மேற்கிந்தியத்தீவு அணியின் பின்னடைவுக்கு டி/டுவெண்டி லீக் தொடர்கள் காரணமா? | தினகரன் வாரமஞ்சரி

மேற்கிந்தியத்தீவு அணியின் பின்னடைவுக்கு டி/டுவெண்டி லீக் தொடர்கள் காரணமா?

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடருக்காக இரு அணிகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டித் தொடர் அடுத்த மாதம் சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளது 10 அணிகள் பங்குகொள்ளும் இத்தெரிவுத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தொடரில் விளையாட மேற்கிந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களான கிரான் பொலார்ட், சுனில் நரேன், டெரன் பிராவோ, அன்ட்ரூ ரஸல் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அதிரடி ஆட்டக்காரர்களான் கிறிஸ் கெயில் மற்றும் மார்வன் சாமூவேல் இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உலகக் கிண்ணத் தெரிவுப் போட்டிகள் நடைபெறும் பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் ஆரம்பமாகும் சுப்பர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுளளதால் இக்காலப்பகுதியில் சிம்பாப்வேயில் நடைபெறும் உலகக்கிண்ணத் தெரிவுப் போட்டிகளில் பங்கு கொள்ள முடியவில்லை என மேற்படி வீரர்கள் தெரிவித்துள்ளதாக மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள அவ்வணி முக்கியமான இவ்வீரர்கள் விலகியுள்ளதால், அண்மைக்காலமாக திறமையாக விளையாடி வரும் ஆஸ்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகளிடம் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும். இவ்வணிகளிடம் தோல்வியுற்றால் உலகக்கிண்ண தொடரில் விளையாடும் தகுதியை மேற்கிந்தியத் தீவுகள் இழந்து விடும்.

தொடர்ந்து இரு முறை உலகக் கிண்ணம் வென்ற அவ்வணி கடந்த 10 ஆண்டுகளாக சந்தித்து வரும் பாரிய பின்னடைவுக்குக் காரணம் என்ன? அவ்வணி வீரர்களின் தனிப்பட்ட திறமையைப் பார்ப்போமாயின் வீரர்கள் ஒவ்வொரும் சகல துறையிலும் திறமையானவர்களே. தனியாளாக நின்று எதிரணியை துவம்சம் செய்யக் கூடிய வீரர்கள் பலர் அவ்வணியில் உள்ளனர். எவின் லுவிஸ், கெயில், நரேன், ஹோல்டர், அன்ட்ரு ரஸல், பிரேத்வேட்ச், சமி, என அதிரடி வீரர்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் ஓர் அணியாக நின்று விளையாடினால் எந்தவாரு அணியையும் இலகுவாக தோற்கடிக்கக் கூடிய ஆற்றல் இவர்களிடம் உண்டு. ஆனால் கடந்த ஒரு தசாப்தகாலமாக கிரிக்கெட் விளையாட்டு மட்டுமல்ல எல்லா விளையாட்டிலும் பணமே முக்கிய குறிக்கோளாக உள்ளதால் வருவாய் குறைந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையினால் அந்நாட்டுக் கிரிக்கெட் வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதே அவ்வணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும் என அநேக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பகாலத்தில் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியதால் அவை மிக கண்ணியமாக நடைபெற்றுவந்தன. 90களில் ஒருநாள் போட்டிகள் உச்சத்தில் இருந்த காலத்தில் நாடுகளுக்கிடையிலான போட்டியும், வீரர்களுக்கிடையிலான மோதல்களும் சூடு பிடிக்க ஆரம்பித்தன. இதனால் போட்டிகளைக் காண மைதானத்துக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்ததால் வருமானம் பெரும் துறையாக கிரிக்கெட் மாறியது. அதன் விளைவாக பல கிரிக்கெட் வீரர்கள் தொழில் ரீதியாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை கார், பங்களா என சொகுசு வாழ்க்கையாக மாற ஆரம்பித்தது.

காலப்போக்கில் பாஸ்ட்பூட் போல் டுவெண்டி/20 போட்டியின் அறிமுகத்துடன் கிரிக்கெட் வியாபாரமாகிப் போனது. இதை அவதானித்த பெரும் கோடீஸ்வரர்கள் விளையாட்டையும், வீரர்களையும் விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தனர். அதன் பின் ஆண்டு தோறும் ஐ. பி. எல்., பி. பி. எல், பி. எஸ். எல்., பிக் பொஸ் என டி/டுவெண்டி தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்டிலும் வருடந் தோறும் இவ்வகையிலான தொடர்கள் நடைபெறுவதால் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதனால் சில கிரிக்கெட் சபைகளால் அந்நாட்டு வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது. போதாக் குறைக்கு பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலும் இவ்வகை லீக் போட்டிகள் நடைபெறும் போது இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் தொடர்கள் இடம்பெறாமல் போட்டி அட்டவணையைத் தயாரிக்கவும் ஆலோசித்து வருகிறது.

