கண்டி | தினகரன் வாரமஞ்சரி

கண்டி

விசு கருணாநிதி

"சின்ன விபத்தாம். லொறியொன்றை றிவர்ஸ் பண்ணும்போது ஓட்டோவிலை பட்டு சைட் கண்ணாடி உடைஞ்சிட்டாம். பிறகு நடந்த தகராற்றிலை லொறி டிறைவர் தாக்கப்பட்டிட்டாராம். அவர் ரெண்டு மூணு நாள் ஆஸ்பத்திரியிலை இருந்து மோசம்போயிட்டாராம். அவரை அடக்கம் செய்யப்போனவங்க பிரச்சினைபடுத்தியிருக்காங்க"

சென்ற வாரம் தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள், நலம் விசாரித்தார்களோ இல்லையோ, தொடர்பு கிடைத்ததும் கேட்ட ஒரே கேள்வி, கண்டியில் என்ன நடந்தது? அநேகமாக எல்லோரும் சொல்லியிருக்கக்கூடிய பதில் இப்பிடித்தான் இருந்திருக்கும்.

"வெட்டு போட்டாங்களாம்! அதற்குப் பிறகு ஏதோ தகராறாம்! முஸ்லிம் பொடியன்கள் மரண பயத்தில் இருக்கிறார்கள் மச்சான் பாவம்!" என்றார் நண்பர் சதீஷ்.

அதற்கு முன்பு அம்பாறையில் என்ன பிரச்சினை என்று கேட்டார்கள்.

"கொத்து ரொட்டி கேட்டிரிக்காங்க...அப்ப, இறைச்சிக் குழம்பிலை மலட்டு மாத்திரை போட்டியாடா எண்டு கேட்டிரிக்காங்க... அவர் பயத்திலை ஓம்! எண்டாராம். பிறகு நடந்தது தெரியும்தானே!"

"பேருவளையிலை என்ன பிரச்சினை?"

"ஆமதுருவ அடிச்சுப்போட்டாங்களாம்! அதுக்குக் கடைகளையும் எரிச்சு வீடுகளையும் அடிச்சு நொறுக்கியிருக்காங்க"

"வேவல்வத்தையிலை என்னடா நடந்தது?"

"தமிழ் பொடியன்கள் ரெண்டு சிங்களப் பொடியன்கள வெட்டிச் சாய்ச்சுப்போட்டாங்களாம்! எல்லா வீட்டையும் எரிச்சுப்பொசுக்கிப்போட்டாங்க"

இப்படி காலத்திற்குக் காலம் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏதோவொரு காரணம் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. எண்பத்து மூன்று கலவரத்திற்கு என்ன காரணம் என்பது உலகத்திற்கே தெரியும். இந்தக் காரணகாரியங்கள் இன்று நேற்றல்ல நூற்றாண்டு காலந்தொட்டு நீடித்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தக் கலவரங்கள் அரங்கேறி வந்துள்ளன. அவற்றுக்குச் சொல்லப்பட்ட காரணம், பெரும்பான்மையினச் சமூகத்ைதச் சீண்டிப்பார்த்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவு என்று. 83இல் ஜே.ஆரும் இதே காரணத்தைத்தான் தன் வானொலி உரையில் தெரிவித்திருந்தார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிடக் கண்டி மாவட்டம் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்நியர் ஆக்கிரமிப்பைக் கடைசிவரை தாக்குப்பிடித்து கண்டி இராச்சியமே நின்றமை, தலதா மாளிகை அமைந்துள்ளமை, சிங்கள மேலாண்மையின் அடையாளம் எனப் பெரும்பான்மை மக்களால் கருதப்படுகின்றமை, யாழ் ஏ 9 வீதியின் அடையாளம் எனப் பல விதத்திலும் கண்டிக்குப் பெருமை உண்டு.

அதேநேரம், இலங்கையில் முதன் முதலாக ஓர் இனக்கலவரத்தைத் தோற்றுவித்த வரலாற்றுப் பெருமையும் கண்டிக்ேக உண்டு. அந்த வகையில் உலகின் எல்லா மூலைகளிலும் ஒரு புனித பகுதியே இவ்வாறான முரண்பாடுகளின் தோற்றுவாயாக இருந்துள்ளமையையும் புரிந்துகொள்ள முடியும். அதற்காக இலங்கை விதிவிலக்காக இருக்கக்கூடாது என்றில்லை.

