பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு; 16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு | தினகரன் வாரமஞ்சரி

பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு; 16 ஆம் திகதிக்குள் கொடுப்பனவு

அக்குறணையில் பாதுகாப்பு மாநாடு

 

அக்குறணை குறூப் நிருபர்

 

கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் சகல நட்ட ஈடுகளை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு நேற்று (10) பணிப்புரை விடுத்தார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் முதல் கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்குப் அறிவுறுத்தியுள்ளார்.

கண்டி, திகன, அக்குறணை, பள்ளேகல, கெங்கல்ல உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று நேரடியாக விஜயம் செய்த பிரதமர், ஸ்தலத்திலிருந்தவாறே இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என 465 உடைமைகள்

சேதமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பதினான்கு பள்ளிவாயல்கள் முற்றாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, தெல்தெனிய சம்பவத்தில் உயிரிழந்த லொறிச்சாரதியின் மாற்றுத்திறன்கொண்ட பிள்ளை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமருடன் அமைச்சர்களான ரவூப் ஹகீம், எம்.எச்.ஏ. ஹலீம், லகஷ்மன் கிரியெல்ல, ருவன் விஜேவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கண்டிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி அங்குள்ள சகல சமயத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராய்ந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் பின்னர் நிலைமையை மேலும் சுமுகமாக்கும் நோக்குடன் கண்டி வர்த்தக சங்க பிரதிநிதிகளையும், தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தக பிரமுகர்களை தனித்தனியாக சந்தித்து கலந்தாலோசித்த அவர் இரு தரப்பினர்களினதும் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்கள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினார்.

இங்கு கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க :-

கசப்பான யுத்தம் காரணமாக நாம் பல அனுபவங்களை பெற்றோம். யுத்ததிற்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் இன ஐக்கியத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு வதந்திகள் மற்றும் உணர்ச்சியடைதலுமே காரணமாகும். மூவின வர்த்தக சமூகங்களும் ஐக்கியத்துடனும், பரந்த மனப்பான்மையுடனும் செயற்படுவதே சிறந்தது.

சமாதானத்தை மீள உருவாக்கும் பொறுப்பு பாதுகாப்பு படையினரையும் பொலிஸாரையும் மாத்திரம் சார்ந்த விடயமல்ல, மாறாக அது அனைவருக்கும் சொந்தமானது. மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதுகாப்பு படையினர் வழங்குவார்கள்.

நான் பொலிஸாரை குற்றஞ்சாட்டவில்லை, துரதிஷ்டவசமாக இராணுவம் வருகை தரும் போது எல்லாம் நடைபெற்று முடிந்து இருந்தது. பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு விரல் நீட்டுகின்றனர்.

இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வன்முறைகள் இடம்பெற்றதாக கூறினார்கள் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் நான் கவலைப் படுகின்றேன்.

ஜனாதிபதி என்னிடம் கூறினார் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மதத்தலங்கள், கடைத் தொகுதிகள் மற்றும் வீடுகளை இராணுவத்தின் மூலம் துரிதமாக புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.

நான் நினைக்கின்றேன், இந்த சம்பங்களுடன் தொடர்புடைய சரியான சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று. எனவே, இவர்களுக்கு எதிராக உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் படிப்பினையாகவும் இருக்க வேண்டும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதற்காக. ஏனெனில் முகஸ்துதிக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கக் கூடாது என்றார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் எதிர்வரும் வெசாக் தினத்திற்கு முன்னர் படையினரால் முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்த சந்திப்புகளுக்கு பின்னர் கண்டி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் மாவட்டச் செயலாளர் எச். எம். பி. ஹிடிசேகரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புக்களில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி (மத்தி) மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் 11ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷங்க ரணவன்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிலைமைகளை சுமுகமாக்கவும், சமரசத்தை ஏற்படுத்தவும் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புமிக்க பணிகளை சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments