ஆறுமுகனின் அதிரடி நடவடிக்கை! | தினகரன் வாரமஞ்சரி

ஆறுமுகனின் அதிரடி நடவடிக்கை!

பன். பாலா

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளை ஜீரணித்து கொள்ள முடியாத நிலையில் சில கட்சிகள் இருக்கவே செய்கின்றன. தேசிய ரீதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மலையகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன இவற்றுள் அடங்கும். கலப்பு தேர்தல் முறைமை ரணிலுக்கும் மைத்திரிக்கும் கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன. இதன் தாக்கம் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் சறுக்கலை தந்துள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஆறுமுகன் ​ெதாண்டமானா? பழனி திகாம்பரமா? என்ற பலப்பரீட்சையாகவே எதிர்நோக்கப்பட்டது. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மந்தகதியில் என்றாலும் கூட நம்பிக்கையூட்டக்கூடிய சில நகர்வுகளை தமிழ் முற்போக்குக் கூட்டணியால் மேற்கொள்ள முடிந்தது. குறிப்பாக தனி வீட்டுத்திட்டம், காணிக்கான சட்டபூர்வ உறுதி, மலையகத்துக்கென தனியான அதிகாரசபை என அது காத்திரமான பங்களிப்பினை செய்திருக்கின்றது. ஆயினும் அனைவரது பார்வையும் அக்கட்சியின் வெற்றிமீதே படிந்திருந்த நிலையில் எதிர்பார்த்த அறுவடையை அதனால் பெற முடியாமல் போய்விட்டது. அதுவும் அக்கட்சியின் வழிநடத்தலால் உருவாக்கம் பெற்ற புதிய 5 பிரதேச சபைகள் கூட கைகூடாமல் போனமை துரதிர்ஷ்டமே. ஏனெனில் நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவுகள் பலத்த எதிர்பார்ப்பினை உண்டாக்கி விட்டிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்கள் உள்ளன. இவற்றுக்கூடாக இயங்கக்கூடிய உள்ளூராட்சி அதிகார சபைகளின் எண்ணிக்கை 12. இவற்றுல் 5 சபைகளை இ.தொ.கா. வென்றுள்ளது. இங்கு வாக்குகள் தெரிவிலும் உறுப்பினர் தெரிவிலும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இ.தொ.காவால் இதனை எப்படி பெறமுடிந்தது என்பதில் தான் குழப்பமே. ஏனைய சபைகளையும் கைப்பற்றுவதே அதன் நோக்கம். ஏனெனில் எஞ்சியுள்ள சபைகளில் தனித்து ஆட்சியமைக்க எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை போதாது. இதற்காகவே இ.தொ.கா. பொதுஜன பெரமுனையின் ஆதரவினை கோரியது.

ஒருவகையில் இது இ.தொ.கா. தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு கொடுத்திருக்கும் அதிரடி தாக்கு. ஏனெனில் தற்போதைய நிலவரப்படி இ.தொ.காவின் அணுகுமுறையானது ஐக்கிய தேசிய கட்சிக்கும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க வழியில்லாமல் செய்யவேண்டும் என்ற இலக்கைக் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதனாலேயே யாருமே எதிர்பாராத நிலையில் பொதுஜன பெரமுனவோடு சேர்ந்து இயங்கப்போவதாக அது அறிவிப்பு விடுத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் அட்டன் நகரில் திறந்த வாகனத்தில் மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவோடு பவனிவந்த ஆறுமுகன் தொண்டமான் அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தார்.

ஒரு கட்டத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் மலையக மக்களால் ஓரங்கட்டப்பட்ட இ.தொ.கா இப்படியொரு முடிவுக்கு வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது ஜனாதிபதி தேர்தல், பாரளுமன்றத் தேர்தல் இரண்டிலும் மஹிந்தவோடு இணைந்திருந்தது. மஹிந்தவின் செல்வாக்குச் சரிந்த நிலையில் சூழ்நிலையொட்டி அது மைத்திரி பக்கம் சார்ந்து கொண்டது. எனினும் மஹிந்தவோடு வைத்திருந்த நட்புறவை அது முற்றிலும் துண்டித்து கொள்ளாத காரணத்தினாலேயே மைத்திரியால் அக்கட்சிக்கு அமைச்சு பொறுப்புகள் எதனையும் வழங்க முடியாமற்போனது. மஹிந்த விசுவாசத்தை ஆறுமுகன் தொண்டமான் கைவிடவில்லை என்பதையே மஹிந்தவோடு இணையப்போவதாக அவரால் துணிச்சலாக அறிவிக்க முடிந்தமையும் அதனை மஹிந்த மறுக்காமல் வரவேற்றமையும் சுட்டிக் காட்டுகின்றது.

