ஆட்சிக் குணவியல்பு மாறாவிட்டால் பிரச்சினைகளிலும் மாற்றம் நிகழாது | தினகரன் வாரமஞ்சரி

ஆட்சிக் குணவியல்பு மாறாவிட்டால் பிரச்சினைகளிலும் மாற்றம் நிகழாது

 கருணாகரன்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் “கடைசித்துளி நம்பிக்கையை”யும் இழந்து நிற்கிறது அரசாங்கம். இந்தச் சமூகங்களிடம் அரசாங்கத்தைக் குறித்தும் நல்லிணக்கச் செயற்பாடுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, இனஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு, சமத்துவம், பன்மைத்துவம், ஜனநாயகம் ஆகியவை குறித்தும் நம்பிக்கையீனமே ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தனியே கடந்த வாரம் அம்பாறையிலும் கண்டி - திகணப் பகுதியிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் மட்டும் காரணமல்ல. யுத்த முடிவிற்குப் பிந்திய தொடர்ச்சியான நிலைமைகளும் அரசாங்கம் மற்றும் சிங்களத் தரப்பின் தொடர்ச்சியான நடைமுறைகளுமே காரணமாகும்.

2009 இல் யுத்தம் முடிந்த கையோடு அரசாங்கம் முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலும் கொண்டு வந்தது. அதுவரையிலும் அரசாங்கத்துக்குச் சவாலாக விடுதலைப்புலிகளும் பிற சக்திகளும் செயற்பட்டதால், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் நெருக்கடிகள் இருந்ததுண்டு. ஆனால், யுத்த முடிவுக்குப் பிறகு அந்த நிலைமை இல்லை.

2009 க்குப் பிறகு நாடு முழுவதிலும் அரசாங்கம் முழுப் பலத்துடன் செயலாற்றக்கூடிய நிலைமை ஏற்பட்டது. இதன் அர்த்தம் நாடு முழுவதற்கும் முழுப்பொறுப்பு என்ற வகையில் செயற்படுவதாகும். எளிய உதாரணம், அரசின் தலைவர்களோ, அரச படைகளோ அரசாங்கப் பிரதிநிதிகளோ முழுநாட்டுக்கும் செல்ல முடியாத நிலை நீங்கி, எவரும் எங்கேயும் செல்ல முடியும். எத்தகைய திட்டங்களையும் செயற்படுத்த முடியும். எதையும் அவதானிக்க முடியும் என்ற நிலை உருவாகியது.

இதன்படி வடக்குக் கிழக்கு உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் சென்றனர். சில பிரதேசங்களில் நடத்தவே முடியாது என்றிருந்த தேர்தல்களைக் கூட அந்தப் பிரதேசங்களில் நடத்தக் கூடிய சூழல் ஏற்பட்டது. எல்லா இடங்களிலும் இலங்கையின் தேசியக் கொடி பறந்தது.

எனவே நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் அனைத்துச் சமூக மக்களும் அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தனர். ஆகவே, அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என்ற நிலை உருவாகியிருந்தது.

ஆனாலும் நடைமுறையில் (உள்ளார்ந்தமாக) அப்படியான நிலை ஏற்பட்டிருக்கவில்லை. நாட்டைப் பௌதீக ரீதியில் தன்னுடைய பொறுப்பிலும் ஆட்சியின் கீழும் அரசாங்கம் கொண்டு வந்திருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதிலும் அந்த மக்களை அணுகுவதிலும் அரசாங்கம் மாற்று மனதுடனேயே செயற்பட்டு வந்தது.

இதில் முன்பு ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கமும் ஒன்றுதான். தற்போது ஆட்சி நடத்தும் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கமும் ஒன்றுதான். இரண்டும் வெவ்வேறு தன்மைகளோடு காணப்பட்ட ஒரே அடித்தளத்தைக் கொண்டவை. இதனால்தான் தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டு அரசாங்கத்தையும் அடிப்படையில் ஒன்றானவை எனவும் இரண்டும் மோதகமும் கொழுக்கட்டையும் போன்றவை எனவும் கூறினர். இவை ஒன்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமான நடைமுறை உண்மைகள்.

