கச்சதீவு கடவுளின் தீவு | தினகரன் வாரமஞ்சரி

கச்சதீவு கடவுளின் தீவு

கச்சதீவிலிருந்து  விசு கருணாநிதி
 
(கடந்தவாரத் தொடர்...) 
 
யுத்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் வடக்கின் சில தீவுகளுக்குச் சென்ற அனுபவமிருக்கிறது. அத்தோடு கற்பிட்டியில் உள்ள இரண்டு தீவுகளும் அடங்கும். ஒன்று வத்தலக்குண்டு மற்றையது கோவில்முனை. இரண்டிற்கும் செல்லும்போது குதிரைமலைக் காட்டைக் கடந்து செல்கையில் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். அந்த இரண்டு தீவுகளிலும் இந்திய வானொலிச் சேவைகள் துல்லியமாகக கேட்கும். பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் கோவில்முனை திருவிழாவில் கலந்துகொண்டமை மறக்க முடியாத ஒரு மனப்பதிவு. 
 
கச்சதீவு கடற்கரையில் கால் வைத்தால், அது மண்ணா, மணலா என்று தெரியவில்லை. கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் மண்ணாகவும் மணலாகவும் இருக்கின்றன. சில மீற்றர் தூரம் உள்ளே சென்றால், கிராமத்திற்குச் செல்லும் மண் பாதை! இப்போது தீவு மறந்துபோகிறது. கிராமமொன்றில் நடக்கும் தேவாலய திருவிழாவில் சங்கமிக்கும் உணர்வு. தேவாலய ஒலிபெருக்கி ஓசையுடன் வீதியின் இரு மருங்கிலும் இலங்கை-, இந்திய வியாபாரம் களைகட்டியிருக்கிறது. சுமார் ஓர் ஐநூறு மீற்றர் சென்றதும் அந்தோனியார் ஆலயம்! 
 
நூற்றாண்டுகால அடையாளச் சின்னம், புதுக்கட்டடத்தில் புதிய வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக் கடற்படையினர் நிர்மாணித்துத் திறந்து வைத்த புதிய தேவாலயத்தில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது. தமிழிலும் சிங்களத்திலும் சமகாலத்தில் அவை அரங்கேறுகின்றன. யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமிழிலும், காலி மறை மாவட்ட ஆயர் எட்மன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை சிங்களத்திலும் திருப்பலியை ஒப்புக்கொடுக்கின்றனர். இரு நாட்டு மக்களும் பக்திப்பரவசத்துடன் அமர்ந்திருக்கின்றனர். உண்மையில் அங்குத் தீவைக் காணவில்லை! அந்தோனியார் ஆலயத்தைச் சூழவும் மக்கள் நிறைந்திருப்பது, தீவு என்ற சிந்தனையைத் தூரத்தே வைத்துவிடுகிறது. 
 
”இந்தியாவிலிருந்து நான்காயிரம்பே ர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள், ஆனால், சுமார் இரண்டாயிரம்பேர்தான் வந்திருக்கிறார்கள். படகுகளின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கிறது”  கடற்படையின் உத்தியோகத்தர் ஒருவர் தகவல் தருகிறார்.
 
ஆனால், இலங்கை கடற்படையினர் இந்தியத் தரப்புப் பக்தர்களைக் கட்டுப்படுத்தியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல் ஒன்று கூறியது. அதை இந்தியத் தரப்பினரிடம்தான் கேட்டறிய வேண்டும். கடற்படையினரைப் பொறுத்த வரையில், அவர்கள் இந்தத் திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்கள். தண்ணீர் மட்டும் மூன்று இலட்சம் லீற்றர்! அனைவருக்கும் தேவையான உட்கட்டமைப்பு வளங்கள், முதலுதவி மையங்கள், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அலுவலகம், தற்காலிகமான வங்கிக்கிளை என்பனவும் காணப்படுகின்றன. ஒரு மாபெரும் ஏற்பாடு என்றால் இதுதான்! அதனை தமிழக மீனவர்களும் பாராட்டுகிறார்கள். ஓரிடத்தில் இந்திய ஊடகவியலாளர்கள் குழுவொன்று தமிழக மீனவர்களைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது! 
 
இராமநாதபுர மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் யேசுராஜா தலைமையிலான குழுவினர் இந்திய தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சில இந்திய ஊடகவியலாளர்கள் இலங்கை கடற்படை அதிகாரியொருவரிடம் தமிழில் கேள்வி கேட்டு விடயங்களைக் கறந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை ஊடகவியலாளர்கள் மொழிபெயர்ப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தடவை இந்தியத் தரப்பிலிருந்து குறைவானவர்கள் வருவதற்குக் காரணம் என்ன? சிங்களத்தில் ஆராதனை நடத்தப்படுவது தேவைதானா? என்பதை அறிவது இந்திய ஊடகவியலாளர்களின் நோக்கமாக இருக்கிறது! நான் முன்பு குறிப்பிட்டதைப்போல இந்தியத்தரப்பில் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொகையைக் காணவில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம், என்பதுதான் கடற்படையின் பதில். 
 
இதுபற்றி இந்திய மீனவர்கள் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது? மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜாவை அணுகினேன். தமிழக மீனவர்களின் சார்பில் குரல்தரவல்ல பொறுப்பாளர் அவர்தான். ஆஜானுபாகுவான தோற்றம். வழமையாக இந்திய, -இலங்கை தரப்பு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் அவர்தான் கலந்துகொள்வார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஒரு சந்திப்புக்கும் வந்திருந்தார். வழமையைவிடத் திருவிழாவில் பிரகாசமான தோற்றம். பார்த்தால் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தொழில் அதிபரோ என்று எண்ணுவீர்கள்! பேச்சும் அவ்வாறுதான். இராமநாதபுரம் பேச்சுவழக்கும் யாழ் வழக்கும் பெரும்பாலும் ஒத்துப்போகும்! நான் அவரிடம் உரையாடினேன். 
 
“கடலில் சண்டையென்றாலும் இங்கு சந்தோசமாகக் கூடிக் கொண்டாடுகிறோம். தமிழகத் தரப்பிலிருந்து பெரும்பாலும் மீனவர்களும் அவர்களின் உறவினர்களுமே வருவார்கள். இம்முறை நாங்கள் அவ்வாறு வருபவர்களைக் கட்டுப்படுத்தினோம். காரணம், இங்கு தண்ணீர் இல்லை. தங்குவதற்கு வசதியில்லை, கழிப்பறை வசதியும் போதாது. பெண்களுக்கு உடை மாற்றிக் கொள்வதற்கான வசதியில்லை. அதனால், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நாம் அழைத்து வரவில்லை. இதற்கு இலங்கைத் தரப்பில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இடவசதி இல்லாததால், சன நெரிசலைத் தவிர்ப்பதற்காக நாமே தீர்மானித்து எடுத்த முடிவுதான் இது. நாங்கள் மிக மகிழ்ச்சியாக வந்திருக்கின்றோம். கொடிமரமொன்றும், பரிசுப்பொருள்களும் கூடக் கொண்டு வந்திருக்கிறோம். பக்தர்கள் வருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இராமேஸ்வரம், நெடுந்தீவு அருட்தந்தையர்கள் ஆகியோர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பற்றி அறிவிப்பார்கள். நாம் தேவாலயம் மூலமாக அறிவிப்போம். வருகை தருபவர்களை மிக மிக நிதானமாகத் தெரிவுசெய்வோம். அரசியல் பேசுவோரைத் தவிர்த்துவிடுவோம். ஏனெனில் இஃது இரண்டு நாடும் ஜனநாயகமாகக் கொண்டாடும் ஒரு விழா.
 
