தாயே நீதான் வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தாயே நீதான் வேண்டும்

கலாபூஷணம் ஏ.ஸீ. அப்துல் றகுமான் 
 
 
அன்னையே என்னைக் காத்த  
அருந்தவத் தாயே நீயும்  
பொன்னகை ஏதுமின்றிப்  
புன்னகை சுமந்தாயே  
மண்ணதில் வாழ்ந்த வாழ்க்கை  
மனநிறைவாக்கி விட்டு  
மண்ணறை சென்றும் கூட  
மனதினில் வாழ்கின்றாயே  
உறவுகள் வெறுத்தபோதும்   
உலகமே எதிர்த்த போதும்   
மறந்திடா தென்னைத் தாங்கி  
மகிழ்வுற்ற தாயே உன்னைப்  
பிரிந்து நான் பட்டபாடு  
பேசிட வார்த்தையில்லை  
தொழிலுக்காய் வேறுநாட்டில்  
தொடர நெனப்பலவருடம்  
கழித்திட்டேன் நானும் உன்னைக்   
கவனிக்கும் எண்ணிமின்றி  
இறந்திட்டாய் என்ற சேதி  
எட்டிய வேளை நானும்  
கருகியே சாம்பலானேன்  
கவலையின் தீப்பிழம்பில்  
உயிரினை இழந்து வாழும்  
உடலென வாழ்கின்றேனே  
மீண்டுமோர் பிறப்பென்றாலே  
மேதினிதனிலே நீதான்  
தாயென எனக்கு வேண்டும்  
தந்திட அருள் செய் இறைவா   

Comments