உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் கொழும்பு சுற்றுலா கண்காட்சி | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் கொழும்பு சுற்றுலா கண்காட்சி

இலங்கையில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் சாதகமானதாகவே இருப்பதாகவும் இச் சூழலில் எதிர்வரும் மே மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டு நாள் சுற்றுலா கண்காட்சி, தேசிய மற்றும் அயல்நாட்டு சுற்றுலா அபிவிருத்திக்கு பெருமளவில் ஊக்கமளிப்பதாக இருக்கும் எனவும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், ஆருடம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 4 மற்றும் 5ஆம் திகதிகளின் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ‘சஞ்சாரக்க உதாவ’ (சுற்றுலா உதயம்) என்ற பெயரில் பிரமாண்டமான கண்காட்சியை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இல்லை உள்ளூர் சுற்றுலா தொழிற்பாட்டாளர் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்தகைய ஊக்குவிப்பு கண்காட்சிகள் தொடர்ச்சியா ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருவதோடு இது எட்டாவது கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விளக்கவுரையாற்றிய இலங்கை உள்ளூர் சுற்றுலா செயற்பாட்டாளர் சம்மேளனத்தின் தலைவரான ஹரித் பெரேரா, சுற்றுலா தொடர்பாக கிடைக்கப்பெற்றிருக்கும் புதிய தகவல்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன என்றார். உலக அளவிலான மொத்த உள்ளூர் உற்பத்தி மூன்று சத வீதமாக வளர்ச்சி கண்டிருக்கையில் இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்தி ஐந்து சதவீதமாக இருப்பதாகவும் சுற்றலாத்துறை வேலைவாய்ப்பிலும் இலங்கை முன்னணி வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சியில் 250இற்கும் மேற்பட்ட கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் பத்தாயிரம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கண்காட்சிக்கு சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் வருகை தரலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு வருகை தரும் பொதுமக்கள் உள்ளூர் உல்லாச பயணத்தை சிறப்பாக திட்டமிடுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வதோடு தமது விடுமுறைத் தினங்களை முழுமையாக அவர்களால் திட்டமிட முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கு சிறந்த பலன்களைப் பெறக்கூடிய வகையில் இங்கே ஆலோசனை பெறமுடியும் என்பதோடு சலுகை கட்டணங்களையும் பெற்றுக்கொள்ளலாம். 

Comments