மீன்பிடித்துறை, சுங்கம், பொலிஸ், கரையோரக் காவல்படை, கியூ பிரிவு பொலிஸ் எனப் பல நடைமுறைகளைக் கடந்தே நாம் இங்கு வருகின்றோம். அதாவது சட்டரீதியான அனுமதியை முறையாகப் பெற்றுக் கொண்டுதான் தமிழக பக்தர்கள் இங்கு வருகிறார்கள். வசதிகள் இருக்குமென்றால், அதிகமானோர் திருவிழாவில் கலந்துகொள்ளச் செய்யலாம். இங்குத் தேவையான வசதிகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு அனுமதிக்கிறார்கள் இல்லை. தமிழக அரசும் இலங்கை அரசும் அனுமதி வழங்கினால், மீனவர் சங்கங்கள் வசதிகளைச் செய்துகொடுக்க எப்போதும் தயார். இருப்பினும் இலங்கை கடற்படை எல்லாவிதத்திலும் உதவி செய்கிறது. இரண்டு நாட்டு மீனவர்களும் இந்தத் தீவைப் பயன்படுத்தலாம் என்று 1974ஆம் ஆண்டு கச்சதீவு சட்டத்தின் இரண்டாம் சரத்து சொல்கிறது. துரதிர்டவசமாக அதற்குப் பின்னர் இரண்டு நாடுகளும் புதிய சட்டங்களைப்போட்டுச் சிக்கலை ஏற்படுத்தி விட்டன. இப்படி நாட்டுக்கு நாடு உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான் பிரச்சினைக்குக் காரணம்” யேசுராஜா மெல்ல மெல்ல அரசியலுக்குள் இறங்குகிறார். அவர் கருத்து கூறும்போது மறுத்துப்பேசவோ, குறுக்குக்கேள்வி கேட்கவோ தோன்றவில்லை. தெள்ளத்தெளிவான பேச்சு! தமது நிலைப்பாட்டில் உறுதிகொண்டு நிதானமாகப் பேசுகிறார். இரு நாட்டுத் தரப்பிலும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், திருவிழாவைவிடவும் அவர்களுக்கு செய்திக்கு வேறு தீனி கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை நன்கு புரிந்துகொண்டவராய் கருத்துகளை முன்வைக்கிறார் என்பது மட்டும் நன்கு புரிகிறது. 
 
“இரு நாட்டு மீனவர்களுக்கும் உள்ள பாரம்பரிய உறவை மீண்டும் கொண்டுவர வேண்டும். படகுகள் பழுதடைந்தால், ஓய்வெடுக்க வேண்டுமென்றால் இரு நாட்டு மீனவர்களும் இந்தத் தீவைத்தான் பயன்படுத்துவோம். இப்போது அப்படி செய்ய முடிவதில்லை. ஏனெனில், இங்கு இலங்கை கடற்படையினரின் தொடர் கண்காணிப்பு இருந்து வருகிறது” 
“தமிழக மீனவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவுகிறார்களோ என்ற சந்தேகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?” என்றதும், மீனவ சங்கத் தலைவரின் குரல் சற்றே உயர்கிறது. 
 
“கிடையவே கிடையாது! எமது மீனவர்கள் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர்கள். பாரம்பரியமாகத் தொழில் செய்பவர்கள். கடலுக்குள் மீன்பிடிக்க ஒரு படகு வருகிறதென்றால், சட்டரீதியான எல்லா நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அவ்வாறிருக்கும்போது சட்டவிரோத நடவடிக்கையில் ஒரு படகு ஈடுபடுகிறதென்றால், அந்தப் படகை இலகுவில் கண்டுபிடிக்க முடியும். எனவே எந்தவித தேசத்துரோக செயலிலும் எமது மீனவர்கள் ஈடுபடுவதில்லை. எமது மீனவர்கள் தொழில் இல்லாமல் உயிரைவிட்டாலும் விடுவார்களேயொழிய போதைப்பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் ஈனத்தொழிலுக்குச் செல்லமாட்டார்கள்”  என்று அடித்துச்சொல்கிறார்.
“இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது, தமிழகத்தரப்பில் படகு உரிமையாளர்களே (முதலாளிமார்) பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாகவும் பாரம்பரிய மீனவர்கள் அல்லவென்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இஃது உண்மையா?”
 
