நாடு மாறியிருக்கும்போது நாம் மாறியதில் என்ன தவறு? | தினகரன் வாரமஞ்சரி

நாடு மாறியிருக்கும்போது நாம் மாறியதில் என்ன தவறு?

விசு கருணாநிதி
 

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எத்தனை சபைகளை ஆளப்போகிறது என்பதைப் பொறுத்து பாருங்கள். ஐந்தா, பத்தா என்பது அப்போது புரியும் என்கிறார் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்.

உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், தாமரை மொட்டுடன் இணையப்போவதாகக் காங்கிரஸ் அறிவித்திருந்தது. தற்போது அந்த மொட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால், பிரதியமைச்சர் பதவியை ஏற்றுக்ெகாண்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

1962ஆம் ஆண்டு இ.தொ.கா வில் இணைந்து கொண்டு தமது அரசியல் வாழ்வை ஒரு தொழிற்சங்கவாதியாகவே ஆரம்பித்து, இன்று அந்த ஆலவிருட்சத்தின் தலைவராகவும், அரசாங்கத்தில் ஒரு மூத்த பிரதி அமைச்சராகவும், பதவி வகித்து வரும் முத்து சிவலிங்கம் மலையக அரசியல் வரலாற்றில் 60 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

சாதாரண எழுதுவினைஞராகப் பதவியேற்ற இவர் தனது பெரும் முயற்சியால் இரண்டே ஆண்டுகளில் மாவட்ட பிரதிநிதியாகவும், மாநில தொழிலுறவு அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார். அதேவேளையில் அன்றைய தொழிற்சங்க மேதைகளின் வழிகாட்டலாலும் படிப்படியாக தம் பதவிகளில் சிறந்து விளங்கினார், அப்போதைய நாட்களில் அவருக்கு 42.50 சதம் மாத்திரமே மாதச் சம்பளம் கிடைத்ததாகக் கூறுகிறார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பத்திரமானவர்.

1989ஆம் ஆண்டு நுவரெலியா – மஸ்கெலியா இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டு 28 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். விகிதாசார அடிப்படையில் நடந்த தேர்தல் என்பதால் காத்திருப்பு பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. 1991ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் பிரகாரம் முத்து சிவலிங்கத்திற்கு நுவரெலியாவில் இடம் கிடைத்தது. அதிலிருந்து இன்று வரை காங்கிரஸின் முக்கியஸ்தராகவும் நம்பிக்ைகக்குரியவராகவும் இருந்து வருகிறார். காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் செவிமடுக்கின்ற ஒரு முக்கிய நபராக அவர் விளங்குகிறார். அதனால்தான், அவருக்குக் காங்கிரஸின் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இன்று அந்தத் தலைமைப் பதவியிலிருந்து அவர் விலகியிருக்கிறார். விலக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் சிலர். எவ்வாறெனினும், முத்து சிவலிங்கம் காங்கிரஸில் வகித்த உயர் பதவி இதுவாகத்தான் இருக்கும். எனினும், அவருக்குப் பிரதியமைச்சர் பதவியைக் காங்கிரஸ் பெற்றுக்ெகாடுத்திருக்கிறது. தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இனி விடயங்களைக் கையாள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழப்பகரமான சந்தர்ப்பதில் ஏன் பிரதியமைச்சர் பதவியை ஏற்றீர்கள்? என்று கேட்டதற்கு,

"ஓர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் மக்கள் புரிந்து கணித்து விடுவார்கள். அவ்வாறு கணித்து இப்போது அவர்கள் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எச்சரிக்ைகயைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மக்களுடன் நாங்களும் இணைந்துகொண்டிருக்கின்றோம், அவ்வளவுதான் என்கிறார்.

2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இ.தொ.காவின் 34ஆவது தேசிய மாநாடு சிலாபத்தில் நடந்தபோது தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், சுமார் 10 வருடங்களுக்கு மேல் அந்தப் பதவியை வகித்த போதிலும் தற்போ​ைதய நிலையில் உடல் நலக் குறைவினால் தனது பதவியை தேசிய சபை கூட்டத்தின் போது இராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. நலக்குறைவு என்றாலும் அவர் பிரதியமைச்சர் பதவியைத் தொடர்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. ஆனால், சுகவீனமுற்றிருக்கும் ஒருவரால், பிரதியமைச்சர் பதவியை வகிக்க முடியுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments