உள்ளூராட்சி தேர்தலில் வெளிப்பட்ட மலையக பெண் சக்தி | தினகரன் வாரமஞ்சரி

உள்ளூராட்சி தேர்தலில் வெளிப்பட்ட மலையக பெண் சக்தி

எஸ். வடிவழகி
பொகவந்தலாவை
 
'மலையக அரசியல்வாதிகளுக்கு ஆண்கள் அடிவருடிகளாக, அற்பத்துக்கும் சொச்சத்துக்கும், மாறிவிடுவதை பார்க்க முடிகிறது. இதுபோலவே பெண் உறுப்பினர்களும் மாறிவிடக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இல்லை. எனவே இந்த ஆபத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் தம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்'
 
"Press for Progress“ அபிவிருத்திக்கு அழுத்தம் கொடுப்போம் என்பதே இம்முறை சர்வதேச பெண்கள் தினத்திற்கான தொனிப்பொருளாகும். இதன் அர்த்தம் பெண்களின் அபிவிருத்திக்காக ஆண்கள், பெண்கள் அனைவரும் அதிலும் வெவ்வேறு நிலைகளில் உள்ள பெண்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும், குரல் கொடுக்க வேண்டும், அது குறித்து பேச வேண்டும். எங்கெல்லாம் பெண்களின் அபிவிருத்தி பின்தங்கி காணப்படுகிறதோ, எங்கெல்லாம் பெண்களின் அபிவிருத்திக்கு தடைகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதேயாகும். அத்தோடு உலகின் பல பகுதிகளில் பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்த பெண்கள் எவ்வாறு தாங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்த தடைகளை தாண்டி முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவதானித்து கற்றுக் கொண்டு அந்த வெற்றியை தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு  மாற்றியமைத்து பயன்படுத்துவது எவ்வாறு என்பதை கற்றுக் கொள்வதும் அதனை நடைமுறைப்படுத்த முயல்வதும் அபிவிருத்திக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும். 
 
இந்த பின்னணியில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் நடைபெற்ற பல சம்பவங்கள் பெண்கள் சுயமாக சிந்திக்கவும், தமது அபிவிருத்திக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இவ்வாறான சில சம்பவங்களை   எதிர்காலத்தில் பெண்களின் அபிவிருத்திக்கு  அழுத்தம் கொடுக்கும் நிகழ்வுகளாக மாற முடியும் என்பதை பார்ப்போம்.   
 
 பெண்களுக்கு உள்ளூராட்சி தேர்தலில் 25 விகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அது தொடர்பாக  ஏனைய பகுதிகளைப் போலவே மலையகப் பகுதிகளிலும் அதிகமாகவும் அழுத்தமாகவும் பேசப்பட்டதானது, பெண்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இம்முறை தேர்தலில் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.  
 
சுயமாக அரசியல் தீர்மானம் எடுக்க ஆரம்பித்துள்ள பெண்கள்   
 
உள்ளூராட்சி தேர்தல்களுக்கு  முற்பட்ட காலத்தில் தேர்தல் தொடர்பாகவும், பெண்களின் பங்களிப்பு தொடர்பாகவும்  பேசப்பட்ட கூட்டங்களில் பெண்கள் தாங்கள் இது வரை தமது கணவர்கள், தந்தைமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அல்லது கட்டாயப்படுத்தலின் பெயரிலேயே அவர்கள் சுட்டிக்காட்டும் கட்சிக்கு அல்லது நபருக்கு வாக்களித்ததாகவும், ஆனால் இம்முறை தாங்களே சிந்தித்து முடிவெடுத்து வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். இது சிறப்பான மாற்றமாகும். தங்கள் உரிமையை அதுவும் மிகமுக்கியமான வாக்குரிமையை ஆண்களிடம் விட்டுக்கொடுத்து வந்த மலையகப் பெண்கள் இம்முறை அதிலிருந்து விடுபட ஆரம்பித்திருப்பது எதிர்காலத்தில் மேலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை உறுதியாகக்கூற முடியும். இம்முறை பெண்கள் தினத்தின்  தொனிப்பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த பெண்களில் சிலர் இவ்வாறு கருத்து கூறியிருக்கிறார்கள்.  
 