“அது தவறு! நான் பரம்பரையாகத் தொழில் செய்கிறேன். நானும் சொந்தமாகப் படகுகள் வைத்திருக்கிறேன். அப்போது நான் ஏன் கலந்துகொள்ளக்கூடாது? இதில் என்ன தவறு? இலங்கைத் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்கள், மாறி மாறி வருவார்கள். இம்முறை வருபவர், அடுத்த முறை வரமாட்டார். வேறொருவர் வருவார். அப்படியென்றால் எப்படி உடன்பாட்டுக்கு வருவது? இதில் முக்கியமாக ஒன்றைக் கவனியுங்கள், சிங்கள மீனவர்கள் சுமார் ஆயிரம் கிலோ மீற்றருக்கும் அப்பால் மீன்பிடிக்க வருவார்கள். அதற்கான அத்தனை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மீனவர்களுக்கு எதுவும் இல்லை. இதன் காரணமாக இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கிடையேதான் பிரச்சினை. நாட்டுப்படகில் வந்தாலும் கைது செய்கிறார்கள். வட்டிக்குக் கடன்பெற்றுத்தான் படகுகளை வாங்குகிறார்கள். அதனைக் கைப்பற்றி இரண்டு மூன்று வருடங்கள் வைத்துக்கொண்டால், எவ்வாறு வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வது? சிலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. இப்போது இந்திய மீனர்வர்கள் ஆழ்கடல் தொழில்புரிவதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. சுமார் எண்பது இலட்சம் பெறுமதியான படகுகளைக் கொள்வனவு செய்வதற்கு எமக்கு அரசாங்கம் வசதி செய்து வருகிறது. அதற்கு எமது தரப்பிலும் பங்களிப்பு உண்டு. அதன் பின்னர் இலங்கைப் பக்கம் நாம் வரவேண்டிய அவசியம் இருக்காது. சிங்கள மீனவர்களைப்போன்று ஆழ் கடலுக்கும் சென்றுவிடுவோம். அதேநேரம், இலங்கையில் தமிழ் மீனவர்களுக்கு அவர்களின் அரசு உதவி புரியவேண்டும். அதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீரிவினைக் காணமுடியும்” என்று ஆணித்தரமாக ஆலோசனை தெரிவிக்கும் மீனவர் சங்கத் தலைவர் யேசுராஜா, அடுத்த ஆண்டு திருவிழாவிற்குக் கூடுதலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கின்றார். 
 
திருப்பலி, தேவ ஆராதனை எல்லாம் நிறைவடைகிறது. பக்தர்கள் நூற்றாண்டு பழைமையான அந்தோனியார் ஆலயத்திலும் மறக்காமல் வழிபாடு நடத்துகிறார்கள். 
இதனிடையே வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கிறார். 
 
“இந்தியத்தரப்பிலிருந்து எதிர்பார்த்த அளவு பக்தர்கள் வருகை தராமைக்கு இலங்கைத் தரப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமார் நான்காயிரம் பக்தர்கள் வருகை தரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டாயிரம் பேர் மாத்திரமே வருகை தந்துள்ளனர். கச்சதீவில் பக்தர்களின் வசதிக்கென சுமார் 3 இலட்சம் லீற்றர் தண்ணீரைக் கொண்டு வந்தோம். காலை, மாலை உணவை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம். கடந்த ஆண்டு இந்தியர்கள் எவரும் வருகைதந்திருக்கவில்லை. இம்முறை சுமார் இரண்டாயிரம்பேர் பங்குபற்றியமை மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கைத் தரப்பில் சுமார் 6182 பேர் பங்குபற்றியிருந்தனர். இவர்களுள் தென்னிலங்கையில் இருந்து வந்த சுமார் 2 ஆயிரம் சிங்கள மக்களும் அடங்குவர். அதனால், இம்முறை சிங்களத்திலும் ஆராதனை நடைபெற்றது.
 
உண்மையில் ஒரு நல்லிணக்கமான விழாவாக கச்சதீவு திருவிழா அமைந்துள்ளமை பெருமகழ்ச்சி. அடுத்த தடவை இதனை விடச் சிறப்பாக விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்கிறார் அவர். அந்த நம்பிக்கையைத்திடமாக ஏற்படுத்திக் கொண்டு கச்சதீவிலிருந்து விடைபெறப்போகிறோம். எங்கும் போகாமல் ஒரே இடத்தில் நில்லுங்கள் என்கிறார் ஸாதிக் ஷிஹான்! ஷிஹானுக்குக் கடற்படை சீருடை மட்டுமே குறைவு! மற்றும்படி முற்றுமுழுதாக அவரும் ஒரு கடற்படை வீரராகவே செயற்படு கிறார். ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் ஊடக மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கொமாண்டர் தோமரத்தின, லெப்ரினன்ற் கொமாண்டர் ருவன் சமரதுங்க ஆகியோரோடு தானும் ஒருவராகச் சுழல்கிறார் ஷிஹான். இதில் லெப்.கொமாண்டர் ருவன் சமரதுங்கவின் பங்களிப்பு அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. கச்சதீவு திருவிழா பற்றிய நினைவுகளை மீட்கும்போது சமரதுங்கவைப் புறந்தள்ளவே முடியாது! 
 
அதோ மீண்டும் விசைப்படகு கரைக்கு வருகிறது! 
 
கச்சதீவு எமக்கு விடைகொடுக்கிறது! 
 
இனி அது கடவுளின் தீவு!

Comments