நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து சபைகளில் ஆட்சி அமைப்போம்! | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து சபைகளில் ஆட்சி அமைப்போம்!

பி. வீரசிங்கம்  

கே: உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறாக அமையும் என எதிர்பார்த்திருந்தீர்கள்?

ப: நாம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்திருக்கிறோம். ஏனெனில் நீங்கள் எழுப்பும் கேள்வியானது நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலுக்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலானது. தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது சம்பவங்களின் அடிப்படையிலல்ல. தேர்தலன்று நடந்த சம்பவங்களின் பின்னரான இரண்டு நாட்களில் என்ன நடந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். எம்மைப் பொறுத்தவரையில் கடந்த பொதுத்தேர்தலை விட எமக்கு வாக்கு வங்கி கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இலட்சத்து 4 ஆயிரம் விருப்பு வாக்குகள் எமது தரப்பில் பெறப்பட்டிருந்தாலும் இன்றைய நிலையில் ஐ.தே.க ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 560 வாக்குகளை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுள்ளது. அதில் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள்தான் அதிகம் என்பதை எம்மால் உறுதிபடக்கூற முடியும்.

நாடு தழுவிய ரீதியிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சிங்கள மக்களின் வாக்குகள் எங்கு போயிருக்கிறது என்பது நன்கு தெரிந்த விடயம். அதனை நுவரெலியா மாவட்டத்தில் சபைகளின் அடிப்படையில் கணிப்பிட்டு கூறலாம். வலப்பனையை எடுத்துக்கொண்டால் ஐ.தே.க ஒன்பது ஆசனங்களை வென்றுள்ளது அதில் ஐந்து ஆசனங்களை நேரடியாக நாம் கைப்பற்றியுள்ளோம். பெரும்பான்மை கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருப்பவர்களே இத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியாகிய நாம் கடும் பிரசாரங்களை மேற்கொண்டோம். 8 வட்டாரங்களில் போட்டியிட்டு 5 வட்டாரங்களில் வெற்றிபெற்றதுடன் இரண்டு சிங்கள உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர். சிங்கள மக்களின் வாக்குகள் நுவரெலியா மாவட்டம் மட்டுமல்ல, நாடு தழுவிய ரீதியிலும் பொதுஜன பெரமுனவுக்கே செல்ல, அதனையும் தாண்டி எமக்கெதிரான தரப்பு தற்போதைய வட்டார முறையிலான தேர்தலில் சபைகளைக் கைப்பற்றுவதன் ஊடாக தாங்கள்தான் வெற்றியடைந்தோம் எனக்கூறுகிறார்கள்.

சபைகளின் எண்ணிக்கையிலோ சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதிலோ எமது அரசியல் வளர்ச்சியைப் பார்க்கவில்லை. எத்தனை உறுப்பினர்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரையில் ஜுன் மாதம் வந்தால் அதற்கு மூன்று வயதாகிறது. கூட்டணி உருவாகுவதற்கு முன்னரான காலப்பகுதியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்த நிலையில் தற்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் அமைச்சர்களும் ஒவ்வொரு கட்சியின் கீழும் இரண்டிரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் சராசரியாக இருக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் இருந்த பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இன்று அது பல மடங்காக அதிகரித்திருக்கிறது. எனவே இந்த காலப்பகுதிக்குள் பெரிய மாற்றம் அடைந்துள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையை எடுத்துக்கொண்டால் ஒரேயொரு உறுப்பினரைக் கொண்டிருந்த நிலையில் கடந்த தேர்தலில் ம.ம.முவுடன் இணைந்து கேட்டபோது இரண்டாக அதிகரித்திருந்தது. இன்று பிரிக்கப்பட்ட பிரதேச சபைகள் ஊடாக கணிசமான வளர்ச்சியைக் காட்டுகிறது. நோர்வூட் பிரதேச சபையில் 8 ஆசனங்களையும் மஸ்கெலியா பிரதேச சபையில் 6 ஆசனங்களையும் வென்றுள்ளோம்.

கூட்டணி அமைத்ததும் நாம் முன்வைத்த விடயம் மலையகம் என்பது நுவரெலியா மட்டுமல்ல. நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே உள்ள ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கியதே. எங்கெங்கு நமது மக்கள் செறிந்து வாழ்கிறார்களோ அவர்களின் பிரச்சினைகளை பொதுமைப்படுத்தினோம். தேர்தல் காலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இரத்தினபுரி, கண்டி, கேகாலை, ஊவா, மாத்தளை பகுதிகளிலும் நான் மட்டுமல்ல அமைச்சர்கள் திகா மற்றும் மனோகணேசன் ஆகியோரும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்கள்.

இந்தத் தேர்தல் ஊடாக எமது அரசியலை ஏனைய பகுதிகளிலும் விஸ்தரித்திருக்கிறோம். முழு மலையகத்திலும் மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மலையக மக்களும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். இ.தொ.காவை விட இருமடங்கு நாம் முன்னணியில் இருக்கிறோம். வட்டார முறையில் நூற்றுக்கும் அதிகமான ஆசனங்களை வென்றுள்ளோம். தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பட்டியல் கிடைக்கும் பட்சத்தில் அது உறுதிப்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கணிசமான அளவு வளர்ச்சி அறியப்பட்டுள்ளது.

கே: தேர்தல் முடிவுகள் வெளியானதும் முன்னணி கூடி ஆராய்ந்ததா? தேர்தல் உருவாக்கியிருக்கும் புதிய அரசியல் சூழலில் தமிழ் முற்போக்குக்கூட்டணி என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது?

ப: ஆம்! எவ்வாறு பட்டியல் ஆசனங்களை பகிர்ந்துகொள்வது என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது. எமது செயற்பாடுகளையெல்லாம் பார்க்கும்போது சாதகமான நிலைமைகளே காணப்படுகின்றன. குறைபாடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை நிவர்த்தி செய்து எமது வேலைகளைத் தொடர்வோம். எமது கூட்டணியைப் பொறுத்தவரையில் மிகவும் பலமாகவே இருக்கிறது. தேர்தல் முடிந்த பின்னர் முழுமையானதொரு கூட்டத்தை நடத்த முடியாவிட்டாலும் கூட அவ்வப்போது சந்தித்து பேசி வருகிறோம். எம்மிடமுள்ள குறைபாடுகளை நாம் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். ஏற்பட்டிருக்கும் ஒருசில குறைபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவையிருக்கிறது.

அதையும் தாண்டி அவர்கள் தனித்துவமாக வெல்லவில்லை. வென்ற பின்னர் இன்னொரு தரப்பினருடன் இணைந்து ஆட்சியமைப்பதாக வெளிவந்த அறிவிப்புதான் மக்கள் மத்தியில் இவர்கள்தான் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் அதை இரண்டு நாட்களில் மீள்பரிசீலனை செய்ய வேண்டியதாகிவிட்டது. இப்போதுதான் அவர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பது புரிகிறது.

இவ்விடயத்தில் நாங்கள் மிகவும் பொறுமையாக இருந்தோம். நாங்கள் நிதானமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம். தேர்தலில் போட்டியிடுவதென்பது எமது வேலை. அதில் தெரிவு செய்பவர்களை அத்தாட்சிப்படுத்தி அனுப்புவதென்பது தேர்தல் திணைக்களத்தின் வேலையாகும். எந்த சபையை யார் அமைக்க வேண்டும் என்பதை அந்த அதிகார அமைப்புத்தான் முடிவு செய்ய வேண்டும். ஆட்சியமைப்பதைப்பற்றி நாம் அவசரப்படவில்லை. ஆட்சியமைப்பது என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் சம்பந்தப்பட்டது. சபை கூடியதன் பின்னர் சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள் என்பதை வைத்து யார் ஆட்சி அமைப்பது என்ற தீர்மானத்திற்கு வரலாம்.

இன்று ஐ.தே.கட்சி பாராளுமன்றத்தில் பலமாக இருக்கிறது. உள்ளுராட்சி மன்றத்தில் தோல்வியடைந்த பின்னரும் பாராளுமன்றத்தில் அது பலமாக இருப்பதற்கு காரணம் அது கொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை. ஆனால் ஆட்சி இன்னும் இரண்டு வருடங்களில் மாறப்போகிறது. மேலும் இவர்கள் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டால் அது யார் உறுப்புரிமை வைத்திருக்கிறார்கள் என்பதில்தான் தங்கியிருக்கிறது. இரண்டு மூன்று சபைகளில் ஆட்சியமைத்து விட்டதால் முழு மலையகத்திலும் மாற்றத்தை கொண்டுவந்துவிட்டோம் என்று கூற முடியாது.