எனினும் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் ஆறுமுகன் தொண்டமான் பிடிகொடுக்கமல் பேசியுள்ளார். பொதுஜன பெரமுனவுடன் இணைவது நுவரெலியா மாவட்டத்தில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற சபைகளை விட இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள சபைகளிலும் ஆட்சியமைப்பதற்காகவே என்று விளக்கம் கூறியுள்ளார் ஆறுமுகன். அத்துடன் தாம் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே இருப்பதாகவும், ஜனாதிபதி மைத்திரி எடுக்கும் தீர்மானங்களுக்கு அமையவே இயங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ இ.தொ.காவின் முதுகில் ஏறி மலையகத்திலும் சவாரி செய்யும் வாய்ப்பை மஹிந்தவுக்கு ஆறுமுகன் தொண்டமான் வழங்கியிருக்கின்றார் என்பதே அவதானிகளின் பார்வை.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வெளியான ஒரு செய்தி நிச்சயமாக தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும். இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கத்தை அழைத்த ஜனாதிபதி அவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதிகார நாற்காலியில் அமர்ந்தே பழகிப்போன இ.தொ.காவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பாக்கியம் கிட்டாமல் இருந்தது. மஹிந்தவுடன் இணைந்து 11 சபைகளை கைப்பற்றப் போகிறேன் என்று கூறி தன் அதிரடி கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பித்த ஆறுமுகன் தொண்டமான் பின்னர் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எனக்கூறியதோடு ஜனாதிபதி எந்த முடிவெடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்று கொஞ்சம் படிந்து வந்தார். ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார். பேரம் படிந்தது. இந்த அரசு இப்போது போலவே சிறு மாற்றங்களுடன் தொடரும் என ஜனாதிபதி கூறியதோடு, மஹிந்தவின் வலை வீச்சில் இருந்து தொண்டமான் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஆறுமுகனுக்கு அமைச்சுப் பதவியை வழங்க முன்வந்திருக்க வேண்டும். எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் அமைச்சரவையிலும் இராஜாங்க அமைச்சிலும் அங்கம் வகிப்பதால் தானும் கபினெட் அமைச்சராவது உசிதமாகாது எனக்கருதிய தொண்டமான் அதற்கு மறுப்பு தெரிவித்து முத்து சிவலிங்கத்துக்கு வழிவிட்டிருக்க வேண்டும்.

எனினும் கடந்த ஐந்து நாட்களாக ஆறுமுகன் தொண்டமான் ஆடிய அரசியல் சதுரங்க ஆட்டம் அவருக்கு வெற்றியை அளித்திருக்கிறது என்பதும் அவர் ஜனாதிபதியின் செல்லமாக மாறிவிட்டிருக்கிறார் என்பதும் உண்மை பாராட்டத்தக்கது. கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கோட்டை விட்டதை இப்போது சரிக்கட்டியிருக்கிறார் என்றும் கூறமுடியும். இனி அவர் எடுக்கப்போகும் அடுத்த கட்ட ஆட்டம் திகாம்பரத்துக்கு தலைவலியாக அமையுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியது!

நுவரெலியா மாவட்டத்தில் ஏலவே 5 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ள இ.தொ.கா. எஞ்சிய ஆறு சபைகளிலும் அதிகாரம் செலுத்த முனைந்துள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளும் இருக்கவே செய்கின்றன. உண்மையில் இ.தொ.காவின் வெற்றியின் இரகசியம் என்ன? வழமையை விட தோட்ட மக்களோடு நெருக்கமாக தோழமைக் கொண்டு தமது பிரசார நடவடிக்கைகளை அது முடுக்கிவிட்டிருந்தது. இதனோடு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆர்வம் கொண்டிருந்ததா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதே நேரம் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு தலாவாக்கலை வந்த ஜனாதிபதி மைத்திரியின் பேச்சு வாக்காளரிடையே பாதிப்பை உண்டு பண்ணியிருந்தது.

7 பேர்ச் காணி உங்களுக்கு போதாது. அதை அதிகரிப்பேன் என்றார் மைத்திரி. அது மக்கள் மனதைத் தொடவே செய்தது. 7 பேர்ச் காணியென்பது ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சி தலைமைகளால் தீர்மானிக்கப்பட்ட விடயம். மைத்திரியால் உறுதி வழங்கப்பட்ட சங்கதி. ஆனால் இவ்வளவு காலமும் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்தவர் அவர் என்பது மக்களுக்கு ஞாபகம் வந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்து அவர் கையில் எடுத்துக் கொண்ட அஸ்திரம் தான் அமரர் தொண்டமான் பெயர் நீக்கப்பட்ட விவகாரம். இது அமைச்சர் திகாம்பரத்தின் மீது பழிச்சொல்லாகவே படிந்து போய்விட்டது. அவர் இவ்வாறான சில்லறை காரியங்களை செய்யத்தான் வேண்டுமா என புத்திஜீவிகள் அப்போதே கேட்டு வைத்தார்கள். ஊடகங்கள் எழுதித்தீர்த்தன. ஆனால் அவர் எதனையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாறாக தமிழகம் போய் காரணம் கற்பித்துவிட்டு வந்தார். திகாம்பரத்தின் நடவடிக்கையை எதிர்த்து மலையகப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கொழும்பிலும் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் மைத்திரி நாட்டில்தான் இருந்தார். அவர் இதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் தலவாக்கலை தேர்தல் பரப்புரையின் போது தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டது பெரிய தவறு என்றார். அதை மீண்டும் பொறிக்க உத்தரவிடுவேன் என்று உறுதி வழங்கினார். அந்தப் பெயர் விவகாரத்தை மறந்து போயிருந்தவர்களுக்கும் இச் செய்தி விழிப்பூட்டியிருக்கும். செளமியமூர்த்தி தொண்டமான் சகல மக்கள் மனங்களையும் வென்ற மாமனிதர். இ.தொ.காவிலிருந்து வெளியேறி தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்த முன்னாள் இ.தொ.கா ஆதரவாளர்களிடம் கூட இது இறுதிக்கட்ட தாக்கத்தை உண்டாக்கியிருக்கவே செய்யும். தவிர இக்கூட்டத்தின் போது கனவான் அரசியலை கைவிட்டு சராசரி அரசியல் வாதியாகவே ஜனாதிபதி நடந்து கொண்டார்.

