எந்தவொரு கட்சியும் கிழக்ைக தம் கைக்குள் போட முடியாத நிலை | தினகரன் வாரமஞ்சரி

எந்தவொரு கட்சியும் கிழக்ைக தம் கைக்குள் போட முடியாத நிலை

எம்.ஏ.எம். நிலாம்  
 

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாத வகையில் நாட்டின் தேசிய அரசியலில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்திருக்கின்றன. முக்கியமாக ஆளும் தரப்பினர்களுக்கிடையே முரண்பாடுகள் உச்ச நிலைக்குச் சென்றிருப்பதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பெரும் பின்னடைவுக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட தொன்றல்ல. தேர்தல் பிரசார காலத்தில் காணப்பட்ட மக்கள் அலையானது சகல தரப்பினருக்கும் சமமானதாக காணப்பட்ட போதும் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறிப்போனதானது. அண்மைக்கால இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளதை நோக்க முடிகிறது.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச அணி பின்னரான பாராளுமன்றத் தேர்தலிலும் பெரும் பின்னடைவையே கண்டது. ஆனால் மூன்று வருடங்களுக்கிடையில் ராஜபக்ச தரப்பு மீண்டெழக்கூடிய வலிமையை பெற்றுக்கொண்டுள்ளது. சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து மகிந்த அணி தூரமாக்கப்பட்ட போதிலும் அவர்களில் சிறுகுழு மைத்திரிபால சிறிசேனவுடன் கூட இருந்து காய் நகர்த்தல்களை முன்னெடுத்ததோடு நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிலும் மறைமுகமாகச் செயற்பட்டனர்.

சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியே நின்ற குழுவினர் பொது ஜனபெரமுன என்ற மொட்டுக் கட்சியை தோற்றுவித்து புதியதொரு பயணத்தை முன்னெடுத்தது. அதன் வழி காட்டியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே செயற்பட்டுவந்தார். சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே அக்கட்சிக்கு நேரெதிரான அணிக்கு அவர் வழிகாட்டியாகச் செயற்பட்டபோதும் அவரது கட்சி அவருக்கு எதிராக எந்தவொரு ஒழக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதொன்றாகும்.

இந்த மொட்டுக்கட்சி உள்ளூராட்சித் தேர்தலை தனித்து நின்று எதிர்கொண்டது. தேர்தல் முடிவு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாரிய பின்னடைவுக்குத் தள்ளி விட்டு சர்வதேச மட்டத்தில் கூட ஆச்சரியத்தை தோற்றுவிக்கும் விதத்தில் வெற்றிக்கம்பத்தை எட்டிப் பிடித்துள்ளது. இதன் பின் விளைவு தான் அரசியலில் புதியதொரு இக்கட்டான நிலைய ஏற்படுத்தியுள்ளது. மட்டுமன்றி அரசாங்கம் கூட ஆட்டம் காணும் நிலை உருவாக்க இருக்கின்றது. அடுத்த நிமிடம் என்னதான் நடக்கப் போகின்றது என்பதைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

தேசிய அரசியலில் இப்படியான நிலைகாணப்படுகின்றபோது மறுபுறம் முஸ்லிம் அரசியலை எடுத்துக் கொண்டால் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று வித்தியாசமானதாகவே பார்க்க முடிகிறது. முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் முன்னொருபோதுமில்லாத வகையில் முஸ்லிம் அரசியலில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்தி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இத்தேர்தலில் கிழக்கு முஸ்லிம்கள் கண்களை மூடிக்கொண்டு செயற்படவில்லை என்பதை ஒட்டு மொத்த முடிவுகள் மூலம் கண்டுகொள்ள முடித்துள்ளது. எந்தவொரு கட்சியும் கிழக்கை தம் கைக்குள் கொண்டுவரக் கூடிய வலிமையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கின்றன.

