அனந்தி உள்ளிட்ட மூவரையும் இழப்பது கட்சிக்கு பேரிழப்பே | தினகரன் வாரமஞ்சரி

அனந்தி உள்ளிட்ட மூவரையும் இழப்பது கட்சிக்கு பேரிழப்பே

நேர்காணல்: செல்வநாயகம் ரவிசாந்
 
உட்கட்சி ஜனநாயக முறைமைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படாமையும்,     கட்சித் தலைமையின் தன்னிச்சையான செயற்பாடுமே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம்: பேராசிரியர்            இரா.சிவச்சந்திரன் பேட்டி 
 
நடைபெற்று முடிந்த தேர்தலில்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி உயர்வுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி வீழ்ச்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்  உட்கட்சி ஜனநாயக முறைமைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படாமையும், கட்சியின் தலைமை தன்னிச்சையாகச் செயற்பட்டமையுமே காரணம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதிபதியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   
இவ்வாரத் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு, புதிய தேர்தல் முறை தொடர்பான பார்வை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியின் முழுவிபரம் வருமாறு,   
 
நீங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவுள்ள நிலையில் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு என்ன காரணம் எனக் கருதுகின்றீர்கள்? 
 
ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்று வந்த தமிழரசுக் கட்சி புதிய ஜனநாயக வழிமுறைகளுக்கு ஏற்ற வகையில் தன்னைப் புடம் போடவில்லை. தற்போதைய புதிய தகவல் தொழில்நுட்ப உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் மீண்டும் மீண்டும் பழைய பல்லவியைப் பாடுபவர்களாகவே தமிழரசுக்கட்சியினர் காணப்படுகிறார்கள்.   
 
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்சிகளுக்கப்பால் ஒவ்வொரு வட்டாரங்களிலும் தனிநபர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. இந்நிலையில் வேட்பாளர் தெரிவில் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் தவறிழைத்துள்ளனர். பிரதேசங்கள் தோறும் சமூகங்கள் சார்ந்த வேட்பாளர் தெரிவில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.   
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வடக்கு மாகாணம் முழுவதுக்குமான வேட்பாளர் தெரிவுக்காக ஐந்து பேர் கொண்ட வேட்பாளர் தெரிவுக் குழுவொன்றை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நியமித்திருந்தார். 
 
அந்தக் குழுவில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்ற வகையில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆனால்,வேட்பாளர்கள் தெரிவின் போது எங்களை எந்தவகையிலும் பணியில் ஈடுபடுத்தவில்லை.  
 
வேட்பாளர் தெரிவுக் குழுவில் எங்களை நியமித்த போதும் பின்னர் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் சிலரை மாத்திரம் வேட்பாளர் தெரிவுக் குழுவில் உள்வாங்கியுள்ளனர். இதனால், வட்டார ரீதியாக பொருத்தமற்ற வேட்பாளர்கள் பலர் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். 
 
யாழ். மாநகர சபைத் தேர்தலில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்- மோகனதாஸ் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போதிலும் அவருக்குரிய முக்கியத்துவம் எதுவும் வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. 
 
இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கண்டு கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.   
 
நடைபெற்று முடிந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு வங்கி உயர்வுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி வீழ்ச்சிக்கும் உட்கட்சி ஜனநாயக முறைமைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படாமையும், கட்சியின் தலைமை தன்னிச்சையாகச் செயற்பட்டமையுமே காரணம். பொருத்த மான வேட்பாளர்கள் நிறுத்தப்படாமையும், பிரதேச தொகுதிக் கிளைகளை முன்னிறுத்தாமல் செயற்பட்டமையும் இந்த உள்ளூராட் சி சபைத் தேர்தலில் தாக்கம் செலுத்தியிருக்கிறது.   
 
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைகள் தொடர்பில் உங்கள் கருத்தென்ன?   
 
புதிய தேர்தல் முறைகளுக்கமைவாக கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும் வட்டார முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கு வட்டார முறையிலான தேர்தல் பொருத்தமானது. அத்துடன் 40 வீத விகிதாசாரப் பிரதிநித்துவம் வழங்கப்பட்டுள்ளது.   
சமூகத்தில் சிறுபான்மையாகவுள்ளவர்கள் வட்டார ரீதியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சூழல் காணப்படுகிறது. அவர்களுக்கு விகிதாசாரப் பிரதிநித்துவம் நன்மையளிப்பதாகவுள்ளது.   
 
உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை தென்னாசியாவிலேயே ஒரு புரட்சிகரமான மாற்றம் என்றே நான் சொல்வேன். 
 
இவ்வாறான நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளமையால் தற்போது பெண்கள் துணிந்து அரசியலுக்குள் வந்துள்ளார்கள்.   
 
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 சதவீதமானவர்களாக பெண்கள் காணப்படுகின்ற நிலையிலும், குடிநீர்ப் பிரச்சினை, குழந்தைகளைப் பராமரித்தல், கர்ப்பிணித் தாய்மார்களைப் பராமரித்தல், சுத்தம், சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட பல பொறுப்புக்களும் உள்ளூராட்சி சபைகளின் பணிகளாகவுள்ள காரணத்தாலும் இந்தப் பணிகள் ஆண்களை விடப் பெண்களால் அதிக வினைத்திறனுடன் செய்ய முடியும். ஆகவே, பெண்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்திற்கு வித்திடுவதாக அமைந்துள்ளது.   
 
எனவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் முறைகளை உரிய வகையில் பயன்படுத்தினால் சிறந்த முன்னேற்றங்களை எட்ட முடியும்.   உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதில் தற்போது எழுந்துள்ள சிக்கல்நிலை குறித்து உங்கள் அபிப்பிராயமென்ன?  
 
பதில்:- இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட பல பெண் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளமையால் தான் இந்த நிலைமை தோன்றியிருக்கிறது. வட்டார ரீதியாகப் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பத்து வீத வாய்ப்பை அதிகரித்து வழங்கியிருந்தால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்காது.   எனினும், உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ஓதுக்கீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளூராட்சி சபை சட்டம் இயற்றப்பட்டுள்ளமையால் சபைகளில் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியே ஆக வேண்டியுள்ளது. அவ்வாறு உறுதிப்படுத்தாமல் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியும்.   
அல்லாவிடில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இந்தத் தடவை உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விடயத்தைப் பரிசீலிக்கலாம். ஆனால், உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது எமது சமூகத்திற்குப் பல வழிகளிலும் நன்மை பயக்கும்.   
 
கேள்வி:- அனந்தி சசிதரன், அருந்தவபாலன், சிவகரன் ஆகியோரை இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்க எடுத்துள்ள முடிவு குறித்து உங்கள் கருத்தென்ன?   
 
பதில்:- சிவகரன் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவு உத்தியோகபூர்வமானதெனில் தனக்கு இது தொடர்பான எழுத்துமூலமான அறிவித்தலை அனுப்பி வைக்க வேண்டும். அல்லாவிடில் தான்  இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதாகக்  கூறியுள்ளார். தற்போது வடமாகாண அமைச்சராகவுள்ள அனந்தி சசிதரனும் தன்னை நீக்குவது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் தனது கைகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.   
 
குறித்த மூவரையும் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக் குவதென அண்மையில் கட்சியின் மத்திய குழு கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியான போதும் அவர்களை நீக்கும் முடிவு இறுக்கமானதாக அமையாது எனவே நான் கருதுகின்றேன். ஏனெனில்,இவ்வாறானவர்களை இழப்பது கட்சிக்கே இழப்பை ஏற்படுத்தும் என்றார்.     
            

Comments