புத்தகப் பரிசு | தினகரன் வாரமஞ்சரி

புத்தகப் பரிசு

 
கலாபூஷணம் வே.புவனேஸ்வரன்
 
 
 
இரவெல்லாம் கொட்டோ கொட்டென்று கொட்டிய மழை விடியற்காலையிலே ஒருவாறு ஓய்ந்து விட்டது. தற்போது முற்றாக வெட்டாந்துவிட்டது. எங்கும் நன்றாக வெயில் எறித்து விட்டது.  
 
நேரம் ஏழுமணி. வழமையாக காலையிலே ஆறுமணிக்கெல்லாம் நித்திரை விட்டெழுந்து, பாடசாலையிலே கொடுக்கப்பட்ட வீட்டுவேலைகளையெல்லாம் புடிபுடியென்று செய்து முடித்துவிட்டுப் போதாக்குறைக்குப் பூங்கன்றுகளுக்கெல்லாம் நீர் இறைத்து விட்டுப் பாடசாலைக்குப் போக வெளிக்கிடும் நவநீதன் இன்னும் வெளிக்கிட்டதாகத் தெரியவில்லை.  
 
அவனது தாய் நல்லம்மா நேரம் ஏழு மணியென்பதை அறிவித்ததும் பதறிப்போய் விட்டாள். “ஒரு நாளுமில்லாத மாதிரி இண்டைக்கு மகன் இன்னும் நித்திரை விட்டெழவில்லையே....” என்று மனதுக்குள் நினைத்தவாறு... இரவெல்லாம் மழை பெய்ததால் காலையிலும் மழைபெய்கிற தென்று எண்ணிக் கொண்டு படுக்கிறானோ... என்றவாறு தன் வினாவிற்குத்தானே தன் மனதுக்குள்ளே விடை கூறியபடி மகன்படுக்குமிடத்திற்கு வருகிறாள்.  
 
அவன் மூடி முக்காடிட்டுப் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு.... மனே.... மனே... மனே... என்று கடுந்தொனியில் மகன் தவநீதனை எழுப்புகிறாள்.  
தாய் சத்தமிட்டு அவனைப் படுக்கையை விட்டு எழவைக்க மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் ஆற்றிற்கரைத்த புளியாய் பயனற்றுப் போகிறது. அவன் தொடர்ந்து ஆடாமல் அசையாமல் படுத்துக் கிடக்கிறான். 
 
மீண்டும் அவள், மனே... மனே.... எழும்பு... எழும்பு... ஏழு மணிதாண்டிப் போயித்து. என்ன மனே....? இண்டைக்குப் பள்ளிக்குப் போறல்லியா....? சுறுக்கா எழும்பு... எழும்பு...  
தாய் எத்தனையோ முறை அவளை எழுப்பச் சொன்னதெல்லாம் மகனின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. ஆனாலும் அவன் நித்திரைச் சோகத்தை முறித்துக் கொண்டுபடுத்த படுக்கையாகவே கிடக்கிறான்.  
 
இதனைக் கண்ட அவள் ஒரு புறம் ஆத்திரம் கொள்ள... மறுபுறம் தாய்ப்பாசம் அதனைத்தடுக்க... மீண்டும் கேட்கிறாள்... என்ன மனே... நீ... பாடசாலைக்குச் செல்லவில்லையா... ஒண்டில் ‘ஓம்’ எண்டு சொல்லும் இல்லாட்டி இல்லெண்டு சொல்லு... ஒண்டுமில்லாம ஊமயன் மாதிரிக்கிடந்த யெண்டா எனக்கென்ன விளங்கும்...”  
 
இனிமேலும் தாயைப் பொறுமை காக்க வைக்கவிரும்பாத நவநீதன்... படுத்த படுக்கையாய் கிடந்தபடியே... இல்லம்மா.... நான் இண்டைக்குப் பள்ளிக்குப் போக மாட்டன்.  
‘ஏன் மனே...’  
 
இனம்புரியாததொரு மௌனம்...  
 
‘எண்ட புள்ளக்கு உடம்பில என்னவும் செய்யுதோ...’ என்று மனதுக்குள்ளே எண்ணியவள்....’ ஏன்மனே பள்ளிக்குப் போகல்ல...’ என மிகமிகப் பக்குவமாய்க் கேக்கிறாள்.  
 
‘அது...’  
 
‘என்னண்டா...?’  
 
‘அது... இது... எண்டு... இழுக்காம உண்மையச் சொல்லன்...’  
 
‘கெமிஸ்ரி செயல் நூல் வாங்கித் தந்திய ளெண்டால் தான் இனிப்பள்ளிக்குப் போவன்’  
 
“அப்ப... நேத்தே சொல்லியிருக்குலாமே...”  
 
“நேத்துச் சேர் கையில பிரம்பால அடிச்சுப் போட்டார்...” எண்டுதன் இடக்கையை நீட்டித் தாயிடம் காட்டுகிறான். மீண்டும். “நீ அழுவா எண்டுதான் உன்னட்டச் சொல்லல்ல...” எண்டு கூறியபடி தேம்பித்தேம்பி அழுகிறான்.  
 
தன் மகனின் பிஞ்சுக்கரத்தை தன் இருக்கைகளாலும் தாங்கிக் கொண்டே, “என்ன மனே... இந்த உள்ளங்கை கொழுக்கட்டை மாதிரி வீங்கிப் போயித்து... அந்த வாத்தியாருக்குப் புள்ளுகுட்டி இல்லயா...? படுபாவி... பாவி...” என ஆசிரியரைத் திட்டித் தீர்த்தப்படி ஒப்பாரி வைத்து அருகிறாள்.  
 
தன் தாய் தன்னுடைய ஆசிரியரைத் திட்டுவதைப் பொறுக்க முடியாத நவநீதன் சேர் எண்ட நன்மைக்குத் தானே அம்மா அடிச்சவர்... அவர் நல்ல சேர் அம்மா நல்லாப் படிப்பிப்பாரம்மா... அவரைத் திட்டாதம்மா... என்று கூறி தன் ஆசிரியரை நியாயப்படுத்தி தன் உயர்வான குருபக்தியை வெளிப்படுத்துகிறான்.  
 
‘நீ என்னிட்ட நேத்தே இந்த விசயத்தைச் சொல்லியிருக்கலாமே. நம்மட வறுமை நம்மளோட... படிக்கிற தெண்டா சும்மாவா.... நான் ஆரிட்டயெண்டாலும் அல்லயல்ல கடனத்தனிசப்பட்டு அந்தப் புத்தகத்தை வாங்கித்தந்து தொலைச் சிரிப்பேனே...”  
 
“அந்தப் புத்தகம் இல்லாட்டி இனி ஒரு நாளும் நான் பள்ளிப்பக்கமே தலை வச்சும் படுக்க மாட்டனம்மா...?”  
 
“வாத்தியாருக்குத் தெரியுமா நம்மட வறுமையும்... நாம படும்பாடும்... அவர் பெத்த புள்ளயெண்டா இப்படிப் போட்டடிப்பாரா...? மகனின் கையைத் தாங்கிப்பிடித்தபடி.... என்ன மாதிரி வீங்கியிருக்கு...? இந்தப் பிஞ்சிக்கையில இப்படியும் அடிக்கிறதா...? இவ்வளவு காலத்தில நான் ஒரு ஈக்கிலக் கூட எடுத்து இந்தக் கையில அடிச்சிருப்பேனா...? எனக் கூறிக் கொண்டே தேம்பித்தேம்பி அழுது கண்ணீர் வடிக்கிறாள்.  
 
நல்லம்மாவின் கணவன் ஒரு ஓடாவி. அவன் தினமும் குடித்து வெறிக்கும் ஒரு பெருங்குடி மகன். அவனொரு குடிகார ஓடாவியெண்டாலும் தான் நாளாந்தம் சம்பாதிக்கும் பணத்தில் தான் குடிப்பதற்காக ஒரு பகுதிப் பணத்தை எடுத்துவிட்டு மீதிப் பணம் முழுவதையும் தன்னில்லதரசியாம் மனைவியிடம் ஒப்படைத்து விடுவான். ஆதலால், ஒருசில பற்றாக்குறைகளுடன் அவனது குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது.  
 
தாம்படும் துன்பதுயரங்களும், கஷ்டநஷ்டங்களும் எதிர்காலத்தில் தமது பிள்ளைகளின் வாழ்க்கையிலும் தொடரக் கூடாதென்ற ஓர் உன்னத் நோக்கத்தோடு கிடைப்பதைக் கொண்டு தன் குடும்பத்தை இலட்சியக்குடும்பமாக பரிபாலித்துக் கொண்டிருந்தான் நல்லம்மா...  
 
