11ஆவது அழைப்புப் பாடசாலைகளின் 20 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டம்; பிரபல பாடசாலை அணிகள் அரையிறுதிக்கு தகுதி | தினகரன் வாரமஞ்சரி

11ஆவது அழைப்புப் பாடசாலைகளின் 20 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டம்; பிரபல பாடசாலை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியின் 80களின் பழைய மாணவர்கள் குழு ஏற்பாடு செய்துள்ள 11ஆவது அழைப்புப் பாடசாலைகளின் 20 வயதுக்குட்பட்ட அணிகளுகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஹமீத் அல் ஹுசெய்னி, புனித ஆசீர்வாதப்பர், ஸாஹிரா மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இதற்கு முன்னோடியாக சிட்டி லீக் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது குழுவுக்கான கால் இறுதிப் போட்டியில் கொழும்பு வெஸ்லி கல்லூரி அணியை எதிர்கொண்ட கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணி 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்டது. இப் போட்டியின் முழு நேரத்தின்போது எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.

இதே குழுவுக்கான மற்றைய அரை இறுதிப் போட்டியில் இஸிபத்தனவை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் ஹமீத் அல் ஹுசெய்னி 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஹமீத் அல் ஹுசெய்னி சார்பாக எம். ஏ. ஜே. எம். ரஸ்ஹான் (3 நி.), எஸ். கே. அபிஷயன் (5 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

மற்றைய குழுவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியை கால் இறுதியில் சந்தித்த நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.

மாரிஸ் ஸ்டெல்லா சார்பாக டபிள்யூ. ஆர். நிஷோத (57 நி.) கோல் போட்டார்.

கேட்வே கல்லூரி அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் மருதானை ஸாஹிரா கல்லூரி அணி 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஸாஹிரா சார்பாக எம். ஹம்மாத் (28 நி., 44 நி.) 2 கோல்களையும் எச். ஆர். ராஸா (45 நி.) ஒரு கோலையும் போட்டனர்.

ஸாஹிரா அணிக்கும் மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இதனைத் தொடர்ந்து ஹமீத் அல் ஹுசெய்னி அணிக்கும் புனித ஆசீர்வாதப்பர் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்.

Comments