ஸ்டீபன் ஹோக்கிங்: | தினகரன் வாரமஞ்சரி

ஸ்டீபன் ஹோக்கிங்:

 
அருள் சத்தியநாதன் 
 
சாதனை புரிந்தது விண்வெளியியலில் மட்டுமல்ல; சாம்பலில் இருந்து மீண்டெழுவது எப்படி என்பதையும் புரிய வைத்தவர்
 
வானியல் வரலாற்றில் கலிலியோ மற்றும் கோபர்நிகஸ் ஆகிய ஆய்வாளர்களின் மௌனங்கள் அன்றைய சமய அடக்குமுறைக்கு சரியான அடையாளங்கள். கோபர்னிகஸ் தன் ஆய்வுகளின் பின்னர் சூரியன் மத்தியில் இருப்பதாகவும் பூமி அதைச் சுற்றி வருவதாகவும் கண்டு பிடித்தார். அவர் இவ்வாறு கண்டுபிடித்திருப்பது வெளியே தெரியவரவே, கத்தோலிக்க திருச்சபை கடும் கோபம் கொண்டது. ஆனால் ஆதாரம் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை கோபர்னிகஸ் திருச்சபைக்கு பயந்துகொண்டு தன் முடிவுகளை வெளியிடாமலேயே இறந்து போனார்.

அவருக்குப் பின் வந்த கலிலியோ கலிலி, தொலைநோக்கியைக் கண்டு பிடித்து சூரியனைச் சுற்றி பூமியும் ஏனைய கோள்களும் வலம் வருவதை நேரிலேயே கண்டறிந்தார். அவரால் தான் கண்டதை வெளியே சொல்லாமல் இருக்க முடியவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறினார். அக்காலப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை, பூமியை சூரியன் சுற்றி வருவதாக ஒரு நம்பிக்கையை கொண்டிருந்தது. அக்காலத்தில் அரசனுக்கு நிரகான சக்தி கொண்டதாக கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பாவில் விளங்கியது. எனவே, திருச்சபைக்கு எதிராகப் பேசி விட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு அவர் வத்திக்கானுக்கு அழைக்கப்பட்டார். பாப்பரசரின் எதிரில் முடிந்தாளிட்டு நின்ற அவரிடம், பூமியை சூரியன் தானே சுற்றி வருகிறது? என்று கேட்கப்பட்டது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தலைகுனிந்த நிலையில் ‘ஆமாம்’ என்றார் கலிலியோ கலிலி. அதே சமயம் தனக்கு மட்டும் கேட்கும்படியாக, ‘அப்படி இல்லை’ என்று முணங்கிக்கொண்டதாக ஒரு கதை உண்டு. இதையே, கலிலியோவின் மௌனம் என்பார்கள் ஏனெனில், புருனோ என்ற வானியல் அறிஞர் உண்மையைச் சொன்ன குற்றத்துக்காக தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டார்!

புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துவதற்கு இவ்வளவு அச்சுறுத்தல்களும் கட்டுப்பாடுகளும் இருந்த போதிலும், படிப்படியாக அவற்றை முறியடித்து மேற்கத்திய அறிஞர்களும் கண்டு பிடிப்பாளர்களும் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் வளர்த்தெடுத்து உச்ச நிலைக்குக் கொண்டு சென்றார்கள். எனினும் இதேபோல வைதீக நம்பிக்கைகளின் பால் அடிமைப்பட்டுக்கிடந்த கீழைத்தேய நாடுகளில் அம்மக்களால் வைதீக நம்பிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து புதிய சிந்தனைகளுக்கு இடம் தர முடியவில்லை. அதற்கான கல்வியும் சமூகக் கட்டமைப்பும் காணப்படாமை காரணமாக இருந்திருக்கலாம். வைதீகம், அந்த அளவுக்கு மக்களைக் குருடாக வைத்திருந்தது. கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் இடமளித்த பௌத்தம் இந்தியாவில் வீழ்ச்சியடைந்த பின்னர், மக்களின் சிந்தனை முடங்கிப்போனது.