1915இல் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கலவரம் மூண்டபோது அதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. என்றாலும், தமது பொருளாதார வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல், சிங்களப் பெரும்பான்மையினத்தவர்கள் வேறு காரணங்களைக் கூறித்தாக்குகிறார்கள் என்று முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

1983 இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலின்போதும் 13 இராணுவத்தினரின் படுகொலையைச் சாட்டாக வைத்துத் தமிழரின் பொருளாதாரம் துவம்சம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதுமட்டுமன்றி, அந்தத் தாக்குதலானது சிங்கள அடிப்படைவாத அமைப்பின் நூற்றாண்டு விழா அடையாளம் எனவும் தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, நூறாண்டுகளுக்கு ஒரு தடவை சிறுபான்மையினத்தவர்கள் மீது திட்டமிட்டுக் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. அதனைப் பெரிதாக எவரும் நம்பவில்லை. எனினும், அந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் 2015 இல் நளின் டி சில்வா ஒரு கருத்தைச் சொல்கிறார்.

என்ன? பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு நூறாண்டுகளுக்கு ஒரு தடவை அநீதியும் அட்டூழியமும் இழைக்கப்படுகிறது. 1815, 1915, 2015 ஆகிய வருடங்களில் பெரும்பான்மை மக்களின் வளர்ச்சி நசுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். அதேபோன்ற கருத்தைச் சிறுபான்மையினரும் சொல்கிறார்கள். 1883, 1983, 2018 எனச் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இவ்வாறு காலத்திற்குக் காலம் இரு தரப்பினரும் தத்தம் தரப்பு நியாயங்களை நிறுவுவதற்காகக் கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கிறார்களேயொழிய இந்த முரண்பாட்டுக்கான மூலக்காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்திப்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. அதன் விளைவுதான் முப்பதாண்டுகால யுத்தம். இத்தனை வருடங்களாகியும் இன்னமும் உண்மையைக் கண்டறியும் முழுமையான செயற்பாட்டுக்குள் இலங்கை பிரவேசிக்கவில்லை. அதற்கான ஒரு நிரந்தரக் களம் 2015இல் உருவாக்கப்பட்டதாகவே நாட்டு மக்கள் கருதினார்கள். ஆனால், அந்த நல்லிணக்க முயற்சியை ஆட்டம் காணச்செய்வதாய் அண்மைய சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. இது தொடருமாயின் ஒரு தோல்விகண்ட அரசு என்ற அபகீர்த்தியே எஞ்சி நிற்கும்.

பொதுவாக சிங்கள மக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் அவர்கள், சிறுபான்மை மக்கள் தம்மை ஆக்கிரமிக்கிறார்கள் என்ற சிறுதேசியவாதச் சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிறார்கள். அதேபோன்று நாம் சிறுபான்மையாக இந்த நாட்டில் இருக்கின்றோம் என்ற சிந்தனைப் போக்கிலிருந்து மாறி, பெருந்தேசியவாதச் சிந்தனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. தம்மையும் பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஈடாகக் கற்பிதம் செய்துகொண்டு சிறுபான்மையினர் செயற்படுவதால், இரு தரப்பினருக்குமிடையிலான பரஸ்பர உறவு மேம்படுவதற்குப் பதிலாகப் பகைமையே மேலோங்கி வருகிறது. அதன் பிரதிபலனாகவே சிறு சிறு சம்பவங்களுக்ெகல்லாம் அதிகாரத்தைத் தாமாகவே கையில் எடுக்கும் ஒரு தான்தோன்றிக் கலாசாரம் உருவாகிறது. இது பெரும்பான்மை என்றாலும் சிறுபான்மை என்றாலும் இரண்டும் சம அளவிலேதான் கைக்ெகாள்ளப்படுகிறது.

எங்காவது ஒரு சிறு சம்பவம் என்றால், யார், எவர், என்ன இனம், எந்த ஊர்? போன்ற கேள்விகளே முதன்மை பெறுகின்றன. இந்த நிலை 1948 இற்கு முன்பு இருக்கவில்லை என்பது மூத்தவர்களின் கருத்து. பிரித்தானியர்கள் தமது காலனித்துவ இருப்புக்காக சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தோற்றுவித்தார்கள் என்ற தெளிவு அப்போது உணரப்பட்டிருந்ததால், எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற கோட்பாட்டில் ஓர் ஒற்றுமை நிலவியது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார நிலை மாற்றம் பெரும்பான்மையினத்தவருக்கும் சிறுபான்மையினத்தவருக்குமிடையில் விரிசலைத் தோற்றுவித்தது. அன்று முதல் நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கும் அரசியல்வாதிகள் கரிசனைகொள்ளவில்லை. அவர்கள், இந்தச் சமூகப் பிரச்சினையைத் தமது அரசியல் இருப்புக்காகப் பயன்படுத்திக்ெகாண்டு வந்திருக்கிறார்கள். அந்தச் சாபக்ேகடான நிலவரம் மீண்டும் கண்டியைக் கௌவிப்பிடித்துக்ெகாண்டுள்ளது.

