந்தர்ப்பமும் அதிகமானது. ஆனால். பிள்ளைப் பேறுக்காக சுமையோடு காத்திருந்த கவிதா இதையெல்லாம் பெரிதாக எண்ணவில்லை. அக்கா தன்னுடன் இருப்பது மிகவும் உதவியாக உள்ளது என்று எண்ணினாள். அதைவிடத் தன் கணவனை மிக நம்பினாள்.

பேறுகாலம் நெருங்கவே கவிதாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். விக்னேஸ் வரனுக்குச் சாரதாவிடம் தனிமையாகப் பழக நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் சாரதாவைத் தன் வலைக்குள், சிக்க வைத்து தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டான். அதன் விளைவு சாரதா கல்யாணம் ஆகாமலே கர்ப்பமானாள். இதைக் கண்ட கவிதா பேயாக மாறினாள். தன் சகோதரி திட்டமிட்டே தன் வாழ்வை நாசமாக்கிவிட்டதாக எண்ணி துடித்தாள். தன் சகோதரியை எதிரியாக கருதி ஒதுக்கினாள். தன் கணவனால் தன் சகோதரியின் வாழ்வு கருகிவிட்டது. என்பதை உணராமல் சராதா மீது மட்டும் கோபமும் வெறுப்பும் கொண்டாள்.

விக்னேஸ்வரனின் கபட வார்த்தைகளில் தான் மதிமயங்கி தான் இழக்கக் கூடாததை இழந்து விட்டதை எண்ணி ஊமையாக கண்ணீர் வடித்தாள். ஆண் செய்த தவறுக்கு ஆணுக்கு அடையாளம் காட்டாத இயற்கை, பெண்ணுக்கு மட்டும் உடனே அடையாளம் காட்டி விடுகிறதே என்று ஆண்டவனையும் நொந்துகொண்டாள். வேதனை தீயில் வெந்த சாரதா தற்கொலைக்கு முயற்சி செய்தாள். ஆனால் அதுவும் தோல்வியிலே முடிந்தது. தவறு செய்யும் போது ஆணும் பெண்ணும் சேர்ந்து தவறு செய்த போதும் இந்தச் சமூகம் பெண்ணை மட்டும் ஒதுக்கி குற்றம் சாட்டுகிறது. சாரதாவை அவளின் தங்கை, உற்றார், உறவினர் எல்லோரும் ஒதுக்கினர். அவள் தங்கையின் வீட்டுக்கு எவ்வளவு மகிழ்வுடன் நுழைந்தாளோ, அந்த அளவுக்கு அதிகமான சோகத்தையும் சுமையையும், சுமந்து கொண்டு தன் தங்கையின் வீட்டைவிட்டு வெளியேறி தன் தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள்.

சாரதாவின் நிர்க்கதியான நிலையைக் கண்ட அவர்கள் அரை மனத்துடன் அவளை ஏற்றுக்கொண்டனர். அவள் இருக்கும் இடத்தை அறிந்த பின்னும் விக்னேஸ்வரனும் கவிதாவும் அவளை சென்று பார்க்கவுமில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை தன் வழியே போய்கொண்டிருக்கும். எனவே சாரதாவுக்கும் குறிப்பிட்ட நாளில் பிரசவ வேதனை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவள் பெண்ணாய்ப் பிறந்து பட்டபாடு போதாது என்று, அவளுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

எதிர்காலக் கேள்விக் குறியுடனும் கையில் குழந்தையுடனும் இறுகிய இயத்துடன் வைத்திசாலையிலிருந்த அவளுக்கு, விக்னேஸ்வரனின் வரவு அதிர்ச்சியாகவும், ஒரு புறம் ஆனந்தமாகவும் இருந்தது. ஒருவேளை தன் குழந்தை மீது பாசம் வந்துவிட்டது போலும், இல்லை தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டாரோ! கவிதா என்னைக் கூட்டி வரச் சொல்லியிருப்பாளோ, என்று பலவிதமான எண்ணங்களுடன் குழம்பிப் போனாள். ஆனால் அவன் வஞ்சக எண்ணத்துடனும், சுயநலத்துடனும்தான் வந்திருக்கிறான் என்பதை பின்புதான் அறிந்து கொண்டாள்.