அடுத்ததாக பழனி திகாம்பரம் ஒரு பெரிய தவறை செய்திருந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இ.தொ.காவின் மீது கேடிக்கணக்கான ரூபா நிதி மோசடிபற்றிப் பேசி வந்த அவர் FCID இற்கு போவதாக பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருந்தாரே தவிர, எதவுமே செய்யவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த நேரத்தில் FCIDக்குப் போய் முறைப்பாடு செய்தார். செய்துவிட்டு விசாரணை நடக்கட்டும் என்று சும்மா இருந்திருக்கலாம். அவர் அப்படி செய்யாமல் போகும் இடமெல்லாம் அதனையே சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு பதில் தர வேண்டிய நிலையிலிருந்த ஆறுமுகன் தொண்டமான் எந்த விசாரணைக் கமிஷனையும் சந்திக்கத் தயார் என்று சவால் விட்டார். அது மக்கள் மனதில் பதிவாயிருக்கின்றது.

இறுதிக் கட்டத்தில் இ.தொ.காவுக்கு கைகொடுத்த ஒரு விடயம் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம். தேசிய ரீதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அவப்பெயர் தந்த இம்மோசடி சம்பவம் மலையகத்திலும் நன்றாகவே வேலை செய்திருக்கின்றது. தோட்ட மக்களின் EPF, ETF பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரம் மக்களை அச்சத்துக்கும் கலவரத்துக்கும் ஆளாக்கி த.மு கூட்டணிக்கு எதிரான ஒரு எதிர்ப்பலையை உருவாக்கிவிட்டது. அதன் அறுவடையாக அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா பகுதிகளில் கணிசமான வாக்குகளை இ.தொ.கா வசப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக யாருடனாவது கூட்டுச் சேர்வதென்பது அரசியலில் சகஜம். அந்த வகையில் பொதுஜன முன்னணியோடு உறவாடுவது அதன் சாணக்கியமாகக் கூட இருக்கலாம். ஆனால் இக்கூட்டு சமூக நலன் சார்ந்ததா அல்லது அரசியல் அதிகாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டதா என்பதே கேள்வி. மக்களுக்கு சேவை செய்வதற்கு மஹிந்தவுடன் கூட்டிணைவதில் என்ன தவறு என்று கேட்கின்றது இ.தொ.கா. ஆனால் 2015ஆம் ஆண்டுவரை மஹிந்தவோடு இணைந்திருந்து மலையகத்துக்கு என்ன சேவையை அது செய்துள்ளது என்பதே சமூக ஆர்வலர்களின் பார்வை. மஹிந்த அறிவித்த 50,000 வீடுகளில் ஒன்றாவது கிடைத்ததா? தோட்டப்புற இளைஞர்களுக்கு பெருந்தோட்டத் தரிசு நிலங்களை பிரித்து தருவதாக சொல்லப்பட்டதே அது நடந்ததா? வேலை வாய்ப்புகள், 'தனி வீடு' என்று அபிவிருத்தித் திட்டங்கள் ஏதும் இடம்பெற்றதா? எதுவுமே இல்லையென்ற நிலையில் மஹிந்தவுடனான கூட்டினால் எதிர்காலத்தில் மலையக மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிடைக்குமாயின் வரவேற்கலாம். ஆனால் இனவாத ரீதியில் சிந்தித்து செயற்படுவோரின் கூட்டிலான பொதுஜன முன்னணி அதற்கான வழிகளைத் திறந்து விடும் என்பதை நம்புவதற்கில்லை!.

மலையகமெங்கும் மஹிந்தவின் ஆளுமையைப் பரவச் செய்வதில் இ.தொ.காவின் பங்களிப்பு ஆரம்பமாகி விட்டது. தலைநகரில் மனோ கணேசனுக்கு விழுந்த அடி, மலையகத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடி, இ.தொ.காவின் சாதுர்யமான காய்நகர்த்தல்களுக்கிடையே புதிதாக உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மலையக மக்களுக்கு எத்தகைய சேவைகளை வழங்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

அநேகமாக உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலை சாதகமான சூழலாக இருக்காது. பொதுவாக எல்லா சபைகளிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பது மட்டுமே தற்போதைக்கு ஆரோக்கியமான சங்கதி. 

Comments