இன்றைக்கும் பல்லி சாஸ்திரம், காக்காய் சாஸ்திரம், ஜோசியம், ராகு காலம், நல்ல நேரம் கெட்ட நேரம், சாதி வேற்றுமைகள், பெண்ணடிமைத்தனம் என்பனவற்றை படித்தவர்களும் நியாயப்படுத்தி, பாரம்பரியம் காப்பதையே பார்க்க முடிகிறது. இந்த ஆமாம் சாமி மன நிலையே தமிழர் மத்தியில் அறிவியல் புரட்சி, மாற்றுச் சிந்தனை புரட்சி முழுமையாக ஏற்படுவதை இன்றளவும் தவிர்த்து வருகிறது. இது பாரம்பரியம், இவை பெரியவர்கள் சொன்னது என்ற நம்பிக்கை காரணமாகவே தமிழர்களை நடிகர்களும், அரசியல்வாதிகளும், சாமியார்களும் நினைத்தபடியெல்லாம் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இங்கிலாந்தின் மிகப் பெரிய அறிவியல் மேதையும் விண்ணில் அறிஞருமான ஸ்டீபன் ஹோக்கிங் கடந்த புதனன்று தனது 76ஆம் வயதில் மரணமடைந்த செய்தியைக் கேட்டபோது இந்தப் பழைய கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. ஸ்டீபன் ஹோக்கிங் ஒரு அறிவியல் அற்புதம் மட்டுமல்ல; வாழும் அற்புதமாகவும், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் சின்னங்களாகவும் வாழ்ந்தவர். வாழ்வதற்கான, எதிர் நீச்சல் போடுவதற்கான சகல வாய்ப்புகளும் மறுதலிக்கப்பட்ட நிலையில் தன் 22ஆம் வயது முதல் 76ஆம் வயது வரை தன்னை முழுமையாக எதிர்க்கும் உடலுடன் போராடியே சாதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்திய ஒரு தனிப் பிறவியே ஹோக்கிங்.
மகத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவரே, இன்றளவுக்கும் மிகப்பெரும் விஞ்ஞானியாகவும் கணித மேதையாகவும் போற்றப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டைன். லண்டனில் பெரிஸ்டருக்குப் படித்த ஒருவர் இந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு அகிம்சை வழியில் ‘அரை நிர்வாண பக்கிரி’யாக நின்று சவால் விடுகிறாரே என்பதைப் பார்த்து வியந்துபோன ஐன்ஸ்டைன், ‘இப்படி ஒரு மனிதர் இரத்தமும் சதையுமாக இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார் என்பதை எதிர்கால சந்ததி நம்புமா என்று தெரியவில்லை. அவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமையான விஷயம்’ எனக் காந்தியை பற்றிக் கூறினார். உலகம் போற்றும் விஞ்ஞானி. கோவணம் தரித்த, கறுத்த, குள்ளமான மனிதரைப் பார்த்து இப்படிக் கூறியது, காந்திஜிக்கு மட்டுமல்ல; ஐன்ஸ்டைனுக்கும் பெரும்புகழ் தந்தது. காந்திஜியைப் பற்றிய வர்ணணைகளில் மிகச் சிறந்ததாக இரு கருதப்படுகிறது.

நவீன விஞ்ஞான அறிவியல் உலகில் இருவரை மிகப் பெரும் ஆளுமைகளாகச் சொல்வார்கள். ஒருவர் இருநூறுக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தோமஸ் அல்வா எடிசன். இரண்டாவது விஞ்ஞானி, ஐன்ஸ்டைன். அவருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர், ஸ்டீபன் ஹோக்கிங்.