மனிதன் என்ன நினைத்தாலும் தெய்வம் இன்னொன்றை நினைக்கிறது என்பார்கள். அது போல, அவ்வேளை ஓடாவி தான் குடித்தாலும் வெறித்தாலும் தன் குடும்பம். ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டுமென ஓடியோடி உழைத்து ஓடாய்த் தேய்ந்த பொழுதிலும் அவனது அவ்வெண்ணம் நிறைவேறாது முயற்கொம்பாகவே போனது. சுமார் எட்டு வருடங்களுக்கு முன் உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்த வேளையிலே, ஒரு நாள் தன் தொழிலுக்காகச் சென்று, ஒரு வீட்டிற்கு மேலே முட்டில் ஏறிக் கூரைபோடும் போது, எவரே, எங்கிருந்தோ வீசிய செல்லடி அவ்வப்பாவி ஓடாவியையே பதம் பார்த்தது. அவனது சிதறிச் சின்னாபின்னமாகிப் போன உடற்பாகங்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்து ஒரு பெட்டியிலே அடைத்துத் திறக்க வேண்டாம்” என்ற அறிவுறுத்தலுடன் அவனது மனைவி, மக்களுக்கு அனுப்பியிருந்தார்கள்.  
 
இத்துயரச் சம்பவம் நிகழ்ந்த போது அவனது இரு ஆண்பிள்ளைகளும் இவ்வுலகத்தைப் புரிந்து கொள்ளவியலாதளவிற்குக் குழந்தைகளாயிருந்தனர். மூத்தவனுக்குப் பன்னிரண்டு வயது, இளையவனுக்கு அதாவது, நவநீதனுக்கு ஒன்பது வயதுமாகவே இருந்தன.  
 
இத்துயரச் சம்பவத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத நல்லம்மாவும் அவளது இரு ஆண்பிள்ளைகளும் அழுதழுது அவ்வனர்த்த நிலைமையிலிருந்து ஓரளவு மீண்டார்கள்.  
அடுத்தாண்டு உயர்தரப்பீட்சையில் தோற்றவேண்டிய தன் மகனை எப்படியாவது பாடசாலைக்கு அனுப்பிவிட வேண்டுமே எனக் கங்கணம் கட்டி நின்றாள் நல்லம்மா. அவனை பாடசாலைக்கு அனுப்ப வேண்டுமென்றால், அவனுக்குக் கெமிஸ்ரி செயல்நூல் வாங்கிக்கொடுக்க வேண்டுமே.... அப் புத்தகம் இல்லாவிட்டால் பாடசாலையில் அவனை மீண்டும் அனுமதிக்கமாட்டார்கள்.  
 
ஆதலால் அந்நூலை வாக்குவதற்காக ரூபா ஐந்நூறு கடனாகக் கேட்டு அவ்வூர் எங்கும் அலைந்து திரிந்து பார்த்தான். அவனுக்கு ரூபா ஐந்நூறு கடனாகக் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. அவளது இரத்த உறவுக்களும் நண்பர்களும் கூட அவளுக்குக்கடன் கொடுக்கமறுத்து விட்டார்கள்.   
 
மறுநாள் தன் மகனை வெளிக்கிடச் சொல்லிப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றாள். பாடசாலைக்குள்ளே சென்றவுடன் அதிபரைச் சந்தித்து, தன் குடும்ப வறுமையை எடுத்துக் கூறி தன் மகனுக்குத் தேவையான கெமிஸ்ரி செயல்நூலை மிகவிரைவில் வாங்கிக் கொடுப்பதாகவும், அவனை வகுப்புக்குச் சமூகமளிக்க அனுமதிக்குமாறும் மிகத் தயவுடன் வேண்டிக்கொண்டாள். அவள் கூறிய அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பாடசாலை அதிபர், நவநீதனை வகுப்பில் அனுமதிப்பதாகவும், அவளைப் பாராட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.  
 
நல்லம்மாவின் மூத்தமகன் அதாவது நவநீதனின் அண்ணன் சிவநீதன் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலே வைத்தியப் பட்டப் படிப்பு மூன்றாண்டு மாணவனாகப் படித்துக் கொண்டிருக்கிறான். 
 
