இலங்கையின் முன்னேற்ற மதிப்பீடு | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் முன்னேற்ற மதிப்பீடு

நமது நிருபர்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கோரிக்ைகக்கு அமைய இலங்கையின் முன்னேற்ற மதிப்பீடுகளை எதிர்வரும் 21ஆம் திகதிய அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் எழுத்து மூலம் சமர்ப்பிக்கவுள்ளது.

அன்றைய அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

2015 ஒக்டோபர் 1 ஆம் திகதியிடப்பட்ட 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதை கவனத்தில் எடுத்துக் கொண்ட மனித உரிமைகள் பேரவை, அதன் 34 ஆவது அமர்வில் (2017 பெப்ரவரி 27 - மார்ச் 24 ஆம் திகதி வரை) 2017 மார்ச் 23 ஆம் திகதியன்று 34/1 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

இந்த தீர்மானத்தின் மூலம் பேரவையானது, உயர் ஆணையாளர் அலுவலகத்திடம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் மனித உரிமைகள் பேரவையிடம் அதன் 37ஆவது அமர்வில் (அதாவது பேரவையின் தற்போதைய அமர்வில்) எழுத்து மூலமான அறிக்கையொன்றை சமர்ப்பித்தல் போன்ற முன்னேற்ற மதிப்பீடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்தது. பேரவையின் கோரிக்கைக்கமைய, உயர் ஆணையாளர் அலுவலகம் 2018 மார்ச் 21 ஆம் திகதி எழுத்து மூலமான அறிக்கையை பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

பேரவையின் 37 ஆவது அமர்வு, 2018 பெப்ரவரி 26 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

 

நாளை 19 ஆம் திகதி திங்கட்கிழ மையன்று நடைபெறவுள்ள இப் பேரவையின் 37 ஆவது அமர்வில், அனைத்துலக காலாந்தர மீளாய்வின் 3 ஆவது சுழற்சியின் கீழ் இலங்கையின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (UPR) அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

ஒவ்வோர் 5 ஆண்டுக்கொரு முறையும் 193 ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் அனைத்தினதும் மனித உரிமைகள் பதிவுகளின் காலாந்தர மீளாய்வை உள்ளடக்கிய தனிப்பட்ட செயன்முறையாக இந்த அனைத்துலக காலாந்தர மீளாய்வு காணப்படுகிறது.

இம்முறை ஆரம்பமாகியிருக்கும் இந்த 37ஆவது அமர்வில் இலங்கை விடயம் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் பற்றிய விவாதத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர்.

இதில், தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் அரச தரப்பிலுமாகப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அமர்வுக்குப் புறம்பாக உப குழுக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அவ்வாறு நடைபெற்ற ஓர் உப குழுக்கூட்டத்தில், 2015 ஆம் ஆண்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மந்தநிலை காணப்படுவதாக சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜெஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக நடைபெற்ற இந்த விசேட உப குழுக்கூட்டத்தின்போது தென்னிலங்கை 'எளிய' அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் ஜெஸ்மின் சூக்காவுடன் முரண்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யத் அல் ஹுசைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நேரம் ஒதுக்கிக் கேட்டிருந்தபோதிலும் ஆணையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் விளக்கத்தையும் அமர்வின்போது தெரிவிக்க முடியும் என்று ஆணையாளர் ஹுசைன் தெரிவித்துவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஜெனீவா அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்கத்தின் உயர் மட்டக் குழு நாளை ஜெனிவா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments