‘கலா பொல’ இலங்கையின் வீதியோர கண்காட்சி ​பெப். 25 ஆம் திகதி | தினகரன் வாரமஞ்சரி

‘கலா பொல’ இலங்கையின் வீதியோர கண்காட்சி ​பெப். 25 ஆம் திகதி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெள்ளிவிழாக் காணும் இலங்கையின் புகழ்பெற்ற திறந்தவெளி ஓவியக் கண்காட்சியான ‘கலா பொல’, கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் இம்மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய தரஞ்சித் சிங் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

ஜோன் கீல்ஸ் பி.எல்.சி. நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற ‘கலா பொல’ கண்காட்சியானது 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நீண்டதூரம் முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்திருக்கின்றது. முதன்முதலாவதாக 35 ஓவியர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்திய இக்கண்காட்சியை இலங்கையின் புகழ்பெற்ற ஓவியர் ஜோர்ஜ் கீற் பார்வையிட்டார். இவ்வருடம் நடைபெறும் வெள்ளிவிழா கண்காட்சியில் 300 இற்கும் மேற்பட்ட ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்டு தமது படைப்புக்களை காட்சிப்படுத்தவுள்ளனர். அன்றைய தினம் முற்பகல் 8.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நாள் முழுவதும் நடைபெறவுள்ள இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பாராட்டுதல்களையும் பேராதரவையும் இந்தக் கலைஞா்கள் பெற்றுக் கொள்வார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறுகின்ற இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு ஓவியக் கண்காட்சியாக இது திகழ்கின்றமையால், கொழும்பின் வருடாந்த கலாசார நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக இது இடம்பிடித்திருக்கின்றது. கண்காட்சியின் கொண்டாட்டங்களில் அந்தி மாலைப் பொழுதில் இடம்பெறவுள்ள கலாசார களிப்பூட்டல் நிகழ்ச்சிகளும் உள்ளடங்கியிருக்கும். இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கான அனுமதிக் கட்டணம் இலவசமாகும். இந்த வெள்ளிவிழா கண்காட்சியும், கடந்த வருடங்களைப் போலவே தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான முனைப்புடன் இருக்கின்ற கலைஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப் படைப்புக்களால் வர்ணமயமானதாக மாறியிருக்கும் வீதியோரத்தை அவர்கள் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கும். 

Comments