ஹோக்கிங்கின் புகைப்படத்தை இதுவரை பத்திரிகைகளில் பார்த்திராதவராக நீங்கள் இருந்தால், இப் புகைப்படத்தைப் பாருங்கள். இவர்தான் உலகின் சிறந்த இயற்பியல் விஞ்ஞானியாகவும், விண்ணியல் துறை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதோடு விண்வெளி சம்பந்தமான நூல்களை எழுதியவருமான ஸ்டீபன் ஹோக்கிங் என்றால் நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

கலிலியோ கலிலி இறந்த 300 ஆண்டுகளின் பின்னர் அதே இறந்த திகதியில், 1942 ஜனவரி எட்டாம் திகதி ஒக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹோக்கிங், படிப்பில் கெட்டிக்காரர் என்று பெயர் எடுக்கவில்லை. ஆனால் கணிதத்திலும், அதன் பல்வேறு துறைகளில் ஹோக்கிங் படுகெட்டிக்காரராக இருந்தார். மற்றவர்களைப் போல ஒரு விஷயத்தைப் பார்த்து அது பற்றி கற்பதைவிட கொள்கை ரீதியாக அவ்விடயத்தை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்வதையே அவர் பெரிதும் விரும்பினார். அவர் தன் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கையில் தன் 22ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கட்டட படிக்கட்டில் தவறி கீழே விழுந்தார். விழுந்தவரால் எழும்ப முடியாமற்போனது அதுதான் அவரைத் தாக்கிய நோயின் முதல் வெளிப்பாடு. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அரிதாக மனிதர்களைப் பீடிக்கக்கூடிய நரம்பு மண்டல நோயொன்றினால் அவர் தாக்கப்பட்டிருப்பதாகவும் இதில் இருந்து மீள்வது சாத்தியமில்லை என்பதால் வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்ளுங்கள் என்றும், பெற்றோரிடம் கூறி விட்டார்கள். இதைக் கேட்டதும் தான் நொறுங்கிப் போனேன் என்கிறார் ஹோக்கிங். அவர் தன் வாழ்க்கையை திட்டமிட்டிருந்தார். சாதிக்க வேண்டிய இலக்குகள் கண்முன் இருந்தன. ஆனால் எதுவும் சாத்தியப்படாது என்றாகி விட்டால் தலை சுற்றாதா, என்ன? மேலும், இன்னும் சில ஆண்டுகளுக்குத்தான் இவரால் உயிர்வாழ முடியும் என்பதும் மருத்துவர்களின் தீர்மானமாக இருந்தது.

மோட்டார் நியூரன் டிசீஸ் என்ற இந்த நரம்பு மண்டலநோய் அவர் உடலெங்கும் நீண்டு விரிந்து படிப்படியாக அவரது உடலை முடக்கிப் போடத் தொடங்கியது. மெதுவாக நடந்து கொண்டிருந்தவர் சக்கர நாட்காலிக்குத் தள்ளப்பட்டார். கை கால்கள் முடங்கிப் போக இறுதியில் பேசும் திறனையும் இழந்தார். பேசும் திறனை இழந்த பின்னர்தான் அவர் நாடு நாடாகப் போய் பல்கலைக்கழங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். The brief History of Time என்ற அவரது புகழ் பெற்ற நூலை எழுதினார். Black Hole எனப்படும் கருத்துளை பற்றிய புதிய கேட்பாடுகளை முன்வைத்தார்.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாயின?

அவர் கடவுளை நம்பவில்லை. புதிய சிந்தனைகளுக்கு வழிவிடத் தவறிய சமயத்தையும் ஏற்கவில்லை. பதிலக விஞ்ஞானத்தையும் மனிதர்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் கருணை உள்ளங்களையும் நம்பினார். அவரது கண் அசைவுகளைப் புரிந்து கொண்டு அவருக்காக குரல் எழுப்பும் (பேசும்) கணனியின் உதவியுடன் அவர் பேசினார். எழுதினார். ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வாசித்தார். எவ்வளவு தூர்துக்கு அவரது உடல் நோயினால் சிதைக்கப்பட்டதோ அந்த அளவுக்கு அவரது விடாமுயற்சியும் சுய நம்பிக்கையும் வலுப்பெற்றது. உடல் முற்றிலும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் அவரது மூளை மட்டும் அதீத ஆற்றலுடன் இயங்கியது. அபாரமான நினைவாற்றல் அவருக்கிருந்தது. இது உண்மையிலேரே அற்புதம். தனது விடாமுயற்சியையும் தன் அறிவாற்றலையும் தொடர்ந்து பயன்படுத்தியதில், புரிந்திராத பல அண்டவெளி இரகசியங்களை அவரால் எமக்கு புரிய வைக்க முடிந்தது.

