ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

தரிந்து இஷார மெடிகும்புர என்ற 23 வயது இளைஞர் அண்மையில் அனுராதபுரத்தில் இருந்து குருணாகல் வரை 100 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு ஓட்டி சாதனை படைத்த போது எடுத்த படம்

அண்ணே உது என்னண்ண படம். மோட்டர் சைக்கிளில நின்டுகொண்டு ஓடுறவனே?”

“ஓமடா மோட்டார் சைக்களில நின்டுகொண்டு 100 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைச்சுப் போட்டவன்”.

“எங்கட பெடியனே?”

“உவனோ... அனுராதபுரத்துப் பெடியன். 100 கிலோ மீட்டர் தூரம் அனுராதபுரத்தில ஆரம்பிச்சு குருணாகலையில முடிச்சவன்”

“ரோட்டால சனம் பாத்துக்கொண்டிருக்குமென்ன. கால் வலிச்சாலும் உக்கார முடியாதென்ன?”

“உக்காரவோ. நூற்றுக்கணக்கில பார்த்துக் கொண்டிருப்பினம். கூடவே டாக்டர்மார், மோட்டார் சங்கத்தின்ட அதிகாரியள். ஏன் ஊடகவியலாளர்கள் போவினம். நிறுத்த முடியாது ஆரம்பிச்சுப் போட்டமென்டா சாதனையை செய்து போட்டுத்தான் இறங்க முடியும். இல்லையென்டா இன்னொரு நாளைக்கு டிரை பண்ண வேண்டியதுதான்”.

“பெடியன் சாதனை செஞ்சி போட்டவனோ?”

“பின்ன. காலையில பத்தரை மணிபோல.”

“என்டைக்கண்ண?”

“போன 16ஆம் திகதி காலையில பத்தரை மணிக்கு அனுராதபுரத்தில ஆரம்பிச்சவன் குருணாகலை போய்த்தான் இறங்கினவனாம்.”

“நூறு கிலோ மீட்டர் தூரமென்ன?”

“ உது சின்னராசு மோட்டர் சைக்கிளில உது மாதிரி 2015 ல இந்திய பெடியன் ஒருவன் 32 மைல் தூரம் ஓடினவனாம். எங்கட பெடியன் 100 கிலோ மீட்டர் ஓடித் தான் நிண்டவன். உவனின்ட விபரங்களை கின்னஸ் சாதனை புத்தக முகாமையாளருக்கு அனுப்பியிருக்கினம். அவையெல்லாம் செக் பண்ணி போட்டுத்தான் உவன் சாதனை செஞ்சவனோ இல்லையோ என்டு அறிவிப்பினம்”.

“எங்கட பெடியளும் சாதனை செய்வினமோ?”

“உது மாதிரி மோட்டார் சைக்கிள் சாதனை செய்த பெடியன் எங்கட ஊரிலயும் இருந்தினம். ஆனா இப்ப அவை போட்டினம்.”

“இருந்தினம் என்டா உதைவிட சாதனை செஞ்சிருப்பினம் என்ன?”.

“ஆனா எங்கட ஆழிக்குமரன் ஆனந்தன், சுரேஷ் ஜோக்கிம், முத்தையா முரளிதரன் என்டவை சாதிச்சிருக்கினம்”.

“ஆனந்தன் நீந்துவாரென்ன?”

“குமார் ஆனந்தன ஆழிக்குமரன் ஆனந்தன் என்டுதான் சொல்லுவினம். ஆள் கொஞ்சம் குள்ளம்தான் ஆனா நீச்சலில திமிங்கிலம் போலத்தானப்பா. எங்கட பாக்கு நீரிணைய நீந்திக் கடந்தவன். உது நடந்தது 1963 மார்ச்சில 42 மணிநேரத்தில வல்வெட்டித் துறையில இருந்து இந்தியக் கரையை தொட்டவன். உவவின்ட மாமா ஒருத்தர் இருந்தவர் அவரின்ட பெயர் முருகபிள்ளை நவரத்தினசாமி அவர் உந்த பாக்கு நீரிணையை 1954ல 28 மணி நேரத்தில நீந்திக் கடந்தவராம். ஆனா அருண் பாலாஜி என்ட இந்திய நீச்சல் வீரன் பாக்கு நீரிணைய பத்து மணி 40 நிமிசத்தில நீந்திக் கடந்து உலக சாதனை படைச்சவன்.”

“உது ஏனண்ண ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நேரம் எடுக்குது?”

“உது சின்னராசு கடலில காலநிலை ஒரே மாதிரி இருக்காது. ஒரு நாளைக்கு இருக்கிறமாதிரி இன்னொரு நாள் இருக்காது. சில நேரத்தில கடல் ஆற்றைப்போல அமைதியா இருக்கும் சில நேரத்தில அலையள் ஆர்ப்பாட்டமாக் கிடக்கும் நீந்தவே முடியாது.”

“ஆனா ஆனந்தனின்ட முடிவும் நீச்சலிலதான் முடிஞ்சுது.”

“என்னண்ணே”

“ஓமப்பா 1984 ஆகஸ்ட் 6ஆம் திகதி ஆனந்தன் இங்கிலீசு கால்வாய கடக்கறதுக்கு நீந்தினவன்.. அலையள் பலமா இருந்தது. கடலும் கொந்தளிச்சுக் கிடந்ததால மூச்சுத் திணறி ஆனந்தன் மோசம் போனவனப்பா”.

