வாழை | தினகரன் வாரமஞ்சரி

வாழை

என். வினோமதிவதனி,  லுனுகலை.    

உலகில் அதிக பயன்தரும் தாவரம் வாழை என அழைக்கப்படுகிறது. வாழையின் சிறப்பு என்னவென்றால் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மக்களுக்குப் பயன்படுகிறது. உலகின் முதல் இயற்கை உணவு என்ற பெயரும் இதற்கு உண்டு. எனவே மனிதனுக்குப் பயன்தரும் மரங்களில் வாழை மரம் பிரதானமாகும். வாழையில் அவை செவ்வாழை, மலை வாழை, ரசதானி வாழை, பச்சை வாழை, மொந்தன் வாழை, நேத்திர வாழை, கதலி வாழை, கற்பூரவள்ளி வாழை, கப்பல் வாழை, ஏலரி வாழை என பல வகைகள் உண்டு.  

வாழை மரத்தின் இலை, பூ, காய், கனி, தண்டு ஆகிய பகுதிகள் அனைத்தும் மனிதனுக்குப் பயன்தருகிறது.
  
வாழையிலையில் உணவு பரிமாறுவது தமிழர்களின் விருந்தோம்பல் கலாசாரத்தில் முதலிடம் வகிக்கிறது. சுப காரியங்களில் கும்பம் வைப்பதற்கு தலைவாழையிலை பயன்படுத்தப்படுகின்றது. தீ விபத்துக்குள்ளானவர்களை வாழையிலையின் மீது படுக்கவைத்தால் தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். வாழையிலை ஓர் கிருமி நாசினியாகும். உணவில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை. கொண்டது. 

வாழைப்பூ 

வாழைப்பூவைச் சமைத்து உண்டால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்றவும் வயிற்றுப் புண் ஆறவும் வாழைப் பூவைச் சமைத்து உண்பது சிறந்ததாகும்.  

வாழைக்காய் 

வாழை மரத்தின் சில இனங்களில் மொந்தன் வாழைக்காய் சமையலுக்குப் பயன்படுகின்றது. வாழைக்காய் பொரியல், பஜ்ஜி, சம்பல் என பலவிதமான சமையலுக்குப் பயன்படுகின்றது. 

வாழைப்பழம் 

முக்கனிகளில் ஒன்றாக விளங்கும் வாழைப்பழம் ஏழை பணக்காரர்களாலும் வாங்கப்படும் பழமாகும். இதனை ஏழைகளின் அப்பிள் எனவும் கூறுவர். தமிழர்களின் சுப காரியங்களின்போது வாழைப்பழம் முதன்மை பெறுகின்றது.  

வாழைத்தண்டு

வாழையின் தண்டு மருந்துவப் பொருளாக பயன்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றது. அதிக உடல் பருமன் கொண்டவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.  

 

Comments