வேட்பாளர்களை மறித்து கேள்வி எழுப்பிய பெண்கள்.  
 
இதுவரை வேட்பாளர்கள் கும்பிடுபோடும்போது பதிலுக்கு கும்பிடு போட்டுவிட்டு அவர்களை மரியாதையாக வழியனுப்பிய நிலையை பல இடங்களில் பெண்கள் மாற்றினார்கள். வேட்பாளர்களை இடைமறித்து அவர்களோ அவர்கள் சார்ந்த கட்சிகளோ இதற்கு முன்னர் வாக்குறுதியளித்தபடி அபிவிருத்தி பணிகளை செய்தார்களா என்று கேள்வி எழுப்பியதையும், சில இடங்களில் அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு உதாரணமாக வீடு கட்டப்பட்டுள்ள இடங்களுக்கு அல்லது அதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு வேட்பாளார்களை அழைத்து சென்று அவை தரமானதாக அல்லது பொருத்தமானதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி தாங்கள் விழிப்புடன் இருப்பதை தெளிவாக காட்டினார்கள். இது விடயத்தில் பெண்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்றுகூட எண்ணத் தோன்றியது. ஆனால் அவ்வாறு நடந்திருந்தால் அவர்கள் அந்த விடயத்தில காலப்போக்கில் தெளிவடைந்து விடுவார்கள். இங்கு முக்கியம் என்னவென்றால் வேட்பாளரை ஒரு நாகரீகமான முறையில் கேள்வி எழுப்பும் ஒரு புதிய கலாசாரத்தை பெண்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதே முக்கியாகும்.  
 
 தேர்தல் மேடையில் பெண் பேச்சாளர்கள்  
 
 பெண்களுக்கு 25 விகித வேட்பாளர்  ஒதுக்கீடு பெண்களை வேட்பாளர்களாக ஆக்கியதுடன் அதன் காரணமாகவே பெண்கள் தேர்தல் மேடைகளில் பேச்சாளர்களாக வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது. முன்பு தேர்தல் மேடைகளில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களாக காணப்பட்ட ஒரு சில அரசியல் குடும்பங்களைச்  சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய பெண்கள் மட்டுமே பேச்சாளர்களாக இருந்தார்கள். ஆனால் இம்முறை சாதாரண பெண்களும் பேச்சாளர்களாக மேடையேறியமை சிறப்பம்சமாகும். இவ்வாறு மேடையேறிய பெண்களில் தோட்டங்களிலுள்ள பெண்கள் கழகங்களை சார்ந்த பெண்கள் சிறந்த பேச்சாளர்களாகவும், ஆண்களை போல் வெறுமனே மாற்றுக் கட்சியினரைத்  தாக்கிப்பேசும் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு அறிவுபூர்வமான அரசியல் கருத்துக்களை தெரிவிப்பவர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இது பெண்களுக்கு சந்தர்ப்பமும் அதே வேளையில் பயிற்சியும் அளிக்கப்பட்டால் அவர்கள் மிக சிறப்பான தலைவர்களாக உருவாகுவார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது.
  
வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் முகவர்களாக பெண்கள்  
 
இம்முறை மலையகப் பகுதிகளில் சில வாக்களிப்பு நிலையங்களில் கட்சிகளின் தேர்தல் முகவர்களாக பெண்கள் கடமையாற்றியது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெண்கள் தேர்தல் முகவர்களாக செயல்பட்டதை இதற்கு முன்னர் பெருந்தோட்ட பகுதிகளில் காண முடியவில்லை. இதுவரை ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று இருந்த நிலையை மாற்றி பெண்கள் முகவர்களாக நியமிக்கும் அளவுக்கு பெண்களின் அபிவிருத்திக்கு அழுத்தம் ​ெகாடுக்கும் சூழல் பெருந்தோட்டப் பகுதியில் எற்பட்டிருப்பது ஒரு நல்ல முன்​ேனற்றமாகும்.
  
         
 

Comments