மேலும் எளிய உதாரணங்கள் பலவற்றை நாம் இங்கே சுட்டிக் காட்ட முடியும். வடக்குக் கிழக்கில் மக்களுடைய காணிகளில் நிலைகொண்டிருக்கும் படையினரை விலக்காதிருப்பது, காணாமலாக்கப்பட்டோர் பற்றி பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் காட்டுகின்ற அசிரத்தை, அரசியல் கைதிகள் விடயத்தில் பின்பற்றப்படும் இழுத்தடிப்புகள், அரசியல் யாப்பில் சிங்கள உளவியலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை, அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், மட்டக்களப்பிலும் தென்பகுதியிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக சிங்கள பௌத்தத் தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பாராமுகமாக அனுமதித்தது எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

இத்தகைய ஒரு தொடர்ச்சியான – தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பலவீனமான நிலையில் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலின் – பின்னணியில்தான் தற்போது நடந்திருக்கும் வன்முறைகளும் அமைந்துள்ளன. இதற்குப் பிரதான காரணம், அரசாங்கம் “போருக்குப் பிந்திய சூழலில் மேற்கொண்டிருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல்” என்ற சர்வதேச நியமத்திலிருந்து மீறியதேயாகும். அல்லது அதைத் தவிர்த்துச் செயற்பட்டமையாகும்.

பொறுப்புக் கூறல், மீள நிகழாமை, மெய்யான அர்த்தத்திலான நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் செயற்பட்டிருக்குமாக இருந்தால் இப்பொழுது நாட்டில் இத்தகைய சம்பவங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது. அப்படிச் சிறு சம்பவங்கள் கையையும் கவனத்தையும் மீறி நடந்திருந்தாலும் அவை இந்தளவு கனதியைக் கொண்டிராமல், சிறிய சம்பவங்களாகவே அடங்கிப் போயிருக்கும். இப்போது உள்ளதைப்போல அரசாங்கம் நெருக்கடிக்குள் நின்று கையைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இன்றைய உலக வளர்ச்சியின் அடிப்படையில் பயன்பாட்டுப் பெறுமதியுடைய சமூக வலைத்தளங்களைக் கண்டு பதறவும் அவற்றை முடக்கவும் வேண்டியும் வந்திராது. இந்தக் கையறு நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பகிரங்கத் தோல்வியே.

ஆனால், இதை அரசாங்கம் அப்படி உணர்வதற்கான ஏதுநிலைகள் காணப்படவில்லை. கடந்த சில வாரங்களாக அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்த ஆட்சிக்கு எதிரான நெருக்கடிகளை இந்த வன்முறைச் சம்பவங்கள் தணித்திருக்கின்றன. வன்முறைகள் உண்டாக்கிய திசைமாற்றம் அல்லது கவனமாற்றம் அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ளது. ஆகவே ஒப்பீட்டளவில் தனக்கு ஏற்பட்ட ஆட்சிக்கெதிரான நெருக்கடியை இந்த வன்முறைகள் தணித்துள்ளதால், இந்த வன்முறை நெருக்கடிகளை எப்படியோ சமாளித்து விடலாம் என அரசாங்கம் கருதுகிறது.

யுத்தத்திற்குப் பிந்திய அரசியலானது இலங்கையில் தோல்வியையே எட்டியுள்ளது என்பதை 2009 – 2018 வரையான நாட்டின் அரசியல், சமூக நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. அண்மைய உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

வடக்குக் கிழக்கிலும் தென்பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழுமிடங்களிலும் மக்களின் வாக்களிப்புகள் பன்மைத்துவத் தெரிவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால், ஏனைய இடங்களில் அப்படியிருக்கவில்லை. குறிப்பாக “தாமரை மொட்டு” க்குக் கிடைத்த ஆதரவு அலை என்பது அரசாங்கத்தின் மீதான அதிருப்தி வாக்குகள் என்பதோடு, சிங்கள மேலாண்மை வாதத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதற்கான வாய்ப்பை அளித்ததும் தற்போதைய அரசாங்கமே. சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தினரின் ஆதரவுத் தளத்தை இழந்து விடுவோம் என்ற அரசியல் லாப நட்டக்கணக்கின் வழியே சிந்திக்க முற்பட்டதன் விளைவு இது. உரிய காலத்தில் செய்திருக்க வேண்டிய அவசியப்பணிகளைச் செய்யத் தவறியதால், நல்லாட்சி அரசாங்கம் தன்னுடைய மாண்பையும் மக்களுடைய நம்பிக்கையையும் இழந்திருக்கிறது.

