சார்க் வலய வர்த்தக சம்மேளனத்தின் தலைமைத்துவம் மீண்டும் இலங்கைக்கு | தினகரன் வாரமஞ்சரி

சார்க் வலய வர்த்தக சம்மேளனத்தின் தலைமைத்துவம் மீண்டும் இலங்கைக்கு

இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நான், எனது இரண்டு வருட பதவிக்காலத்தில் பிராந்திய, தேசிய மட்டத்திலும் மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கைகோர்த்து பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என ருவன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளனத்தின் 43ஆவது வருடாந்தக்கூட்டம் கடந்த 23ஆம் திகதியன்று வெள்ளவத்தையிலுள்ள மிராஜ் ஹோட்டலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையானது சார்க் வலய நாடுகளின் வர்த்தக சம்மேளனத்தின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். சார்க் வலயத்தைப் பொறுத்தவரையில் 16 வருடங்களுக்குப் பின்னர் இந்த தலைமைப்பொறுப்பு இரண்டாவது தடவையாக இலங்கைக்கு கிடைத்திருக்கிறது. பிரதேச தேசிய மட்டத்தில் சார்க் நாடுகளின் வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் 2018, 19 20 வருடங்களில் சம்மேளனத்திற்கு 16 வருடங்களின் பின்னர் இந்த தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. மார்ச் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நேபாள நாட்டின் பிரதிநிதியிடமிருந்து இப்பதவியை பொறுப்பேற்கவுள்ளேன்.

பிரதேச மற்றும் தேசிய ரீதியில் இயங்கும் வர்த்தக சம்மேளனங்களுடன் இணைந்து செயற்படும் ஒரேயொரு சம்மேளனம் இதுவாகும். நாடுகளின் வர்த்தகத் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதுடன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிய, தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக சங்கங்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள், இலங்கை ஆகிய எட்டு நாடுகள் அங்கம் வகிக்கும் சார்க் நாடுகளின் வர்த்தக சம்மேளனங்களின் உதவியுடன் நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதுடன் சுற்றுலாத்துறையை அதிகரிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உலக சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் மூன்றிலொரு பகுதியினர் சார்க் வலய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக 46 வீதமானோர் இளைஞர்களாவர். இலங்கையில் பெரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடாகும். உலகில் மிகத்துரிதமாக அபிவிருத்தியடைந்து நகரங்களில் தலைநகர் கொழும்பு முதலிடம் வகிக்கிறது. 50 இற்கு மேற்பட்ட சொகுசு மாடிக்குடியிருப்புகளுக்கான நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டவர்கள் இங்கு முதலீட்டை மேற்கொள்வதற்கேற்ற வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 10 முதல் 15 இலட்சம் வரையான சனத்தொகை கொண்ட கொழும்பு நகரின் மத்தியில் வாழும் பெரும்பாலானோர் மாடி வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இன்னும் 5 வருடங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்குகளாக அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில் எதிர்காலத்தில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments