நல்லாட்சியைத் தொடர்வோம் இன்றேல் தனியரசை அமைப்போம் | தினகரன் வாரமஞ்சரி

நல்லாட்சியைத் தொடர்வோம் இன்றேல் தனியரசை அமைப்போம்

எம்.ஏ.எம். நிலாம்

உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் காட்டிய சமிக்​ைஞயை நன்றாகப் புரிந்துகொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைப் பின்னடைவிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்தைப்போன்றே கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை நிவர்த்தி செய்வதற்கு சற்றுக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளிக்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தற்போது உருவாகியுள்ள நிலைமைகள் தொடர்பாக விளக்கி அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

அரசியல் வெற்றி, தோல்வி, பின்னடைவு என்பன சர்வ சாதாரணமான விடயங்களாகும். ஆனால், இந்தத் தேர்தல் முடிவு எம்மை மற்றொரு தடவை சிந்திக்க வைத்திருக்கின்றது. மூன்றாண்டுகால நல்லாட்சிப் பயணத்தில் குறைபாடுகள் காணப்படுவதை நாம் மூடிமறைக்க முற்படவில்லை. அதுவும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இரு பிரதான கட்சிகளும் இணைந்து வேறு பல சிறிய, சிறுபான்மைக் கட்சிகளையும் அரவணைத்து அமைக்கப்பட்ட தேசிய அரசொன்றை முன்னெடுத்துச் செல்வதானது இலகுவானதொன்றல்ல. சவால்களைப் பல்வேறு கட்டங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னைய ஆட்சியின் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கு சிலகாலம் எடுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரமான நிலையில் வைத்திருப்பதற்கும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அன்று நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை மறந்துவிடவில்லை. சிலவற்றை நிறைவேற்றி இருக்கின்றோம். மக்கள் அதனைக் கண்டு கொள்ளத் தவறியுள்ளனர். நிறைவேற்றப்படாதவற்றை மட்டுமே பார்க்கின்றனர். இதனை நாம் தப்பெனக்கூற வரவில்லை. மக்கள் அவசரப்படாதிருக்க வேண்டுமென்றே கூறிவருகின்றேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கிடையில் இதனைச் செய்து முடிக்க உறுதி பூண்டிருக்கின்றேன்.
கட்சியை புனரமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. 24 வருடங்களாக தலைமைப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக குற்றம் வேறு சுமத்தப்படுகிறது. நான் ஒரு போதும் சர்வாதிகாரியாக செயற்பட முயற்சிக்கவில்லை. எதிர்காலத்திலும் கூட அவ்வாறு நினைக்கப் போவதில்லை. கட்சிக்கு இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். வலிமையும், திறமையும் கொண்ட இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டியுள்ளது. அதனை நினைத்தவுடன் தட்டில் வைத்து வழங்க முடியாது அப்படிச் செய்ய முயன்றால் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆளுமை மிக்க இளைய தலைமுறையொன்றை உருவாக்கி அவர்களிடமே கட்சியை ஒப்படைக்க தீர்மானித்திருக்கின்றேன்.
எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய திறமைமிக்க நல்ல தலைவர்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
2015இல் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவே நான் விரும்புகின்றேன்.
அது முடியாதென யாராவது நினைத்தால், தனித்து ஆட்சியை அமைக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை எம்மால் பாராளுமன்றத்தில் நிரூபிக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 

Comments