மகிந்த ராஜபக்ஸவின் எழுச்சி தமிழர்களைப் பாதிக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

மகிந்த ராஜபக்ஸவின் எழுச்சி தமிழர்களைப் பாதிக்குமா?

கருணாகரன்

“நானே பிரதமர்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

“கூட்டரசாங்கம் அவுட். ரணிலும் ஐ.தே.கவினரும் எதிர்க்கட்சி வரிசைக்குப் போகவேணும்” என்கிறார் சுசில் பிரேமஜெயந்த.

“பிரதமரைப் பதவியிலிருந்து ஜனாதிபதியினால் நீக்க முடியுமா என்று ஆராய்வதற்கு உயர் நீதிமன்றத்தை நாடப்போகிறேன்” என்று அறிவித்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.

“சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிப்போம். ஆனால் அரசாங்கத்தில் சேரமாட்டோம். எங்களுடைய ஆதரவு வெளியிலிருந்தே கிடைக்கும். அதாவது வெளியிலிருந்தபடியே எமது ஆதரவு வழங்கப்படும்” என்று உறுதியளித்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

மைத்திரி – மகிந்த இணைவு குறித்து சுசில் இரண்டு தரப்புடனும் பேச்சு.

தலைமை குறித்து ஐ.தே.கவிற்குள் மீண்டும் நெருக்கடியும் குழப்பமும். இப்படி ஏராளம் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டேயிருக்கின்றன.

இதெல்லாம் தெற்கின் அரசியல் சூழல்.

பதிலாக வடக்கே வேறு மாதிரித் திருவிழா.

“யாழ் மாநகரசபை மேயராக ஆர்னோல்ட் கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்” என்று அறிவித்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

“ஆர்னோல்ட்டை மேயராக ஏற்றுக்கொள்ள முடியாது. பதிலாக மணிவண்ணனையே மேயராகச் சபையில் அறிவிப்போம். இதற்காக வாக்கெடுப்புக்குக் கோருவோம்” என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

“யாரும் கட்சி தாவினால் பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள்” என்று எச்சரித்திருக்கிறார் சித்தார்த்தன். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சரிவையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து வேறு அணிகளுக்கும் வேறு கட்சிகளுக்கும் தாவ முயற்சிப்போரைத் தடுப்பதற்குரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார் அவர்.

“ஆட்சியை அமைப்பதற்கு மக்கள் நலன்கருதிச் செயற்பட வேண்டும். ஆகவே புரிந்துணர்வு அடிப்படையில் ஏனைய கட்சிகள் ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டிருக்கிறார் சுமந்திரன்.

மக்கள் நலனை முன்னிட்டு சபைகள் இயங்குவதற்கு ஆதரவளிக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறது ஈ.பி.டி.பி

“ஈ.பி.டி.பியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை. கூட்டமைப்பு ஒரு போதும் ஈ.பி.டி.பியுடன் கூட்டு வைக்காது” என்று கூறுகிறார் சிறிதரன்.

“கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாகப் பரிசீலிக்கிறோம். கூட்டமைப்புக்கு மக்கள் அளித்த ஆதரவை விடக் கூடுதலான ஆதரவை வெளியே உள்ள சக்திகளுக்கே வழங்கியுள்ளனர். ஆகவே மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார்.

“45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகரசபையை, ஆக 16 உறுப்பினர்களின் ஆதரவுடன் எப்படி நடத்தப்போகிறது கூட்டமைப்பு?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.

“உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை இடம்பெறச் செய்வதில் பல சிரமங்களை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. ஆகவே இது தொடர்பாக சட்டத்திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

“தெற்கில் சிங்கள மக்களின் அரசியல் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இனவாத சக்திகளின் ஆதரவோடு மகிந்த ராஜபக்ஸ மீண்டும் எழுச்சி பெற்றிருக்கிறார். ஆகவே தமிழ்த்தேசிய சக்திகள் எல்லாம் ஓரணியில் திரளவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

“மகிந்த ராஜபக்ஸவின் எழுச்சியையிட்டு நாம் அச்சமடையத்தேவையில்லை. அவரால் முன்னரைப்போலச் செயற்பட முடியாது. அதேவேளை கொள்கைக்கு முதலிடம் கொடுத்து அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

“தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் நல்லதோர் ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் கூட்டமைப்பின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கவில்லை. நாங்களே வடக்கு, கிழக்கில் தனிப்பெரும் சக்தியாக அதிகமான சபைகளைக் கைப்பற்றியிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் சம்பந்தன்.

“வடக்கு, கிழக்கில் இரண்டே இரண்டு சிறிய சபைகளைத் தவிர, வேறு எந்தச் சபைகளிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் சிவசக்தி ஆனந்தன்.

ஆக இப்படி உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஒட்டு மொத்தமாக நாட்டையும் தலைவர்களையும் தனிப்பெரும் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்திருக்கின்றன. முக்கியமாக மகிந்த ராஜபக்ஸ பெற்ற வெற்றி எல்லாத் தரப்புகளிடத்திலும் குழப்பங்களை உண்டாக்கியுள்ளது.

இதனால், அடுத்ததாக என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் நாடு திணறிக் கொண்டிருக்கிறது. தமக்கு ஏற்பட்ட பின்னடைவைக் குறித்து பொறுப்பேற்பதா? இல்லையா என்று தெரியாத நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன கட்சிகள். பின்னடைவையும் தோல்வியையும் ஒப்புக் கொண்டால், அதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அல்லது பதிலாக மாற்று நடவடிக்கை அல்லது மாற்றுத் தெரிவுகளைச் செய்ய வேண்டும்.

