முடிவுக்கு வந்த ஜேக்கப் சுமோவின் சகாப்தம் | தினகரன் வாரமஞ்சரி

முடிவுக்கு வந்த ஜேக்கப் சுமோவின் சகாப்தம்

கலாநிதி 
கே.ரீ.கணேசலிங்கம் 
யாழ்.பல்கலைக்கழகம்
 

ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஊழல் பாரிய அரசியல் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஆட்சியாளர்கள் ஊழல் பேர் வழிகளாகவே உள்ளனர் ஆனால் அதனை மறைக்க மக்கள் ஆதரவாளர்களாக நடிக்கும் செயல்பாடு சாதாரமானதாக உள்ளது. இது மறுவளமாக வறுமை, உறுதிப்பாடற்ற அரசியல், நாகரீகமற்ற அரசியல் கலாசாரம், அபிவிருத்தியின்மை, வன்முறை என்பவற்றுக்கு அடிப்படையாகிவிடுகிறது. இவ்வாறாக ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் நிலவும் நாடுகளாக இலங்கை, இஸ்ரேல், பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளின் வரிசையில் தென்னாபிரிக்காவும் தற்போது இணைந்துள்ளது. இக்கட்டுரை தென்னாபிரிக்க ஜனாதிபதியின் பதவி விலகலுக்கான பின்புலத்தையும், அந்நாட்டு அரசியலையும் அலசுவதாக அமைந்துள்ளது.

தென்னாபிரிக்காவின் அரசியல் மட்டுமல்ல ஆபிரிக்காவின் அரசியலே நெல்சன் மண்டேலாவுக்கு முன்பு, நெல்சன் மண்டேலாவுக்கு பின்பு, எனும் வகைபாட்டுக்குள் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்ந்து வருகிறது. ஆபிரிக்க கண்டத்து நாடுகளின் பகைமைகள், உள்நாட்டு மோதல்கள், ஆட்சி நெருக்கடிகள், எனப் பல முரண்பாடான அம்சங்களை திட்டமிட்டு உரையாடி புரிந்துணர்வுடன் செயல்பட்டு வருகின்றன. இராணுவ புரட்சிகளைக் கூட கட்டுப்படுத்தும் வல்லமை அப்பிராந்திய நாடுகளின் அரசியல் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய, நாகரீகமற்ற சமூகம் என்ற வாதங்கள் அற்றுப்போயுள்ள நிலைமை அரசியலில் ஏற்பட்டுவிட்டது. அது சமூக பொருளாதார, பண்பாட்டுத் தளத்திலும் பரவலடைந்து கொண்டிருக்கின்றது. இதற்கு வித்திட்டவர் நெல்சன் மண்டேலா எனும் தென்னாபிரிக்க அரசியலின் யுக புருஷராவார்.

அத்தகைய மனிதனது அரசியல் இயக்கத்தில் 1974 முதல் இணைந்து செயல்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சுமோ மீதான ஊழல் குற்றச்சாட்டு தென்னாபிரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதையுமே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அத்தகைய ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே அவரது பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏறக்குறைய அவருக்ெகதிராக விசாரிக்கப்பட்ட வழக்குகளில் 18 இல் ஜனாதிபதி குற்றவாளியென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர் மீது 738க்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் அதனை ஏற்க மறுத்த ஜனாதிபதி பதவி விலக மறுத்தததுடன் நீதிமன்றம் மீதும் நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளார். அதனை கருத்தில் கொண்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி) அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தினை முன்வைக்கப் போவதாக அறிவித்தது. சுமோ பதவி விலகத் தவறினால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமென எச்சரித்தது.

இதனை அடுத்து ஜனாதிபதி ஜேக்கப் சுமோ பதவியை இராஜினாமாச் செய்துள்ள செய்தி வெளியாகியது. அவரது இத்தகைய முடிவுக்காக ஆபிரிக்க ஒன்றியம், பிராந்திய நாடுகள் என்பன மட்டுமன்றி ஏ.என்.சி யின் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் செயல்பட்டுள்ளனர். அவருடன் நிகழ்ந்த பேச்சுவார்த்தையின் பிரதிபலிப்பாகவே ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதில் ஜனாதிபதி சிரில் ராமபோசாவை ஜனாதிபதியாக்க ஏ.என்.சி எடுத்த முடிவும் மக்களின் தொடர்ச்சியான உணர்வலைகளுமே ஜனாதிபதி தனது பதவியை விட்டு வெளியேறக் காரணமாகியது.