எப்போதுமே, நாட்டின் சிறுபான்மையினத்தவர்கள் தமக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற மேலாண்மைச் சிந்தனை சிங்களவர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஓரிடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவர் தாக்கப்பட்டால், தாக்கியது தமிழரோ அல்லது சிங்களவரோ என்றால், அந்தக் காரணியைச் சமூக ரீதியாக நோக்கி அந்தச் சமூகத்திற்கு எதிரான வன்முறையாக அதனை பரிணாமமடையச் செய்வதில் அரசில்வாதிகள் முன்னின்று பாடுபட்டிருக்கிறார்கள்.

எண்பத்து மூன்று இனக்கலவரத்திலும் அரசியல்வாதிகளுக்குப் பெரும் பங்கு இருந்தது என்பதை நாடறியும். தற்​ேபாது கண்டியில் ஏற்பட்ட கலவரத்திற்கும் அரசியல்வாதிகளே சூத்திரதாரிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் போராட்ட எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்டதும் அல்லது தோல்வியுறச்செய்யப்பட்டதும் அடுத்த பாணம் முஸ்லிம்கள் மீதுதான் ஏவப்படவிருக்கிறது என்ற ஒரு கருத்து 2009இல் முன்வைக்கப்பட்டது. எனினும், அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்பதற்குத் தயாராக இருக்கவில்லை. முஸ்லிம் நாடுகள் தமக்குப் பக்கபலமாக இருக்கின்றன என்ற ஒரு மாயத்தோற்றத்தில் அவர்களும் உழன்று மக்களையும் தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்கிறார் ஒரு மூத்த சிவில் சமூகத்தவர். இந்த நிலை முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமன்றித் தமிழ்ச் சமூகத்திலும் நீடித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல.

பிரித்தானியர்கள் காலனித்துவ ஆட்சியை நடத்தினாலும் குற்றமிழைப்போருக்குத் தண்டனை வழங்கும் பொறிமுறைக்காகவே பொலிஸ் திணைக்களத்தை உருவாக்கினார்கள். அதுவும் குற்றவாளிகளைக் கைதுசெய்யும் பொறுப்பு மாத்திரமே பொலிஸாருக்கு இருக்கிறது. தண்டனை வழங்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உரியது. இப்படியிருந்தும் நாட்டின் பிரஜைகள் சட்டத்தைத் தம்கையில் எடுத்துக்ெகாள்வதை நீண்டகாலமாகவே காண முடிகிறது.

ஓர் இடத்தில் விபத்து என்றால், விபத்துச் சம்பவிக்கக் காரணமானவரைத் தாக்கும் கலாசாரம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கிறது. அதுவும் வேறு வேறு சமூகம் என்றால் நிலைமை பாரதூரமாகிவிடும். கண்டியில் நடந்ததும் அதுதான். முச்சக்கர வண்டியை மோதியவர் சிங்கள இளைஞர். அவரைத் தாக்கியவர்கள் முஸ்லிம் இளைஞர்கள். இந்தப் பின்னணிதான் சிங்களவர்கள் கலவரத்தில் ஈடுபடக் காரணம் என்கிறார்கள். அதுவே ஒரே சமூகத்தில் இப்படி விபத்தோ தவறோ நேர்ந்திருந்தால், அஃது ஓர் இனமோதலாக அன்றிச் சிலவேளை குழு மோதலாக உருவெடுத்திருக்கும். அதேபோன்று தாக்குதல் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள், இன ரீதியாகவும் மத ரீதியாகவும் தாக்குதல் நடத்துவது எந்த விதத்திலும் நியாயமாகாது என்பதே அனைவரினதும் கருத்து.