இதற்கு யார் தயார்?

லங்கா சுதந்திரக் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம், ஐ.தே.கவுடன் கூட்டு வைத்ததே என்று சு.கவினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவேதான் தொடர்ந்தும் கூட்டரசாங்கத்தில் பங்குபற்ற முடியாதென்ற கூறுகின்றனர். இதை எப்படிக் கையாள்வது, எப்படிச் சமாளிப்பது என்று தெரியாத நிலையில் உள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஐ.தே.கவின் தோல்விக்குக் காரணம், கூட்டரசாங்கமாக இருந்த காரணத்தினால் உரிய காலத்தில், உரிய விடயங்களைச் செயற்படுத்துவதற்கான தீர்மானங்களை எடுக்க முடியாமல் போனது. அத்துடன், மகிந்த ராஜபக்ஸ தரப்பினர் மேற்கொண்ட இடைக்கால அறிக்கைக்கு எதிரான பரப்புரையை எதிர்கொள்வதற்கு ரணில் பின்வாங்கி விட்டார் என்று கூறுகின்றனர் ஐ.தே.கவினர். அத்துடன், விடயங்களைக் கையாள்வதற்கு ஏற்றவகையில், சரியான தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு ரணில் தவறி விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளனர் ஐ.தே.கவினர்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையில் ஒரு வெடிகுண்டைப்போலவே இருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. சரியாகச் சொன்னால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத அளவுக்கு அவர் இலங்கை அரசியலைக் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம், உள்ளூராட்சி சபைகளில் அவர் பெற்ற வெற்றியாகும். 239 சபைகள் அவர் வசமாகின. மகிந்த அணி பெற்ற இந்தப் பெருவெற்றி நாட்டைத் தொடர்ந்து குழப்பத்திலாழ்த்திக் கொண்டிருக்கிறது.

இந்தக் குழப்பங்கள் இன்னும் நீங்கவில்லை. இப்போதைக்கு நீங்கும் போலவும் தெரியவில்லை. ஆனாலும் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட மாட்டாது. இதைப்புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவஞானம் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகிறார். என்னதான் இழுபறிகள், குழப்பங்கள் என்று நீடித்தாலும் இந்த ஆட்சி 2020 நீடிக்கும். ஆனால், தலைமைப் பொறுப்பிலும் அமைச்சரவையிலும் யார் யார் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அது தொடர்பான குழப்பங்கள் தொடரும். இதனால் நாடு ஸ்திரமற்றதொரு நிலையில் சிக்கித் தவிக்கப்போகிறது.

இதே நிலைமை உள்ளூராட்சி சபைகளிலும் நீடிக்கப்போகிறது. நாடு முழுவதிலும் உள்ள பல சபைகளில் தனிப்பெரும்பான்மையான பலத்தோடு ஆட்சியமைக்க முடியாத நிலையில்தான் பல கட்சிகளும் உள்ளன. வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூடுதலான சபைகளில் கூடுதலான ஆசனத்தைப் பெற்றிருந்தாலும் வெளியே உள்ள சக்திகளோடு இணைந்து அல்லது அவற்றின் ஆதரவைப் பெற்றே ஆட்சியை அமைக்க முடியும்.

ஆனால், இந்த ஆதரவைப் பெறுவதொன்றும் இலகுவான காரியமல்ல. ஏற்கனவே பகைமை நிலையில் உள்ள, அடிப்படையில் கொள்கை வேறுபாடுள்ள தரப்புகளே எதிர்த்தரப்பாக இருக்கின்றன. உதாரணமாக யாழ்ப்பாண மாநகர சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க வேண்டுமானால் அது தமிழ்த்தேசியப் பேரவையின் ஆதரவைப் பெற வேண்டும். அல்லது ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேணும். அல்லது லங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐ.தே.கவின் ஆதரவைப் பெற வேணும். இதைப்போல சில இடங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆதரவைப் பெற வேணும். அல்லது சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவின் ஆதரவைக் கோரவேணும். ஆக இப்படி எதிர்நிலையில் உள்ளவர்களின் தயவையே கூட்டமைப்பு பெற வேண்டும். இது கூட்டமைப்புக்குப் பெரும் நெருக்கடியான நிலையாகும். அரசியல் ரீதியாகக் கீழிறங்கும் ஒரு கட்டம். ஆனால், இதைத் தவிர வேறு வழியும் இல்லை.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு வெளியே உள்ள சக்திகளை ஓரளவுக்குப் பலப்படுத்தியுள்ளன. சுரேஸ் பிரேமச்சந்திரன் – ஆனந்தசங்கரி கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிவாய்ப்புகள் கிட்டவில்லை என்றாலும் வடக்கு கிழக்கு முழுவதிலும் அவர்கள் கணிசமான அளவு ஆசனங்களைப் பெற்றுள்ளனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தரப்பு யாழ்ப்பாணத்தில் நகரப்புறங்களில் அடையாளம் காணப்படக் கூடிய அளவுக்கு தன்னை நிலைப்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் நிறுத்திய சுயேட்சைக்குழு 19 ஆசனங்களைப் பெற்று தன்னை உயர்த்தியுள்ளது.

இதெல்லாம் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலத்துக்குக் கேள்வியை எழுப்பியுள்ளது என்றால், மகிந்த ராஜபக்ஸவின் எழுச்சி ஒட்டு மொத்தமாகத் தமிழ்த்தரப்புக்கு கேள்வியை எழுப்பியுள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். இதையெல்லாம் இனி வரும் நாட்களே எப்படி அமையும் என்று தீர்மானிக்கப்போகின்றன. 

 

Comments