முதலியார் மனைவி | தினகரன் வாரமஞ்சரி

முதலியார் மனைவி

ஜே.அந்தனி...
மெஹியோவிற்ற

புண்ணியமூர்த்தி முதலியார் என்றால் சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். தென்னந்தோட்டம், வயல் என்று ஏராளமான சொத்துக்களுக்கு உடமையாளர். சிக்கனத்தோடு வாழ்ந்ததால் அவரிடம் பணம் குவியலாயிற்று. பணத்தை வீண்விரயம் செய்யாமல் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். அப்பிரதேசத்தில் அவருக்கு இணையாக எவருமில்லை.

கடமையில் கண்ணாயிருந்ததால் தமது சொந்த வாழ்க்கைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. வயது 35 ஆகியும் கட்டைப் பிரமச்சாரியாகவே வாழந்தார். அவரது நண்பர்கள் அவரை மணமுடித்துக் கொள்ள நச்சரிக்கலாயினர்.

நண்பர்களின் நச்சரிப்பால் முதலியாரின் மனம் மாறலாயிற்று. திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். அவரது விருப்பத்தை நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்தார். விஷயம் வெளியானதும் பல பெற்றோர் இவரை தம் மறுமகனாக்கிக் கொள்ள முனைப்பாயிருந்தனர். அவரைவிட அவரது ஆஸ்தியே அவர்களுக்கு வேண்டியிருந்தது. கலியாணத் தரகர்மார் அழகிய பெண்களின் படங்களுடன் அவரை நாடினர். ஈற்றில் முதலியார் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க ஏற்பாடு செய்தார். ஏற்கனவே அவருக்கு அப்பெண்ணின் மேல் ஒரு நாட்டம் இருந்தது.

மணநாளன்று கிராமவாசிகள் அவரது வீட்டையும், பாதையையும் அலங்கரிக்கலாயினர். பக்கத்து கிராமங்களிலிருந்து தேர்ச்சி பெற்ற சமையற்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஊரே திருமணக் கோலம் பூண்டது.

முதலியார் ஓர் அழகிய பெண்ணோடு தம் இல்லம் வந்தார். அவளது அழகைக் கண்டு கிராமவாசிகள் வியந்தனர். அந்தப் பெண்ணும் கிராமவாசிகளை நோக்கி புன்னகைத்தாள். அவளிடம் எதுவித படாடோபமும் காணப்படவில்லை. தன்னைவிட முதலியார் பல வருடங்கள் மூத்தவராயினும் அது பற்றி அவள் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் இல்லற வாழ்க்கையை இன்பமாகக் கழித்தனர்.

இவ்வாறியிருக்கையில் முதவியாருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. உத்தியோகம் காரணமாய் அடிக்கடி கொழும்பு செல்ல நேர்ந்தது. சில சந்தர்ப்பங்களில் கொழும்பில் இரண்டு, மூன்று தினங்கள் தங்கவேண்டியும் ஏற்பட்டது. அத்தோடு அவர் பல வைபவங்களில் கலந்துகொள்ளவும் நேரிட்டது. சில வேளைகளில் தமது மனைவியையும் அந்த வைபவங்களுக்கு அழைத்துச் செல்வதுமுண்டு. அவ்வாறான தருணங்களில் தமது மனைவிக்கு ஆங்கிலத்தில் பேசமுடியாமலிருப்பது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவருக்கும் அரைகுறை ஆங்கில அறிவே இருந்தது. எனினும் வெள்ளைக்காரர்களோடு பேசுவதற்கு அது போதுமாயிருந்தது. அவரது ஆங்கிலம் வெள்ளைக்காரர்களுக்குப் புரிந்தது. அவர்கள் பேசுவது முதலியாருக்கும் புரிந்தது. எவ்வாறாயினும் மனைவிக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டுமென்று விரும்பினார்.

