ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ணே முசுப்பாத்திய கேட்டியளோ?”

“என்ன சின்னராசு என்ன முசுப்பாத்தி?”

“ரோட்டால வந்துகொண்டு இருந்தனான் ஜேசுதாசன்ட தம்பி குரூசைக் கண்டனான் எதையோ ஒளிச்சுக்கொண்டு போனவன். என்ன ஒளிச்சுக்கொண்டு போறனீ காட்டன் என்று கேட்டனான் ரொம்ப நேரம் பிசுபிசுக்கொண்டிருந்துபோட்டு காட்டினவனன்னே”.

“என்ன​ைதயப்பா காட்டினவன்?”;

“ரெத்த கலரில ரோசாப்பூவொன்டை டிசுப்பேப்பரில சுத்திக்கொண்டு போறவன் எதுக்கெண்டு கேட்டதுக்கு உது உங்களுக்கு விளங்காது என்டு சொன்னவன் உதை எத்தின காசுக்கு வாங்கினனீ என்டு கேட்க 500 ரூபாவுக்கு வாங்கினவனாமண்ண”

“சிவப்பு ரோஜாவோ?”

“ஓமண்ணே”

“500 ரூபாவுக்கு குறைஞ்சி கிடைக்காது”

“ஒரு ரோசாப்பூவோ?”

“இன்டைக்கு என்னதினம் என்டு தெரியுமோ?”

“என்னண்ண. இன்டைக்கு புதன்கிழமை”

“உதில்ல சின்னராசு இன்டைக்கு பெப்ரவரி 14ஆம் திகதி காதலர்களின்ட தினம”

“காதலரின்ட தினமோ?”

“ஓம் சின்னராசு பெப்ரவரி 14ஆம் திகதி காதலர்கள் தங்களுக்கிடையில ரோசாப்பூக்கள பரிசாக் கொடுப்பினம். உதுக்குத்தான் குரூஸும் ரோசாப்பூவை வாங்கிக்கொண்டு போறவன் புரிஞ்சுதோ?”

“உதுக்குத்தானோ. ஒளிச்சிக்கொண்டு போனவன். அவவின்ட பெட்டைக்கு கொடுக்கவோ? ஆளைப்பாத்தா சோமாலி போலக் கிடக்கு. ஆனா உந்த விஷயத்தில உசாராக் கிடக்கிறான்”

“இந்தக்கால பெடியள் பெட்டையள் உப்பிடித்தான் சின்னராசு”.

“அண்ண. உந்த காதலர் தினத்தை எங்கட நாட்டில மட்டும்தான் கொண்டாடுகினமோ”.

“காதலர் தினத்தையோ? உலகம் முழுக்க கொண்டாடுகினம். ஆனா இந்தமுறை பாகிஸ்தானில காதலர் தினத்திற்கு தடை விதிச்சிப்போட்டினம்”.

“ஏனன்ண?”

“காதலர் தினம் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிராக் கிடக்குது. என்டபடியா உதை தடை செய்யுங்கோ என்டு பாகிஸ்தானில ஒருத்தர் வழக்குப் போட்டவர். உதால நீதிமன்றம் விசாரணை நடத்தி காதலர் தினம் சம்பந்தப்பட்ட விழாவுக்கு தடை விதிச்சிருக்கினம். உலகத்தில மற்றைய நாடுகளில பெருசா கொண்டாடுகினம”

“ரோசாப்பூ கொடுப்பினம் என்ன?”

“ரோசாப்பூ மட்டுமில்ல சின்னராசு. வாழ்த்து அட்டையள், செல்போன், கேக், உடுப்பு என்டு விரும்பிய வகையில பரிசுகள் கொடுப்பினம். சில ஆக்கள் உந்த நாளிலதான் தங்கட விருப்பத்தை சொல்லுவினம்”

“ஐ லவ் யூ என்டதையோ?”

“அடடே உனக்கும் தெரியுதென்ன?”

“தெரியுதுதான் ஆனா எங்கட காலம் போட்டுது”.

“ஓம் சின்னராசு. இது இளம் வயசு காரரின்ட கொண்டாட்டம். எங்களுக்கில்ல”.

“உது எப்பிடியண்ண ஆரம்பிச்சுது?”

“உதை சின்னராசு லவர்ஸ்டே என்டு சொல்லுவினம். வெலன்டைன் டே என்டும் சொல்லுவினம்”;.

“வேலன்டைனோ அவர் யாரன்ண?”

“உவரின்ட பெயரிலதான் எந்த லவர்ஸ்டேயை கொண்டாடுகினம். உந்த கதையை சொல்லுறனான் கேட்டுக்கொள்ளென்ன”

“சரி சொல்லுங்கோ”

“270ஆம் ஆண்டில நடந்த கதை இது. அந்த காலத்தில ரோமாபுரியில அரசர் ஒருவர் இருந்தவர் அவரது படையில இருந்த வீரர்கள் திருமணம் செஞ்சி குடும்பமா இருந்தினமென்டா அவர்களால சரியா சண்டையிட முடியாது என்டு அவர்களை கல்யாணம் பண்ண அரசர் .விடேல்லே. ஆனா பிஷப் வேலன்டைன் என்டவர் பல வீரர்களுக்கு ருகசியமா திருமணம் செஞ்சி வச்சவராம். அரசனுக்கு உது தெரிஞ்சிட்டுது. வேலன்டைனை சிறையில அடைச்சிப்போட்டு மரணதண்டனை விதிச்சுப் போட்டான். சிறையில அவர் தனது காதலிக்கு கடிதம் எழுதிப்போட்டு From your Valantine என்டு கடைசியில எழுதி போட்டு பெப்ரவரி 14ஆம் திகதி தூக்கில தொங்கிப்போட்டார். உந்த From your Valantine என்டதைத்தான் காதலர்கள் அவர்களின்ட வாழ்த்து அட்டைகளில எழுதுகினம்.”

“அப்ப அந்தக்காலத்தில இருந்து உது இருக்கிது.”

“ஆனால் இப்பதான் உது கொண்டாடப்படுகுது. எங்கட காலத்தில நாங்க உதை கேள்விப்படேல்லியே?”

“இப்பத்தான் கிடக்குதென்ன?”

“உந்த பெப்ரவரி 7 இல இருந்து பெப்ரவரி 14 வரையில உள்ள ஒரு வாரத்தில சின்னராசு அமெரிக்காவில மட்டும் 25 கோடி சிவப்பு ரோசாப்பூக்கள் விற்பனையாகுது”.

“அப்பிடியே?”

“ஓமப்பா. சாக்லேட் மட்டும் 100 கோடி டொலர்களுக்கு விற்பனையாகுது. வாழ்த்து அட்டைகள் மட்டும் 25 கோடி அனுப்பப்படுகுது. காதலர் தினத்தில ரோசாப்பூக்கள் தான் பெருமளவில பரிசாக் கொடுப்பினம். ஆனா அதில உந்த ரத்த சிவப்பு ரோசாப்ப+க்குத்தான் முதலிடம்.”

“குருஸ் கொண்டு போனவன்”

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.