நாங்கள் கட்டியெழுப்பிய நாகரிகமான அரசியலுக்கும். அவர்கள் செய்யும் நயவஞ்சகமான அரசியலை வெளிப்படுத்துவதற்குமான சிறந்த ஒரு சந்தர்ப்பம் தற்போது வாய்த்திருக்கிறது. அவர்கள் வெற்றிபெற்றால் எப்படி நடந்துகொள்வார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் எப்படி நடந்து கொள்வோம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் ஆட்சியமைத்தாலும் கூட நாங்கள் எப்போதும் அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

ஆனால் தேர்தல் முடிந்து அறிவிப்புகள் வெளிவருமுன்பதாகவே ஜனாதிபதிக்கு எதிராக அவரை விமர்சித்து வாக்குகளைப்பெற்றவர்களுடன் கூட்டுச்சேர்வது என்பது எந்தளவுக்கு அரசியல் சாணக்கியமற்ற நிலையில் அந்த இயக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் நாம் அப்படிச்சொல்லவில்லை என்றார்கள். இதில் எந்த குழப்பத்திற்குள்ளும் தமிழ் முற்போக்குக்கூட்டணி அகப்படவில்லை. நாங்கள் நிதானமாக இருந்தோம். தற்போதைய நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து சபைகளிலும் ஆட்சியமைக்கப்போவது நாங்கள்தான். நம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் நாம் பெற்றுக்கொடுத்த தேர்தல் பெறுபேறுகளின்படி தேர்தல் திணைக்களம் எங்களைத்தான் ஆட்சியமைக்குமாறு கோரும். நாங்கள் ஆட்சியமைப்போம். ஆட்சியமைத்த பின்னர் ஏதேனும் கபட தனத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுமாக இருந்தால் அதற்கு அடுத்தக்கட்டமாக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அதிரடியானதாக இருக்கும். அந்த ஆட்சிமாற்றம் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வெளியேயும் மாறும். உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் அந்த மாற்றம் நடக்காது. வேறு எங்கெங்கு மாறவேண்டுமோ அங்கெல்லாம் மாற்றியமைப்போம். எடுத்த எடுப்பில் எதனையும் செய்யாமல் தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பையடுத்தே தீர்மானிப்போம்.

கே: நுவரெலியா மாவட்ட பெறுபேறுகளை ஆராய்ந்து பார்த்தீர்களா? முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா?

ப: பிரதானமாக நாம் கண்டறிந்தது ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக செய்யப்பட்ட பிரசாரம், சாதாரணமாக எமது ஆதரவாளர்களாக இருந்தவர்களையும் கூட அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கியிருக்கிறது. ஒப்பீட்டு ரீதியாக நாம் எங்களுக்குள் பேசினாலும் ஐக்கிய தேசியக்கட்சி அல்லாது தனித்து போட்டியிட்டதில் அதிகளவான வெற்றியை பெற்றுள்ளோம். கண்டி, கொழும்பு, பலாங்கொடை பகுதிகளில் அதன் தாக்கம் ஏற்படவில்லை. நாடு முழுக்க பிணைமுறி விவகாரம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைப் போலவே மலையகத்தில் ஊழியர்சேமலாப நிதி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கே: இ.தொ.கா 11 மன்றங்களில் ஆட்சி அமைக்கவும் ஆட்சியில் பங்கெடுக்கவும் உள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளாரே!

ப: எமக்கும் அவர்களுக்கும் இடையே சிறுசிறு வித்தியாசத்தில் 6 - 7, 4 - 6 என எண்ணிக்கை மாறுபடுகிறது. நோர்வூட் பிரதேச சபையில் மட்டுமே உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 - 3 காணப்பட்டது. அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளில் சம அளவில் வென்றுள்ளனர்.

இரண்டரை வருடத்திற்கு முன்னர் உருவான கட்டமைப்பு எம்முடையது. அதைப்பயன்படுத்தி ஆண்டாண்டு காலமாக வளர்ந்துவந்தவர்களை எதிர்த்து போட்டியிட்டு வென்றிருக்கிறோம். அவர்கள் அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரேயே இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கான காரணம் எங்களைத் தோற்கடித்து விட்டோம், எம்மை மேவி விட்டோம் என்பதை காட்டுவதற்கான உபாயம் மட்டுமே தவிர அவர்களின் பலத்தால் வெற்றியடையவில்லை. அந்த வகையில் நாம் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறோம் என்ற வகையில் அதுவும் ஒரு வெற்றிதானே!