அந்த ஊர் பாடசாலைக்கு புதிதாக ஓர் ஆங்கில ஆசிரியர் வந்திருந்தார். முதலியார் அவரைக் கண்டார். அழகும் இளமையும் கொண்ட ஆசிரியர் முதலியாருக்கு அவரைப் பிடிக்கவில்லை. என்றாலும் வேறுவழி இருக்கவில்லை. ஒருநாள் ஆசிரியரை சந்தித்த முதலியார் தமது மனைவிக்கு ஆங்கிலம் கற்பிக்கும்படியும், சில மாதங்களில் அவள் ஆசிரியரைப் போல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மனைவி கற்பது மற்றவர்கள் தெரியக் கூடாதென்பதற்காக தமது காரியால அறையிலேயே வகுப்பு நடத்த ஏற்பாடு செய்தார். பக்கத்தில் சயன அறை. முதலியால் அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருந்தது. சில வேளைகளில் இருட்டிய பிறகே வீடு வருவார். தாம் வரும்போது மனைவி நித்திரையில் இருந்தால் அவளது தூக்கத்தைக் கலைக்கக் கூடாதென்று, கீழே ஓர் அறையில் படுத்துக்கொள்வார். சிலவேளை சாயந்திரம் வீட்டுக்கு வருவார். வேலையாளிடம் தமது மனைவி மாடியில் உள்ளாரா என்று கேட்பார். வேலையாள் அவர் மனைவிக்குத் தலைவலி என்பாள். அவர் வீட்டிலிருக்கும் போது கூட தனக்கு தலைவலி என்று கூறி மாடிக்குப் போய்விடுவாள். மனைவியின் தலைவலி அவருக்கு பிரச்சினையாயிருந்தது.

ஒரு சிறந்த வைத்தியரிடம் போகலாமென்பார். ‘இது ஒன்றும் பெரிய வியாதியல்ல சரியாகிவிடும்” என்று கூறி வைத்தியரிடம் செல்வதைத் தடுத்து விடுவாள். “ஆங்கிலப் பாடத்தை நிறுத்தி விடுவோம்.ஒருவேளை தலைவலிக்கு அது காரணமாயிருக்கலாம்” என்பார். அதைக் கேட்டதும் அவள் அழ ஆரம்பிப்பாள். “நான் நன்றாக ஆங்கிலத்தில் பேசினால் அது உங்களுக்குத்தானே பெருமை” என்பாள். அதைக் கேட்டு முதலியார் மனம் நெகிழ்வார்.

தமது மனைவி தலைவலியால் அவதிப்பட்டாலும், நாளுக்கு நாள் அவளது அழகு அதிகரிப்பதை அவர் அவதானிக்கலானார். அவளது தலைவலி அவருக்கு எரிச்சலூட்டுவதும் உண்டு. சில வேளையில் தான் வீடு வந்திருப்பதை வேலைக்காரி மூலமாக மனைவிக்குத் தெரிவித்து, அவரைப் பார்க்க விரும்புவதாய் பணிப்பார். ஆனால் மனைவியோ தனக்கு சுகமில்லையென்றும், தன்னை தொந்தரவு செய்யவேண்டாமென்றும் சொல்லி அனுப்புவாள்.

ஒருநாள் பிற்பகலில் முதலியார் மாடிக்குச் சென்று மனைவியைப் பார்க்க விரும்பினார். அவர் படிகளில் ஏறிச் செல்லும்போது யாரோ பேசுவது அவரது காதில் விழுந்தது. மனைவி வேலைக்காரியோடு கதைத்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினார். தமது மனைவி சிரிப்பதைக் கேட்டார். அவளுக்கு தற்போது பூரண சுகம் ஏற்பட்டிருக்குமென்று நினைத்தார். அவர் அறைக்குள் நுழைந்ததும் அவள் தனியே இருப்பதைக் கண்டார். அவளது பார்வையில் மிரட்டு தெரிந்தது.

‘யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய்’ எனக் கேட்டார்.

“ஏன்? நான் யாருடனும் பேசவில்லை. தனியாகத் தானே இருக்கிறேன்” என்றாள்.

