நாட்டை சீரழிக்க இனவாதிகள், கடும் போக்காளர்கள் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை சீரழிக்க இனவாதிகள், கடும் போக்காளர்கள் திட்டம்

மட்டக்களப்பில் ஜனாதிபதி

 

அம்பாறை தாக்குதலுக்கும் ஜனாதிபதி கவலை
கிழக்கு அரச சேவை ஆணைக்குழுவை கலைக்கவும் ஜனாதிபதி பணிப்பு
புதிய காத்தான்குடி தினகரன், வெல்லாவெளி தினகரன், பெரிய போரை தீவு தினகரன் நிருபர்கள்

தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் இரண்டுமாத காலப்பகுதியில் நடத்தப்பட்டு, நாட்டிலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
200 பட்டதாரிகளுக்கும் 40 டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 21 பேருக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கினார்.
புதிய கல்விக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி கல்வி முறைமையில் சில மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக நாட்டின் வளமான பட்டதாரிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் தொழில் உட்பட ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த யுத்தத்தின் காரணமாக பின்னடைந்திருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இரண்டு விசேட ஜனாதிபதி படையணிகளை தாபிப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளுக்கான உபகரணங்களை ஜனாதிபதி வழங்கினார்.
இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
இம்மாதம் அல்லது செப்டம்பர் மாதமாகின்றபோது இந்த நாட்டில் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சில நடவடிக்கையை கடும் போக்குவாதிகளும் தீவிரவாதிகளும் மேற்கொள்கின்றனர். இந்த நாட்டை சீரழிப்பதற்கு திட்டமிட்டு இவர்கள் செய்கின்றனர். இதில் மக்கள் கவனமாக பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
தேசிய சகவாழ்வு ஒற்றுமை நல்லிணக்கம் போன்றவற்றை சிலர் தவறாக இந்த நாட்டில் பேசுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு பேசுவதும் செயற்படுவதும் தேசிய அநீதியாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை பகுதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும்.
விகாரையாக இருக்கட்டும் அல்லது பள்ளிவாசலாக, கோவிலாக இருக்கலாம் அவ்வாறான மத வழிபாட்டுத்தளங்கள் மீது தாக்குவது மிக மிக தவறாகும்.
இப்படியான தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் மீது நாங்கள் இன மத பேதமின்றி அவர்களுக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையீனம் ஏற்பட்டு விடும்.எனவே நாம் எல்லோரும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நாம் எல்லோரும் எமது பொறுப்பை சரியாக தெரிந்து செயலாற்ற வேண்டும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். எனது பொறுப்பை நான் சரியாக நிறைவேற்றுவேன்.
இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழவேண்டும் என்பதுதான் எனது கனவாகும்.
அதை செய்யா விட்டால் இந்த நாடே அழிந்து விடும். எல்லா துறைகளிலும் கடும் போக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாதம் மாதம் அல்லது செப்டம்பர் மாதமாகின்றபோது இந்த நாட்டில் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
அவை திட்டமிட்டுத்தான் செய்யப்படுகின்றன. அவை இந்த கடும் போக்காளர்களினதும் தீவிரவாதிகளினதும் செயற்பாடுகளாகும்.
இம்மாதம் மாதம் செப்டம்பர் மாதங்களில்தான் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் பேசப்படுகின்றன.
அரசாங்கத்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கமாகும்.
இதனால் சர்வதேசத்தில் எங்களை ஏற்றுக் கொள்கின்ற தன்மை குறைந்து போகின்றது. இதனால் நாடுதான் சீரழியும்.
எனவே எனக்கும் உங்களுக்கும் சொந்தமான இந்த நாட்டுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் நான் செயற்பட்டு வந்தேன்.
கடும் போக்காளர்களையும் தீவிரவாதிகளையும் இந்த நாட்டு மக்கள் சரியாக புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் புத்தி சாதுரியமாக பொறுமையாக செயற்பட வேண்டும்.
இந்த தாய் நாட்டின் மீது நாம் அனைவரும் அன்பு செலுத்த வேண்டும். இன மத வேறுபாடின்றி அனைவரும் இந்த நாட்டை பாதுகாக்க பாடுபட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் எல்லாம் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர், அதே போன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் குறிப்பிட்டனர்.
வீதி அபிவிருத்தி வேலைகள் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள் அனைத்தையும் ஏன் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை நான் கொழும்பு திருமப்பியதும் நான் ஆராய்ந்து பார்ப்பேன்.
அந்த அபிவிருத்தி வேலைகளை வேகமாக செய்ய நான் நடவடிக்கை எடுப்பேன்.