எந்தவொரு சபையை எடுத்துக் கொண்டாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத இக்கட்டான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலைமை எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுகின்றது. இந்த இழுபறி நிலைக்கான பிரதான காரணத்தை தேடியபோது ஒன்றுபுலப்படுகின்றது. கட்சிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டி காரணமாக கட்சிகளுக்கான பிரதிநிதிகள் குறைந்துள்ளன. நாம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலான முஸ்லிம் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளபோதும் எந்தவொரு கட்சியோ, அணியோ அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை இழந்துள்ளன. இதில் மறைமுகமானதொரு செய்தியும் உள்ளடக்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செய்யக் கூடிய அதிகார பலத்தை சமூகம் இழத்திருப்பதே அது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு மீண்டுமொரு தடவை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் எதிர்காலத்தில் எடுபடாத நிலையொன்றையே ஏற்படுத்தலாம் என்ற பலத்த சந்தேகம் உருவாக்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இரண்டு சபைகளைத் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சிச் சபைகளும் மற்றொரு தரப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளாமல் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்கமுடியாத நிலையே காணப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை இரண்டையும் தனித்து நிருவாகத்தை முன்னெடுக்கக்கூடிய வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. ஏனைய சபைகள் தனித்து நிருவாகத்தை ஆதிக்கத்துக்குள் கொண்டுவர எந்தவொரு கட்சியாலும் முடியாத நிலையே உருவாகியுள்ளது.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சுதந்திரக்கட்சியூடாக நிறுத்திய அணி பெருவெற்றியீட்டி காத்தான்குடி நகரசபையின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இவை தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சிச் சபைகளும் ஸ்திரமற்றதொரு நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தரப்பும் மற்றவர் தயவில் தொங்கி நிற்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர். காத்திரமான அரசியல் இருப்பை இவர்களால் உத்தரவாதப்படுத்த முடியாத அவலநிலை தொடர்கின்றது. இதிலிருந்து விடுபடவேண்டும், கட்சிகளுக்குள் நின்று கொண்டு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை உறுதி செய்ய முடியாது. ஆளுக்காள் மோதிக்கொண்டு சமூகத்தை முன்னேற்ற முடியாது. பதவிகளுக்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவது எந்தவிமோசனத்தையும் தரப்போவதில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கணிசமான முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் முற்று முழுதான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் முடிவுகள் குறித்த வர்த்தமானி வெளியானதன் பின்னரே முஸ்லிம் பிரதிநிதிகளின் முழு எண்ணிக்கையையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் பொதுப்படையாக நோக்கும் போது முன்னரைவிடவும் கூடுதலான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களைக் கொண்டு எமது கிராமிய மட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடியதாக அமையலாம்.

இங்கு நாம் கட்சி அரசியல் கொள்கையின் கீழ் செயற்படாமல் எமது பிரதேசங்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் ஹக்கீம் அணி, ரிஷாத் அணி, அதாவுல்லா அணி, ஹிஸ்புல்லாஹ் அணி என கூறுபோட்டுக் கொண்டு சமூகத்தை சீர்குலைக்காமல் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேர்மையயான எண்ணத்துடன் செயற்பட முன்வரவேண்டும். தேர்தல்முடிவுகளில் ஹக்கீம் தனக்கு எத்தனை சபைகள், எத்தனை பிரதிநிதிகள் என்றோ ரிஷாத் தரப்பினருக்கு எவ்வளவு என்றோ பார்க்கமுற்பட்டால் அது அரசியல் வியாபாரமாகவே நோக்கவேண்டும்.

முஸ்லிம் சமூகத்தை முன்வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் குறுகிய செயற்பாடுகளை கைவிட்டு சமூகமேம்பாட்டுக்காக உளச்சுத்தமாக பணியாற்ற அனைத்து முஸ்லிம் சக்திகளும் ஒன்றுபட வேண்டும் அதுவே இன்று முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். நல்லெண்ணத்துடன் செயற்பட்டால் நிச்சயமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் ஒளி மயமானதாக எழுச்சிபெறக் கூடியதாக இருக்கும்.

இந்தச் சமூதாயத்தை விலைபேசும் அரசியல் வியாபாரத்தை இனியாவது விட்டொழிப்போம். அப்படி அரசியல்வியாபாரம் செய்ய முயற்சிப்போரை சமூகம் முற்றாக புறக்கணித்து நிராகதிக்க முன்வர வேண்டும். மற்றொரு தேர்தலுக்காக் காய் நகர்த்தல்களை விட இன்று மக்களின் எதிர்பார்ப்பு என்ற என்பதை உணர்த்தும் செயற்பட வேண்டும். இதில் கௌரவம் பார்ப்பதைவிட சமூகத்தின் நிலையை எண்ணிச் செயற்பட முன்வரவேண்டும் எமது ஒற்றுமையிலேயே சமூகத்தின் இருப்பு தங்கியுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. 

Comments