அவளது பேச்சில் ஒரு தடுமாற்றத்தை அவதானித்தார். பின்னர் அவள் “வீட்டுக்கு நேரத்தோடு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தேநீர் அருந்துகிறீர்களா?” எனக் கேட்டாள். முதலியார் அனேக நாட்களுக்குப் பிறகு அன்றுதான் மனைவியிடமிருந்து அவ்வாறான வரவேற்பை பெற்றிருந்தார். அவர் அவளைக் கட்டியணைத்து படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கையில் அங்கு ஒரு மூலையில் இருந்த பழங்கால அலமாரியிலிருந்து சத்தம் எழுவதைக் கேட்டார்.

“அது என்ன சத்தம்?” என்று கேட்டார். ‘சத்தமா? எனக்குக் கேட்கவில்லையே? பகற்கனவு காண்கிறீர்களா?” என்று கேட்டார்.

“கொஞ்சம் பொறு” என்று சொல்லி அலமாரியை அண்மித்த கவனமாகக் கேட்கலானார். உள்ளே யாரோ பெருமூச்சு விடுவது அவருக்குக் கேட்டது. அவர் அலமாரியைத் திறக்க எத்தனிக்கையில் அவர் மனைவி ஓடி வந்து அவரது கரத்தைப் பற்றி, “அதற்குள் ஒன்றுமில்லை. நான் முழுநாளும் இங்கேதான் இருக்கிறேன். உமக்கு எனது பேச்சில் நம்பிக்கையில்லையா?” எனக் கேட்டாள்.

முதலியாரின் சந்தேகம் ஆத்திரமாய் மாறியது. ”நான் பார்ப்பதில் தவறு என்ன? என்னவென்று பார்க்கத்தானே விழைந்தேன்” என்றார்.

“நீர் அலமாரிக்குள் பார்ப்பதாய் இருந்தால் எனது பேச்சில் நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம். இது போன்ற ஒரு சிறிய காரியத்தில் என்னை நம்பவில்லையென்றால் ஒரு பெரிய காரியத்தில் எப்படி உங்களது உதவியைப் பெறுவது?” நீர் அலமாரியைத் திறந்தால் எமக்குள் உள்ள பந்தம் அனுபட்டுப் போகும்” அவள் சீரியசாகவே கதைக்கலானாள். அவர் அவளது கண்களை உற்றுப் பார்த்தார். அக்கண்களில் ஒரு தீவிரம் காணப்பட்டது.

“அப்படியென்றால் அலமாரிக்குள் ஒன்றுமில்லையென்று சத்தியம் செய்ய முடியுமா?” எனக் கேட்டார்.

“ஆம். நான் சத்தியம் செய்கிறேன்” என்றாள்.

“அப்படியென்றால் சரி. நாம் தேநீர் அருந்துவோம்” என்றார். அவரது சந்தேகம் மறைந்ததாய் தெரியவில்லை.

தேநீருக்காக மேசை மணியை அழுத்தினார். வேலையாள் தேநீர் கொண்டுவந்து மேசைமேல் வைத்தான். அவர் ஒரு கடிதத்தில் ஏதோ எழுதி அவளிடம் கொடுத்து அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை கொண்டு வரும்படி பணித்தார். அத்தோடு கிராமத்து மேசனையும் கூட்டிவரும்படி கூறினார்.

அன்றையப் பொழுதை மனைவியுடனேயே கழிக்கலானார். தாம் கொழும்பில் சென்ற இடங்கள், கலந்து கொண்ட வைப்பவங்கள் பற்றி மனைவியிடம் கூறலானார். அப்போது அவர் மனைவியின் ஆரோக்கியம் குன்றியிருப்பதை கவனிக்கவில்லை.

