இயேசுவின் திருமுழுக்கை பறைசாற்றும் ஜோர்தான் நதிக்கரை | தினகரன் வாரமஞ்சரி

இயேசுவின் திருமுழுக்கை பறைசாற்றும் ஜோர்தான் நதிக்கரை

ஜோர்தானுக்கு எதிர்க்கரையில் இஸ்ரேலில்  இடம்பெற்ற திருமுழுக்கு நிகழ்வொன்றின்போது...

லோரன்ஸ் செல்வநாயகம்

 

சாக்கடலில் குளித்த அனுபவங்களோடு நாம் அன்றைய தினம் இரவும் சாக்கடலுக்கு மிக அருகிலுள்ள ‘டெத்ஸீ’ ஹோட்டலிலேயே தங்கினோம்.  
அது ஒரு உல்லாசப் பிரயாணிகள் ஹோட்டல். அப்பகுதியில் பல ஹோட்டல்கள் இருந்தாலும் சாக்கடல் “Dead Sea” என்ற பெயரிலேயே இந்த ஹோட்டல் உள்ளமை சிறப்பு.  
அந்த ஹோட்டலின் மற்றுமொரு விசேடம் இந்திய உணவு வகைகள் அங்கு கிடைப்பதே. இந்திய ‘ரெஸ்ட்டூரண்ட்’ அந்த ஹோட்டலில் இருந்தது. அதன் பிரதான ‘செப்’ இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இலங்கையிலிருந்து நாம் வந்துள்ளோம் என கூறியதும் அவருக்கு பெரும் மகிழ்ச்சி.  
 
எங்களுக்காக சில உணவுகளை அவர் விசேடமாக செய்து கொடுத்ததனால் சுமார் ஒரு வாரத்துக்குப் பின்பு நாம் சோறு சாப்பிட முடிந்தது.   ‘டெத்ஸீ’ ஹோட்டலின் ஜன்னல் மூலம் பார்க்கும் போது சாக்கடல் நன்றாகத் தெரியும். மாலைப் பொழுதில் சூரியன் மறையும் போது அந்தி மஞ்சள் வெயில், சூரியனின் ஒளிக்கீற்று சாக்கடலில் பட்டுத்தெறிப்பது போன்ற காட்சி மிக ரம்மியமானது. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனதுக்கு பெரும் அமைதி கிடைப்பதாகவே உணர்ந்தேன்.  
 
இலங்கையை விட அங்கு நாலரை மணித்தியாலம் வித்தியாசம் என்பதாலும் இரவில் நித்திரைக்கான நேரமும் மாறியதாலும் எமக்குத் தூக்கம் வருவது குறைவு. அன்றைய தினமும் எனது அறையில் கூடி நானும் என்னோடு வந்த கவிஞர் மருதூர் மஜீத்தும் கிண்ணியா ரிபாய்யும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.  
சாக்கடல் தொடர்பில் எமக்குக் கிடைத்த வித்தியாசமான அனுபவங்கள், சாக்கடலில் குளித்த அனுபவம். அங்கு கிடைக்கும் மருத்துவக் குணம் நிறைந்த கறுப்புக் களி மற்றும் கனிவளப் பொருட்கள் தொடர்பில் நீண்ட நேரம் உரையாடினோம்.  
 
மறுநாள் காலை அதே ஹோட்டலில் காலை உணவை உண்டதன் பின் சரியாக ஒன்பதரை மணிக்கு எமது வழிகாட்டி ஹனி வாகனத்துடன் வந்தார். ஹனி ஒரு அரேபியர். சிறந்த ஆங்கில அறிவுடையவர். அத்துடன் பைபிளில் குறிப்பிட்டுள்ள ஜோர்தான் பற்றிய வரலாற்று விடயங்களையும் முஸ்லிம்களின் வரலாற்றுக் கிணங்க அங்குள்ள விடங்களையும் இடங்களையும் மிக ஆழமாக விபரிப்பார். ஜோர்தானைப் பற்றிய விடயங்கள் மட்டுமன்றி அயலிலுள்ள நாடுகள் மற்றும் சர்வதேச ரீதியான முக்கிய விடயங்களை அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால் தான், ஜோர்தான் சுற்றுலா அதிகாரசபை அவரைத் தமது ‘கைட்’ ஆக நியமித்திருந்தது. எமக்கு அவரது வழிகாட்டல், விளக்கங்கள் மிக திருப்திகரமாக அமைந்திருந்தன.   
 
எங்களுடன் இருந்த வாகனச் சாரதி பல சந்தர்ப்பஙகளில்  எங்களுக்கு ‘கெமரா மேன்’ போல பல செயற்பட்டார். அங்குள்ளவர்களைப் போலவே அடிக்கடி சிகரட் புகைப்பதை ஹனியும், செய்யத்தும் செய்தனர். செய்யத்துக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது. ஹனியே எம்மைப்பற்றிய விடயங்களை அவருக்கு அரபியில் விபரிப்பார்.  
அறிந்துகொள்ள வேண்டும்போல் இருந்தது. செய்யத்திடம் அவரது சம்பளம் எவ்வளவென்று கேட்டோம். 300 ஜே.டீ என்றார். ஜோர்தான் டினாருக்கு அங்கு ‘சோட்’ ஆக ஜேடீ அல்லது ஜி.தி என்றே கூறுவர். ஒரு ஜோர்தான் டினார் என்பது நமது இலங்கை நாணயத்தில் 240 ரூபா.  
 
அன்றைய தினம் எங்களை இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற ஜோர்தான் நதிக்கரைக்கு அழைத்துச் செல்லப் போவதாக ஹனி கூறினார். எனக்குப் பெரும் மகிழ்ச்சி.  
நான் ஒரு கிறிஸ்தவன் என்ற ரீதியில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் அது. இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடங்கள், நடந்த பாதைகள், பைபிளில் குறிப்பிடப்படுவது போல் திருமுழுக்கு யோவான் (ஸ்நாபக அருளப்பர்) தேனையும் வெட்டுக்கிளியையும் உணவாக உண்டு வாழ்ந்த வனப் பகுதிகள், திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவுக்கு ஞானஸ்தானம் வழங்கிய ஜோர்தான் நதிக்கரைப்பகுதி என பல புனிதமான இடங்களைத் தரிசிக்கப்போவதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.   
 
(இத்தகையதொரு வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால் வாழ்க்கையில் கனவில் கூட இந்தப் புண்ணிய பூமியில் கால்பதிப்பதை நினைத்துப்பார்க்க முடியாது.)  
‘டெத்ஸீ்’ ஹோட்டலிலிருந்து சுமார் 40 நிமிட பயணம். த பிளேஸ் ஒப் பெப்டிசம்’ என்ற பெயர்ப்பலகை எம்மை வரவேற்றது. பிரதான வீதியிலிருந்து உட் செல்லும் பாதையில் எமது வாகனம் செல்லும் போது பைபிளில் வாசித்த வரலாற்று விடயங்களை என் மனம் அசைபோட்டது. குறித்த இடம் வரும் வரை மனம் இருப்புக்கொள்ளவில்லை. புனிதப் பிரதேசத்தில் எமது வாகனம் நின்றது. உள்ளே வாகனங்களுக்கு அனுமதியில்லை.  
 
வாயில் கடவையில் இருந்து உத்தியோகபூர்வ அரச காரியாலயத்தில் எமது கைட் ஹனி உட்செல்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் திரும்பினார்.  
அந்த அமைதியான நிசப்தமான வெயிலுக்குக் காய்ந்திருந்த பற்றைக் காடுகள் வழியாக நடந்தோம். சிறிது தூரம் சென்றதும் மிக அண்மித்த பகுதியில் தங்க நிறக்கோபுரத்துடன் ஒரு ஆலயம் தெரிந்தது. அதுதான் மத்திய கிழக்கிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவப் பேராலயம் என ஹனி எமக்கு விளக்கினார். எனினும் அங்கு அவர் எம்மைக் கூட்டிச் செல்லவில்லை. அதற்குப் பல காரணங்களை அவர் கூறி மழுப்பிவிட்டார்.   
 
பைபிளில் இந்தப் பிரதேசம் அங்கு இடம் பெற்றுள்ள வரலாற்று நிகழ்வுகள் பற்றி மத்தேயு, லூக்கா, மாற்குரு, யோவான் நற்செய்திகள் பல விடயங்களைக் கூறுகின்றன.  
மத்தேயு நம் அதிகாரத்தில் “அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து” மனம் மாறுங்கள்” ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது” என்று பறைசாற்றிவந்தார்.  
 
இவரைக் குறித்தே “பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்’ என்று இறைவாக்கினர் ஏசாயா உரைத்துள்ளார்.  இந்த யோவான் ஒட்டக முடியிலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார். வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார்.  எருசலேமிலுள்ள யூதேயா முழுவதும் ஜோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் தமது பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்’ என பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு வந்ததுடன் அவர்களுள் ஒருவராக இயேசு கிறிஸ்துவும் திருமுழுக்குப் பெறவந்துள்ளார்.  திருமுழுக்கு யோவான் மக்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் போது, “எனக்குப் பின் ஒருவர் வரவிருக்கின்றார். அவரது காலடி வாரையாவது அவிழ்ப்பதற்கு நான் தகுதியற்றவன்’ என இயேசு கிறிஸ்துவைப்பற்றி குறிப்பிட்டுள்ளமையை பைபிள் குறிப்பிட்டுள்ளது. அவர் வாழ்ந்த பிரதேசங்களை நாம் பார்வையிட்டோம்.  
 

நாம் இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற இடத்திற்குச் சென்ற போது அதிர்ச்சியடைந்தோம். அந்த புனித இடம் மட்டுமே அங்கிருந்ததுடன் ஜோர்தான் நதியைக் காணவில்லை. அபிவிருத்தி காரணங்களுக்காக அந்த நதிவேறு பக்கமாக திசை திருப்பப்பட்டுள்ளதாக எமது கைட் கனி தெரிவித்தார்.                                     
 
(தொடரும்)

 

 

Comments