சர்ச்சைக்குள்ளாகி வரும் யானைகள் -மனிதர்கள் மோதல் | தினகரன் வாரமஞ்சரி

சர்ச்சைக்குள்ளாகி வரும் யானைகள் -மனிதர்கள் மோதல்

ராம்ஜி

விவசாயிகள் காணிகளை துப்பரவு செய்து விவசாயம் செய்வார்கள். அதே நேரம் யானைகள் காடுகளில் சுற்றித் திரியும். இரண்டு தரப்பினரும் தத்தமது இடங்களை பாதுகாத்துக்கொள்ள முனையும்போது மோதல்கள் ஏற்படுகின்றன. இவை இருதரப்பினருக்கும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன.

தமது விவசாய நிலங்களில் யானைகள் ஊடுருவுவதை தடுக்க விவசாயிகள் மின்சார வேலிகளை அமைப்பதுண்டு. ஆனால் யானைகள் விவசாய நிலங்களில் ஊடுருவுவதை தடுக்க மின்சார வேலித் திட்டம் குறிப்பிட்டளவு பயனைத்தரவில்லை என்றுதான் கூற வேண்டும். யானைகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வன விலங்கு திணைக்களம் பெருமளவு பணத்தை செலவுசெய்ய வேண்டியுள்ளது. இது பொதுமக்கள் பணம் என்பதால் இப்போது இது பிரச்சினையாகியுள்ளது.

தனது வசிப்பிடமான காடுகள் அழிக்கப்படுவதால் யானைகளுக்கு போக வேறு இடம் இல்லாததால்தான் அவை விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் ஊடுருவுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இது ஊடுருவலாக மட்டுன்றி தாக்குதலாகவும் அமையும் போதுதான் பாதிப்புக்கள் தீவிரமாகின்றன.

ஒவ்வொரு வருடமும் இவ்வாறான யானைகளின் தாக்குதல் காரணமாக கிட்டத்தட்ட 50 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதன் காணரமாக கிராமவாசிகள் மற்றும் விவசாயிகள் யானைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தவும் யானைகளுக்கு விஷம் வைக்கவும் மற்றும் மின்சார வேலி அமைத்து ஊடுருவலை தடுத்து நிறுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மனித செயற்பாடுகளால் 100 முதல் 150 யானைகள் வரை வருடாந்தம் கொல்லப்படுகின்றன.

யானைகள் வசிக்கும் காடுகள் அழிக்கப்படும் அதேநேரம் யானைகள் விரும்பும் சுவைகொண்ட பயிர் வகைகளை விவசாயிகள் பயிரிடுவதும் யானைகளின் ஊடுருவலை அதிகப்படுத்துகின்றன.

யானை ஒரு நாளைக்கு சுமார் 300 முதல் 400 கிலோ உணவு வரை உட்கொள்கின்றது. உணவை சாப்பிடும் அதே நேரம் அவை பயிர்களை கிளறியும் கிண்டி எடுத்தும் பெருமளவில் நாசப்படுத்துகின்றன. விவசாய நிலத்திற்குள் ஊடுருவும் தனியொரு யானை சிறிது நேரத்தில் பல ஹெக்டயர் விவசாய நிலங்களை பாழ்படுத்திவிடும்.

வறுமைம் ஏற்கனவே பொருளாதார சிக்கலிலும் உள்ள சிறிய விவசாயிகள் தமது முழுமையான வருடாந்த வாழ்வாதாரத்தை ஒரு நாள் இரவிலேயே யானைகள் ஊடுருவுவதினால் இழக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் வீணாகும் சிரமம், வேலை நாட்கள், பயிர்ச் செய்கை, வீடுகள் ஆகியவற்றின் மொத்த இழப்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பாக அமைகின்றது.

இதன் காரணமாகவே அந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு தேவைப்படுகின்றது. ஆனால் இவ்வாறு கிடைக்கும் நஷ்டஈடு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய போதுமானதல்ல என்பது விவசாயிகளின் கவலையாகவுள்ளது.

இவ்வாறான யானைகளின் ஊடுருவல் தொடர்வதால் குறிப்பிட்ட பிரதேச விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் சிரமமாக இருக்கும். அப்பிரதேசத்திலிருந்து வேறு பிரதேசத்திற்கு செல்வதானால் குறிப்பிட்ட விவசாயி தனது காணியை விற்றாக வேண்டும். ஆனால் யானைகளின் ஊடுருவல் உள்ள பிரதேசத்தில் காணிகளின் சந்தை விலை மிகவும் குறைந்ததாகவே இருக்கும். இதனால் அப்பிரதேசத்தைவிட்டு வெளியேற முடியாமல் விவசாயிகள் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இதனால் விவசாயி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் விவசாயத்தை விட்டுவிடும் மனநிலைக்கும் தள்ளப்படலாம்.

இந்நிலையில் யானைகள் மனிதர்களுக்கிடையிலான மோதல்களை குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகள் ஒரு சில தீர்வு யோசனைகளை முன் வைக்கின்றனர்.

யானைகள் விரும்பாத சுவையுடன் கூடிய பயிர்களை கூடியவரை பயிர் செய்தல் எலுமிச்சை ஆடாதோடை, மிளகாய், புகையிலை ஆகிய பயிர் வகைகளை யானைகள் விரும்புவதில்லை. யானைகளின் ஊடுருவல் இடம்பெறக் கூடிய இடங்களில் குறைந்த இலாபத்தை கொடுத்தாலும் கூட இவ்வாறான பயிர்ச் செய்கையை மேற்கொள்வது உசிதமானது என்பதே வன விலங்கு திணைக்கள அதிகாரிகளின் கருத்தாகும்.

அதே நேரம் யானைகள் (ஆபிரிக்க யானைகளும், ஆசிய யானைகளும்) தேனீகளுக்கு பயப்படுவதாக ஆராச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இது ஆபிரிக்க யானைகளுக்கு மட்டுமன்றி ஆசிய யானைகளுக்கும் பொருந்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தேனீக்களின் சத்தமே யானைகளை பயமுறுத்துவதாக அமைகிறதாம். இதனால் மின்சார வேலிகளுக்கு பதிலாக தேனி வேலியை அமைக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

தேனி வேலியானது யானைகளின் ஊடுருவலை முற்றாக தடுத்துவிடும் என்பது சொல்வதற்கில்லை. ஆனால் இதன் மூலம் குறிப்பிட்டளவு பயன் ஏற்படலாம்.

அதேநேரம் இவ்வாறான தேனீ வளர்ப்பின் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரை யானைகளை கொல்ல வேண்டும் என்று கிராமவாசிகளோ விவசாயிகளோ விரும்புவதில்லை. அதேநேரத்தில் யானைகள் அவை வசிக்கும் காடுகள் அழிக்கப்படாத வரை மனிதர்கள் மீது வீணாக தாக்குதல் நடத்துவதில்லை.

இந்த விடயத்தில் இரு தரப்பினரும் பாதிக்கப்படாது இருந்தால் மோதல்கள் ஏற்படுவது பெருமளவில் குறைந்துவிடும்.

 

Comments