வீதியின் நடுவே படுத்துறங்கி அளுத்கமகே எம்பி போராட்டம் | தினகரன் வாரமஞ்சரி

வீதியின் நடுவே படுத்துறங்கி அளுத்கமகே எம்பி போராட்டம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டுமென கோரி கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே வீதியின் நடுவே வெள்ளைக் கடவையில் படுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்‌ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே நேற்றுக் (10) காலை 5 மணிமுதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கண்டி - ஹட்டன் பிரதான வீதியின் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாலுள்ள வெள்ளைக் கடவையில் படுத்தவண்ணமே ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் இப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகை தந்துள்ள போதிலும் நீதியை சரியாக கடைப்பிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் ஆனந்த அழுத்கமகேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு போராட்டத்தை கைவிடுமாறு கோரினார். எனினும் நாவலப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையென அமைச்சரிடம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Comments