உலகின் சில நாடுகளில் மீள முடியாத நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்போரை அவர்களின் அல்லது அவர்களின் பாதுகாவலர்களின் விருப்பப்படி கருணைக் கொலை செய்ய சட்டம் உள்ளது. அவசியமானால் கருணைக் கொலை செய்யலாம் என சில வாரங்களுக்கு முன் இந்திய உச்ச நீதிமன்றமும் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. கருணைக் கொலைக்கு உகந்த ஒரு வாழ்க்கையையே ஹோக்கிங்கும் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம் கருணைக் கொலை பற்றி வினவப்பட்டபோது, விருப்பத்தின் பேரில் மீள முடியாத ஒரு நோயால் வாடுபவரை கருணைக்கொலை செய்யலாம் தான். ஆனால் கருணைக் கொலையை நான் ஆதரிக்கவில்லை. ஏனெனில் எல்லாமே முடிந்து போய் விட்டது என நினைக்கலாகாது. இன்னுமொரு வாய்ப்புக்கு முயற்சிக்க வேண்டும் என்று பதில் சொன்னார் ஹோக்கிங். கருணைக் கொலையை ஏற்றுக் கொள்வது சின்ன விஷயம். ஆனால் வாழ்க்கையை எதிர்த்து போராடி கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது என்ற ஹோக்கிங்கின் கருத்து முக்கியமானது. உடல் உறுப்புகள் அனைத்தையும் ஒழுங்காக வைத்துக்கொண்டு சோம்பேறித்தனத்தால் தமது அவயங்களைப் பயன்படுத்தி பலன்களைப் பெறாமலும், தமது மூளை மற்றும் சிந்தனையை பயன்படுத்தாமலும் எத்தனையோ பேர் வெறுமனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிடைத்தவரை போதும் எனத் திருப்தி அடைகிறவர்கள் பலர். ஸ்டீபன் ஹோக்கிங் இவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்கிறார். போராடுங்கள், ஜெயித்துக் காட்டுங்கள், இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைத்தான், துன்பங்களையும் துயரங்களையும் மீறி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே ஸ்டீபன் ஹோக்கிங்கின் வாழ்க்கை எமக்கு எடுத்துச் சொல்லும் பாடமாகும்.

ஹோக்கிங் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தனிப்பட்ட ரீதியாக ஹோக்கிங்கை சந்தித்து உரையாடினார். சக்கர நாட்காலியில் கிடத்தப்பட்டிருந்த ஹோக்கிங்கைப் பார்த்து கண் கலங்கிய நாராயணன், ‘எப்படிச் சமாளிக்கிறீர்கள், ஹோக்கிங்’ என்று கேட்டார். உடனடியாக ஹோக்கிங்கின் இயந்திரக் குரல் பதிலளித்தது:

“நம்பிக்கையை மட்டும் தளரவிடாதீர்கள்!”
இன்னொரு சம்பவமும் முக்கியமானது.