வந்தவன் சாரதாவிடம், “என்ன பிள்ளைக்கு பெயர் வைத்துவிட்டாயா?" என்று கேட்கவும்," இல்லை" என்று தலையசைத்தாள் சாரதா. சரி ஏதாவது ஒரு பெயரைச் சொல் நான் போய் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கிறேன் என்று சொல்லவும் சரி தகப்பன்தானே அக்கறையுடன் கேட்கிறார் என்று மகிழ்ந்த அவள், “கார்த்திகா” என்று பெயரைச் சொன்னாள் சரி நான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன்; நீ ஒன்றும் யோசிக்காதே. இப்போது கவிதா மிகவும் கோபமாகயிருக்கிறாள். நீ கொஞ்சநாள் அங்கேயே இரு கவிதாவின் கோபம் தணந்ததும் உன்னையும், பிள்ளையையும், கூட்டிக் கொண்டு போறேன் என்று கூறி போய் விட்டான்.

மனத்தில் சுமையுடனும், கையில் சுமையுடனும், மீண்டும் அவள் தங்கியிருந்த இடத்திற்கே சென்றாள். கொஞ்ச காலம் செல்ல அவர்கள் அவளையும், குழந்தையையும் அவளின் அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அண்ணன் வீட்டுக்குச் சென்ற அவளுக்கு அண்ணனின் பாராமுகமும், அண்ணியின் சுடு சொற்களும் மிகவும் வேதனை அளித்தது. பனை ஏறி விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் ஆகியது அவள் நிலை. எனவே, இவனின் நிலையை உணர்ந்து சாராதாவின் அக்கா வந்து அவளுடன் அழைத்துச் சென்றாள்.

காலம் யாருக்காவும் காத்திராமல் விரைந்தோடியது. கார்த்திகாவும் இப்போது ஓரளவு வளர்ந்துவிட்டாள். இவள் எத்தனை நாளைக்கு இப்படியே தனியாக குழந்தையுடன் இருக்க முடியும்.

என்று யோசித்த கார்த்திகாவின் அக்காவும் அண்ணனும், அவளுக்கு வேறு திருணம் முடிக்க முடிவு செய்தனர். அக்காவின் கணவருடன் வேலை செய்யும் ஒருவர், சாரதாவின் பரிதாப கதையைக் கேட்டு சாரதாவுக்கும், பிள்ளைக்கும் வாழ்வு கொடுக்க முன்வந்தார். கார்த்திகாவின் எதிர்காலத்தை முன்னிட்டும், விக்னேஸ்வரனின் அலட்சிய போக்கும் சாரதாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தன.

கார்த்திகாவை பாடசாலையில் சேர்க்க, பிறப்புச் சான்றிதழ் பத்திரம் தேவைப்பட விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்கவும். அவர் மனச்சாட்சியே இல்லாத மனிதராக தகப்பனின் பெயரைக் குறிப்பிடாமல் வெறும் பிறப்பு சான்றிதழ் பத்திரத்தை அனுப்பியிருந்தார். வேறு வழி இல்லாமல் பிறப்பு சான்றிதழ் பத்திரத்தை மாற்றாமலே கார்த்திகாவை பாடசாலையில் சேர்த்துவிட்டனர்.

கார்த்திகாவோ கல்வியில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் மிகவும் சிறந்து விளங்கினாள். எனவே கல்வி மேம்பாட்டு விடயங்களில் சான்றிதழ்கள் வழங்கும்போது பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. அத்தோடு அவமானமும் ஏற்பட்டது. கார்த்திகாவோ தன் சித்தப்பாவின் பெயரைக் கூறி சமாளித்து வந்தாள். இதனால், மனவேதனையும், குழப்பமும் கொண்ட கார்த்திகா, தன் தாயிடம் கேட்டாள். அப்போது சற்றுத் தயங்கிய சாரதா, மகளும் வளர்ந்துவிட்டதால் இனி மறைப்பதில் பயனில்லை என்று கூறித் தனக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கினாள்.

படித்துப் பட்டம் பெற்ற கார்த்திகா, தனக்குத் தொழில் கிடைத்து நிரந்தரமாகவும் மரியாதையோடும் வாழத் தன் தந்தைக்கு நீதிமன்ற மூலம் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சட்டத்தரணியை சந்திக்க முடிவு செய்து, அதற்கான செயலிலும் இறங்கினாள். 

Comments