ஆகவே தமிழ், முஸ்லிம் மக்கள் கசப்பான பல மனத்தடைகளைக் கடந்து, நம்பிக்கையின் அடிப்படையில் முன்வந்து ஒரு “தேசிய அரசாங்கத்தை” அமைப்பற்கு வழங்கிய பங்களிப்பை தற்போதைய அரசாங்கமும் ஆட்சித் தலைவர்களும் தவறான முறையில் கையாண்டு, சீரழித்திருக்கின்றனர்.

எனவேதான் தாங்கள் பெரும் நம்பிக்கையோடு ஆட்சியில் அமர்த்திய (நல்லாட்சி) அரசாங்கம், தங்களுக்கே நெருக்கடியைத் தருகின்ற வகையில் நடக்கிறது என்பது தமிழ், முஸ்லிம் மக்களின் இன்றைய எண்ணமாகும். இதனால் இந்த அரசாங்கத்தையும் அவர்கள் நம்பிக்கையீனமாக, சந்தேகத்தோடும் துக்கத்தோடும் நோக்க வேண்டியதாயிற்று.

இதைச் சீர்ப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். முதலில் ஐ.நாவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமாக இருப்பதுமான பொறுப்புக்கூறலுக்கும் மீள நிகழாமைக்கும் உத்தரவாதமளித்துச் செயற்பட வேண்டும். மெய்யான நல்லிணக்கச் செயற்பாடுகளைத் துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உளநிலையை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக படைவிலக்கல், காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினை, அரசியல் கைதிகள் விடயம், அரசியல் யாப்பில் அனைத்துச் சமூகங்களுக்குமான சமத்துவம் போன்ற செயற்பாடுகளை நடத்திக் காண்பிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை முடக்குதல், அவசரகாலச் சட்டத்தை அமூலாக்குதல் போன்ற நெருக்கடி நிலைகளை உருவாக்காமல், புத்திபூர்வமாகச் செயற்பட வேண்டும்.

எதையும் சட்டங்களாலும் கட்டளைகளாலும் அதிகாரத்தினாலும் அடக்குமுறையினாலும் வழிநடத்திவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நம்பினால், அதற்கு எதிரான விளைவுகளையே நாடு உருவாக்கும். இது உலக அனுபவம்.

தற்போது ஜெனீவா மனித உரிமை பேரவையின் 37 ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதங்கள் சூடாகவே இருக்கக் கூடிய நிலைமையை தற்போதைய சம்பவங்களும் உருவாக்கியுள்ளன. நெருக்கடியிலிருந்து எப்படித் தப்புவது என்று தடுமாறிக் கொண்டிருந்த அரசாங்கத்துக்கு, நடந்து கொண்டிருக்கும் அம்பாறை, கண்டி – திகண வன்முறைகள் மேலும் சிக்கல்களை உண்டாக்கியிருக்கின்றன.

மட்டுமல்ல, நல்லிணக்கம், மீள நிகழாமை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, பொறுப்புக் கூறல், இன ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு போன்ற விசயங்கள் எல்லாம் கேள்விக்குறியின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளன. இதுவும் அரசாங்கத்துக்கு சவாலான விடயங்களே!

மீளவும் வலியுறுத்திச் சொல்வதாக இருந்தால், இதற்கெல்லாம் காரணம், யுத்தம் முடிந்த பிறகும் நாட்டில் யுத்தத்துக்குக் காரணமாக இருந்த பிரச்சினைகளைத் தீர்க்காமல் இழுத்தடித்தமையே ஆகும்.

இதற்கு ஆள் மாறி ஆளைச் சாட்டித் தப்பி விடவும் முடியாது. சாட்டுப் போக்கான காரணங்களை ஆட்சியிலிருந்தவர்களும் ஆட்சியிலிருப்பவர்களும் கூறவும் முடியாது.

சிறுபான்மைச் சமூகங்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவும் அதற்கு உத்தரவாதமளிக்கவும் தவறி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

அரசாங்கத்தின் இந்தத் தவற்றினைக் கண்டித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் முற்போக்கு முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ், இலங்கைத் தேசிய காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்றவற்றுக்கு இயலாமல் போய் விட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் யாரிடம் நீதி கேட்பது என்று தெரியாமல் உள்ளனர். ஆட்சிக்குணவியல்பு மாறவில்லை என்றால், எந்த அடிப்படைப் பிரச்சினைகளிலும் மாற்றம் நிகழாது. இதுவே வரலாறு சொல்லும் பாடம்.

Comments