“ஐயோ”

“நீச்சலில மட்டுமில்ல சின்னராசு தண்ணியில 80மணி நேரம் மிதக்கிறது. ஒரு காலால 33 மணி நேரம் நிற்கிறது. தொடர்ச்சியாக 139 மணி நேரம் ஆடிக்கொண்டு பொக்ஸின் பஞ்சிங் பேக்கை குத்துறது உப்பிடி பல சாதனையள செஞ்சவன்.”

“நிறைய சாதனையென்ன”.

“ஆனந்தன் அவனின்ட மாமா ஆக்கள இப்ப எங்கட சனம் மறந்திட்டுது. 2000 மாம் ஆண்டு என்டு நினைக்கிறனான் ஆனந்தனுக்கு ஞபகார்த்தமா ஒரு முத்திரை வெளியிட்டினம். அதோட எல்லாம் முடிஞ்சுது”.

“ஜோக்கிம் என்டு சொன்னியள்”

“சுரேஷ் ஜோக்கிம் இவனும் எங்கட பெடியன்தான். உவனும் வலுக் கெட்டிக்காரன். உவன் முதலில கின்னஸ் சாதனையள படிச்சிப்பார்த்துப்போட்டு அதில தனக்கு முறியடிக்கிற சாதனையள செய்வானப்பா. உது மாதிரி ஒன்டு ரெண்டில்ல 60 சாதனையள செய்து காட்டியவன்”.

“60 சாதனையளோ. எங்களால ஒன்டைக்கூட தொட முடியுமே?”

“உவன் இலங்கையிலதான் இருந்தவன். பின்னால கனடாவுக்கு போட்டவன். உவனின்ட முதல் சாதனை 1996ல வந்தது. அந்த வருஷத்தில ஆகஸ்ட் 19ஆம் திகதியில இருந்து செப்டம்பர் 26ஆம் திகதி வரை 42 நாட்கள் தொடர்ந்து ஓடினவனப்பா”.

“ஓடினவனோ, தூங்காம கொள்ளாம?”

“உந்த மாதிரி சாதனை செய்றவை ஒரு மணி நேரத்தில 5 நிமஷம் 10 நிமிஷம் என்டு ஓய்வெடுக்கலாம். இவை என்ன செய்வினம் தெரியுமோ. தொடர்ந்து ஏழெட்டு மணிநேரம் ஓடிப்போட்டு உந்த இடைவெளி நேரத்தை ஒன்டாக் கூட்டி அந்த அளவு ஓய்வெடுப்பினம். இல்ல தூங்குவினம். உப்பிடி 42 நாள் ஓடி ஜோக்கிம் 3495 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைச்சவன்.”

“மூவாயிரமோ?”

“சரியா சொன்னா 3495 உது மட்டுமில்ல சின்னராசு வூசநனஅடைட என்ட ஜிம்மில உள்ள ஒடு யந்திரத்தில் 13 மணித்தியாலம் 42 நிமிஷம் 33 செக்கனில் 100 கிலோ மிட்டர் ஓடிச் சாதனை, பாஸ்கெட் போல் பந்தை பூமியில தட்டிக்கொண்டே 24 மணி நேரத்தில 174 கிலோ மீட்டர் ஓடுறது. 84 மணி நேரம் தொடர்ந்து டிரம் வாசிக்கிறது என்டு பல சாதனையள இந்த ஜோக்கிம் பெடியன் நிலை நாட்டினவன்.

சொல்ல மறந்து போனானன் 121 மணி நேரம் இன்னொருவருடன் சேர்ந்து தொடர்ந்து படம் பார்க்கிற சாதனையை நிலை நாட்டி கின்னஸ் பத்தகத்தில் இடம் பிடிச்;சவன். உதுக்கு இருவருக்கும் 10 ஆயிரம் டாலர் காசு கொடுத்தவை. உதோட சிகப்பு மழை என்ட தமிழ் படத்தை 11 நாள் 23 மணி 45 நிமிஷத்தில திரைக்கதை எழுத ஆரம்பிச்ச தினத்திலிருந்து திரையில போட்டுக் காட்டி சாதனை படைச்சவன். ஒட்டு மொத்தமா 60 சாதனைகளுக்கு மேல் சுரேஷ் ஜோக்கிம்ட பெயரில கிடக்குது. எங்கட பெடியள் லேசுப்பட்டவையல்ல. உந்த பட்டியலில முத்தையா முரளிதரனையும் சேர்த்துக் கொள்ளவேணும். உலகத்தில அதிக அளவு விக்கட்டுக்களை வீழ்த்தி கிரிக்கட்டில் உலக சாதனை படைச்சவன் முரளிதரன்.”

“சொல்லி வச்சி விக்கட் எடுப்பான் என்ன?”

கிரிக்கட்டுல இருந்து விலகுறதா சொல்லிப்போட்டு விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில தன்னோட கடைசி பந்துல விக்கட் எடுத்தவனப்பா முரளிதரன். உந்த மாதிரி எவரும் எடுக்கேல்ல தெரியுமோ?”

“முரளிதரனை எனக்கு பிடிக்குமண்ணே. எங்கட கிரிக்கட் வீரர் அண்ணே”.

“உது மாதிரி இலங்கையரின்ட சாதனைகள் நிறையக் கிடக்குது.”

“அப்படியே சொல்லுங்கோவன் கேட்க ஆசையா கிடக்குது”.

“உதையெல்லாம் இப்ப சொல்ல நேரமில்லை சின்னராசு. நேரம் வரேக்கை சொல்லுறனான்”.

Comments