வன்முறைக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறைமையே | தினகரன் வாரமஞ்சரி

வன்முறைக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறைமையே

இவ்வாறான வன்செயல்கள் இலங்கையில் புதிதல்ல. பெரும்பான்மையினத்தினர் சிறுபான்மையினத்தினர் மீது கட்டவிழ்த்து விடும் வன்செயல்களே இவை என்பதிலும் பார்க்க நான் வேறு கோணத்தில் இருந்தும் பார்க்கின்றேன் எனத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்,

குற்றம் புரிந்தவர்களை அல்லது குற்றம் புரிந்ததாகச் சந்தேகப்படுபவர்களை சமுதாயமானது, நீதி, சட்டம் போன்றவற்றின் கண்கொண்டு பார்க்க வேண்டுமேயொழிய சாதி, சமூக, மத, மொழி வாரியான கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது என்று தெரிவித்தார்.

வாரம் ஒரு கேள்விக்குப் பதில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாரம் தெற்கின் வன்முறை சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அவர், இரு இளைஞர்கள் சேர்ந்து இன்னொரு இளைஞரைக் கொலை செய்தார்கள் என்பதே திகனவிலிருந்து நாம் கேட்ட செய்தி. உடனே பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? கொன்ற இளைஞர்கள் முஸ்லிம்கள் என்பதும், கொல்லப்பட்டவர் சிங்களவர் என்றும் கதை பரவியதால் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலாகச்

சித்திரிக்கப்பட்டு இன முறையிலான போராட்டமாக மாறியது. இவ்வாறான செயல்கள் நடக்காதா என்று ஏங்கியிருந்தவர்களுக்கு இது கொழுக்கட்டை கொடுத்ததாக ஆகிவிட்டது. குற்றவாளிகளை அவர்களின் இனத்தவர் எமது மக்கள் என்றோ எம்மவர் என்றோ எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அது இன முறுகல்களையும், மோதல்களையும், கோபதாங்களையும் உண்டாக்குகின்றது.

நடந்து முடிந்த வட கிழக்கு மாகாணப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நம்மவர்கள் என்று உயர் அரசியல்வாதிகள் அடையாளப்படுத்தியதால்தான் இன்று நிலைமை சர்வதேச மட்டத்திற்குச் சென்றிருக்கின்றது.

இராணுவமோ, கடற்படையோ, விமானப்படையோ தம்முள் குற்றம் இழைத்தவர்களைத் தாமே இனம் கண்டு அவர்களைத் தமது படைகளில் இருந்து நீக்கி அப்போதே தண்டனைக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் அரசியல் உள்ளீடுகளே. அரசியல் ரீதியாக சிலர் சந்தர்ப்பங்களையும் தருணங்களையும் எதிர்பார்த்திருந்ததையும், நாம் உணர வேண்டும். 1983இல் வடமாகாணத்தில் யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட செல்லக்கிளி சம்பந்தமான ஒரு நிகழ்வு நடக்க அவ்வாறான செயல்களை எதிர்பார்த்திருந்த ஒரு தெற்கத்தையக் குழுவினர் உடனே கொழும்பு பொரளையில் செயல்படத் தொடங்கி விட்டார்கள். பொரளையிலும் அரசியல் பேசியது. அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல் வாளாதிருக்க பொலிசார் முன்னிலையிலேயே அனர்த்தங்கள் நிகழ்ந்தன.

அன்று அப்பாவித் தமிழ் மக்களுக்கு நடந்தது இன்று அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது. இதற்கு அரசியல் உள்ளீட்டையே நான் குறை கூறுவேன்.

யாழ் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் 80களில் ஒரு கொலை நடைபெற்றது. ஒரு கிராமத்தில் நடந்த சாதிச்சண்டையினுள் தன் நண்பனைக் காப்பாற்ற உள் நுழைந்த, இரு சாதியருக்குச் சம்பந்தப்படாத, ஒருவர் தற்பாதுகாப்பாக அவர்களுள் ஒருவரைக் கொன்று விட்டார். பார்த்த சாட்சியங்கள் இருந்தன. பாவிக்கப்பட்ட கத்தி பொலிசாருக்குக் கிடைத்திருந்தது. சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர் ஆக்கப்பட்டார். பொலிசாரின் கோரிக்கையை ஏற்று சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். நீதவான் தன் முன்னிருந்த சந்தேக நபர் தனது நெருங்கிய சொந்தக்காரர் என்பதை அடையாளம் கண்டிருந்தார். விளக்க மறியலில் வைத்த பின் அரசியல்வாதிகள், உறவினர்கள், சட்டத்தரணிகள், நண்பர்கள் என்று பலர் சந்தேகநபருக்கு பிணை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அசையவில்லை நீதவான். ஆறு மாதங்களுக்கு விளக்க மறியலில் இருந்த கைதியை ஆறு மாதங்களுக்குப் பின்னர் அரச பகுப்பாளர் அறிக்கை கிடைத்த பின் பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார். வெளிவந்த ஒரு வாரத்தினுள் கைதி கொலை செய்யப்பட்டார். உண்மையில் அதுவரையில் குறித்த கைதியை நீதிபதிதான் உயிருடன் இருக்க உதவினார் என்று கூடக் கூறலாம்.

அரசியல்வாதிகளின் அல்லது உறவினர்களின் கோரிக்கையைக் கேட்டு முன்னரே பிணை அளித்திருந்தால் கைதி ஏற்கனவே கொலை செய்யப்பட்டிருப்பார் என்று கொள்ள இடமிருக்கின்றது. ஆனால் சாதிச் சண்டையும் தீ மூட்டலும் உருவாகாது தடுத்தார் நீதிபதி.

வன்செயல்கள் உருவாக அரசியலும் அரசியல்வாதிகளுமே காரணமாக இருக்கின்றார்கள் என்பதே என் கருத்து. அதனால்தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி முறையை வழங்குமாறு கோருகிறேன். அப்போது எல்லா இனங்களும் சமமாக வாழக்கூடிய சூழல் ஏற்படும்.ஆனால் தமிழரோ, முஸ்லீம்களோ, தம் மத்தியில் வசிக்கும் சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.