ஆனால், சுமோ தனது நிறைவு உரையின் போது மிக சிறந்த அணுகுமுறையுடனும் ஊடகங்களுடன் சாதகமாகவும் செயல்பட்டார் என்பது ஆபிரிக்கரது அரசியல் பண்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதென்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஜனநாயகப் பண்புகளை ஆபிரிக்க வட்டாரத்தில் உணரமுடிகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி சுமோ தான் ஏ.எ.சி இன் உறுப்பினர் என்பதையும் தென்னாபிரிக்காவிலும் ஏ.என்.சி இலிலும் சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரம் பொருளாதார திட்டமிடலில் அவரது பணிகள், நேர்த்தியற்றவை என்பதை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக அவரது பொருளாதார திட்டங்களும் அவற்றுக்கான உபாயங்களும் தென்னாபிரிக்காவை பாதித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றன.

அதேநேரம் சுமோவின் ஊழல் சார்ந்த செயற்பாடுகளை அவதானிக்கும்போது 1970களில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத உடன்படிக்கைகள் தொடர்பாக 783 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் நிற பேதங்களை கட்சிக்குள் ஏற்படுத்தியதாகவும் குடும்ப உறுப்பினர்களை கட்சிக்குள் இணைத்து கொண்டு உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

ஏ.என்.சியில் 60 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு தலைவர் மீது எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல அவரது கட்சியே குற்றம் சுமத்துகின்றது. அவரது தனித்துவமான முடிவுகள் எல்லையற்ற நிதிச் செலவீனங்கள், பாதுகாப்புக்கான செலவீனங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காக அதிக செலவீனங்கள் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தென்னாபிரிக்காவின் இருப்பினை பாதுகாக்க தவறாதவர் என்ற எண்ணத்தையும்

மறுபுறத்தில் சுமோ சர்வதேச மட்டத்தில் அறியப்பட்டவர் என்பதுடன் இடதுசாரி மனோநிலையுடையவரெனவும் பாராட்டப்படுகின்றார். இதனை அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் வரையறைகளை மீறாதவர் என்றும் தென்னாபிரிக்காவை நெடிய பயணத்திற்காக அழைத்துச் சென்றவர் என்றும் குறிப்பிடுகின்றனர். அவர் தொடர்பில் தென்னாபிரிக்க ஊடகங்கள் குறிப்பிடும் போது ,

ஏப்ரல் 1942இல் வறிய குடும்பத்தில் பிறந்து அரசியலுக்குள் வருவதற்கு முன்பு அதிக நெருக்கடிகளையும் துயரங்களையும் நிறபேதத்தால் வேதனைகளையும் எதிர்கொண்டவர் என்கிறது.

1959 இல் ஏ.என்.சி இல் இணைந்து பயணிக்கின்றார்.

1962 இல் ஏ.என்.சி இராணுவப் பிரிவில் இணைகின்றார்.

1963 இல் நிறவெறி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியினால் சிறையில் அடைக்கப்பட்டார்.

1990 வரை டு ராபன் தீவில் அடைக்கப்பட்டார்.

1994 இல் ஏ.என்.சி கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999 இல் தென்னாபிரிக்காவின் துணை அதிபரானார்.

2009 இல் ஜனாதிபதியானார்.

2017 இல் உச்சநீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தி அக்டோபரில் தீர்ப்பு வழங்கியது. எனவே சுமோவின் பதவி இழப்பானது சர்ச்சை மிக்க மனிதனாக அவரை இனம்காட்டியுள்ளது. ஆபிரிக்க கண்டத்தை நோக்கிய மறுசீர்திருத்தம் என்பது நியாயமான விளைவுகளை தரக்கூடியது. மேற்குலகத்தினது அடாவடியைக் கடந்து செயல்படுவதற்கு இத்தகைய மறுசீரமைப்பு திட்டங்கள் இலாபகரமானதும் நியாமானதுமாகவே அமையும். அதன் எதிர்கால அரசியல் கலாசாரம் செழிப்பு மிக்கதாக மாறும் என்பதை மறுக்க முடியாது. மிதவாதம், ஜனநாயகம், தாராளவாதம் என்பனவெல்லாம் மனித சமூகத்தின் மீட்சிக்கானதேயன்றி மேற்குலகத்தின் ஆதிக்கத்துக்கானதல்ல என்பதை தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உணர்த்தியுள்ளது. 

Comments