நீண்ட காலமாக இடம் பெற்று வந்த யுத்தம் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைகள் இடம் பெறாமைக்கான மூல காரணமாகும் இதனால்தான் வறுமை அதிகரித்தது.
அரசாங்கம் என்ற வகையில் வட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்குகின்றோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக விஷேடமாக ஜனாதிபதி செயலணியொன்றை நான் ஆரம்பிக்கவுள்ளேன். அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளும் அதற்கு ஒத்தாசை வழங்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்னர் மட்டக்களப்புக்கு நான் வந்த போது என்னிடம் வேலையற்ற பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை முன் வைத்தனர்.
அப்போது மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவைக்கு நான் எனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தொலைபேசியில் கிழக்கு மாகாண ஆளுனரை தொடர்பு கொண்டு இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும் என்றேன்.
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல நாடு முழுவதுமுள்ள பிரச்சினையாகும்.
நாங்கள் ஏழு மாதத்திற்கு முன்னராக பட்டதாரிகளிடமிருந்து அதற்கான விண்ணப்பங்களை கோரினோம். நாங்கள் விண்ணப்பங்களை கோரினாலும் அவர்களுக்கு தேர்தல் காரணமாக நேர்முகப்பரீட்சைகளை நடாத்த முடியவில்லை.
நாடு பூராகவுமுள்ள பட்டதாரிகளின் விண்ணப்பங்களை பரீசிலித்து அவர்களுக்கு விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்.
அரசாங்கம் வழங்கும் நியமனங்களுக்கு மேலதகிமாகத்தான் மாகாண சபைகள் இப்படியான நியமனங்களை வழங்குகின்றது.
மாகாண சபைகளின் மூலம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அதே வேளையிலே நாடு பூராகவுமிருக்கின்ற பட்டதாரிகளுக்கு எதிர் வரும் ஆறு மாத காலத்திற்குள் நாங்கள் நியமனங்கள் வழங்குவோம் என்பதனை நான் கூறி வைக்க விரும்பகின்றேன்.
மட்டக்களப்புக்கு நான் வந்ததன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் எனக்கு ஒரு கடிதத்தினை கொடுத்தார்கள்.
இந்த மாகாணத்திலுள்ள மாகாண அரச சேவை ஆணைக்குழுவுடன் பேசிய விபரங்ளை தெரிவித்திருந்தார்கள்.
அந்த அரச சேவை ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட விடயங்களை அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
மாகாண அரச சேவை ஆணைக்குழு அவ்வாறு செய்திருப்பது, கூறியிருப்பது அவர்களுக்குரிய வேலையல்ல.
அவர்கள் ஒரு பாரிய தவறை புரிந்துள்ளார்கள். மாகாண அரச சேவை ஆணைக்ழுவுக்கு அப்படியான ஒன்றை சொல்வதற்கு எந்தவிதத்திலும் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.
இப்படியான பேச்சுவார்த்தைகளை நடாத்துவது கூட தவறான விடயமாகும். இந்த அரச சேவை ஆணைக்குழுவை கலைத்து விடுமாறு நான் ஆளுனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த ஆணைக்குழுவில் தொடர்நது 16 வருடங்கள் பணியாற்றுகின்றவர்களும் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆணைக்குழுவின் நியமனங்கள் 3 அல்லது 4 வருடங்களில் மாற்றப்படல் வேண்டும்.
நான் அதுபற்றி ஆளுனருக்கு விஷேட ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். கிழக்கு மாகாண சபை மூலம் நியமனம் வழங்கும் போது அவர்களுக்கு நிதிப் பற்றாக்குறை இருக்குமானால் அந்த நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.
ஆசிரியர் நியமனங்களுக்கு மேலதிகமாகவும் வேறு நியமனங்களை வழங்க சபைகளுக்கு அதிகாரம் இருக்கின்றது. பட்டதாரி என்று சொல்வது நாட்டின் பெரியதொரு சொத்து.
அவர்களின் கல்வியை நாட்டின் அபிவிருத்திக்கு சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களின் அறிவு அவசியமாகும். எங்களின் கல்விமுறையிலுள்ள சில தவறுகள் காரணமாக எங்களது பட்டதாரிகளுக்கு சில சில போராட்டங்களை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.அது அந்த பட்டதாரிகளின் தவறல்ல. அது கல்வி முறையிலுள்ள தவறாகும்.இப் போதிருந்தே இந்த கல்வி முறையினை மாற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஆசிரியர் தொழில் ஏனைய அரச தொழில்களை விட மிகச் சிறந்த தொழிலாகும் என மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, தலைமைச் செயலாளர் சரத் அபே குணவர்தன, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரைச் சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி, அங்கு இடம்பெற்ற சமயக் கிரியைகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். கோயிலுக்கு அருகாமையிலுள்ள மாமாங்க குளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அதன் புனர்நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவ் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
 

Comments