கே: இ.தொ.காவைப் போல சொந்த சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும் என்று கருதுகிறீர்களா?

ப: இல்லை!. எம்மைப் பொறுத்தவரையில் நாம் நிதானமாக இந்த முடிவை எடுத்தோம். அவர்களைப் பொறுத்தவரைக்கும் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் காலத்தில் தாங்கள் அரசாங்கத்திடம் என்ன பெற்றுக்கொண்டோம் என்ற நன்றியுணர்வோடு மீண்டும் அந்த அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் காலத்தில் எடுப்பதில்லை. அவ்வாறு எடுத்திருந்தாலும் அடிக்கடி மாறி விடுவார்கள் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரைக்கும் கடந்த இரண்டரை வருட காலமாக நாங்கள் கூட்டணியாக செயற்பட்ட ஐ.தே.க அரசாங்கம், பிரதேச சபைகளை பிரித்துக் கொடுப்பது பிரதேச சபை சட்டத்தைத் திருத்தவது போன்ற விடயங்களில் அமைச்சரவையிலும் சரி, பாராளுமன்றத்திலும் சரி, எங்களுக்கு ஆதரவாக இருந்து செயற்பட்டது. தொடர்ந்து அவர்கள் அதில் பலனடையும் விதத்தில் செயற்பட்டால்தான் எதிர்வரும் காலங்களிலும் எமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடியதாக இருக்கும்.

புதிதாக பிரதேச சபைகளை பிரித்துக்கொடுத்த பின்னர் நாம் பிரிந்து அதனைக் கொண்டாடினால் தொடர்ந்தும் உரிமைகளை பெறுவதற்கு கைகோர்த்து செயற்படுவதற்கு கஷ்டமாக இருக்கும்.

விகிதாசார அடிப்படையில் பார்க்கும்போது ஐக்கிய தேசியக்கட்சி நுவரெலியாவில் வெற்றி பெறுவதற்கு நாம் துணையாக இருந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமாக அடுத்து வரும் காலங்களிலும் அவர்கள் எமக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு அப்படியே இருக்கும். நாம் தனியாக பிரிந்துசென்று வெற்றியை கொண்டாடியிருக்கலாமே தவிர உள்ளுராட்சியை கொண்டாடுவதன் மூலமாக பாராளுமன்றத்தில் அடையவேண்டிய விடயங்களை அடைந்திருக்க முடியாது. எனவே இது சாதுரியமான முடிவு. இப்போது எங்களால்தான் ஐக்கிய தேசியக்கட்சி பதுளை நுவரெலியா மாவட்டங்களில் வென்றெடுத்திருக்கிறது என்பதை உணரும் ஐக்கிய தேசியக்கட்சி கடந்த காலங்களை விட இனிமேல் எம்மீது அதிக விசுவாசம் கொள்ளும்.

நாம் அவர்களுக்கு வெற்றிப் பார்வையை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஐ.தே.கவில் போட்டியிட்டோம் என்பதற்காக அக்கட்சிக்கு எந்த வட்டாரத்தையும் முழுமையாக கொடுக்கவில்லை. ஐ.தே.கட்சியின் சின்னத்தின் ஊடாக கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுத்து அவர்கள் வேலை செய்து கொடுப்பதற்கான ஐ.தே.கவுக்கு கொட்டகலை அக்கரபத்தனை, மஸ்கெலியா மற்றும் ஏனைய பிரதேச சபைகளில் வட்டாரங்களை கொடுத்திருக்கிறோம். அந்த சின்னத்தின் ஊடாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்து அதற்கான நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களுக்கும் வெற்றி எங்களுக்கும் வெற்றி என்ற நிலையை தோற்றுவித்திருக்கிறோம். கடந்த காலங்களில் நடந்த தவறுகள் என்னவென்றால், அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று அதனை மக்களுக்கு அரசாங்கத்தின் பெயரில் அளிக்காமல் தங்களது தனிப்பட்ட பெயரில் பெற்றுக் கொடுத்ததால் அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் நம்பிக்கை இழந்தனர். தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் இல்லாததன் காரணமாக அரசாங்கத்திடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்வதில் தடையும் அவர்களுக்கு ஏற்பட்டது.

எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து பெற்றுக்கொடுப்போம். அரசாங்கத்திடமிருந்து பெற வேண்டிய உரிமைகள் என்பது இன்னும் முடிந்துவிடவில்லை. அடைய வேண்டிய இலக்குகள் நிறைய இருக்கிறது. இருக்கின்ற அரசாங்கத்தோடு கணிசமாக ஒத்துழைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு கடப்பாடு இருக்கிறது. அந்த வகையில் இந்த முடிவு பிழையெனக் கருதுவதற்கில்லை.

அவர்களைப் பொறுத்தவரையில் தனியாகச் சென்றது இந்த நம்பர் விளையாட்டு மட்டுமே! புதிய தேர்தல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திலேயே அவர்களது கவனமும் ஒரு நயவஞ்சகத் தன்மையும் இருந்ததே தவிர எமது தூரநோக்கம் எதுவும் அவர்களிடமில்லை. நாம் மிக விசுவாசமாக இருந்து இதை வென்றெடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு திடீரென பொதுஜன பெரமுனவின் பக்கம் நன்றி மறந்து தாவினர். எனினும் ஜனாதிபதிக்கு எதிராக கிளம்பிய அவர்கள் மாகாணசபை பறிபோகப்போகிறது என்றதும் ஜனாதிபதியை சந்தித்தார்கள். இந்த விளையாட்டை அவர்கள் விளையாடியிருக்கக்கூடாது.

கே: இ.தொ.காவிற்கு நுவரெலியாவில் ஒரு அலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொண்டமான் பெயர் நீக்கமும் இதற்கான ஒரு காரணம் என்கிறார்களே!

ப: எம்மைப் பொறுத்தவரையில் தொண்டமானின் பெயரை தேர்தலுக்கு முதல்நாள் மாற்றவில்லை. அதனை மாற்றியது நாங்களுமல்ல. அதற்குள்ளிருந்த பல்வேறு சிக்கல்கள் குறித்து ஏற்கனவே விளக்கி கூறிருக்கிறோம். அந்தப் பெயரை பூல்பேங்கில் வைக்கச் சொல்லி இடையில் செய்து கொண்டதெல்லாம் வேறு விடயங்கள். இவர்களாகவே அந்தப் பெயரை வைத்துக்கொண்டார்கள். அந்த நிறுவனம் சிக்கலுக்குள்ளான நேரத்தில் அப்பெயரிலேயே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அமைச்சரவையில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் எம்மிடமிருக்கின்றன. அது நடந்தது 2016 ஜுன் மாதம். உண்மையில் அந்தப் பெயரில் அக்கறையுடன் இருப்பவர்கள் 2016ஆம் ஆண்டு ஜுலையிலேயே பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அப்போது செய்யாமல் ஏன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் செய்தாரகள்? அதிலிருந்து தேர்தலை நோக்கமாகக் கருதியே இந்த விவகாரத்தை அவர்கள் இழுத்தார்கள் என்பது புரிகிறது. அவர்கள் வைத்த தொண்டமான் என்ற அந்தப் பெயர் சமூகத்தின் நன்மைக்காக என்றிருந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார்.

ஆனால் அவர்கள் தொண்டமான் என்ற பெயரைப் பயன்படுத்துகின்ற விதம் அந்த அரசியலை நடத்துவதற்கான பெயராக இருக்கும் வரைக்கும் தொண்டமான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதைத் தெளிவாக ஜனாதிபதிக்கும் கூறியிருக்கிறோம். இதே பெயரை செளமியமூர்த்தி தொழிற்பயிற்சிக் கல்லூரி என்று வைப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். செளமியமூர்த்தி தொண்டமான் என்பதும் தொண்டமான் என்பதும் ஒன்றல்ல. தொண்டமான் என்ற நாமத்தை வைத்து கொக்கோகோலாவைப்போல மலையகத்தை மயக்கமுடியாது. செளமியமூர்த்திக்கு சிலை வையுங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இப்போது வருகிறவர்கள் எல்லாம் தொண்டமான் பெயரையும் சேர்த்துக்கொண்டு வருகிறார்கள். இப்போது ஐந்தாவது தலைமுறையாக ஒருவர் வந்து எனக்கெதிராக பேசிக்கொண்டிருக்கிறார். உலகத்திலேயே தமிழர் வரலாற்றில் அவ்வாறு பெயர் வைப்பதில்லை. ஆனால் இவர்கள் அரசியலுக்காக தொண்டமான் பெயரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

 

 

Comments