பொன்டேராவின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வியாபாரங்களுக்கு தலைமைப்பொறுப்பேற்ற | தினகரன் வாரமஞ்சரி

பொன்டேராவின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வியாபாரங்களுக்கு தலைமைப்பொறுப்பேற்ற

ஃபொன்டெரா ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் வித்தியா சிவராஜா, 2018 பெப்ரவரி முதலாம் திகதிமுதல் அமுலுக்குவரும் வகையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் சர்வதேச நுகர்வோர் மற்றும் உணவுசேவை செயற்பாடுகளுக்கான முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நிறுவனமொன்றின் தலைமைப் பொறுப்பை இலங்கையர் ஒருவர் ஏற்றுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் இந்திய துணைக்கண்டம் ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், எமது ஊழியர்கள் எமது மாபெரும் சொத்துக்களாக அமைந்துள்ளனர். அவர்களுடன் நாமும் வளர்ச்சியடைய எதிர்பார்க்கிறோம். அர்ப்பணிப்பாக செயலாற்றும் தலைமைப்பொறுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இவரின் இந்நியமனம் தெளிவான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. அவரின் திறமையான செயற்பாடுகளினூடாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் வியாபாரங்கள் அனுகூலமடையும் என நான் கருதுகிறேன். அவருக்கு நாம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

தமது புதிய நியமனம் தொடர்பில் வித்தியா தெரிவிக்கையில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் வியாபாரங்களை தலைமை வகிப்பது என்பது விறுவிறுப்பானதாக அமைந்துள்ளதுடன், இந்த சவாலை ஏற்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எமது நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இரு சந்தைகளையும் சேர்ந்த சிறந்த அணியுடன் செயலாற்ற எதிர்பார்க்கிறேன் என்றார்.

2004ல் ஃபொன்டெராவுடன் இணைந்து கொண்ட வித்தியா, அங்கர் நியூடேல் வர்த்தகநாமத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தார். 2007ல் சிங்கப்பூரில் பிராந்திய பாற்பண்ணை பிரிவொன்றில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. பரந்துபட்ட சந்தைகளில் வெவ்வேறு கலாசார சூழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பமாகும். இதுதொடர்பில் வித்தியா தெரிவிக்கையில், வெவ்வேறு நாடுகளில் பணியாற்றும் முறைகளில் வேறுபாடு காணப்பட்டாலும், பொதுவான செயலாற்றல் அம்சங்கள் வரவேற்கத்தக்கனவாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டார்.

வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் பணியாற்றும் முறைகள் மாறுபட்ட சூழலில் ஒரே அணியாக செயலாற்றுவதற்கு எவ்வாறு ஊக்குவிப்புகளை வழங்கவேண்டும் என்பதை எனது பிராந்திய அணி பயிற்று வித்திருந்தது. வெவ்வேறு கலாசார வேறுபாடுகள் பற்றி அறிந்துகொள்ள இது எனக்கு உதவியாக அமைந்திருந்ததுடன், நாம் எங்கு வசித்தாலும் நாம் ஒரே பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகிறோம் என்பதை உணர்த்தியிருந்தது. 

Comments