இவ்வாறான லீக் போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து விளையாடுவதால் சிறந்த வீரர்கள் விரைவாக களைப்படைகின்றனர். இதனால் காயங்களுககுள்ளாகி நீண்ட நாட்கள் தமது சொந்த அணிக்காக விளையாட முடியாமல் போய்விடுகிறது. இலங்கை அணயின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க கடந்த வருடம் முழுவதும் காயத்தால் அவதிப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்து அணியில இடம் பெறலாம் எனக் காத்திருந்தாலும் முன்னைய போர்ம் இல்லாததால் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக இவ்வருடம் நடைபெறும் ஐ. பி. எல். தொடரிலாவது விளையாடலாம் எனக் காத்திருந்தாலும் அவர்களும் மாலிங்கவை கண்டுகொள்வில்லை. மாலிங்க கடந்த வாரம் ஒரு பேட்டியில் கூறும் போது அடுத்துவரும் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் விளையாட இடம் கிடைக்காவிட்டாலும், வீரர்களுககு பயிற்சியளித்தாவது தனது பங்களிபபை செய்யக் காத்திருப்பதாக இப்போது கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல மூன்று வருடங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கூட ஓய்வுபெற்று சுமார் இரண்டு வருடங்கள் தனது திறமையை லீக் போட்டிகளில் காட்டியமையை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர. கடந்த வருடம் இலங்கை அணியின் மோசமான பின்னடைவுகளுக்கு இவைகளும் ஒரு காரணமாகும். சர்வதேச ரீதியிலும் நியூசிலாந்தின் ஸ்கொட் டைரிஸ், அவுஸ்திரேலியாவின் மிச்சல் ஜோன்சன், தென்னாபிரிக்காவின் டேல் ஸ்ரேய்ன், கார்ல் அபோட் போன்ற சிறந்த வீரர்கள் விரைவாகவே காயமடைந்ததும் முறையான ஓய்வுவில்லாமல் தொடர்ந்து இவ்வகையான லீக் போட்டிகளில் விளையாடியதனாலே என அர்ஜுன ரணதுங்க போன்ற கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

எனவே தற்போது மேற்கிந்திய அணியின் முக்கிய வீரர்கள் அணியைக் கைவிட்டுவிட்டு லீக் தொடர்களுக்காக உலகை சுற்றுகிறார்கள். ஆனால் தொடர்ந்து மூன்று முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று முதல் இருமுறை கிண்ணம் வென்ற மேற்கிந்திய அணியோ பாதாளத்தை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிகன்றது.

அவ்வணியின் சிறந்த சகலதுரை வீரரான அன்ட்ரு ரஸல் இதவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். நாட்டுக்காக கடைசியாக 2015ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள இவர், 2016ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி/ டுவெண்டி உலகக் கிண்ணத்தைக் அவ்வணி கைப்பற்ற காரணமாயிருந்தார். அதன்பிறகு அவரின் எண்ணம் முழுவதும் லீக் தொடர்களில் விளையாடுவதிலேயே உள்ளது.

இதே போல் சம்பளப் பிரச்சினையால் சிறிது காலம் அவ்வணியிலிருந்து விலகியிருந்த கிரான் பொலார்ட் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அணியுடன் இணைந்து கொண்டார். ஆனால் மீண்டும் லீக் தொடருக்கு முக்கியத்துவமளித்துள்ளார். 49 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ள டிரான் பிராவோ மேற்கிந்தியத் தீவுகளுக்காக கடைசியாக 2016ஆம் ஆண்டே விளையாடியிருந்தார். அதன் பிறகு மேற்கிந்தியத் தீவுக்காக விளையாடுவதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என பிராவோ ஒருமுறை கூறியுருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். ஆனால் ஆண்டு தோறும் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.

இத் தெரிவுப் போட்டித் தொடரில் கிறிஸ் கெயில் இணைந்து கொண்டமை மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடும் மற்றைய இளம் வீரர்களுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது என அணியின் தலைவர் ஜேஸன் ஹோல்டர் கூறியுள்ள போதிலும் 37 வயதான கெயிலினால் முன்பு போல் தொடர்ந்து அதிரடியாக ஆட முடியவில்லை. கடந்த பல போட்டிகளில் ஓரிரு போட்டிகளைத் தவிர அவரின் அதிரடியான ஆட்டத்தை பல போட்டிகளில் காண முடியவில்லை. அதனால்தான் இம்முறை ஐ. பி. எல். இல். விலைபோகாத வீரராக இருந்த அவரை கடைசி நேரத்தில் அடிப்படை விலைக்கே பஞ்சாப் அணி வாங்கியது.

எம்.எஸ்.எம். ஹில்மி

Comments