தன்னிரு பிள்ளையும் ஊரிலே பெயர் சொல்லி வாழ்வாங்கு வாழவைக்க வேண்டுமென்பதற்காகத் தன் கணவன் எதிர்பாராத விதமாக அகாலமரணமான பின் தான் அவ்வூரிலேயுள்ள இறால் பண்ணையொன்றிலே வேலைக்குச் சேர்ந்த திருந்தாள். அவள் அப்பண்ணையிலே வேலைக்குச் செல்லும் போதும், வரும் போதும், “இந்தாவாறாள் மூழி, கைம்பெண், புருசனைத் திண்டவள்’ என்றெல்லாம் அவ்வூரவர் அவளைப் பார்த்துக் கலைக்குவாதகடும் சொற்களால் அவளை வைத்தனர். அவமானப்படுத்தினர்.   
இப்படியான அர்த்தமற்ற கேலி, நையாண்டி பண்ணுவோர்களுக்கு அவள் கேட்டும் கேளாத மாதிரி காதில் வாங்கிக்கொள்ளாது மறுவார்த்தை எதுவும் பேசுவதில்லை. அவ்வேளைகளிலெலாம் அவள், ‘தான் தாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் கூட தன் பிள்ளைகள் இருவரும் வீறு கொண்டெழும் சிங்கங்களைப் போல இதே சமூகத்திலே என்னைப் பழிப்போர் மத்தியிலே எழுவேண்டுமென்பதிலே விடாப்பிடியாய் நின்றாள்.  
 
நவநீதன் படிப்பிலே எவ்வளவு விண்ணனோ... அதேபோல் விளையாட்டிலும் தன் திறமையைக் காட்டத்தொடங்கினான். ஊரிலே சிக்கிரைப்புத்தாண்டு, தைப் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களிலே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளிலே பங்குகொண்டு பல முதற்பரிசில்களையும் தனதாக்கிக் கொண்டிருந்தான். அத்துடன் பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபற்றித் தன் விளையாட்டுத் திறமையினால் பலமுதலாம் பரிசில்களைப் பெற்றிருந்தான். அவை அவனது படிப்பிற்குக் கருந்தனமாயின.  
 
அவன் படிப்பிலும், விளையாட்டிலும் ஒரே நேரத்தில் திறமையானவள். ஆனாலுமென்ன...? படிப்பிற்காக விளையாட்டை விட்டுக்கொடுக்கவோ... விளையாட்டிற்காக படிப்படை விட்டுக்கொடுக்காத ஓர் இலட்சிய மாணவன் என்றால் மிகையாகாதெனலாம். அவன் விளையாட்டுக்களிலே நூறு மீற்றர் ஓட்டப் போட்டியிலே மிகவும் இனி இல்லையென்ற சிறப்புத்திறமை கொண்டிருந்தான்.   
 
அவ்வருடப் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான திகதிகளும், நிகழ்ச்சி நிரலும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு இல்ல விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களும் தத்தமது இல்ல மாணவர்களுக்கும், அவரவர் பங்குபற்றும் விளையாட்டுக்களில் திறமான, தரமான பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.   
பயிற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, மணித்தியாலயங்கள் நாட்களாக நாட்கள் வாரங்களாக, வாரங்கள் ஒரு முழு மாதமாய் நிறைவுபெற்றிருந்தது. ஆதலால், விளையாட்டுப் போட்டிக்கான மாணவர் பயிற்சிகளும் இனிதே முடிந்தன.  
 
இன்னும் இரண்டே இரண்டு நாட்களில் இல்ல விளையாட்டுப் போட்டி ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்ததற்கமைய ஆரம்பமாக விருக்கின்றது. ஆசிரியர்களால் வழங்கப்பட்ட விளையாட்டுப்பயிற்சிகள் முடிந்து விட்டதால் நவநீதன் தனக்கு வாலாயமாய்ப் போய்விட்ட நூறு மீற்றர் விரைவு ஓட்டப்பயிற்சியிலே தானே தன்னந்தனியனாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவன், கடும் பயிற்சிசெய்து இம்முறையும் இல்லவிளையாட்டுப் போட்டியிலே நூறு மீற்றர் ஓட்டப் போட்டியிலே முதலாம் பரிசு பெற்றிடவேண்டும் எனக் கங்கணம் கட்டி நின்றான்.  
 