1986 பெப்ரவரியில் ஹெலீஸ் வால் வெள்ளி பூமிக்கருகில் வந்து சென்றது. இனி அடுத்தமுறை வரும்போது அது 2061ம் ஆண்டாக இருக்கும். ஹெலி என்ற வானியல் விஞ்ஞானிதான் இந்த வால்வெள்ளி 75 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பூமிக்கு அருகே வரும் என்றும் சூரியனை நோக்கிய சுற்றுவட்டப்பாதையில் பயணிப்பதற்கு 75 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என்பதையும் துல்லியமாகக் கணித்துச் சொன்னார். இதனால் அவரது பெயர் இவ்வால் நட்சத்திரத்துக்கு சூட்டப்பட்டது. 1911 ஆண்டைப் போலல்லாது பூமியில் இருந்து வெகு தொலைவில் அது பூமியைக் கடந்து சென்றபோது அன்றைய பாப்பரசர் இரண்டாம் ஜோன்போல், தான் ஹோக்கிங்கை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். இந்த சந்திப்பு 1992இல் வத்திகானில் நடைபெற்றது. அப்போது, பூமியே மையக்கோள் என்ற அன்றைய திருச்சபையின் நம்பிகையின்படி கலிலியோ கலிலிக்கு திருச்சபை வழங்கிய தண்டனைக்காக திருச்சபை சார்பாக பாப்பரசர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இதை ஒரு மிக முக்கிய நிகழ்வு என்று பின்னர் வர்ணித்தார் ஹோக்கிங்.

கருத்துளை தொடர்பான அவரது ஆய்வுகள் முக்கியமானவை. இந்திய விஞ்ஞானி சந்திரசேகர் விட்ட இடத்தில் இருந்து அவர் ஆரம்பித்தார். மிகப் பெரிய நட்சத்திரங்களின் ஆயுள் முடிவடைந்ததும் அவை கருத்துளைகளாக மாறி விடுகின்றன என்பது சந்திரசேகரின் கோட்பாடு.
தன்னில் இருக்கும் ஒளி வெளியே செல்லாதபடி அதனை முடக்கி தன்னிடத்தே வைத்துக் கொள்ளக்கூடிய சக்தி மிக்க ஈர்ப்பு விசை கருத்துளைகளின் விசே அம்சம். கருத்துளைக்கு அருகே வரும் எந்தவொருப் பொருளும் தப்பிச் செல்ல முடியாது. எவ்வளவு பெரிய விண்பொருளானாலும் அது தன்னில் ஈர்த்து வைத்துக் கொள்ளும். எவையெல்லாம் கருத்துளைக்குள் செல்கிறதோ அவை மீண்டு வராது. கருத்துளைக்குள் ஒளிக்கதிர்கள் சிறைப்பட்டுப் போவதால் அது இருக்கும் இடத்தை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம்.

பிரபஞ்சத்திலேயே மிக வேகமாக பயணிக்கும் ஒளியைக் கூட தன் பிடியில் இருந்து தப்பவிடாத அளவுக்கு ஈர்ப்பு விசை கொண்ட பொருள் பற்றிய கோட்பாடு ஒன்றை முதல் தடவையாக ஜோன் மிச்சல் என்ற விண்வெளி ஆய்வாளரே 1783ம் ஆண்டில் வெளியிட்டார். பின்னர் இதே போன்ற ஒரு கருத்தை 1795 இல் பிரெஞ்சு இயற்பியல் அறிஞர் பியரே சைமன் லாப்லாஸ் என்பவர் முன்வைத்தார். 1916ம் ஆண்டு அல்பர்ட் ஐன்ஸ்டைன் கருத்துளை பற்றிய விளக்கத்தை முன்வைத்தார். இதன் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்ட், பிரபஞ்சத்தில் கருத்துளைகள் இருப்பதை அறிந்து அதை வெளியிட்டார்.
இதன் பின்னர் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் மையப் பகுதியில் மிகப்பெரும் கருத்துளை ஒன்று இருப்பதாகவும் 24 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் அது அமைந்திருப்பதாகவும் அவர் அறிவித்தார். கெலக்ஸி கிளசிக் என்ற கருத்துளை 2008ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனின் விட்டத்தைவிட அதன் விட்டம் 1800 மடங்கு பெரியது என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே, இப் பிரபஞ்சத்தில் இலட்சக்கணக்கான கருத்துளைகள் இருப்பதாகவும் இப் பிரபஞ்சத்தின் பத்தாயிரம் பங்கில் ஒரு பங்கை கருத்துளைகாள் ஏற்கனவே விழுங்கி விட்டதாகவும் அனுமானிக்கப்பட்டிருக்கிறது.


(மிகுதி அடுத்த வாரம்) 

Comments