குறிப்பாக சிங்களச் சமூகத்தின் மீது கல்வி கற்ற தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதொரு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னதானிருந்தாலும் சிங்கள மக்கள் பொறுமைசாலிகள். அவர்கள் சீண்டப்படும்போதுதான் பொங்கியெழுகிறார்கள். நாட்டில் ஆங்காங்கே நடந்த கலவரத்திற்கெல்லாம் அடிப்படைக் காரணகர்த்தாக்களாகச் சிங்கள மக்கள் இருந்திருக்கமாட்டார்கள். 1983இலிருந்தே அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். பிரச்சினையொன்றுக்குத் துரும்பைக் கொடுப்பவர்கள் சிறுபான்மையினர்தான். மறுபுறம் பார்த்தால், சிறுபான்மையென்றால்,பெரும்பான்மையினருக்கு அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது! நாட்டில் இன்னமும் விடைகாணப்படாத கேள்வியே இதுதான். எனினும், மக்கள் மத்தியில் இந்த கேள்விக்கு விடை காணப்பட்டுத்தான் இருக்கிறது. அதனை இன்னமும் கேள்வியாகவே வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகள் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார்கள். அதற்கு எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களும் விதிவிலக்கில்லை.

அரசியல்வாதிகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இனவாதத்திற்குத் தூபமிடுபவர்களாகவே உள்ளனர். அவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் இன வன்மத்துடன் நோக்குகின்றனர். இஃது ஒரு வகையில் அரசியல் கோழைத்தனம். யுத்தத்தால் பற்றி எரிந்த நாட்டில் பகீரதப்பிரயத்தனத்திற்குப் பின்னர் அமைதி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதனை நிரந்தரமாக நிலைபெறச் செய்வதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுக்ெகாண்டிருக்கிறது. இதில், சகல அரசியல் கட்சிகளும் ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வேண்டிய காலகட்டத்தில், நாட்டைப் பின்னோக்கி நகர்த்துவதற்கான வழித்தடத்திற்குக் கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படுமானால், என்றுமே அமைதியை எதிர்பார்க்க முடியாது.

நாட்டின் தற்போதைய நிலவரத்தை எடுத்துக்ெகாண்டால், இதற்குப் பாரிய அரசியல் பின்னணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அம்பாறையிலும் கண்டியிலும் ஏற்பட்ட கலவரத்திற்குக் காரணம் சிறு சம்பவங்களின் தொடர்ச்சி அல்லவென்றும் அது நீண்டநாள் வன்மத்தின் வெளிப்பாடு என்றும் ஒரு வலுவான கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. அந்த வன்மத்திற்குக் காரணம் சந்தேகம்! தமிழர்கள் தமது தவறை உணர்ந்துகொண்டு நெகிழ்வுப்போக்கிற்குத் திரும்பியிருக்கும்போது முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புக் கலாசாரத்தைக் கைக்ெகாண்டு வருகிறார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரப்பப்பட்டிருக்கிறது. இதற்குச் சில மதத்தலைவர்களும் துணைபோய் இருக்கிறார்கள் என்பது விரும்பத்தக்கதல்ல. சமூகங்களுக்கிடையே இவ்வாறு முரண்பாடு ஏற்படும்போது அதனைச் சாந்தப்படுத்திச் சமரசப்படுத்த வேண்டியவர்கள் மதத்தலைவர்கள். அவர்கள்தான் மக்கள் மத்திக்குச் சென்று அவர்களை நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில், எந்தச் சமூகமும் அரசியல்வாதிகளைவிட மதத்தலைவர்களுக்குச் செவிமடுப்பது இயல்பு. இங்கே மதத்தலைவர்கள் அந்தப் பொறுப்பினைச் சரிவர ஆற்றுகிறார்களா என்றால், இல்லை. 1983இல் இனக்கலவரம் ஏற்பட்டபோதும்கூட மதத்தலைவர்கள் அதனைக் கண்டிக்கவில்லை என்று ஒரு பெரும்பான்மையினப் புத்திஜீவி குறைபடுகிறார். தற்போதும் அதே நிலைதான். மாறாக அவர்கள் மாற்று மதத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துகிறார்கள். அதனைவிடவும் எல்லா மதத் தலைவர்களும் ஒன்றாக மக்கள் மத்திக்குச் செல்வார்கள் என்றால், இதைவிட இன நல்லிணக்கத்திற்கான வேறொரு காத்திரமான பங்களிப்பு இருக்க முடியாது.

அதனைவிடுத்து போர்க்கால பதற்றத்தைத் தக்கவைத்துக்ெகாண்டு சுயலாபம் தேடுவார்களாயின் அது நாட்டுக்கோ நாட்டு மக்களுக்ேகா ஆரோக்கியமாக இருக்காது என்பதைச் சகல தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், சிறுபான்மை மக்களும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Comments