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே பாடப்புத்தகங்கள் தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
           
ஆதலால், உயர்தர வகுப்பு மாணவர்கள் இவ்வாறான இல்லவிளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி முதலாம் பரிசு பெறுவதன் மூலம் வழங்கப்படும் புத்தகப்பார்சல்களில் உள்ள செயல் நூல்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் தமது படிப்புக்கான செயல் நூல்களை பணம் கொடுத்து வாங்கிப்படிக்க முடியாத வறுமையில் வாடும் ஏழை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இவ்விதமாக வறிய மாணவனான நவநீதனும் இல்லவிளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிப் புத்தகப் பரிசில்களைப் பெற்றுக்கொள்வது வழமை.  
 
ஏற்கெனவே திகதி தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க, நவநீதனின் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி அன்று காலையிலே ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு விளையாட்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வவ் இல்லமாணவர்கள் தத்தம் இல்லமாணவர்கள் வெற்றியடைகின்ற வேளையிலே கைதட்டியும், தமது கைகளிலிருக்கின்ற பலவித வாத்தியக் கருவிகளை இசைத்தும் ஆரவாரித்துத் தமது வெற்றிக்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நேரம் பகல் பன்னிரண்டு மணியாக, மதியச் சாப்பாட்டிற்கு இடைவேளை விடப்படுகிறது.  
 
இடைவேளையை முடித்துப் பின் ஆசிரியர்களும், நடுவர்களும் மற்றும் மாணவர்களும் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துவிட்டார்கள். மாலை நேர விளையாட்டுக்கள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.  
 
முதன்முதலாக ஒரு விளையாட்டு ஆரம்பமாகவிருப்பதாக அறிவிப்பாளர் ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார். அது பின்வருமாறு:-  
 
விளையாட்டு – நூறு மீற்றர் விரைவு ஓட்டம்  
 
இடம் – விளையாட்டு மைதான மைய ஓடு பாதை 
 
நடுவர்கள்: ராஜாராம் ஆசிரியர், ஆனந்தன் ஆசிரியர் மற்றும் விநாயகமூர்த்தி விளையாட்டு அலுவலர்.  
 
இவ்விளையாட்டில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களும் உடனடியாக விளையாட்டு ஆரம்பிக்கும் இடத்துக்கு வருமாறு அழைக்கப்படுகின்றார்கள்.  
 
இவ்விளையாட்டு ஆரம்பிக்கும் குறிப்பிட்ட இடத்திற்கு அவ்விளையாட்டில் பங்குபற்றும் மாணவர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள்.  
 
நடுவர்கள் அதில் பங்கு கொள்ளப்போகும் மாணவர்களை ஒழுங்காக நிறுத்தி “ஆயத்தம்... ஆரம்பம்... ஓடு..." எனக் கூறியதுதான் தாமதம் மடைதிறந்த வெள்ளம் பாய்வது போல் அம்மாணவர்கள் பாய்ந்து குதித்து நான் முந்தி, நீ முந்தியென ஓடுகிறார்கள்.
  
பல்வேறு நூறு மீற்றர் ஓட்டப் போட்டிகளிலே முதலாம் இடம்பெற்றதன் மூலம் தேசிய ரீதியிலே “ஓட்டவீரன்” எனப் புகழ்பெற்றிருந்த நவநீதன் இப்போட்டியிலும் கூட முந்தி... முதலாமிடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்.  
 
நடுவர்கள், அவனது இல்ல சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வழமைபோல் நவநீதன் தான் இம்முறையும் முதலாவதாக இடம்பிடிப்பான் என்ற நன்நம்பிக்கையோடு அவனை ஊக்கப்படுத்தி மேலும் முந்தவைப்பதற்காக கரகோஷம் செய்து பலத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.  
 
உந்தி, உந்திப்பாய்ந்து முந்தி, முந்தி ஓடி முதலாமிடத்தை வழமை போல் தக்கவைத்துக் கொண்டிருந்த நவநீதன் திடீரெனத் திரும்பிப்பார்த்துச் சற்றுத்தன் ஓட்டத்தைத் தகைத்து ஓடி இரண்டாம் இடத்தைப் பெறுகிறான். அனைவரும் ஏமாந்து ஆச்சரியப்பட்டனர். ஆனால் அவனோ... திட்டமிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்து அதற்கான கெமிஸ்ரி செயல்நூல் புத்தகப் பரிசைப் பெற்றுத் தன்னிலட்சியத்தில் வெற்றிபெற்றான். 

Comments