மேசன் செங்கல், மணலோடு வந்தான். முதலியார் தனக்கிட்ட பணி அவனுக்கு வியப்பளித்தது. அதாவது சுவர் எழுப்பி அலமாரியை முழுமையாக மூடிவிடுவது. அவர் மனைவி படுக்கை அறைக்குள் சென்று கட்டிலில் வீழ்ந்து அழலானாள். மனைவியிடம் சென்ற முதலியார் “அன்போ, அலமாரிக்குள் ஒன்றும் இல்லையென்று சத்தியம் செய்தாயே. இன்னமும் அதே நிலையில்தான் உள்ளாயா?” என்றுகேட்டார்.

“ஆம் அதே நிலையில்தான் உள்ளேன் இருந்தாலும் ஒரு பழைய அலமாரியைச் சுற்றி சுவர் எழுப்புவது வீண் விரயமல்லவா?” என்றாள். “எனக்கு இதெல்லாம் பிடிக்காது. அலமாரியைத் திறக்க முடியாதபடி அதனைச் சுற்றி சுவர் எழுப்ப வேண்டும்” என்ற கூறிவிட்டு அலமாரியைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டார்.

மேசன் வேலையை ஆரம்பித்தார்.

முதலியார் இரவுச் சாப்பாட்டை மாடிக்குக் கொண்டு வரச் சொன்னார். அவரது மனைவியால் சாப்பிட முடியவில்லை. ஆனால் முதலியார் உணவை ரசித்து உண்ணலானார். அவர் மனைவியிடம் கொஞ்சமாவது உண்ணும்படி கேட்டுக் கொண்டார். அவள் கட்டிலில் படுத்தபடி மௌமாயிருந்தாள்.

மேசன் இரவுமுழுக்க சுவர் எழுப்பும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அலமாரிக்குள்ளிரிருந்து முனகல் சத்தமும், அலமாரியைத் தட்டும் சப்தமும் கேட்டது. அப்படியான சப்தம் வரும் போதெல்லாம் முதலியாரின் மனைவி அழலானாள். அப்போது அவள் கரங்களைத் தட்டிக் கொடுத்து “நீதான் அலமாரிக்குள் ஒன்றுமில்லையென்று சத்தியம் செய்தாலே” என்று நினைவுபடுத்தினார்.

மேசன் வேலையைப் பூர்த்தி செய்துவிட்டு செல்லலானார். காலையில் முதலியார் தமது மனைவியிடம், தாம் கொழும்பு செல்வதாய் கூறி புறப்பட்டார். முதலியார் படிகளின் அடித்தளத்தில் இறங்கியதும் அவரது மனைவி மேசனால் கட்டப்பட்ட சுவற்றின் செங்கற்களைப் பெயர்க்கலானாள். மறுபடியும் ஓசையில்லாது மேலே வந்த முதலியார், “பெண்ணே, பிரயாசைப்பட வேண்டாம். அந்தப் பாரமான செங்கற்களை சுமந்து மறுபடியும் சுகவீனமாவாய் நீதான் உள்ளே யாருமில்லையென்று சத்தியம் செய்தாலே! பின் எதற்கு வீண் பிரயத்தனம்?” என்றார்.

அவள் மயங்கி வீழ்ந்தாள் முதலியார் அவளைத் தூக்கிக் கட்டிலில் படுக்கவைத்தார். மறுநாள் அவளுக்குக் காய்ச்சல் அதிகமானது. முதலியார் கொழும்பிலிருந்து பிரசித்திபெற்ற வைத்தியர்களை வரச்செய்து மனைவிக்கு வைத்தியம் செய்தார். வைத்தியர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.

அவள் எழுப்பப்பட்ட சுவற்றைக் காட்டி, அதனை இடித்து விடும்படி கோரினாள். வைத்தியர்கள் அவள் மனநோயால் பீடிக்கப்பட்டுள்ளாள் என்று நினைத்தனர். சில நாட்களில் அவளது ஆவி பிரிந்தது. அவளது மரணச்சடங்கு பிரமாதமாய் நடத்தப்பட்டது. ஊர் மக்கள் அதுபற்றி பலதும் கதைக்களாயினர்.

ஆங்கில ஆசிரியருக்கு என்ன நடந்தது என்று அவருக்கும் தெரியவில்லை.

Comments