எல்லை தாண்டல் | தினகரன் வாரமஞ்சரி

எல்லை தாண்டல்

மீனவர் எல்லை தாண்டி

மீன் பிடிக்கின்றார் என்ற

இந்திய இலங்கை குற்றச்

சாட்டுகள் புளித்துப்போன

சங்கதியாயிற்றின்று...;

சிறைவாழ்வு மீனவர்க்கே...!

கடலுக்கு மேலால்... என்ன....

கட்டவா முடியும் வேலி...?

கடலுக்கு உள்ளே காதற்

சல்லாபம் புரிந்து மீன்கள்

கடலுக்குள் எங்கெல்லாமோ

குதூகலித் தோடும் மேய்ந்து...!

மீனெலாம் எல்லை தாண்டி

மேய்வதை அறிவோ மஃதால்

நாங்களும் எல்லை தாண்டி

மீன்தானே பிடிக்க வந்தோம்...?

என்பது இருதிறத்து

மீனவர் வாதம்...; உண்மை...!

எங்களைச் சுட்டுக் கொல்லல்....;

சித்திரவதைகள் செய்தல்....;

மீன்பிடிவலைகள்... தோணி...

எம்மையும் தடுத்துவைத்தல்....;

இத்தனை துயரும் தாங்கி

உழல்கின்றோம் வயிற்றுக்காக....!

இந்தியன் இலங்கை எல்லை

தாண்டுதல்...; இலங்கையர்கள்

இந்தியா சென்று மீளல்....;

எல்லாமும் பலரறிந்த

சங்கதி....; இதிலேயொன்றும்

ரகசியம்..., மறைப்பு இல்லை...!

இந்தியா – இலங்கை நாட்டு

மீனவர் வாழ்தற்காக

இந்துமா கடலிலெங்கும்

பிடிக்கலாம் மீன்களென்ற

பரிந்துண ரியைவுச் சட்டம்

பண்ணுங்கள்... இல்லையென்றால்...;

எழுப்புவீர் தடைவலயம்

கடலுக்கு நடுவே...; நீங்கள்

எழுப்பிடும் வலயம் தாண்டாது

இருப்பரா மீன்பிடிப்போர்...?

குழப்பந்தான் தொடரும்...; மீன்கள்

கட்டாயம் எல்லை தாண்டும்...! 

Comments